நகர தொடர்மாடி குடியிருப்புகளுக்கான வற்வரியில் அதிரடி மாற்றம் - நகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கம்

Published By: Priyatharshan

11 Aug, 2019 | 04:47 AM
image

15 மில்லியன் ரூபா பெறுமதியுடைய தொடர்மாடி குடியிருப்புக்கு அறிவிடப்பட்ட 15வீத வற்வரி தற்போது திருத்தம் செய்யப்பட்டு, 25 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய தொடர்மாடி குடியிருப்புகளுக்கு மாத்திரம் இந்த வரி அறவிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளமையானது நகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அந்த சங்கத்தின் தலைவரும் பொறியியலாளருமான கே. சீலன், செயலாளர் ஆர். ரொபின் செல்வகுமார் மற்றும் உதவி பொருளாளர் ஜே. ஜீவரூபன் ஆகியோர் கூட்டாக தெரிவித்தனர்.

அந்த செவ்வியின் முழு வடிவம் பின்வருமாறு,

கேள்வி: நகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கம் 2018 இல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் கூற முடியுமா?

பதில்: எமது சங்க உறுப்பினர்களிடையே தகவல் தொடர்பாடலை மேம்படுத்தி, புரிந்துணர்வை ஏற்படுத்தி எமது குறைபாடுகளை நிவர்த்தி செய்து மக்களுக்கு தரமான ஒரு குடியிறுப்பு மனையை வழங்குவதே எமது சங்கத்தின் பிரதான நோக்கமாகும்.

மேலும் எமது சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் மிக முக்கியமான  பிரச்சினைகளுக்கான தீர்வை பெற்றுக்கொடுப்பதும் அரசாங்கத்தில் இருந்து பெறவேண்டிய நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கும் எமது சங்கம் முழு மூச்சுடன் செயற்பட்டுகொண்டிருக்கின்றது.

எமது சங்கத்தின் மாதாந்த கூட்டத்தொடரில் பொதுவான பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படும். இதேவேளை எமது துறையில் காணப்படும் பிரச்சினைகளை அரசாங்கத்துடன் கலந்துரையாடி அற்கான நிவாரணங்களையும் பெற்றுக்கொடுப்போம்.

கேள்வி: காணி விற்பனை மற்றும் பாரியளவிலான உட்கட்டமைப்பு வசதிகள் செயற்திட்டங்களின் தொழில்வாய்ப்புகளை உறுப்பினர்கள் பெற்றுக்கொள்வதற்கு உங்களுடைய சங்கம் ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. இதேவேளை அரச அலுவலகங்களுடனான ஒருங்கிணைப்புப் பணிகளை இச்சங்கம் எவ்வாறு மேற்கொள்கின்றது?

பதில் : ஒரு இடத்தில் தொடர்மாடிமனை ஒன்றை அமைக்க வேண்டுமாக இருந்தால் அரசாங்க அலுவலங்கள் பலவற்றிடம் அனுமதியை பெற வேண்டி இருக்கும். இந்த அனுமதிகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியாது. பல பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். குறிப்பாக இவர்களின் அனுமதியை பெற்றுக்கொள்ள சுமார் 6 மாத காலங்கள் தேவைப்படும். இந்த பிரச்சினைகளை தனி ஒரு நபரால் கதைத்து தீர்வை பெற்றுக்கொள் முடியாது. இதன் காரணமாகவே நாம் நகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கத்தை உருவாக்கினோம். இதன் மூலம் எமது பிரச்சினைகளை ஒரு குழுவாக முன்வைக்க முடியும். மேலும் எமது பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொள்வதற்காக எமது சங்கத்தில் உப குழுக்களை ஏற்படுத்தி ஒவ்வொரு அரச திணைக்களங்களுடன் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றோம்.

கேள்வி: நகர தொடர்மாடிமனைகளில் வீடுகளை வாங்குவதில் மக்கள் ஆவர்வமாக இருக்கின்றீர்களா? பொதுவாக எந்த வர்க்கத்தை சேர்ந்தவர்கள் கூடுதலாக வீடுகளை வாங்குகின்றனர்?

