நடுத்தரவீச்சு அணுவாயுத உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா விலகல் ;  நிச்சயமற்ற நிலையில் உலக பாதுகாப்பு

Published By: Digital Desk 4

04 Aug, 2019 | 09:44 PM
image

வாஷிங்டன், (சின்ஹுவா ) ரஷ்யாவுடனான நடுத்தரவீச்சு அணுவாயுத உடன்படிக்கையில் இருந்து ( Intermediate -- Range Nuclear Forces ( INF) Treaty)  அமெரிக்கா கடந்த வெள்ளிக்கிழமை முறைப்படியாக விலகிக்கொண்டது. இதை சர்வதேச பாதுகாப்பை மேலும் கூடுதல் நிச்சயமற்ற நிலைக்குள் தள்ளிவிடக்கூடிய ஒரு  செயல் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

 " நடுத்தரவீச்சு அணுவாயுத உடன்படிக்கயைில் இருந்து அமெரிக்காவின் விலகல் அணுவாயுதக் கட்டுப்பாடு மற்றும் உலக பாதுகாப்புக்கு பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.நித்திரையில் நடந்துகொண்டே புதியதொரு ஆயுதப் போட்டா போட்டிக்குள் பிரவேசிக்கிறோம் " என்று முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் வில்லியம் பெறி ருவிட்டர் சமூக ஊடகத்தில் கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார்.

நடுத்தரவீச்சு மற்றும் குறுகியதூர வீச்சு ஏவுகணைகளை ஒழிப்பது தொடர்பில் அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே 1987 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட  இந்த உடன்படிக்கையை ரஷ்யா மீறுகின்றது என்று காரணம் கூறிக்கொண்டு இவ்வருடம் பெப்ரவரியல் இருந்து அமெரிக்கா விலகல் செயன்முறையை ஒருதலைப்பட்சமாக ஆரம்பித்தது.

வாஷிங்டனின் குற்றச்சாட்டை திரும்பத்திரும்ப மறுத்த மாஸ்கோவும் நடுத்தரவீச்சு அணுவாயுத உடன்படிக்கையில் அதன்  பங்கேற்பதை இடைநிறுத்தியது. இந்த உடன்படிக்கை அணுவாயுதப் பரிகரணம் தொடர்பில் இரு தரப்புகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட முதலாவது உடன்படிக்கை என்பதுடன் ஆயுதப்போட்டாபோட்டியை கட்டுப்படுத்துவதை நோக்கிய முக்கியமான முதலாவது அடியெடுத்துவைப்பாகவும் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

" தற்போதைய நிகழ்வுப்போக்குகள் உறுதிப்பாடும் பாதுகாப்பு உணர்வும் குறைந்த ஒரு உலகத்துக்கே இட்டுச்செல்லும்.அமெரிக்காவும் ரஷ்யாவும் எதிர்கால நிகழ்வுப்போக்குகளை எதிர்வுகூற இயலாதவையாகப் போய்விடும் " என்று புரூக்கிங்ஸ் நிறுவனத்தின் பிரபலமான கல்விமான் ஸ்றீபன் பை ஃபர் கூறினார்.

" ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பில் பதிலீடாக ஒரு திட்டத்தையும் வகுக்காமல் நடுத்தரவீச்சு அணுவாயுத உடன்படிக்கையை தூக்கியெறிவது ரஷ்யாவுடன் கட்டுப்பாடின்றிய பயங்கரமான  இராணுவப் போட்டி யுகமொன்றுக்கே கதவைத் திறந்துவிடும் " என்று ஆயுதக் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான டறில் கிம்பால் கூறுகிறார்.

உண்மையில், இது தொடர்பில் வெளிப்படுத்தப்படும் கவலை மிகையான எதிரவினை அல்ல.வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆயுதக்கட்டுப்பாட்டு உடன்படிக்கையின் நிலைகுலைவையடுத்து சில மணித்தியாலங்களில் அமெரிக்கா தரையில் இருந்து ஏவப்படும் முழுமையான பாரம்பரிய ஏவுகணைகளைத்  தயாரிக்கும்  என்று பென்டகன் அறிவித்திருக்கிறது.

" அணுவாயுதத்தை தாங்கியதோ அல்லது பாரம்பரிய ஆயுதத்தை தாங்கியதோ எதுவாக இருந்தாலும் நடுத்தரவீச்சு அணுவாயுத ரக ஏவுகணைகள் உறுதிப்பாட்டைக் குலைக்கின்றவையாகவே அமையும்.ஏனென்றால், அவை ரஷ்யாவுக்குள் ஆழமாக இருக்கக்கூடிய இலக்குகளையும் மேற்கு ஐரோப்பாவுக்குள் உள்ள இலக்குகளையும் முன்னெச்சரிக்கையின்றி அல்லது குறைந்தளவு முன்னெச்சரிக்கையுடன் தாக்கக்கூடும்.அவற்றின் குறுகிய நேர இலக்கு ஆற்றல் ( Short time  -- to --  target  capability) நெருக்கடி நிலையொன்று தோன்றும்போது தவறான கணிப்பீடுகள் செய்யப்பட்டுவிடக்கூடிய ஆபத்துகளை அதிகரிக்கும் " என்று கிம்பால் எச்சரிக்கை செய்கிறார்.

