இணக்கப்பாட்டின் அவசியம்

Published By: Priyatharshan

27 Jul, 2019 | 02:21 PM
image

இந்து சமுத்­தி­ரத்தின் முத்­தாகத் திகழ்­கின்ற இலங்கைத் தீவில் இனக்குழு­மங்­களும், சமயம் சார்ந்த சமூ­கத்­தி­னரும், மொழி­வா­ரி­யான மக்­களும் தீவு­க­ளா­கவே வாழ்­கின்­றனர். அவர்­க­ளுக்­கி­டையில் காலங்கால­மாக நிலவி வந்த நல்­லு­றவும் நல்­லி­ணக்­கமும், ஐக்­கி­யமும் படிப் ­ப­டி­யாகத் தேய்ந்­துள்­ள­மையே இதற்குக் காரணம்.  

இனப்­பி­ரச்­சினை கார­ண­மாக எழுந்த ஆயுதப் போராட்­டத்­தின்­போது இன­வாத அர­சியல் கொள்­கைகள் அள­வுக்கு மீறிய வகையில் கடைப்­பி­டிக்­கப்­பட்டு, தமிழ் மக்கள் அனை­வ­ரை­யுமே பயங்­க­ர­வா­தி­ க­ளாக நோக்கும் ஒரு நிலைமை உரு­வா­கி­யி­ருந்­தது. இதனால் சிங்­கள, தமிழ்மக்­க­ளுக்­கி­டையில் சமூக ரீதி­யாக இருந்து வந்த பிணைப்பு அறுந்து போனது. ஒரு­வரை ஒரு­வர் சந்­தே­கத்­து­டனும் பகை உணர்­வோடும் நோக்கும் நிலைமை ஏற்பட்டது. 

யுத்தம் முடி­வுக்கு வந்த பின்னர் இரு சமூ­கங்­க­ளுக்­கி­டை­யிலும் நில­விய சந்­தேகம், பகை உணர்வு என்­ப­வற்றைக் களைந்து இன நல்­லி­ணக்கம் உரு­வாக்­கப்­ப­ட­வில்லை. மாறாக சிங்­கள பௌத்த தேசியம் எழுச்சி பெறவும், வீச்­சுடன் அது மேலா­திக்கம் கொள்­ள­வுமே வழி­யேற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்­டது. 

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் உள்­ளிட்ட அர­சியல் மாற்­றங்கள் நிகழ்ந்த போதிலும், இனரீதி­யான சந்­தே­கமும் பகை உணர்வும் கொண்ட சமூகப் போக்கில் மாற்றம் நிக­ழ­வில்லை. 

இந்தச் சூழலில், இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தி­க­ள் நடத்திய உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்னர் சிங்­கள பௌத்த மதவா­திகள் முஸ்­லிம்கள் மீது சினம் கொண்டு பாய்ந்­தனர். முஸ்­லிம்கள் அடித்து நொருக்­கப்­பட்­டார்கள். அவர்­களின் வர்த்­தக நிலை­யங்கள், பள்­ளி­வா­சல்கள், வீடுகள் தாக்­கப்­பட்­டன எரி­யூட்­டப்பட்டன. 

இதனால் தமிழ், சிங்­கள, முஸ்லிம் சமூ­கங்கள் சமூக ரீதி­யா­கவும் மத ரீதி­யா­கவும் பிள­வு­பட்டுப் போயின. இதற்கும் மேலாக அர­சியல் ரீதி­யா­கவும் சமூ­கங்கள் பிள­வு­பட்டுக் கிடக்­கின்­றன. அதி­காரம் சார்ந்த பிடி­வாதப் போக்­கினால் இனங்­க­ளுக்­கி­டையில் நிலவ வேண்­டிய நல்­லி­ணக்கம் கேள்­விக்

கு­றி­யாகி உள்­ளது. இந்தப் பின்ன­ணியில் இனங்­க­ளுக்­கி­டையில், மதங்­க­ளுக்­கி­டையில், அர­சியல் கட்­சி­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்கப் போக்கு கட்டி எழுப்­பப்­பட வேண்­டிய தேவை, மிக அவ­ச­ர­மா­கவும், அவ­சி­ய­மா­கவும் எழுந்­துள்­ளது.  

