கனடாவில் போர்ட் மெக்மர்ரி நகரில் பல நாட்களாக பரவிவரும் காட்டுத் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பல மாதங்கள் எடுக்கலாம் என்று மேற்கு அல்பெர்டா மாகாண தீயணைப்புத்துறையின் தலைமை அதிகாரி எச்சரித்துள்ளார்.

கனடாவின் அல்பெர்டா மாகாணத்தில் உள்ள காடுகளில் கடந்த செவ்வாய் கிழமை முதல் தீ பற்றி எரிந்து வருகின்ற நிலமையில் இந்த காட்டுத் தீயினால் அல்பெர்டா மாகாணத்தின் சில நகரங்களை முற்றிலுமாக அழித்துள்ள­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர்.

காட்டுத் தீயால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள போர்ட் மெக்மர்ரி நகரிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள், விமானம் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். அங்கிருந்து இதுவரை 80 ஆயிரம் மக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

கனடாவின் வடக்கே, சிக்கியுள்ள சுமார் 25,000 பேரை பாதுகாப்பாக வெளியேற்றும் பணி நடந்துவருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் விமானம் மார்க்கமாக வெளியேற்றப்படுகின்றனர். இடம்பெயர்ந்தவர்கள் சொந்தக் குடியிருப்புகளுக்கு திரும்புவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம் என்று அல்பர்ட்டாவின் முதல்வர் கூறியுள்ளார்.

எண்ணெய் வளம் நிறைந்த பகுதியில் பரவியுள்ள தீயினால், கனடாவின் எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.