இந்திய இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண்பது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இடையே பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் நரேந்திர மோடியை நேற்று டில்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது தொடர்பாக இரு தலைவர்கள் முக்கியமாக ஆலோசனை மேற்கொண்டனர்.

 இருநாள் பயணமாக இந்தியாவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை சென்ற ஜனாதிபதிக்கு, பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார். 

இதன்போது இரு நாடுகளிடையேயான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

 இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் குற்றம்சாட்டி இலங்கை கடற்படையினரால் துப்பாக்கியால் சுடப்படுவது, கைது செய்யப்படுவது குறித்து இந்தியத் தரப்பின் கவலையை ஜனாதிபதியிடம்  மோடி தெரிவித்தார். இந்த பிரச்னைக்கு சுமூகமான தீர்வுகாண்பது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

 இது தவிர இந்திய உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள், இரு நாடுகள் இடையிலான வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது ஆகியவை குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சனிக்கிழமை உஜ்ஜைன் சென்று அங்கு நடைபெற்று வரும் சிம்ஹஸ்த கும்பமேளாவில் பங்கேற்கிறார். மோடியும் அவருடன் உஜ்ஜைன் செல்கிறார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தமை தொடர்பில் டுவிட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "இந்திய-இலங்கை உறவு மிகவும் சிறப்பானது. இனி வரும் காலத்தில் இந்த உறவு மேலும் வலுப்படும்' என்று தெரிவித்துள்ளார்.

 "உஜ்ஜைன் கும்பமேளாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பங்கேற்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்தியா-இலங்கை இடையே சமூக பண்பாட்டு உறவு எவ்வளவு ஆழமாக உள்ளது என்பதை இது வெளிக்காட்டுகிறது' என்றும் மோடி கூறியுள்ளார்.

 மோடியுடனான சந்திப்பு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , "இந்தியா-இலங்கை இடையே நிலவி வரும் நல்லுறவு மிகச் சிறந்தது. நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசுடனான இலங்கையின் உறவு மேலும் வலுவடைந்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

 இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியதாவது:

 இந்த சந்திப்பின்போது இலங்கையுடனான மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தினார். 

இலங்கையில் அனைத்து பிரிவினரும் கண்ணியத்துடனும், சம உரிமையுடனும் வாழ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுள்ள முயற்சிகளை மோடி பாராட்டினார். 

இது தவிர இரு நாடுகளிடையே வர்த்தக, பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது என்றார்.

 மத்தியப் பிரதேசத்தின் சாஞ்சி ஸ்தூபிக்கு இன்று சனிக்கிழமை செல்லும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , தொடர்ந்து பெங்களூர் செல்கிறார். பின் அங்கிருந்து இலங்கை திரும்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.