திருக்கோவில் தங்கவேலாயுதபுரத்தில் மோட்டார் சைக்கிளில் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ள  சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. 

இவ் விபத்து தொடர்பாக 4 பேரை சந்தேகத்தில் கைது செய்துள்ள திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று கோளாவில் 2 ஆம் பிரிவைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 34 வயதுடைய தங்கவடிவேல் தயாபரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் 

இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, 

அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த 5 நண்பர்கள் 3 மோட்டார் சைக்கிளில் நேற்று காலையில் தங்கவேலாயுதபுரம் பிரதேசத்திற்கு சென்று அங்கு சமைத்து சாப்பிட்டு, மது அருந்தி களியாட்டத்தில் ஈடுபட்டு விட்டு மாலை 5.30 மணியளவில் வீட்டிற்கு செல்ல தயாராகியுள்ளனர். 

உயிரிழந்தவர் தனியாக தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளை செலுத்தியபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளனதில் படுகாயமடைந்துள்ளார். 

இதனையடுத்து, இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

இச் சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவருடன் சென்ற ஏனைய 4 நண்பர்களையும் சந்தேகத்தில் கைது செய்துள்ளதுடன் உயிரிழந்தவரின் சடலம் திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக திருக்கோவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.