ஸ்டாலின் எனக்கு மகனாக பிறந்தது நான் செய்த தவப்புண்ணியம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னை தங்கசாலை மணிகூண்டு அருகே நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற தி.மு.க. பிரசார கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர் ,கொளத்தூரில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் போட்டியிடுகிறார். அவர் ஊரெல்லாம் சென்று உதய சூரியனுக்கும், கை சின்னத்திற்கும் வாக்கு கேட்கும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார் . இந்த தேர்தலில் பாதி உழைப்பை, பாதி வேலைகளை தன் மீது இழுத்து போட்டுக்கொண்டு அல்லும் பகலும் உழைத்துக்கொண்டு இருக்கிறார்.

ஸ்டாலின் என் மகன் என்பதற்காக சொல்லவில்லை. மகனாக இல்லாவிட்டாலும் தி.மு.க.வின் சாதாரண தொண்டன் என்ற அளவில் அவர் ஆற்றும் பணி என்னையே பொறாமை கொள்ள செய்கிறது. என் மகன் மீது எனக்கு பொறாமை வருகிறது என்றால், சிறுவயதில் நான் இந்த இயக்கத்திற்காக உழைத்ததை விட 100 மடங்கு மேலாக மு.க.ஸ்டாலின் அந்த பணியை ஆற்றி வருகிறார்.

ஜெயலலிதா அமைத்த தமிழ்சிலை எங்கே என்று கேட்டேன். திரும்பி, திரும்பி பார்தேன். காணவில்லை. வைத்தால் தானே இருக்கும். சொன்னதுடன் சரி. நாங்கள் சொன்னதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம்.

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை பெற்றுக்கொடுத்தோம். செம்மொழி பூங்கா அழிக்கப்பட்டது. மெட்ரோ ரயிலை கொண்டு வந்தோம். மோனோ ரயில் கொண்டு வருவேன் என்றார் ஜெயலலிதா. மெட்ரோ வந்து விட்டது, மோனோ போய் விட்டது. மெட்ரோ திட்டம் தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வாய்ப்பு கொடுத்தால் நாங்கள் மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்துவோம்.

எண்ணற்ற திட்டங்களை நாட்டிற்காக, மொழிக்காக, தமிழுக்காக செய்த இயக்கமும் இனி செய்யப்போகும் இயக்கமும் தி.மு.க. தான் என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். இதை யாரும் தடுக்க முடியாது. இந்த தேர்தலில் உங்கள் அன்பான ஆதரவை, வலிமையான ஆதரவை தி.மு.க.வுக்கு கூட்டணி கட்சிகளுக்கு தரத்தான் போகிறீர்கள், நாம் வரத்தான் போகிறோம்’’என்று தெரிவித்தார்.