சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உணவு மற்றும் இதர தேவைகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்தோடு சீரற்ற கால நிலை தொடர்பில் விழிப்பில் இருந்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இடர் முகாமைத்துவ அமைச்சர், பாதுகாப்பு செயலாளர் உட்பட முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபருக்கும் ஜனாதிபதி ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான நிதியை ஒதுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி திடீர் இடர்கள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்துமாறும், அது தொடர்பில் வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தி நாடு முழுவதும் முன்னெடுக்குமாறும் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அதேவேளை, சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணங்களை மேற்கொள்வது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் விசேட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோனுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.