(ஆர்.யசி)

யுத்தத்தை முடித்த தலைவர் என்ற காரணத்தினால் மஹிந்த ராஜபக்ஷவை  பழிவாங்க ஒரு தரப்பு முயற்சித்து வருகின்றது. விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பின் முதல் இலக்கு மஹிந்த ராஜபக் ஷ என்பதை மறந்துவிடக்கூடாது என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ தெரிவித்தார். 

யுத்தம் நடைபெற்ற காலத்தில் இராணுவம் போற்றப்படுவதும் அவர்களின் பாதுகாப்பு தேவைப்படுவதும் யுத்தம் முடிவுக்கு வந்தவுடன் அவர்களை போர்க்குற்றவாளிகள் என குற்றம் சுமத்துவதும் எந்த வகையிலும் நியாயமற்றது எனவும் அவர் குறிப்பிட்டார். 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக் ஷ கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

பாதுகாப்பு சட்டங்கள் என்ன, எவ்வாறு செயற்படுத்துவது என்பது எமக்கும் நன்றாக தெரியும். 

எமது ஆட்சியிலும் அதற்கு முன்னரும் பாதுகாப்பு சார் விடயங்கள் அனைத்தும் ஒரே விதத்தில் தான் கையாளப்பட்டது.

 ஜனாதிபதிக்கான பாதுகாப்புகள், நாட்டின் பாதுகாப்பு என்ற அனைத்திற்கும் இராணுவ பாதுகாப்பே வழங்கப்பட்டது.

 அவ்வாறு இருக்கையில் இப்போது புதிதாக பாதுகாப்பு சட்டங்கள் பற்றியெல்லாம் கதைகள் கூறுகின்றனர். 

முன்னாள் ஜனாதிபதிக்கான இராணுவப் பாதுகாப்புகளை வழங்குவதில் பாதுகாப்பு விதிமுறைகள் எவையும் இல்லை. 

அச்சுறுத்தல் இருக்கும் அனைவருக்கும் இராணுவப் பாதுகாப்பினை வழங்க முடியும்.