மேலாண்­மையில் 

மூழ்­கி­யுள்ள ஆட்­சி­யா­ளர்கள்

  பல்­லின மக்கள் வாழ்­கின்ற இந்த நாட்டில் அடிப்­படை உரிமை, அர­சியல் உரிமை, அபி­வி­ருத்தி உரிமை, ஆட்சி உரிமை என்ற நான்கு தூண்­களில் நல்­லி­ணக்கம் கட்டி எழுப்­பப்­பட வேண்டும். பல மொழி­களைப் பேசு­வோரும், பல்­லின சமூ­கங்­களும், பல மதங்­களைச் சார்ந்­த­வர்­களும் வாழ்­கின்ற நாட்டில் சக­வாழ்வு வாழ்

வ­தற்கும், நீடித்த சமா­தா­னத்­துக்கும் இது அத்­தி­யா­வ­சியமாகின்றது.  

ஆனால் எழு­பது வருடகால இனப்­பி­ரச்­சினை வர­லாற்றைக் கொண்­டுள்ள இலங்­கையில் பிரச்­சி­னைகள் மலை­போல குவிந்து கிடக்­கின்­றன. இனங்­க­ளுக்­ கி­டையில் நல்­லி­ணக்கம் உரு­வாக்­கப்­படவில்லை. இதனால், ஒரே நாட்டைச் சேர்ந்­த­வர்கள் என்ற தேசிய உணர்­வோடு, அனை­வரும் ஒன்­றி­ணைந்து வாழ முடியும் என்ற சிந்­த­னைக்கு இட­மில்­லாமல் போயுள்­ளது. அத்­த­கைய தேசிய சிந்­த­னைக்கு வழி­வ­குக்க முடி­யுமா என்­பதும் கேள்­விக்­கு­றி­யாகி உள்­ளது. 

இன, சமூ­க, மதங்­க­ளி­டை­யே நல்­லி­ணக்கம் நாளுக்கு நாள் அருகிச் செல்­கின்­றது. மக்கள் மத்­தியில் சந்­தே­கமும், அச்ச உணர்­வுமே மேலோங்கி இருக்கின்­றன. சக­வாழ்­வுக்கும், நிலை­யான சமா­தா­னத்­திற்கும் உரிய சமூக, அர­சியல், பொரு­ளா­தாரச் செயற்­பா­டுகள் இதய சுத்­தி­யுடன்; முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தில்லை. 

இனத்­துவம் சார்ந்த மறை­முக நிகழ்ச்சி நிரல்­களின் அடிப்­ப­டையில் அர­சியல் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து, பேரின மேலாண்­மையை நிலை­நி­றுத்­து­ வ­தற்­கான நட­வ­டிக்­கை­க­ளி­லேயே ஆட்­சி­யா­ளர்கள் மூழ்கிப் போயுள்­ளார்கள். 

சிறு­பான்மை இனத்­த­வர்­களும் இந்த நாட்டின் குடி­மக்­களே. அவர்­க­ளுக்கும் இந்த நாட்டில் சரிசமமாக வாழ உரிமை உண்டு. அந்த உரி­மைக்கு வழி­விட்டு அவர்­க­ளுடன் இணைந்து வாழ வேண்டும். அல்­லது அவர்­க­ளையும் இணைத்துக் கொண்டு செயற்­பட வேண்டும் என்ற பரந்த மனப்­பான்மை பேரின அர­சி­யல்­வா­தி­க­ளிடம் இல்லை. அந்த மனப்­பாங்கு அவர்­க­ளிடம் உரு­வா­குமா என்­பதும் சந்­தே­க­மா­கவே உள்­ளது.

ஆட்­சி­யா­ளர்களும் இது விட­யத்தில் உரிய கவனம் செலுத்­து­வ­தாக இல்லை. பொது­வாக தேசஅபி­மா­னத்­துடன் செயற்­ப­டு­வ­தற்கு அவர்கள் தயா­ராக இல்லை. ஐக்­கிய இலங்கை என்ற அடிப்­படை கோட்­பாட்­டுக்குப் பாத­க­மான இந்த நிலை­மையின் நீட்­சியே தமி­ழர்கள் தனி­நாடு கோரு­வ­தற்கு கார­ண­மா­கி­யது. 

