இலங்கைக்கு மேல் வளிமண்டலத்தில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் இந்தியா நோக்கி நகர ஆரம்பித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் நேற்று பெய்த மழைவீழ்ச்சியினளவுடன் ஒப்பிடுகையில் இன்று குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இருப்பினும் கடந்த இரண்டு தினங்களாக நாடு முழுவதும் பெய்த அடைமழையினால் எட்டுப் பேர் உயிரிழந்திருப்பதுடன், 31,062 குடும்பங்களைச் சேர்ந்த 1,28,428 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் பெய்த அடை மழையுடன் கூடிய சீரற்ற காலநிலையினால் 7 மாகாணங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

 இப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வௌ்ளம், மண்சரிவு, மரம் முறிந்து விழுதல், திடீர் வௌ்ளம், மின்னல் தாக்கம், அதிக மழையுடன் வீசிய கடும் காற்று ஆகிய இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. 

இயற்கை அனர்த்தம் காரணமாக 1858 குடும்பங்களைச் சேர்ந்த 5,196 பேர் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்து 32 தற்காலிக இடைத் தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 11 மாவட்டங்களிலும் இடி, மின்னல் தாக்கம், மண்சரிவு, வௌ்ளத்தினால் 8 பேர் உயிரிழந்ததோடு 3 பேர் காணாமல் போயிருப்பதாகவும் இருவர் காயங்களுக்குள்ளாகியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.