நடுத்தரவீச்சு அணுவாயுத உடன்படிக்கையின் மறைவுடன் அணுவாயுதப்போர் மீதான விலைமதிப்பற்ற தடுப்பு ஒன்றை உலகம் இழந்துவிட்டது என்று ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்ரோனியோ குற்றெரஸும் கவலை வெளியிட்டிருக்கிறார். மேலும், நடுத்தரவீச்சு அணுவாயுத உடன்படிக்கையில் இருந்து விலகும் அமெரிக்காவின் தீர்மானம் 2021 ஆம் ஆண்டில் காலாவதியாகப்போகும்  புதிய கேந்திரமுக்கியத்துவ ஆயுதங்கள் குறைப்பு உடன்படிக்கையின்  ( New Strategic Arms Reduction Treaty -- New START) கதி பற்றியும் கவலையைக் கிளப்பியிருக்கிறது. அமெரிக்காவினதும் ரஷ்யாவினதும் நீண்டதூரவீச்சு அணுகுண்டுகளினதும் அவற்றை ஏவுகின்ற கருவிகளினதும் எண்ணிக்கையில் மட்டுப்பாடொன்றை விதிக்கும் அந்த உடன்படிக்கையை நீடிப்பது தொடர்பில் அமெரிக்கா இதுவரையில் எந்த சமிக்ஞையையும் காண்பிக்கவில்லை.

" அத்தகையதொரு உடன்படிக்கை அரசியல் கருத்துக்கோணத்தில் இருந்து பார்க்கும்போது மிகமிக முக்கியமானதாக இருக்கிறது.ஏனென்றால், இரு தரப்பினரும் ஒருவரை மற்றவர் சோதனை செய்வதற்கும் அந்தரங்கமாக மேலதிக அணுவாயுதங்கள் தயாரிக்கப்படவில்லை என்ற நம்பிக்கையை குறிப்பிட்ட ஒரு மட்டத்தில் தோற்றுவிப்பதற்கும் இன்று  இருக்கக்கூடிய ஒரேயொரு பயனுறுதியுடைய கருவி அதுவேயாகும் " என்று ஓய்வுபெற்ற ரஷ்ய கேணல் ' விக்டர் முறக்கோவ்ஸ்கி கூறுகிறார்.

புதிய கேந்திரமுக்கியத்துவ ஆயுதங்கள் கட்டுப்பாட்டு உடனாபடிக்கைக்கு பதிலீடாக ஒன்றைக் கொண்டுவராமல் அதை காலாவதியாக அனுமதிப்பது அணுவாயுதக் கட்டுப்பாட்டில் நிலைவரங்களில் உறுதிப்பாட்டைக் குலைத்துவிடக்கூடிய வெற்றிடம் ஒன்றை தோற்றுவிக்கும் ஆபத்துக்களைக் கொண்டுள்ளது " என்று வாஷிங்டனை தளமாகக் கொண்ட கேந்திரமுக்கியத்துவ மற்றும் சர்வதேச கற்கைகளுக்கான நிலையத்தின் நிபுணரான லெயின் கிங் கூறியிருக்கிறார்.

புதிய கேந்திரமுக்கியத்துவ ஆயுதங்கள் குறைப்பு உடன்படிக்கையை 2026 வரை நீடிப்பதே நீண்டகால இலக்குகளுக்கு சிறப்பாக உதவக்கூடிய ஒரு தெரிவாக இருக்கும்.ஏனென்றால் அவவாறு நீடிப்பது அணுவாயுதக் குறைப்பு உடன்படிக்கைகளை மேம்படுத்துவதற்கும் அணுவாயதக் கட்டுப்பாட்டையும் உண்மைத்தன்மையைச் சரிபார்க்கும் முறைமைகளை பலப்படுத்துவதற்கும் அது உதவும் என்று கிங் அண்மையில்தனது கட்டுரையொன்றில் தெரிவித்திருக்கிறார்.

அணுவாயுதக் கட்டுப்பாட்டு உடன்படிக்கைகளை ரத்துச் செய்வது இறுதியில் எதிர்காலத்தில் வாஷிங்டனுக்கும் மாஸ்கோவுக்கும் இடையில் கூடுதலான அளவுக்கு சிக்கலானதும் ஆபத்தானதுமான உறவுமுறையொன்றுக்கு  வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கவலைப்படுகிறா்கள்.

" எவ்வளவுதான் குறைபாடுகளைக் கொண்டவையாக இருந்தாலும், ஆயுதக்கட்டுப்பாடு வல்லரசுகளுக்கிடையிலான போட்டியை கையாளுவதற்கான பயனுடைய ஒரு கருவியாக இருக்கமுடியும் என்ற 1960களின், 1980 களின் பாடங்களை அவர்கள் நினைவுபடுத்திக்கொள்ளக்கூடும " என்று பைஃபர் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13