பல ஆண்டுகளுக்குப் பின் தம்பலகாமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட  அரிய தமிழ்க்கல்வெட்டு 

Published By: Digital Desk 4

01 Oct, 2019 | 12:35 PM
image

1796 ஆம் ஆண்டு காலப்பகுதில் திருகோணமலையின் ஆளுநராக இருந்த பன்-சென்டன் திருகோணமலைக்கான தனது சுற்றுப்பயணத்தின் போது தம்பலகாமம் வயல்வெளியில் நாட்டப்பட்டிருந்த கல்வெட்டு  ஒன்றைப் பார்வையிட்டதாகவும், அக்கல்வெட்டின் காலத்தையும், அதில் எழுதப்பட்ட வரலாற்று விடயங்களையும் அறிந்து கொள்வதற்கு அங்கு வாழ்ந்த மக்கள்  உதவ முன் வரவில்லை என தனது பயணக்குறிப்பில் பதிவு செய்துள்ளார். 

இக்கல்வெட்டை 1930 களில் பார்வையிட்ட பேராசிரியர் பரணவிதான அக்கல்வெட்டின் முன் பக்கத்திலுள்ள 11 வரிகளைப் படியெடுத்து அது பற்றிய செய்தியை முதன் முறையாக வெளிப்படுத்தியிருந்தார்.

 தற்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் காணப்படும் தம்பலகாமம் கல்வெட்டின் மைப்பிரதி பேராசிரியர் பரணவிதானவினாலேயே எடுக்கப்பட்டதாகத் தெரிய  வருகின்றது. ஆயினும் இக்கல்வெட்டு மைப்பிரதியில் உள்ள 11 வரிகளில் தெளிவாக உள்ள ஐந்து வரிகள் மட்டுமே  ஓரளவிற்கு வாசிக்கப்பட்டிருந்ததால் தம்பலகாமம் பற்றிய  வரலாற்றாய்வில் இக்கல்வெட்டு முழுமை பெற்றிருக்கவில்லை. பிற்காலத்தில் தமிழ் அறிஞர்கள் சிலர் இக்கல்வெட்டை நேரில் பார்வையிட்டுப் படியெடுக்க முயற்சித்த போதும் குறித்த கல்வெட்டு  தம்பலகாமம் வயல்வெளியில் காணப்படவில்லை.  இதனால் அவர்களது ஆய்வுகளில் இக்கல்வெட்டு மறைந்த அல்லது மறைக்கப்பட்ட கல்வெட்டாகவே பார்க்கப்பட்டு  வந்தது.

இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னங்களை ஆவணப்படுத்துவதில் அதிக அக்கறையுடன் செயற்பட்டு வரும் தம்பலாகமத்தைச் சேர்ந்த வைத்திய கலாநிதி தங்கராசா ஜீவராஜ் தமது குழுவைச் சேர்ந்த திரு. விஜயானந்தன் விஜயகுமார்,  வைரமுத்து பிரபாகர் ஆகியோரின் உதவியுடன் தம்பலகாமத்தில் இரு இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள கல்வெட்டுக்களை ஆய்வு  செய்வதற்கு வருமாறு எம்மை  அழைத்திருந்தார். 

அதன் பேரில் கடந்த வாரம் தொல்லியல் விரிவுரையாளர் திரு.கிரிகரன்,  தொல்லியல் இறுதி வருட மாணவர்களான திரு.கசிந்தன் மற்றும் சுதர்சன் ஆகியோருடன் தம்பலகாமம் சென்றிருந்தோம். இவ்விடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு  செய்வதற்கான வசதிகளை வைத்திய கலாநிதி ஜீவராஜ் வரலாற்று ஆர்வலர் பிரபாகர் ஊடாகச் செய்திருந்ததால் ஒரே நாளில் இரு இடங்களிலும் உள்ள கல்வெட்டுக்களைப் பார்வையிட முடிந்தது. அவற்றுள் சில கல்வெட்டுகள்  கட்டிட அழிபாடுகளுடன் தம்பலகாமம் காட்டுப்பகுதியில் உள்ள ஆழமான ஆற்றில் புதைந்து காணப்படுகின்றன. இதனால் ஆற்றில் இறங்கி புதையுண்ட கல்வெட்டுக்களை வெளியே எடுத்துப் படிக்க முடியவில்லை. ஆயினும் 

இவ் ஆறு வற்றிய காலத்தில் அக்கல்வெட்டுக்களை வெளியே எடுத்துப் படியெடுத்துப் படிக்க முடியும்  என்ற நம்பிக்கையுள்ளது.1930 இல் மறைந்த  அல்லது மறைக்கப்பட்ட அரிய தமிழ்க்கல்வெட்டு. இக்கல்வெட்டு தம்பலகாமம் நாயன்மார்திடல், மாவிலாங்கடி பிள்ளையார் ஆலயத்தில் காணப்படுகின்றது. 

