( மயூரன் )

யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார தொழிலாளர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள், தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

யாழ். மாநகர சபைக்கு முன்பாக நேற்று புதன்கிழமை முதல் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதில்  சுமார் 120 சுகாதார தொழிலாளர்களும் 8 குடும்பநல உத்தியோகத்தர்களும் ஈடுபட்டு உள்ளனர்.

போராட்டம் தொடர்பில் சுகாதார தொழிலாளர்கள் கருத்து தெரிவிக்கையில், 

 கடந்த 7 வருடங்களாக தற்காலிக ஊழியர்களாக கடமையாற்றும் எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு பல தடவைகள் கோரிக்கை விடுத்தபோது எங்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.

 ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் எங்களில் 5 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. ஆணையாளரிடம் சென்ற அனைவருக்கும் நியமனம் வழங்குமாறு கோரினோம்.  குறித்த ஐந்து பேருக்குமான நிரந்தர நியமனத்தை நிறுத்தி அனைவருக்கும் சேர்த்து நியமனம் வழங்குவதாக ஆணையாளர் அப்போது கூறினார். 

ஆனால், கடந்த 10ஆம் திகதி எங்களுக்கு சம்பளம் வழங்கப்படும் போது, அந்தப் பட்டியலில் ஐவரின் பெயர்கள் இருக்கவில்லை. இதன்மூலம் ஆணையாளர் எங்களை ஏமாற்றி ஐந்து பேருக்கு மாத்திரம் நிரந்தர நியமனம் வழங்கியமை தெரியவந்தது' என்றனர்.

 இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள குடும்பநல உத்தியோகத்தர்கள் கருத்து கூறுகையில்,

 எங்களில் சிலர், 19 வருடங்களாக தற்காலிக இணைப்பில் கடமையாற்றி வருகின்றனர். நாங்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கடமையாற்றி வருகின்றோம். எனினும் இதுவரையில் எங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை' என்றனர்.