தனி­நாட்டுக் கோரிக்­கையை முன்­வைத்து நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டம் மௌனிக்­கப்­பட்­டு­விட்ட பின்னர் ஐக்­கிய இலங்­கைக்குள் சிறு­பான்மை இன மக்­களும் பெரும்­பான்மை இன மக்­களும் இணைந்து வாழ்­வ­தற்­கு­ரிய அர­சியல் சூழலை உரு­வாக்­கு­வ­திலும் அவர்கள் கவனம் செலுத்­த­வில்லை. மாறாக யுத்த வெற்­றி­வா­தத்தின் மீதான அடக்­கு­முறை அர­சி­யலை முன்­னெ­டுப்­ப­தி­லேயே அவர்கள் தீராத மோகம் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இது கவ­லைக்­கு­ரி­யது. 

சர்வதேச ஒழுங்கில் பின்­தள்­ளப்­படும் நிலை  

சிறு­பான்மை இன மக்கள் வாழ்­கின்ற பிர­தே­சங்­களில் வெறு­மனே பொரு­ளா­தார அபி­வி­ருத்தி என்ற போர்­வையில் அரைகுறை­யான வேலைத் திட்­டங்­களை முன்­னெ­டுப்­பது, அவற்­றுக்குப் பெரிய அளவில் அர­சியல் பிர­சா­ரத்தை மேற்­கொள்­வது என்ற போக்­கையே ஆட்­சி­யா­ளர்கள் கடைப் பிடித்து வரு­கின்­றார்கள். 

அந்த மக்­களின் வாழ்­வியல் சார்ந்த உண்­மை­யான அபி­வி­ருத்தித் தேவைகள் சரி­யாக இனம் காணப்­பட்டு அதற்­கேற்ற வேலைத் திட்­டங்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தில்லை. அவர்­களின் வாழ்க்கை மேம்­பாட்­டுக்கு அவ­சி­ய­மான முறையில் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­து­மில்லை. 

அவர்­களின் தனித்­துவம் மதிக்­கப்படு  ­வ­தில்லை. அவர்­களின் உணர்­வுகள் கவ­னத்திற் கொள்­ளப்­ப­டு­வ­தில்லை. அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­க­ளாக இருந்­தாலும், அவை சார்ந்த அவர்­களின் அடிப்­படை உரி­மை­க­ளுக்கும், அவை தொடர்பில் அவர்­களின் கௌர­வத்­திற்கும் உரிய இட­ம் அளிக்­கப்­ப­டு­வ­தில்லை. 

அபி­வி­ருத்தித் திட்­டங்­களும் மக்­க­ளுக்­கான வேலைத் திட்­டங்­களும் முழு­மை­யான பயனை அடைய வேண்­டு­மாயின், அவை கீழி­ருந்து மேல் நோக்கித் திட்­ட­மி­டப்­பட வேண்டும். அந்த மக்­களின் பங்­க­ளிப்­புடன் செயற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­பது நிர்­வாக நியதி. ஆனால் ஆட்­சி­யா­ளர்கள் அந்த நிய­தியைக் கவ­னத்திற் கொள்­வதே இல்லை. எல்­லாமே மேலி­ருந்து கீழா­கவே மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றன. இதனால் அபி­வி­ருத்­தியை இலக்­காகக் கொண்டு மேற்­கொள்­ளப்­பட்ட பல வேலைத் திட்­டங்­களில் மக்கள் முழு­மை­யான பயனை அடைய முடி­யாத நிலை­மையே உரு­வாகி இருக்­கின்­றது. 

ஐக்­கிய தேசியக் கட்­சியும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் மாறிமாறி ஆட்சி செய்­தாலும், இரு தரப்­பி­னரும் இந்த அர­சியல் போக்­கையே பொது­வான ஆட்சி நிலைப்­பா­டாகக் கொண்­டி­ருக்­கின்­றனர். இதனால் சிறு­பான்மை இன மக்­களின் தேவைகள் பூர்த்தி செய்­யப்­ப­டு­வ­தில்லை. அவர்­களின் அர­சியல் உரி­மைகள் மதிக்­கப்­ப­டு­வ­தில்லை. அவை நிலை­நி­றுத்­தப்­ப­டு­வதும் இல்லை. இந்த நிலைமை காலங்கால­மாகவே தொடர்­ந்து கொண்டிருக்கின்­றது. 