இக்கல்வெட்டை அவ்வாலயத்தின் தலைவர் முத்துக்குமார் குணராசா தம்பலகாமத்தில் தனியார் காணியில் இருந்து கண்டெடுத்து தனது ஆலயத்தில்வைத்து பாதுகாத்து வருகின்றார். இதன் எழுத்தமைதியைக் கொண்டு இக்கல்வெட்டு இன்றைக்கு 800 ஆண்டுகளுக்கு (கி.பி.12- 13ஆம் நூற்றாண்டில்) முன்னர் பொறிக்கப்பட்டதென்பதை உறுதிப்படுத்த முடிகின்றது. இதில் பொறிக்கப்பட்ட தெளிவான  தமிழ்ச்சொற்களை வாசித்தபோது இக்கல்வெட்டையே இற்றைக்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர்  திருகோணமலையில் ஆளுனர் தம்பலகாமம் வயல்வெளியில் பார்வையிட்டுள்ளார் என்பது  தெரியவந்தது. 

1930களில் இக்கல்வெட்டை படியெடுத்த பேராசிரியர் பரணவிதான கல்வெட்டின் முன் பக்கத்தில்  மட்டும் 11 வரிகளில் சாசனம் பொறிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நாம் கல்லின் பின் பக்கத்தை நன்கு துப்பரவு செய்து பார்த்த போது அதிலும் 11 வரிகளில்  சாசனம் பொறிக்கப்பட்டுள்ளதை கண்டுபிடிக்க முடிந்துள்ளது. ஆயினும் இக்கல்வெட்டு 1000 ஆண்டுகளுக்கு மேல் வயல்வெளிகளிலும், தனியார் காணிகளிலும், வீடுகளிலும் சரியாகப் பாதுகாக்கப்படாத நிலையில் வைக்கப்பட்டிருந்ததால் பல வரிவடிவங்கள் அழிவடைந்தும்,தேய்வடைந்தும் காணப்படுகின்றன. 

இவற்றைக் கருத்தில் கொண்டு இக்கல்வெட்டை பல்வேறு  முறைகளில் படியெடுத்து தென்னாசியாவின் தலைசிறந்த கல்வெட்டறிஞர் பேராசிரியர் சுப்பராயலு மற்றும் சிரேஷ்ட கல்வெட்டறிஞர் கலாநிதி இராஜகோபால் ஆகியோருக்கு அனுப்பி அவர்களின்  உதவியுடன் இக்கல்வெட்டை ஓரளவிற்கு வாசிக்க முடிந்துள்ளது. 

அதன்  வாசகம்  பின்வருமாறு: 

வரி:

1 ----

2 ----------மாதி

3 ------

 4 யிரண் ----தி

 5 ருக்கோணமலை

6 உலையான் நிச்ச

7 யித்த ஜகதப்பழூ

8 கண்டன் சந்தி 

9 க்கு நிலையாக ஜதரஸ

10 தம்பலகாம ஊ

 11 ரை நான் கெல் 

12 லைக்கு உள் எல்லா 

13 வினியோ

14 கங்கொள் 

15 ளும்படிக்கு

16 ம் இதுக்கு

17 மேற் பன்னி

18 நான் ஒரு – 

19 --------------- 

20 –மாகில்  நா

 21 – காகத்து

 22 க்கும் பிறந்வர்கள்.

இக்கல்வெட்டில் இருந்து திருகோணமலை உடையாரின் வேண்டுதலுக்கு இணைங்க ஜகதப்ப கண்டன் (சந்தி) பெயரில் உருவாக்கப்பட்ட நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு (ஆலயப்பணிகளுக்கு) தம்பலகாமம் ஊரின்  அனைத்து வரிகளும் (அனைத்து விநியோகமும்)  வழங்கப்பட்ட செய்திகளையும், ஆணையையும் அறிந்து கொள்ளமுடிகின்றது. திருகோணமலை உடையாரின் தீர்மானத்திற்கு அமைவாக இத்தானம் உருவாக்கப்பட்டதால் தம்பலகாம ஊரின் வரிகள் அந்த ஊரில் இருந்த ஆலயத்தின் நிர்வாகச் செயற்பாடுகளுக்கு வழங்கப்பட்டதா அல்லது திருகோணமலையில் இருந்த ஆலயத்திற்கு வழங்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. இக்கல்வெட்டில் வாசிக்க முடியாதிருக்கும் சில வரிகள் எதிர்காலத்தில் வாசிக்கப்படும் போது இவ்வாலயம் எங்கிருந்ததென்ற உண்மை தெரியவரலாம். 

