சிறுத்தைகளை கொலை செய்வோர் பற்றிய விபரங்களை வழங்கும் நபர்களுக்கு பணப் பரிசு வழங்கப்படவுள்ளது.

மத்திய மாகாணத்தில் சிறுத்தைகள் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அகில இலங்கை வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் சங்கத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சங்கத்தின் தலைவர் எம்.ஐ.டபிள்யு. பீரிஸின் கையொப்பத்துடன் கூடிய ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களில் நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் 10 சிறுத்தைகள் கொல்லப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டம் ஹட்டன், நோர்வூட் மற்றும் அக்கரபத்தனை போன்ற பிரதேசங்களின் தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்து வரும் சிறுத்தைகள் கொலை செய்யப்படுகின்றன.

வேட்டைக்காரர்களின் வலைகளில் வீழ்தல் மற்றும் உணவு வகைகளில் விஷம் கலத்தல் போன்ற காரணிகளினால் இவ்வாறு சிறுத்தைகள் உயிரிழக்கின்றன.

இலங்கையில் அழிவடைந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக சிறுத்தைகள் கருதப்படுகின்றன.

சிறுத்தைகளை பாதுகாப்பது தொடர்பில் நாட்டின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதியாக கடந்த 9 ஆம் திகதி அக்கரபத்தனை பிரதேசத்தில் சிறுத்தையொன்றின் சடலம் மீட்கப்பட்டிருந்தது.

சிறுத்தைகளை கொலை செய்வோர் பற்றிய சரியான விபரத்தை வழங்குவோருக்கு 10, 000 ரூபா சன்மானம் வழங்கப்படும் என சங்கம் அறிவித்துள்ளது.

0716868303 அல்லது 0718114492 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை அறிவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

(க.கிஷாந்தன்)