கால மாற்­றத்­திற்கு அமை­வா­கவும், சர்வதேசப் போக்கின் ஒழுங்­குக்கு அமை­யவும் புதிய சிந்­த­னை­யின்பால் அவர்கள் கவனம் கொள்­வ­தில்லை. உல­கமே ஒரு கிரா­ம­மாக, ஒரு சிறிய அமைப்­புக்குள் சுருங்கிச் செல்­கின்ற விஞ்­ஞான தொழில்­நுட்ப வளர்ச்சி நிலையில் மாற்­றங்­களின் ஊடாக வளர்ச்சி பெறு­வ­தற்கு நாட்டம் கொள்­ளா­த­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்­றார்கள்.  

இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் அடிப்­ப­டை­யாகக் கொண்ட பேரின மேலாண்­மை­வாத அர­சியல் செல் ­நெ­றி யில் ஆழ்ந்து கிடக்­கின்ற பேரின அர­சி­யல்­வா­திகள் சர்வதேச  ஒழுங்கில் தாம் படு­மோ­ச­மாகப் பின்­தள்­ளப்­ப­டு­வதை உணர்­கின்­றார்­க­ளில்லை. அதனை அவர்கள் உணர மறுக்­கின்­றார்கள்.  

கற்ற பாடங்கள் மறக்­கப்­பட்­டுள்­ளன  

அர­சியல் உரி­மை­களைக் கோரிய சிறு­பான்மை தேசிய இனமான தமிழ்மக்­களை அழித்து அடக்­கு­வ­தற்­கா­கவே கறுப்பு ஜூலை தாக்­கு­தல்கள் திட்­ட­மிட்ட வகையில் அரங்­கேற்­றப்­பட்­டன. ஆனால் அந்த அர­சியல் உரி­மைக்­கான ஆயுதப் போராட்டம் அர­சு­க­ளையே திகைத்து திண்­டாடச் செய்யும் அள­வுக்கு விசு­வ­ரூ­ப­மெ­டுத்­தது. ரத்தஆறு ஓடி, இத­யங்­களைப் பிளந்த, அந்த எழுச்­சியை, - அந்தப் போராட்­டத்தை முளை­யி­லேயே கிள்­ளி­விட  முயற்­சித்­த­வர்­க­ளினால் அது முடி­யாமல் போனது. ஒரு கால் நூற்­றாண்­டுக்கும் மேலாக – கிட்­டத்­தட்ட 30 வரு­டங்கள் நீடித்த அந்த ஆயுதப் போராட்­டத்தை, பிந்­திய சந்­த­தி­யினால், கப­டத்­த­ன­மான முறை­யி­லேயே 2009 இல் மௌனிக்கச் செய்­வது சாத்­தி­ய­மா­யிற்று. 

மனித உரிமை மீறல்­களும், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்டமீறல்­களும், மோச­மான போர்க்­ குற்றச் செயற்­பா­டு­களும் மலிந்­தி­ருந்த அந்த மோச­மான யுத்­தத்­திற்கு, தமி­ழர்கள் மீதான 1983 கறுப்பு ஜூலை இன அழிப்புத் தாக்­குதல் சம்­ப­வங்­களே உத்­வேகம் ஊட்­டி­யி­ருந்­தன. 

தமி­ழர்­களின் சமூக, பொரு­ள­தார, அர­சியல், கலை, கலா­சார, பண்­பாட்டு உரிமை சார்ந்த வாழ்­வி­யலைக் குலைத்­துப்­போட்ட கறுப்பு ஜூலை தாக்­கு­தல்கள் குறித்து எழுந்த விமர்­ச­னங்கள், கண்­ட­னங்கள், குற்­றச்­சாட்­டுக்கள், இலங்கை பற்­றிய சர்­வ­தே­சத்தின் கணிப்­பீடு என்­பன ஆட்­சி­யா­ளர்­களின் சிறு­பான்மை மக்கள் மீதான இன­வாத விரோதப் போக்கில்  பாடங்­களைப் போதித்­தி­ருந்­தன. 

