தமிழக சட்டசபை தேர்தல் கடந்த 16 ஆந் திகதி நடைபெற்றது. இதற்காக தமிழகம் முழுவதும் 65 ஆயிரத்து 762 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 596 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 75 ஆயிரத்து 980 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் வாக்குப்பதிவுக்காக பயன்படுத்தப்பட்டன. தமிழகம் முழுவதும் மொத்தம் 74 சதவீத வாக்குகள் பதிவாயின.

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் கட்சி முகவர்கள் ஆகியோர் சரிபார்த்த பின்னர், பொலிஸ் பாதுகாப்புடன் அந்தந்த பகுதிகளில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

தமிழகம் முழுவதும் மொத்தம் 68 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை மாவட்டத்தில் மட்டும் 3 இடங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஓட்டு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கினாலும் முன்னணி நிலவரம் காலை 9 மணியில் இருந்து தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணும் பணி முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும். மேலும் 232 தொகுதிகளிலும் நடைபெறும் வாக்கு எண்ணிக்கையை தலைமை செயலகத்தில் இருந்தவாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பார்ப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையங்களில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் ஆய்வு செய்து வருகிறார்கள். வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதி பெற்ற முகவர்கள்; மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வேறு யாரும் உள்ளே செல்ல அனுமதியில்லை. கட்சி முகவர்கள் மற்றும் தேர்தல் அலுவலர்கள் கையடக்கதொலைபேசி கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். மீறி கொண்டு சென்றால் கையடக்கதொலைபேசி பறிமுதல் செய்யப்படும் என்று தேர்தல் அதிகாரிகள் கூறினார்கள்.