காய் நகர்த்தும் ரணில் - சஜித்: வேட்பாளராகப் போவது யார்..?

Published By: J.G.Stephan

24 Aug, 2019 | 03:41 PM
image

ஜனாதிபதி தேர்தல் விவகாரம் சூடு பிடித்துக்கொண்டிருக்கின்ற நிலை யில் கட்சிகளின் வேட்பாளர்களும் ஒவ்வொருவராக வெளிவந்து கொண்டிருக்கின்றனர். மக்கள் மத்தியில் பல்வேறு எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்திய வண்ணம் வேட்பாளர்கள் உதயமாகிக் கொண்டிருக்கின்றனர்.

தற்போது அரசியல் களப்போக்கை பார்க்கும்போது இருமுனைப்போட்டி மும்முனைப்போட்டி அல்லது நான்கு முனைப்போட்டியாகக் கூட தேர்தல்  வந்துவிடுமோ என்று தோன்றும் அளவிற்கு அரசியல் காய் நகர்த்தல்கள் மற்றும் களநிலைமைகள் முன்னேற்றமடைந்து வருகின்றன. 

தற்போதுவரை இரண்டு கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுவிட்டார்.

அவர் தொடர்பான சாதக, பாதக விமர்சனங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும் அறிவிக்கப்பட்டுவிட்டார். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கின்றார்.



பாராளு மன்றத்தில் மிகவும் செயற்திறன்மிக்க உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஓர் அழுத்தம் பிரயோகிக்கக்கூடிய வேட்பாளராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. 

இவ்வாறு ஜனாதிபதி தேர்தல் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அதிகரித்து வருகின்ற நிலையிலும் பிரதான கட்சிகள் வேட்பாளர்களைத் தொடர்ச்சியாக அறிவித்து வருகின்ற சூழலிலும் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதான ஒரு விடயமும் அரசியல் களத்தில் மிக பரபரப்பாக பேசப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன தமது ஜனாதிபதி வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் அடுத்ததாக ஐக்கிய தேசிய கட்சியும் சுதந்திரக்கட்சியும் என்ன செய்யப்போகின்றன என்பது குறித்தே தற்போது அதிகளவில் பேசப்படுகின்றது. 

சுதந்திரக்கட்சியைப் பொறுத்தவரை, இம்முறை தேர்தலில் வேட்பாளரை களமிறக்காமல் ஏதாவது ஒரு தரப்பிற்கு ஆதரவு அளிக்கும் என்றே பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. அக்கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடவேண்டும் என்று தொடர்ச்சியாக கூறிவருகின்ற போதிலும் ஜனாதிபதி அது தொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் தெரிவிக்காமல் இருக்கின்றார்.

தான் மீண்டும் போட்டியிடுவேனா இல்லையா என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்விதமான கருத்தையும் முன்வைக்காமலேயே இருந்து வருகின்றார். எனவே சுதந்திரக்கட்சியின் முடிவு இதுவரை புதிராகவே காணப்படுகின்றது.

சுதந்திரக்கட்சி ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை களமிறக்காது என்று பொதுவாக ஊகிக்கப்படுகின்ற நிலையிலும் அதன் முடிவு இதுவரை புதிராகவே இருக்கின்றது. 

எப்படியிருப்பினும் ஆளும்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் தொடர்பிலேயே பாரிய சிக்கல்களும் முரண் பாடுகளும் நிலவுகின்றன. கட்சிக்குள் இந்த விடயத்தில் ஒரு குழப்பமான நிலைமை காணப்படுகின்றது. இது தொடர்பில் சற்று ஆழமாக ஆராயவேண்டிய தேவை காணப்படுகின்றது. 

ஐக்கிய தேசியக்கட்சியைப் பொறுத்தவரை, இலங்கையில் மிக நீண்டகாலமாக இருக்கும் கட்சியாகும்.  ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்தே  பண்டார நாயக்க பிரிந்துசென்று சுதந்திரக்கட்சியை உருவாக்கினார். எனவே அக்கட்சி, இலங்கையின் தேசிய அரசியலில் செல்வாக்குமிக்க அழுத்தங்களைப் பிரயோகிக்கக்கூடிய ஒரு கட்சி. எனினும் இம்முறை அந்தக்கட்சி, ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில் பாரிய நெருக்கடிகளை சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. 