இக்கல்வெட்டு திருகோணமலை மாவட்டத்தின் அதிலும் சிறப்பாக தம்பலகாமத்தின் இடைக்கால வரலாற்றுக்கு நம்பகத் தன்மையுடைய புதிய சில ஆதாரங்களைத் தருவதாக உள்ளது. தம்பலகாமம் பிராந்தியத்திற்கு 2500 முற்பட்ட வரலாறு உண்டு. அதை  அப்பிராந்தியத்தில் பரவலாகக் காணப்படும் ஆதியிரும்புக்கால குடியிருப்புகளும், பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் உறுதிசெய்கின்றன. இப்பிராந்தியம் பண்டுதொட்டு திருகோணமலைக் கோணேஸ்வரர் ஆலயத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததற்குப் பல ஆதாரங்கள்காணப்படுகின்றன.

அத்தொடர்பின் காரணமாகவே 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயரால் திருக்கோணேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்ட போது அவ்வாலயத்தை நினைவுபடுத்தி தம்பலகாமத்தில் 17ஆம் நூற்றாண்டில் ஆதிகோணநாயகர் ஆலயம்  அமைக்கப்படக் காரணமாகும். தற்காலத்தில்  தம்பலகாமம் என அழைக்கப்படும்  இப்பிராந்தியம் கல்வெட்டில் தம்பலகாம ஊர் எனக் கூறப்பட்டிருப்பதில் இருந்து இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னரே இப்பிராந்தியம் தமிழரின் பூர்வீக இடமாக இருந்ததை இக்கல்வெட்டு உறுதி செய்கின்றது. 

ஆதிகால, இடைக்கால வரலாற்று இலக்கியங்களில் திருகோணமலையும், அங்குள்ள துறைமுகமும் கோணா, கோகர்ணம், கோகர்ணபட்டினம், திரிகூடகிரி, கோணமாமலை என அழைக்கப்பட்டு வந்துள்ளன. ஆனால் இக்கல்வெட்டில் இப்பிராந்தியம் திருக்கோணமலை எனக் குறிப்பிடப்பட்டதிலிருந்து கி.பி. 13ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே இப்பெயர் வழக்கில் இருந்ததற்கு இக்கல்வெட்டு மேலுமொரு சான்றாகக் காணப்படுகின்றது. 

இக்கல்வெட்டு திருக்கோணமலை உடையார் பற்றிக் கூறுகின்றது. சாசன வழக்கில் உடையார் என்ற சொல் அரசனை அல்லது பெருநிலக்கிழாரான அரச பிரதிநிதியைக் குறிப்பதாகப் பேராசிரியர் பத்மநாதன் கூறுகின்றார். இவற்றிலிருந்து 12ஆம் அல்லது 13ஆம் நூற்றாண்டில் திருகோணமலைப் பிராந்தியம் அரசனின் அல்லது அரசபிரதிநிதியின் அதிகாரத்திற்கு உட்பட்ட இடமாக இருந்ததெனக் கூறலாம். இக்கல்வெட்டு திருகோணமலை உடையாரின் வேண்டுதலுக்கு இணங்க தம்பலகாம ஊரில் ஜகதப்ப கண்டன் பெயரில் தானம் உருவாக்கப்பட்டதாகக் கூறுகின்றது. ஜகதப்ப கண்டன் என்பது இருவேறுபட்ட பொருளில்  அமைந்த பெயராகும். ஜகதப்ப என்ற பெயர் அரசன் அல்லது போர்வீரனின் விருதுப்  பெயரைக் குறிக்கின்றது. கண்டன் என்பது போர்வீரனைக் குறிக்கும் சொல்லாகும். இவற்றில் இருந்து ஜகதப்ப கண்டனை தம்பலகாமத்தில் இருந்த அரசனாக அல்லது படைத்  தலைவனாகக் கருத இடமுண்டு. 