பதில்: நடுத்தர, நடுத்தர உயர்தர மக்களே கூடுதலாக வீடுகளை வாங்குகின்றனர். கொழும்பை பொறுத்தவரையில் காணிகளின் விலை மிக அதிகரித்து காணப்படுகின்றது. நபர் ஒருவரால் காணி ஒன்றை கொள்வனவு செய்து வீடு ஒன்றை கட்டிமுடிப்பது என்பது இயலாத விடயமாகும். மக்களின் இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வாகவே நாம் தொடர்மாடிமனைகளை அமைத்து கொடுக்கின்றோம். பாதுகாப்பு, தொழில்வாய்ப்பு, கல்வி நடவடிக்கைகள், வைத்தியசாலைகள் போன்ற வசதிகளை இலகுவாக பெற்றுக்கொள்ள கூடியதாக இருப்பதால் மக்கள் தொடர்மாடிமனைகளில் வீடுகளை வாங்குவதில் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றனர். இதேவேளை வெளிமாவட்ட மக்கள் கொழும்பில் வாடகை வீடுகளில் வசிப்பதால் பல இன்னல்களை எதிர்நோக்குகின்றனர். எனவே இவ்வாறான நபர்களும் தொடர்மாடிமனைகளில் சொந்தமாக வீடுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்.

கேள்வி: தொடர்மாடி குடியிருப்புக்களில் சில குடியிருப்புக்கள் தரமான கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை என பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. அதன் உண்மை தன்மை பற்றி கூற முடியுமா?

பதில்: எமது சங்கத்தின் ஊடாக அமைக்கப்படும் எந்த தொடர்மாடிமனைகளிலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இல்லை. நாங்கள் அரசாங்க திணைக்களங்களின் அனைத்தினதும் அனுமதியை பெற்றே தொடர்மாடிமனைகளை அமைக்கின்றோம்.

ஆனால் எமது சங்கத்தில் அங்கம் வகிக்காத 5 வீதமானவர்கள் அமைக்கும் கட்டிடங்களில் காணப்படும் குறைபாடுகளை வைத்துக்கொண்டு ஏனையவர்கள் அமைப்பதும் தரமற்றது என முழுமையாக கூறிவிட முடியாது. அதாவது எமது சங்கத்தின் ஊடாக அமைக்கப்படும் தொடர்மாடிமனைகளுக்கு நிர்ணயித்த ஒரு விலை காணப்படுகின்றது. ஆனால் சிலர் மிகவும் குறைந்த விலைகளுக்கு தொடர்மாடிமனைகளை வழங்குகின்றனர்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் அதன் பின்னணி குறித்து ஆராய வேண்டும். சில குறைப்பாடுகள் இருக்கின்ற போதே குறைந்த விலைக்கு வீடுகளை விற்பனை செய்கின்றனர். இதுதொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.

கேள்வி: தொடர்மாடி மனை ஒன்றில் வீடு ஒன்றை வாங்க வேண்டுமாக இருந்தால் சதாரண நபர் ஒருவர் எவ்வாறான விடயங்களை அறிந்திருக்க வேண்டும்?

பதில்: தொடர்மாடிமனையில் வீடு ஒன்றை வாங்க வேண்டுமாக இருந்தால் முதலில் சட்டத்தரணி ஒருவர் ஊடாக காணிதொடர்பாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். குறித்த ஒரு நிறுவனத்தால் ஏற்கனவே தொடர்மாடி மனைகள் கட்டப்பட்டிருந்தால் அது தொடர்பிலும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். குறித்த ஒரு நிறுவனத்தின் நிதியான்மை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும். இந்த விடயங்களை பின்பற்றும் போது ஏமாற்றமடையும் சந்தர்பங்கள் இருக்காது. மேலும் நபர் ஒருவருக்கு ஆலோசனைகள் எதுவும் தேவைப்படுமாயின் எமது சங்கத்தின் ஊடாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

கேள்வி: அரசதுறைக்கு உங்களுடைய தொழிற்துறை மூலம் எவ்வாறான பங்களிப்பை செய்கின்றீர்கள்.?

பதில் : அரசாங்கத்துக்கு வருமான வரி உட்பட பல வரிகளை செலுத்தி வருகின்றோம். இதற்கு அப்பால் எமது தொழிற்துறை ஊடாக பல துறைசார் நிபுணர்கள் உட்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்துக்கு உதவியாக நாமும் வீட்டுத் திட்டங்களை அமைத்து வருகின்றோம். இதுவொரு பாரிய சேவையாகும்.

கேள்வி : இன்று தொடர்மாடி குடியிறுப்புக்களில் விலை மிகவும் அதிகமாக காணப்படுகின்றது. எனவே சாதாரண மக்களால் குடியிறுப்பு ஒன்றை இவ்வாறான தொடர்மாடிகளில் பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது. அவர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் திட்டங்கள் ஏதும் உள்ளனவா?