ஏனைய கட்சிகள் ஜனாதிபதி வேட் பாளரை அறிவித்துள்ள நிலையில் ஆளும் ஐக்கிய தேசியக்கட்சி மாத்திரம் இந்த விடயத்தில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றது. ஆளும் கட்சியாக இருக்கின்றபோதும் கூட அந்தக் கட்சியினால் உடனடியாக ஒரு வேட்பாளரை அறிவிக்க முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டிருக்கின்றது. 

ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மூவரின் பெயர்கள்  மிகப் பிரபலமாக பேசப்படுகின்றது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவரும் அமைச்சருமான சஜித் பிரேமதாச மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பெயர்களே  ஜனாதிபதி தேர்தல் தொடர்பில்  ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் பேசப்படுகின்றது.

இதில் சபாநாயகர் கரு ஜயசூரியவின் பக்கம் சற்று மௌனமான நிலைமையே காணப்படுகின்றது. என்னை வேட்பாளராக தெரிவு செய்தால் நான் போட்டியிடுவேன். ஆனால் அனைவரதும் சம்மதத்துடன் என்னை வேட்பாளராக நியமிக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் சபாநாயகர் கரு ஜயசூரிய இருப்பதாகத் தெரிகின்றது. (இறுதியில் அவரே வேட்பாளராக வருவார் என்றும் ஊகங்கள் தெரிவிக்கப்படுகின்றன) அவர் இந்த விடயத்தை ஐ.தே.கவின் பல கூட்டங்களில் தெரிவித்திருக்கின்றார். எனவே சபாநாயகர் கரு ஜயசூரியவின் பெயர் தற்போதைய சூழலில் சற்று அடக்கியே பேசப்படுகின்றது. ஆனால் ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோரின் பெயர்களே  மிக அதிகமாக பேசப்படுகின்றது. 

சஜித்தின் பிரவேசம் 
கடந்த ஒன்றரை மாதங்களாக அமைச்சர் சஜித் பிரேமதாச தான் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடடத் தயார் என்பதை மிக பகிரங்கமாக அறிவித்து வருகின்றார். தொடர்ச்சியாக கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் சஜித் பிரேமதாச எந்தவகையிலாவது நான் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டே தீருவேன் என்று கூறிவருகின்றார்.

அவரது டுவிட்டர் தளத்திலும் சஜித் பிரேமதாச இந்த விடயத்தை திட்டவட்டமாக பதிவிட்டிருக்கின்றார். அத்துடன் ஐக்கிய தேசியக்கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாச வேட்பாளராக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். 

அஜித் பி பெரேரா, சுஜீவ சேனசிங்க, ஹரீன் பெர்னாண்டோ, ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசீம், ரஞ்சித் மத்தும பண்டார, மங்கள சமரவீர உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக வரவேண்டும் என்பதை பகிரங்கமாக தெரிவித்து வருகின்றனர். இவர்கள் மிகப் பகிரங்கமாகவே பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஏற்கமாட்டோம் என கூறிவருகின்றனர். 

அதுமட்டுமன்றி தற்போது 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சஜித் பிரேமதாசவை வேட்பாளராக அறிவிக்கும்படி கூறி கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். சில தினங்களில் தமக்கு இது தொடர்பில் பதிலளிக்கப்படவேண்டும் என அக்கடிதத்தில் அவர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் அமைச்சர் சஜித் பிரேமதாச தான் இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருக்கின்றார் என்பது மட்டும் உண்மை.இது இவ்வாறிருக்க, மறு புறம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தான் வேட்பாளர் விடயத்தில் விட்டுக் கொடுக்காத நிலையிலேயே இருக்கின்றார்.

தானே ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிகவும் உறுதியாக இருக்கின்றார். நடைபெற்று வருகின்ற கட்சியின் அனைத்துக்கூட்டங்களிலும் தான் போட்டியிட வேண்டும் என்பதில் ரணில் விக்ரமசிங்க உறுதியாக கூறிவருகின்றார். தான் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதாகவும் சஜித் பிரேமதாசவை பிரதமராக நியமிப்பதாகவும் ரணில் விக்கிரமசிங்க கூறிவருகின்றார். எனினும் அதனை நிராகரிக்கும் சஜித் தரப்பு சஜித் பிரேமதாசவையே ஆதரித்து வருகின்றது.  ஆனால்  பிரதமர் ரணில் விக்ரமசிங்க இம்முறை வேட்பாளர் விடயத்தை விட்டுக்கொடுப்பதாக இல்லை. 

