தமிழக சட்டப் பேரவைத் தேர்தலுக்கு நேற்று நடைபெற்ற வாக்குப்பதிவில் சுமார் 73.76 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார். இன்னும் இரு தொகுதிகளுக்கு வாக்களிப்பு நடைப்பெறாத நிலையில் இந்த வாக்கு சதவீதம் மேலும் அதிகரிப்பதற்கு வாய்ப்பு உண்டு என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 78 சதவீத வாக்குகளும் 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 73 சதவீத வாக்குகளும் பதிவாகின.

ஆயினும் , கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் தற்போது நடைபெற்றுள்ள தேர்தலில் வாக்கு சதவீதம் சற்று குறைந்துள்ளது.

காரணங்கள் என்ன? பிற்பகல் 3 மணிக்கு மேல் வாக்குகள் அதிகளவு பதிவாகவில்லை எனவும், நகரப் பகுதிகளை விட, ஊரகப் பகுதிகளில் அதிக வாக்குகள் பதிவாகின எனவும் தெரியவந்துள்ளது. சென்னை உட்பட நகரப் பகுதிகளில் குறைவான வாக்குகள் பதிவானதாலும், திருச்சி-கோவை உள்ளிட்ட இடங்களில் மழை காரணமாகவும் இந்தத் தேர்தலில் வாக்கு விகிதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளைத் தவிர்த்து 232 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பே, பல வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் காலை 6.30 மணிக்கே நீண்ட வரிசையில் காத்திருந்தனர். வாக்குப் பதிவு தொடங்கியவுடன் சில வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.

யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்து கொள்வதற்கான இயந்திரம் சென்னை அண்ணாநகர் உட்பட 17 சட்டப் பேரவைத் தொகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன. இந்த இயந்திரங்களிலும் சிறிது கோளாறு ஏற்பட்டது. இதன்பின், அது சரிசெய்யப்பட்டது.

இதேவேளை, எந்த இடத்திலும் பெரிய அளவுக்கு சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் எதுவும் ஏற்படவில்லை என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.

மாவட்டவாரியாக பதிவாகியுள்ள வாக்குப்பதிவு நிலவரம் :

1. காஞ்சிபுரம் மாவட்டம் - 71%

2. தருமபுரி மாவட்டம் - 85%

3. கிருஷ்ணகிரி மாவட்டம் - 79.16%

4. அரியலூர் மாவட்டம் - 83.75%

5. பெரம்பலூர் மாவட்டம் - 79.54%

6. வேலூர் மாவட்டம் - 77.24%

7. கடலூர் மாவட்டம் - 78.64%

8. நாகப்பட்டினம் மாவட்டம் -77.3%

9. திருவாரூர் மாவட்டம் - 78.4%

10. திண்டுக்கல் மாவட்டம் - 79.62%

11. தஞ்சாவூர் மாவட்டம் - 77.4%

12. கரூர் மாவட்டம் - 83.09%

13. ஈரோடு மாவட்டம் - 79.39%

14. சேலம் மாவட்டம் - 80.18%

15. திருவண்ணாமலை மாவட்டம் -83.05%

16. நாமக்கல் மாவட்டம் - 82.10%

17. கோவை மாவட்டம் - 68.61%

18. நீலகிரி மாவட்டம் - 70.53%

19. திருப்பூர் மாவட்டம் - 72.68%

20. புதுக்கோட்டை மாவட்டம் - 77.24%

21. மதுரை மாவட்டம் - 70.38%

22. தேனி மாவட்டம் - 75%

23. சிவகங்கை மாவட்டம் -70%

24. விருதுநகர் மாவட்டம் - 76.36%

25. ராமநாதபுரம் மாவட்டம் - 68%

26. திருநெல்வேலி மாவட்டம் - 73.15%

27. குமரி மாவட்டம் - 66.32%

28. தூத்துக்குடி மாவட்டம் - 71.43%