பதில்: நிச்சயமாக, தவனை அடிப்படையில் எமது சங்கத்தின் ஊடாக தொடர்மாடிமனைகளில் வீடுகளை பெற்றுக்கொள்ளலாம்.

கேள்வி: இந்த தொழிற்துறையினை பொறுத்தவரையில் போட்டித்தன்மை காணப்படுகின்றது. தொடர்ந்து உங்களது தொழிற்துறையை வெற்றிக்கரமாக முன்னெடுத்து செல்வதற்கு புதிய யுக்திகள் எதுவும் கையாள உள்ளீர்களா?

பதில்: வியாபாரத்தில் மிக முக்கிய சூத்திரமாக இந்த போட்டி காணப்படுகின்றது. போட்டி இருக்கும் போதே வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையினை வழங்க முடியும். இந்த போட்டித் தன்மையை நாம் எமது சங்கத்தில் உள்ள அனைவரும் ஆரோக்கியமான ஒன்றாகத் தான் பார்க்கின்றோம்.

கேள்வி: நாட்டில் பதிவான பயங்கரவாத தற்கொலை தாக்குல்கள் உங்கள் தொழிற்துறையில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது?

பதில்: இந்த தாக்குதலினால் சுற்றுலாத்துறையும் எமது தொடர்மாடிமனை துறையுமே பெரிதாக பாதிக்கப்பட்டன. இதுவொரு தற்காலிக சம்பவமே. எமது சேவை தரமானது என்பதால் இந்த தாக்கத்திலிருந்து விரைவில் மீண்டெழ முடியும்.

கேள்வி: நகர தொடர்மாடிமனை அபிவிருத்தியாளர்கள் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் காலமே பூர்த்தியாகியுள்ளது. இந்த சங்கத்தின் ஊடாக அடைந்த வெற்றிகள் எதுவும் இருக்கின்றதா?

பதில் : எமது சங்கமானது கடந்த 2018 ஆம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர். இதுவே எமது முதல் வெற்றி.

இதன் பின்னர் எமது தொழிற்துறை மீது அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட வெட் வரியானது பாரிய சவாலாக இருந்தது. அதாவது கடந்த 2018 ஆம் ஆண்டு 15 மில்லியன் ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய தொடர்மாடி குடியிறுப்புக்கு 15 வீத வற்வரியை அரசாங்கம் அறிமுகம் செய்தது. பின்னர் இந்த வரியை நீக்குமாறு நாம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து அதே ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் திகதி வரை அந்த வரியை தற்காலிகமாக இடைநிறுத்தி வைத்தது.

இந்த வரி விதிப்பின் மூலம் எமது சங்கமும், வாடிக்கையாளர்களும் முகம்கொடுத்த பிரச்சினைகளை அமைச்சர் மனோ கணேசன் ஊடாக நிதியமைச்சு கவனத்து கொண்டு சென்றோம். அதன்பிரகாரம் மேற்கொண்ட பல கட்ட வார்த்தைகளின் பின்னரே 25 மில்லியன் ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய குடியிருப்புக்களுக்கு மாத்திரம் 15 வீதம் வற்வரி விதிக்கப்படும் என அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை கடந்த மாதம் வெளியிட்டது.

இதுவொரு பாரிய வெற்றியாகும். இந்த வெற்றிக்கு கடின உழைப்பை வழங்கிய அமைச்சர் மனோ கணேசன், மங்கள சமரவீர மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பாஸ்கரன் ஆகியோருக்கு இந்த இடத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

முக்கிய அம்சமாக, தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் 25 மில்லியன் ரூபாவுக்கும் குறைவாக இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் போதே 15 வீத வற்வரி அறிவிடப்படமாட்டாது. எனினும் குறித்த குடியிறுப்பு தொகுதியில் ஒரு வீடாயினும் 25 மில்லியன் ரூபாவுக்கு அதிக பெறுமதியுடன் காணப்பட்டால் குறைந்த விலையில் உள்ள ஏனைய வீடுகளுக்கும் 15வீத வற்வரி விதிக்கப்படும். எனவே மக்கள் இது தொடர்பில் மிக அவதானமாக இருக்க வேண்டும் என்றார்கள்.

நேர்காணல் - எம்.டி.லூசியஸ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49