(ஆர்.யசி)

யுத்தத்தில் உயிர்நீத்த தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் நினைவுகூற முடியும். அதற்கு அரசாங்கம் எந்தத் தடைகளையும் விதிக்கவில்லை. ஆனால் எக்காரணம் கொண்டும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளை நினைவுகூர முடியாது. அதையும் மீறி நினைவுகூர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். 

வடக்கின் நிலைமைகளை ஆராய பொலிஸ், இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவினர் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அவர் மேலும் கூறுகையில், 

யுத்தம் முடிவடைந்து ஏழு வருடங்கள் பூர்த்தியாகின்றன. அந்த வகையில் மே மாதம் முழுவதும் இராணுவ வீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. யுத்தத்தை வெற்றிகொண்ட எமது இராணுவத்தின் புகழை வெளிப்படுத்துவதை விடவும் இந்த நாட்டில் அமைதியையும், மக்கள் மத்தியில் நல்லுறவையும் ஏற்படுத்த தம்மை தியாகம் செய்த எமது இராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இம்முறை அரசாங்கம் முன்னின்று இராணுவ வீரர்கள் தினத்தை அனுஷ்டிக்க தயாராக உள்ளது.