தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான உந்துதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென  அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்  ரொபின் மூடி தெரிவித்ததார்.

பெண்கள் வர்த்தக சபை (WCIC)) ஏற்பாடு செய்திருந்த தனது உறுப்பினர்களுக்கான “பவர்  லன்ச்  ” (Power Lunch) நிகழ்வில் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்  ரொபின் மூடி பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வில் “ பொருளாதாரத்தில் பெண்களை இணைத்துக் கொள்வது ஏன் உறுதியான பொருளாதாரம் ஆகின்றது ”  என்ற தலைப்பில் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர்  ரொபின் மூடி மேலும் உரையாற்றுகையில்,

“இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் பெண்கள் பொருளாதாரத்தில் வரையறுக்கப்பட்ட அளவிலேயே இணைத்துக் கொள்ளப்படுவதால், அந்தப் பிராந்தியம், வருடாந்தம் 47 பில்லியன்களை இழக்கின்றது.

 

இதேவேளை, WCIC உறுப்பினர்கள் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான உந்துதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பெண்கள் தமது ஆற்றல்களை அபிவிருத்தி செய்து கொள்ளவும், தலைமைத்துவப் பங்களிப்பினை வழங்கவும் இது பெரும் உதவியாக இருக்கும். 

இலங்கையின் எதிர்கால பொருளாதாரத்தில் பெண்களும் ஒரு பங்காளி என்பதை உறுதி செய்கின்ற போது, வர்த்தகத்தில் அவர்களின் தலைமைத்துவத்தை வெளிப்படுத்த பாரிய வாய்ப்புக்களும் காத்திருக்கின்றன.

அவுஸ்திரேலியா பெண்களை வலுவூட்டும் திட்டங்களை ஊக்குவிப்பதற்காக உலகளாவிய மட்டத்தில் தலைமைத்துவ வாய்ப்புக்களைப் பயன்படுத்தி உள்ளது.

இந்து சமுத்திர றிம் அஸோசியேஷன் (IORA) தலைவி என்ற வகையில், 2013 முதல் 2015 வரை இந்த விடயத்துக்காக குரல் கொடுத்துள்ளோம். இதன் விளைவாக IORA வின் பணிகளில் பெண்களுக்கு வலுவூட்டல் ஒரு முக்கிய விடயமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா இலங்கை அரசாங்கத்துடன் பல வருடங்களாக பங்குடைமை அடிப்படையிலும், ஏனைய அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் தனியார் பிரிவினருடன் இணைந்து மகளிர் பொருளாதார வலுவூட்டல் திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகின்றது. 

இவ்வாறான ஒரு பாரிய திட்டம் கிளிநொச்சியில் மீன்பிடி கூட்டுறவுப் பிரிவுடன் காணப்படுகின்றது. அது ஒரு கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம், இரண்டு அரச நிறுவனங்கள் என்பனவும் இத்திட்டத்தில் அடங்கும். 

இதன் மூலம் ஆயிரம் மீனவக் குடும்பங்கள் தாங்கள் பிடிக்கும் நண்டுகளை மீன்பிடி கூட்டுறவின் மூலமாக சந்தை விலையில் விற்பனை செய்து வருகின்றனர். ஒரு வருடத்தில் 180,000 கிலோ நண்டுகள் இவ்வாறு விற்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பெண்களுக்கு வேலை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான பங்குடைமைகள் வர்த்தகத் தலைவர்கள் மாற்றத்துக்கான முகவர்களாகத் திகழலாம். இலங்கையில மட்டுமன்றி உலகம் முழுவதும் மகளிர் வலுவூட்டலுக்கான அர்ப்பணங்களை அமுல் செய்ய அவர்கள் உதவலாம் என்பதை தெளிவு படுத்தியுள்ளன. இதுதான் உண்மையில் உறுதியான பொருளாதாரமாக இருக்கும்”  என  அவர் மேலும் உரையாற்றினார்.

இந்நிலையில், நாட்டின் பிரதான வர்த்தகச் செயற்பாடுகளில் பெண் தொழில் முயற்சியாளர்களை இணைத்துக் கொள்வதைக் குறிக்கோளாகக் கொண்டு WCIC செயற்படுகின்றது.

வர்த்தகத் தலைவர்களுடனான தொடர் சந்திப்புக்களில் முதல் நிகழ்வாக  “பவர் லன்ச் ” நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ராஜதந்திர சமூகத்தினரை இச் செயற்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுத்த இந்தச் சபை முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.