இக்கல்வெட்டின் சமகால இலங்கை அரசியல் வரலாறு கூறும் பாளி, சிங்கள இலக்கியங்கள் கலிங்கமாகனது ஆட்சியில் சிங்கள, பௌத்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதால் பொலநறுவை இராசதானியும், சிங்கள மக்களும் தெற்கு நோக்கி நகர்ந்தபோது வடஇலங்கையில் கலிங்கமாகன் தலைமையிலான அரசு தோன்றியதாகக் கூறுகின்றன. இவனது அரசின் தலைநகர் எங்கிருந்த தென்பதை இவ்விலக்கியங்கள் கூறவில்லை. ஆயினும் அவனது படைகள் நிலை கொண்டிருந்த இடங்கள் நிர்வாக ஒழுங்குகள் பற்றிக் கூறுகின்றன. அவற்றுள் திருகோணமலைப் பிராந்தியத்தில் உள்ள கோகர்ணம், கந்தளாய், கட்டுக்குளம் கொட்டியாரம் ஆகிய இடங்களில் கலிங்கமாகன் படைகள் நிலை கொண்டிருந்ததாகக் கூறப்பட்டிருப்பது இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது. மட்டக்களப்பு பூர்வீக சரித்திரம்.  கலிங்கமாகன் ஆட்சியோடு கிழக்கிலங்கையில் வன்னிமைகளின் ஆட்சி தோன்றியதாகக் கூறுகின்றது. 

கோணேஸ்வரர் கல்வெட்டு முதலான தமிழ்  இலக்கியங்களும், ஒல்லாந்தர் கால ஆவணங்களும்  திருகோணமலைப்பற்று, கட்டுக்குளப்பற்று, கொட்டியாரப்பற்று மற்றும் தம்பலகாமப்பற்று முதலான வன்னிமைகளின் ஆட்சி பற்றிக் கூறுகின்றன. இங்கே கல்வெட்டில் கூறப்படும் தம்பலகாமத்து ஜகதப்ப கண்டனனை அரசனாக அல்லது படைத்தலைவனாகக் கொள்ளுமிடத்து இக்கல்வெட்டு வடக்கில் கலிங்கமாகன் ஆதிக்கம் இருந்ததற்கான முதலாவது நம்பத்தகுந்த ஆதாரம் என்ற சிறப்பை பெறும். எதிர்காலத்தில் இக்கல்வெட்டுப் பற்றிய விரிவான ஆய்வுகள் இக்கருத்தை உறுதிசெய்யலாம்.

இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வில் கல்வெட்டுக்கள் நம்பகத்தன்மை உடைய சான்றுகளாகும். 

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க் கல்வெட்டுக்களில் அதிக எண்ணிக்கையிலானவை திருகோணமலை மாவட்டத்தில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. 

ஆயினும் அக் கல்வெட்டுக்களை ஒன்றுசேர ஆவணப்படுத்தி குறிப்பிட்ட ஒரு இடத்தில் பாதுகாக்கப்படுவதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்ற ஆதங்கம் தமிழ் ஆர்வலர்கள்

மத்தியில் காணப்படுகின்றது. ஆயினும் திருகோணமலை மக்களிடையே தமது பிரதேசத்தின் வரலாற்றுச் சின்னங்களை கண்டறிந்து ஆவணப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு 1960 களில் இருந்து தோன்றிய வரலாறு காணப்படுகின்றது. அதனை சமகாலத்தில் முன்னெடுத்துச் செல்லும் துடிப்புள்ள இளைஞர்களில் ஒருவராக வைத்திய கலாநிதி ஜீவராஜ் அவர்களைப்

பார்க்கின்றேன். இதற்கு இவரின்  தந்தை திரு.தங்கராசா, பேரன் அமரர் வேலாயூதம் ஆகியோர்  ஆதிகோணநாயகர் கோயிலின் மரபுவழி அறங்காவலர்களாகும். 

இவர்கள் புத்திரிகை, கலை, இலக்கிய, வரலாறு ஆகிய பணிகளால் தமிழ்  அறிஞர்களுக்கு நன்கு பரிச்சயமானவர்கள். இப்பின்புலத்தின் வழிவந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து உருவான வைத்திய கலாநிதி ஜீவராஜூம், அவரின்  சகோதரியான தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி 

ஜெயகௌரி ஸ்ரீபதியும் சமகாலத்தில் தமக்குரிய கடமைகளுக்கு அப்பால் தம்பலகாமத்தின் வரலாற்றுச்  சின்னங்களைக் கண்டறித்து ஆவணப்படுத்தும் பணிகளில் கடுமையாக உழைத்து வருவது இலங்கைத் தமிழர் வரலாறு பற்றிய ஆய்வுக்குப் புதுவழி காட்டுவதாக உள்ளது.

(பேராசிரியர் ப.புஷ்பரட்ணம் தலைவவர்  வரலாற்றுத்துறை  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04