விடாப்பிடியில் ரணில் 
1994ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்க 1999ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். அதில் அவர் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா -குமாரதுங்கவிடம் தோல்வியடைந்தார். அதேபோன்று 2005ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க மஹிந்த ராஜபக்ஷவிடம் தோல்வியடைந்தார்.

பின்னர் 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டி யிடாது முன்னாள்  ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை வேட்பாளராக களமிறக்கினார். எனினும் அதில் பொன்சேகா மஹிந்த ராஜபக்ஷவிடம் தோல்வி அடைந்தார்.

அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் தீர்க்கமான கட்டத்தில் நடைபெற்ற சூழலில் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இறுதியில் பல்வேறு அரசியல் காய்நகர்த்தல்களின் விளைவாக ரணில் விக்ரமசிங்க போட்டியிடாமல் சுதந்திரக்கட்சியிலிருந்து வந்த மைத்திரிபால சிறிசேன போட்டியிடுவதற்கு இடமளித்தார். அதில் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்று ஜனாதிபதியானார். 

இந்த நிலையிலேயே, இம்முறை வேட்பாளர் விடயத்தை விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்ற நிலைப்பாட்டில் ரணில் விக்ரமசிங்க இருக்கின்றார். 2015ஆம் ஆண்டு தேர்தலில்  போட்டியிட்டிருந்தால் தன்னால் வெற்றிபெற்றிருக்க முடியும் என்று ரணில் விக்ரமசிங்க கருதினார்.

எனினும் அதற்கான சாத்தியம் அப்போது கிடைக்கவில்லை. எனவே இரண்டு முறை வேட்பாளர் விடயத்தை விட்டுக்கொடுத்ததால் நான் இம்முறை போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என்ற தீர்மானத்தில் விக்ரமசிங்க உறுதியாக காணப்படுகின்றார். 

எனினும் இம்முறை அவருக்கு கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன. எனினும் ரணில் விக்ரமசிங்கவுடன் ராஜித சேனாரட்ன, சம்பிக்க ரணவக்க, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக இருக்கின்றனர். 

முரண்பாடுகள் 

இந்த நிலையிலேயே ரணில் விக்ரமசிங்கவிற்கும் சஜித் பிரேமதாசவிற்குமிடையில் ஜனாதிபதி வேட்பாளர் விடயத்தில் முரண்பாடுகள் நிலவுகின்றன. இந்நிலையில் இருவருமே இருவிதமான அரசியல் காய்நகர்த்தல்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஐக்கிய தேசியக்கட்சி உள்ளிட்ட கூட்டுக்கட்சிகள் இணைந்து உருவாக்கப்படவுள்ள ஜனநாயக தேசிய கூட்டணி உதைபந்துபோல அடிவாங்கிக்கொண்டிருக்கின்றது.

ஐக்கிய தேசியக்கட்சி உள்ளிட்ட கூட்டுக்கட்சிகள இணைந்து ஜனநாயக தேசிய கூட்டணியை உருவாக்கியதன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கலாம் என பிரதமர் ரணில் கூறிவருகின்றார்.

ஆனால் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்த பின்னரே ஜனநாயக தேசிய கூட்டணி நிறுவப்பட வேண்டும் என அமைச்சர் சஜித் பிரேமதாச கூறிவருகின்றார். இந்த நிலையிலேயே ஜனநாயக தேசிய கூட்டணி அமைக்கும் பணிகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. இதில் ரணில் – சஜித் இருவருமே அரசியல் காய்நகர்த்தல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் ஆளும் கட்சியான ஐக்கிய தேசியக்கட்சி இவ்வாறு தொடர்ச்சியாக வேட்பாளர் விடயத்தில் தாமதித்துக்கொண்டிருப்பது எதிர்க்கட்சிகளுக்கே சாதகமாக அமையும் என்பதை பலர் சுட்டிக்காட்டிக்கொண்டிருக்கின்றனர். 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும், மக்கள் விடுதலை முன்னணியும் தமது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் ஐக்கிய தேசியக்கட்சி மாத்திரம் தாமதித்துக்கொண்டிருப்பது கட்சிக்கு சாதகமாக அமையாது என்பதை பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனினும் ரணில் விக்ரமசிங்கவிற்கும் சஜித் பிரேமதாசவிற்குமிடையில் நிலவுகின்ற முரண்பாட்டை தீர்த்து வைப்பது அவ்வளவு இலகுவானதாகத் தெரியவில்லை. முரண்பாடு தொடர்ந்தும் நீடித்துக்கொண்டே இருக்கின்றது. 