ஆனாலும் கறுப்பு ஜூலை சம்­ப­வங்­களில் தாங்கள் கற்ற பாடங்­களைக் கவ­னத் தில் கொண்டு தமது இன­வாத இனப் ­ப­டு­கொலை போக்கில் ஆட்­சி­யா­ளர்கள் மாற்­றங்­களைச் செய்­ய­வில்லை. கறுப்பு ஜூலையின் பின்னர் வெகுண்­டெ­ழுந்த தமிழ் மக்­களின் ஆயுதப் போராட்டம் கார­

ண­மாக மூண்­டி­ருந்த யுத்­த­மோ­தல்­களில் போர்க்­குற்றச் செயற்­பா­டு­க­ளுக்கு உள்­ளாகி அவர்கள் பாடம் படித்­துள்­ளனர். கறுப்பு ஜூலை சம்­ப­வங்­களின் பின்னர், நிலை­மை­களைச் சீர்­தூக்கிப் பார்த்து, ஆயுதப் போராட்­டத்தின் ஆரம்ப காலத்­தி­லேயே இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் கண்­டி­ருக்க வேண்டும். அத­னையும் அவர்கள் செய்­ய­வில்லை. 

தமிழ்மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான ஆயுதப் போராட்­டத்தைப் பயங்­க­ரவா­த­மாகச் சித்திரித்து, விட்­டுக்­கொ­டுப்­பு­க­ளுக்கு இட­மில்­லாமல், நிதானம் தவ­றிய வீரா­வே­சத்­துடன் அதி­கப்­ப­டி­யான ஆயுத பலத்தைப் பயன்­ப­டுத்­திய  ரா­ணுவ நட­வ­டிக்­கை­களே மேற்­கொள்­ளப்­பட்­டன. சர்­வதேச மத்­தி­யஸ்­த­மா­கிய நோர்­வேயின் முயற்­சியில் மேற்­கொள்­ளப்­பட்ட போர்­ நி­றுத்த காலத்துப் பேச்­சு­வார்த்­தை­க­ளிலும்  ரா­ஜ­தந்­திர ரீதி­யாக சமா­தான வழியில் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­ப­ட­வில்லை. 

அர­சாங்கம் என்ற பொறுப்பிலிருந்து நிதானம் தவ­றிய உணர்ச்சிப் பெருக்­குடன் கூடிய அதிக ரா­ணுவ பலத்தில் நம்­பிக்கை வைத்துச் செயற்­பட்­டதன் கார­ண­மாக மனித உரிமை மீறல்கள், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்கள் மட்­டு­ மல்­லாமல், மோச­மான போர்க்­குற்றச் சாட்­டுக்­க­ளுக்கும் சர்­வ­தேச அரங்கில் கைகட்டி நின்று பொறுப்புக்கூற வேண்­டிய நிலை­மைக்கு ஆட்­சி­யா­ளர்கள் ஆளாகி இருக்­கின்­றனர். விடு­த­லைப்­பு­லிகள் மீதும் இந்தக் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்கின்றன என்­பது வேறு விடயம். 

போருக்குப் பின்­ன­ரான நிலை­மைகள்  

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தில் இந்­தியா உள்­ளிட்ட சர்­வ­தேச சக்­தி­க­ளையும் இணைத்துக் கொண்டு 2009 ஆம் ஆண்டு விடு­தலைப் புலி­களை ரா­ணுவரீதி­யாக மௌனிக்கச் செய்து அன்­றைய ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ யுத்­தத்தில் வெற்­றி­வீ­ர­னாக மேலெ­ழுந்­தி­ருந்தார்.  

யுத்த வெற்றி என்ற போதையில் மிதந்த அவர் யுத்­தத்தை முடி­வுக்குக் கொண்டு வந்த பின் உண்­மை­யான சமா­தா­னத்தை நிலை­நி­றுத்­து­வ­தற்­காக இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வுகாண முயற்­சிக்­க­வில்லை. மாறாக அர­சியல் உரி­மைக்­காகப் போரா­டிய மக்­களை ரா­ணுவ மய­மான ஒரு சூழலில், தேசிய பாது­காப்பைக் காரணம் காட்டி, அடக்கி வைத்­தி­ருந்தார். 

