(க.கிஷாந்தன்)

மஸ்கெலியா - சாமிமலை ஸ்டர்ஸ்பி சூரியகந்தை தோட்டத்தில் மண்சரிவு காரணமாக 18 குடும்பத்தைச் சேர்ந்த 96 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சூரியகந்தை தோட்ட ஆறாம் இலக்க லயன் குடியிருப்பின் பின்புறத்தில் நேற்று இரவு மண்சரிவு ஏற்பட்டுள்ளது.  

மண்சரிவினால் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. எனினும் உயிராபத்துக்கள் எதுவும் இல்லையெனவும், சில பொருட்கள் மட்டும் சேதமாகியுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்தனர்.

இதன்காரணமாக இக்குடியிருப்பில் வசித்து வந்த 96 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இவர்கள்  தோட்ட சிறுவர் நிலையம், சிறுவர் முன்பள்ளி ஆகிய நிலையங்களில் தற்காலிகமாக  தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடரும் மழை காரணமாக இப்பகுதியில் பாரிய அனர்த்தம் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக  இராணுவத்தினர் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.