இலங்கை கடற்படையால் தமிழகத்தின்  பாம்பன் நாட்டுப்படகு மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். 

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் இருந்து 50 இற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது குறித்த பகுதியில் இலங்கை கடற்படையினர் 8 பேர் குட்டி ரோந்துக்கப்பல்களில் வந்தாக தமிழக செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

அவர்கள் நாட்டுப்படகுகளை கண்டதும் அங்கிருந்து செல்லுமாறு எச்சரிக்கை செய்து விரட்டியடித்தனர் எனவும்  இதையடுத்து மீனவர்கள் அவசர, அவசரமாக குறித்த பகுதியை விட்டு செல்ல முயன்றபோது மீனவர்கள் இன்னாசி, சேசு, டைசன் ஆகியோருக்கு சொந்தமான 3 படகுகளில் இலங்கை கடற்படையினர் வலைகளை வெட்டிவிட்டு குறித்த படகுகளையும் அவற்றில் இருந்த மீனவர்களையும் பிடித்து இலங்கை கடற்படை முகாமுக்கு கொண்டு சென்றனர் எனவும் தமிழக செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது.

முகாம் விசாரணைக்கு பின்னர், இனிமேல் எல்லைத்தாண்டி வரக்கூடாது என்று எச்சரிக்கை செய்து மீனவர்களை விடுவித்து அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து, மீனவர்கள் கரை திரும்பியுள்ளதாக தெரியவருகிறது.