அவர்கள் மத்­தியில் தனது அர­சியல் செல்­வாக்கை விருத்தி செய்து வாக்கு வங்­கியை உரு­வாக்கும் நோக்­கத்தில் மேற்கொண்ட அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களும் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட அந்த மக்­களின் உண்­மை­யான வாழ்­வியல் ஈடேற்­றத்­திற்­காக மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை. ஏமாற்று வழி­சார்ந்த அபி­வி­ருத்தி வேலைத் திட்­டங்­களே மேற்­கொள்­ளப்பட்டன. அதே­நேரம் ரா­ணுவ அடக்­கு­மு­றைக்குள் அந்த மக்­களை வைத்துக் கொண்டு பெய­ர­ள­வி­லான நல்­லி­ணக்க நட­வ­டிக்­கை­க­ள் மட்டுமே முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. 

சர்­வ­தேச மட்­டத்­தி­லான அர­சியல் லாப நோக்­கத்­திற்­காக யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட அந்த மக்­களை ஏமாற்றும் வகை­யி­லேயே அபி­வி­ருத்திச் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. ஆனால் உண்­மையில் அந்த அபி­வி­ருத்தி வேலைத் திட்­டங்­களும், நல்லிணக்கச் செயற்பா­டு­களும்  அவற்றை அரங்­கேற்­றி­ய­வர்­க­ளையே ஏமாற்­றி­யி­ருந்­தன. 

ஏனெனில் யுத்தம் முடி­வ­டைந்த 6 வரு­டங்­களின் பின்னர் 2015 ஆம் ஆண்டு நடத்­தப்­பட்ட ஜனா­தி­பதி தேர்­த­லிலும், அதனைத் தொடர்ந்து இடம்­பெற்ற பொதுத் தேர்­த­லிலும் வடக்குகிழக்கு மக்கள் மகிந்த ராஜ­பக்ஷவைப் புறந்­தள்ளி மண் கவ்வச் செய்­தி­ருந்­தார்கள். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­­ர­ம­சிங்க ஆகி­யோரின் தலை­மையில் இரு கட்­சிகள் இணைந்து புதி­தாக உரு­வாக்­கிய நல்­லாட்சி அர­சாங்­கத்தின் நல்­லி­ணக்க முயற்­சியும் தோற்றுப் போனது. அந்த அர­சாங்கம் உரு­வாக்­கப் பட்டபோது மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­ தி­களும் தேர்தல்கால ஆணை­களும் கிடப் பில் போடப்­பட்­டன. 

தமிழ்மக்­களைப் பொறுத்­த­மட்டில், அர­சியல் கைதி­களின் விடு­தலை, ரா­ணு­ வத்தின் பிடியில் உள்ள காணி விடு­விப்பு, காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான பொறுப்பு கூறல், புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கத்தின் மூலம் அர­சியல் தீர்வு காணும் முயற்சி என்­ப­வற்றில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர் வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­களும் காற்றில் பறக்­க­வி­டப்­பட்­டுள்­ளன. இதனால், மக்கள் கொண்­டி­ருந்த நம்­பிக்­கைகள் சித­ற­டிக்­கப்­பட்­டி­ருக்கின்றன. நல்­லாட்சி அர­சாங்கம் பொல்­லாத ஆட்­சி­ யாகக் கரு­தப்­படும் அள­வுக்கு நிலை­மைகள் மோச­ம­டைந்­துள்­ளன. ஆட்­சி­யா­ளர்­க­ளி­னா­லேயே மோச­மாக்­கப்­பட்­டுள்­ளன. 

கறுப்பை வெள்­ளை­யாக்க முடி­யுமா?  

