ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக கைதாகி பின்னர் பொலிஸ் சேவையிலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் உதவிப் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மீண்டும் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் கண்டியில் இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

ஹெரோயின் போதைப்பொருள் 20 மில்லி கிராமை உடன்வைத்திருந்த குற்றத்திற்காக கடந்த 2009 ஆம் ஆண்டு கைதாகி குற்றவாளியான மேற்படி பொலிஸ் உதவிப்பரிசோதகர் மீண்டும் 3070 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று கண்டிப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்படி சந்தேக நபர் லொறி ஒன்றின் சாரதியாகத் தொழில் புரிந்து வந்துள்ளதுடன் குண்டசாலை கெங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயது நபராவார்.

இவரை கண்டி தென்னக்கும்புர பிரதேசத்தின் இலுக்மோதரை என்ற இடத்தில் வைத்து பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

கண்டி பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றின்படியே குறித்த நபர் கைதானதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபரை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.