கொல்கத்தா மம்மியை பாதுகாக்க புதிய திட்டம்..!:

Published By: J.G.Stephan

13 Aug, 2019 | 03:49 PM
image

கொல்கத்தா அருங்காட்சியகத்தில் உள்ள 4 ஆயிரம் ஆண்டு பழமையான ‘மம்மி’யை பாதுகாக்க, 35 முதல் 55 சதவீதம் வரையான ஈரத்தன்மையில் அதை வைக்கும்படி எகிப்து நாட்டு ஆய்வறிக்கை கூறியுள்ளது. 

பண்டைய கால எகிப்து நாட்டில், முன்னோர் யாராவது இறந்தால் அவர்களின் உடலை பிரமிடுகளில் பதப்படுத்தி வைப்பது வழக்கம். அப்படி பதப்படுத்தப்பட்ட உடல்கள் ‘மம்மி’ என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில், கொல்கத்தா நகரில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் 4 ஆயிரம் ஆண்டு பழமையான ‘மம்மி’ பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த ‘மம்மி’யை ஆய்வு செய்ய, கடந்த ஆண்டு எகிப்திய பெண் ஆய்வாளர் ரானியா அகமது என்பவர் கொல்கத்தா வந்தார்.

ஆய்வு குறித்து அவர் அளித்த அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதில், ‘மம்மி வைக்கப்பட்டுள்ள மரப்பெட்டியின் சில பகுதி சிதைந்தும் சேதம் அடைந்தும் உள்ளது. மேலும், பெட்டியை சுற்றி ஈரத்தன்மை அதிகமானால் ‘மம்மி’ மீது பூஞ்சைகள் வளரவும், ஈரத்தன்மை மிகவும் குறைந்தால் ‘மம்மி’யின் பாகங்கள் கீறவும் வாய்ப்பு உள்ளன. எனவே, ஈரத்தன்மையை 35 சதவீதம் முதல் 55 சதவீதம் வரை வைக்க வேண்டும்’ என அதில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து இந்திய அருங்காட்சியக இயக்குனர் கூறுகையில், “ரானியா அகமது ஆய்வு செய்து சென்ற பின்பு ‘மம்மி’யை கூடுதல் கவனத்துடன் பாதுகாத்து வருகிறோம். அது வைக்கப்பட்டுள்ள அறையின் வெப்பநிலை மற்றும் ஈரத்தன்மையை கவனமுடன் பராமரித்து வருகிறோம். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்த மம்மியை பராமரித்து வருவதால் தூசி படிந்துள்ளது.

அதை தவிர்க்க, இப்போது அதை காற்று புகாத அறையில் வைத்துள்ளோம். மேலும், ஆய்வாளர் கூறியவாறு பெட்டியின் ஈரத்தன்மையை சீராக வைக்க அதை கண்ணாடி பெட்டியில் வைத்தும், அது நிறம் மங்காமல் இருக்க குறைவான வெளிச்சத்திலும் வைத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right