ஐக்­கிய தேசிய கட்­சியின் ஆட்சிக் காலத்­தி­லேயே கறுப்பு ஜூலை இன அழிப்புத் தாக்­கு­தல்கள் திட்­ட­மிட்ட வகையில் அரங்­கேற்­றப்­பட்­டன. அந்தத் தாக்­கு­தல்கள் அன் ­றைய ஆட்­சி­யா­ளர்­களின் காட்­டு­மி­ராண்­டித்­த­னத்தை, பேரி­ன­வா­தி­களின் கொடூர முகத்தை சர்­வ­தேச அரங்கில் வெளிச்சம் போட்டுக் காட்­டின. கறுப்பு ஜூலையின் இனப்­ப­டு­கொலை நட­வ­டிக்­கைகள் வர­லாற்றில் அழிக்க முடி­யாத கரிய அடை­யா­ள­மாகப் பதி­வா­கி­யி­ருக்­கின்­றன.  

நாட்டின் சக குடி­மக்கள் மீது அன்­றைய அர­சாங்­கமே வெறி­யாட்டம் ஆடிய காட்­சி­களின் திரட்­சி­யாக அமைந்­துள்ள அந்த கரிய, படுமோசமான  அடை­யா­ளத்தை 36 வரு­டங்­களின் பின்னர் வெள்­ளை­யாக்க அதே ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் முயன்­றி­ருக்­கின்­றது. 

ஜூலை முதலாந்திகதி ஒரு வேடிக்கை நிகழ்ந்­தி­ருந்­தது. முதல் பக்க விளம்­ப­ர­மாக ஜூலை 1 முதல் வெள்ளை ஜூலை என்றும் வெள்ளை ஜூலை­யான இன்று முதல் மக்­க­ளுக்கு பல நிவா­ர­ணங்கள் என்ற கொட்டை எழுத்­தி­லான செய்தி வடி­வ விளம்­ப­ரத்தை அரசு வெளி­யிட்­டி­ருந்­தது. 

அபிவிருத்தி என்ற போர்வையில் கறுப்பு ஜூலையின் கறுப்பை வெள் ளையாக்குவது நடைபெறக் கூடிய காரி யமல்ல. அபிவிருத்தி என்பது வேறு. நடத்தப்பட்ட கொடூரங்களுக்கும் அநீதி களுக்கும் பரிகாரம் காண்பது என்பது வேறு. கறுப்பு ஜூலை கொடுமைகளின் மூலம் அழிக்கப்பட்ட தமிழ்மக்களின் தனித்துவம், அவர்களுடைய சுயமரி  யாதை, சுயகௌரவம் என்பன மீண்டும் நிலைநிறுத்தப்படும் வகையில் நடவ டிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். 

அவர்களின் அரசியல் உரிமை கோரிக்கையை அடித்து நொறுக்கி அவர்களை இனரீதியாக அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு கறுப்பு ஜூலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்பதை இதய சுத்தியுடன் ஏற்று, பாதிக்கப்பட்ட மக்களுடன் சமரசம் செய்து கொள்ளப்பட வேண்டும். அது இதயசுத்தியான இணக் கப்பாடாக அமைய வேண்டும். 

அந்த சமரசம் என்பது வெறுமனே, திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் பற்றிய அறிவித்தல் விடுப்பதல்ல. இந்த அபிவிருத்தி அறிவித்தல் அல்லது அபிவிருத்தியின் அரங்கேற்றத்தின் மூலம் 1983 கறுப்பு ஜூலை நாட்களில் படிந்த அந்த துயரம்மிகுந்த, அவமானம் மிகுந்த மனக்காயங்களாகிய கறுப்பை வெள்ளையாக்கிவிட முடியாது.

தாக்குதல்களுக்குப் பின்னர்  அபி விருத்தி  செயற்பாடுகளை முன்னெடுக்கப் போகிறோம் என்று மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜூலை குறித்த உடன்பாடு எட் டப்படவேண்டும் இதற்கு போருக்குப் பின்னர் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு மனிதாபிமானரீதியில் தீர்வுகளைக் காண முயற்சிக்க வேண்டும். அதனூடாக தமிழ்மக்களின் நம்பிக்கையை வென் றெடுக்க வேண்டும். தேர்தல்களை எதிர் கொண்டுள்ள இன்றைய சூழலில், ஒரு காலகட்டத்தில் இது தவிர்க்க முடியாத தேவையாக எழுந்து நிற்கின்றது.

- பி.மாணிக்­க­வா­சகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04