சஜித் பிரேமதாச தரப்பு ஜனாதிபதி வேட்பாளர் பதவி கிடைக்காவிடின் புதிய திட்டமொன்றையும் வைத்துள்ளதாக அரசியல் களத்தில் அறியமுடிகின்றது. அதாவது தமது ஆதரவாளர்களுடன் சஜித் தனித்து நின்று ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முயற்சிப்பதாகவும் இதற்கு சுதந்திரக்கட்சியின் அதிகமானோர் ஆதரவு வழங்கலாம் என்றும் அரசியல் களத்தில் ஊகங்கள் வெளியிடப்படுகின்றன. எனினும் இந்த விடயத்தில் சஜித் பிரேமதாச எந்தளவு தூரம் நம்பிக்கை கொண்டிருப்பார் என்பது கேள்விக்குறியே. 

சஜித் பிரேமதாசவும் அரசியல் ரீதியில் நன்கு சிந்தித்து தீர்மானம் எடுக்கக்கூடிய ஒருவராகவே பார்க்கப்படுகின்றார். எனவே அவர் அவ்வாறு அவசரப்பட்டுத் தனித்து செயற்பட முயற்சிப்பார் என்பது குறித்து நிச்சயமற்ற தன்மையே காணப்படுகின்றது. எனினும் சஜித் பிரேமதாச இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக மிகவும் உறுதிப்பட கூறிக்கொண்டிருக்கின்றார் என்பதையும் அனைவரும் சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோன்று அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த சஜித் தரப்பு எம்.பி. யான அஜித் பி பெரேரா சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது உறுதி.

அவர் எந்தவழியில் போட்டியிடப் போகிறார் என்பது குறித்தே தற்போது நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம் என்று தெரிவித்திருந்தார். அந்த வகையில் பார்க்கும்போது சஜித் பிரேமதாச போட்டியிடுவதற்கு உறுதியாகவே இருக்கின்றார். மறுபுறம் ரணில் விக்ரமசிங்கவும் வேட்பாளர் விடயத்தை விட்டுக்கொடுக்கத் தயாராக இல்லை.
இருவரும் பல்வேறு விதங்களில் அரசியல் காய்நகர்த்தல்களில் ஈடுபட்டுள்ளனர். யாருடைய ராஜதந்திர அரசியல் காய்நகர்த்தல் வெற்றிபெறப் போகின்றது என்பதை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். 

எப்படியிருப்பினும் ஐக்கிய தேசியக்கட்சி தொடர்ந்து தாமதிக்காமல் வேட்பாளரை அறிவிப்பது ஜனாதிபதி போட்டிக் களத்திற்கு ஆரோக்கியமானதாக அமையும் என்பதையே அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

என்ன நடக்கப் போகின்றது என்பதை சில தினங்கள் பொறுத்திருந்துதான் பார்ப்போமே. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய மாகாணத்தின் முதலாவது சப்ததள 108...

2024-03-19 10:37:23
news-image

மலையக கட்சிகள் யாருக்கு, எதற்கு ஆதரவளிக்க...

2024-03-19 10:34:04
news-image

சுவீடனின் நேட்டோ உறுப்புரிமை: இந்தோ -...

2024-03-19 09:09:10
news-image

கனடாவிலும் இலங்கையிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய 6...

2024-03-18 14:07:20
news-image

வலுவடையும் இலங்கையின் ரூபாய் : பொதுமக்கள்,...

2024-03-18 13:49:53
news-image

இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதியாக பிரபோவோ  

2024-03-18 13:37:22
news-image

மாகாண சபை முறைமை சுயாட்சிக்கான படிக்கல்

2024-03-18 13:31:57
news-image

அமெரிக்க தேர்தல் களம் : ட்ரெம்புக்கு...

2024-03-18 13:23:47
news-image

தேர்தல்கள் மட்டுமே தீர்வுகளை கொண்டுவருமா?

2024-03-18 13:08:50
news-image

வளமான வாழ்வுத் தேடலில் உயிரை இழக்கும்...

2024-03-18 13:05:14
news-image

சர்வதேச சவால்கள் ‘ஏழு’

2024-03-18 12:53:09
news-image

கோட்டா தனக்குத் தானே வெட்டிய குழி

2024-03-18 12:41:45