அண்மையில் இடம்பெற்ற மிகவும் பிரத்தியேகமான வாகன அணி வகுப்பின் கண்காட்சியானது இலங்கையில் Mercedes-Benz ஆனது இன்னமும் மிகவும் விரும்பப்படுகின்ற, பெறுமதிமிக்க மோட்டார் வாகன வர்த்தக நாமமாகத் திகழ்வதை தெளிவாகக் காண்பித்துள்ளது.

இலங்கையில் இதுவரை இடம்பெற்ற வாகன கண்காட்சியில் அதிகமான எண்ணிக்கையாக BMICH அரங்கில் ஒரே கூரையின் கீழ் மொத்தமாக 646 Mercedes-Benz வாகனங்கள் கண்காட்சியில் இடம்பிடித்திருந்தன.

இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான ஜேர்மனிய தூதுவரான மேன்மை தங்கிய கலாநிதி ஜுர்கன் மோர்ஹாட், அவரது பாரியாரும் இந்த Mercedes-Benz வாகன கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

பாரம்பரியம், வடிவமைப்பு, புதிய தொழில்நுட்பங்கள், வேறுபட்ட மாதிரிகள் மற்றும் செலுத்துவதன் மூலமாக ஒருவருக்கு கிடைக்கின்ற அனுபவம் காரணமாக வாகனங்கள் எப்போதும் மனிதர்களுக்கு சிலிர்ப்பூட்டி, அவர்களை உற்சாகப்படுத்தி வந்துள்ளன. வாகனங்களை கண்டுபிடித்தவர் என்ற வகையில் Mercedes-Benz ஒவ்வொரு நாளும் வாகனங்களை மீள் உருவமைத்து, இயக்கத்தில் அபிவிருத்திகளை முன்னெடுத்து வந்துள்ளது.

ஏனைய நிறுவனங்களும் தன்னைப் பின்பற்றும் வகையில் தர ஒப்பீட்டு நியமமாக உலகெங்கிலும் பல்வேறு நிகழ்வுகளை Mercedes-Benz ஏற்பாடு செய்து வருகின்றது. இவ்வாறே Mercedes-Benz வாகன கண்காட்சியானது ஏனையவர்கள் அனைவரும் பின்பற்றும் வகையில் தொடர்ச்சியாக தனது தரத்தை மேம்படுத்தி வருகின்றது.

26 ஆவது Mercedes-Benz வாகன கண்காட்சி நிகழ்வு 2016 ஏப்ரல் 30 அன்று இடம்பெற்றது. வியப்பூட்டும் வகையில் கண்காட்சி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட நேரமான மு.ப 7 மணிக்கே 150 இற்கும் மேற்பட்ட மோட்டார் கார்கள் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.

வழமையாக ஞாயிற்றுக்கிழமைகளில் இடம்பெறும் நிலையில், இம்முறை சனிக்கிழமையன்று நீண்ட விடுமுறை வாரத்தில் இடம்பெற்ற போதிலும் 646 மோட்டார் கார்கள் இதில் பங்குபற்றியமை மூன்று முனை நட்சத்திர இலச்சினை பொறித்த Mercedes-Benz மோட்டார் கார் மீது மக்கள் கொண்டுள்ள அபிமானத்தையும் உற்சாகத்தையும் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

Mercedes-Benz கண்காட்சி நிகழ்வானது Mercedes-Benz மேட்டார் கார் வாகனங்கள், அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான பிரத்தியேகமான ஒரு நிகழ்வாகும். இத்தகைய அளவில் அதிகமான எண்ணிக்கையில் Mercedes-Benz மோட்டார் கார் வாகனங்கள், அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒரே இடத்தில் ஒன்று கூடி, பங்குபற்றும் வகையில் உலகில் இடம்பெறும் ஒரேயொரு நிகழ்வாக அமையும் என்பது நிச்சயம்.

இலங்கையில் வேறு எந்தவொரு வாகன விற்பனை நிறுவனங்களும் இத்தகைய அளவிற்கு பிரமாண்டமான நிகழ்வு எதனையும் ஏற்பாடு செய்ய இதுவரை முன்வந்திராத நிலையில், ஒரே இடத்தில் இந்த அளவிற்கு பழமை வாய்ந்த மற்றும் புத்தம்புதிய கார் வாகனங்களை காட்சிப்படுத்துவது வேறு எந்த சொகுசு கார் விற்பனையாளர்களாலும் முடியாத காரியமாகும். Mercedes-Benz வாகன கண்காட்சி நிகழ்வானது இலங்கை Mercedes-Benz கழகத்தால் ஏற்பாடு செய்யப்படுவதுடன் இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான அனுமதி அங்கீகாரம் பெற்ற விநியோகத்தர்களான DIMO நிறுவனத்தால் அனுசரணை வழங்கப்பட்டு வருகின்றது. நைஜல் ஒஸ்டின் தலைமையில் வாகனங்கள் மீது தீவிர ஆர்வம் கொண்டவர்களை Mercedes-Benz கழக நிர்வாக சபை உள்ளடக்கியுள்ளது.

போருக்கு முந்திய யுகம் முதல் நவீன SUV வரிசை வரை இந்த ஆண்டு Mercedes-Benz வாகன கண்காட்சியில் 35 வகைப்பட்ட வாகன மாதிரிகள் இடம்பெற்றிருந்தன. இலங்கையில் மோட்டார் வாகனத் துறையில் தனி முத்திரை பதித்துள்ள AMG model - AMG GT என்ற பிரதான வாகன உற்பத்தியும் இதில் உள்ளடங்கியிருந்தது. இம்முறை முதற்தடவையாக புதிய GLS 500 SUV மற்றும் GLE Coupe வாகனங்கள் பொதுமக்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், DIMO பிரீமியர் (ஏற்கனவே சொந்தமான) வாகனங்கள் மற்றும் Mercedes-Benz வான்களையும் (V-Class மற்றும் Citan) வாகனங்களையும் DIMO நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது. முறையே W201, W202, W123, W124, W126, W114/W115, 180A, 180B (220 Ponton), W110, W111/W112,W108/W109, W116, SL Old, 170 S வகைகள் மற்றும் போருக்கு முந்திய வாகன வகைகள் போன்ற, மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்ற வாகனங்களும் இதில் இடம்பெற்றிருந்தன. மு.ப 10.30 மணி முதல் இந்நிகழ்வு பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டிருந்ததுடன், பெரும் எண்ணிக்கையான வாகன ஆர்வலர்கள் பழமை வாய்ந்த வாகனங்கள் முதல் புத்தம்புதிய வகைகள் வரை Mercedes-Benz வாகனங்களைக் கண்டு களிக்கும் அனுபவத்தைப் பெற்றுக்கொண்டனர்.