ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதன்கிழமை பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூனை சந்திக்கவுள்ளதுடன் , சனிக்கிழமை இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இந்த சந்திப்புகளின் போது இலங்கையின் புதிய முன்னேற்றங்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இரு தலைவர்களும் உரையாட வுள்ளனர்.

நான்கு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செவ்வாய்கிழமை பிரித்தானியாவிற்கும் அதனைத் தொடர்ந்து இந்தியாவிற்கும் செல்லவுள்ளார். ஊழல் ஒழிப்பு தொடர்பில் பிரித்தானியாவில் இடம்பெறுகின்ற நிகழ்வில் கலந்துக் கொள்ளுமாறு பிரித்தானிய பிரதமர் டேவிட் கெமரூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் .

இதே வேளை , இந்திய மத்திய பிரதேஷ் ராஞ்சியில் நடைப்பெறவுள்ள அனைத்து மத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய பிரதேச முதலமைச்சரின் அழைப்பையேற்று அழைப்பையேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவிற்கும் செல்கின்றார்.

பிரித்தானியாவிற்கு எதிர் வரும் 10 ஆம் திகதி செவ்வாய் கிழமை விஜயம் மேற் கொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , அதனைத் தொடர்ந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்தியாவில் இடம்பெறவுள்ள அனைத்து மத மாநாட்டிலும் கலந்துக் கொள்ளவு ள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஆட்சி மாற்றத்தின் பின்னர் பிரித்தானியா இலங்கை அரசாங்கத்திற்கு பல்வேறு வகையிலான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு முன் வந்தள்ளது. குறிப்பாக இலங்கைக்கு எதிரான சர்வதேச மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிலிருந்து மீள்வதற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க பிரித்தானியா முன் வந்தது.

அத்துடன் இலங்கை அரசாங்கம் உள் நாட்டில் இடம்பெறுகின்ற ஊழல் மோசடிகளுக்கு எதிராகவும் அவற்றை கட்டுப்படுத்தவும் இலங்கை பிரித்தானியாவிடம் ஒத்துழைப்புகளை கோரியிருந்தது. இதனடிப்படையில் ஊழல் ஒழிப்பு தொடர்பிலான பிரித்தானிய நிபுணர்களை இலங்கைக்கு அனுப்புவதற்கு பிரித்தானியா இணக்கம் தெரிவித்ததுடன் அது தொடர்பிலான பயிற்சிகளை இலங்கையின் அதிகாரிகளுக்கு வழங்கவும் முன் வந்துள்ளது.

இந்தியாவின் மத்திய பிரதேச ராஞ்சியில் நடைபெறவுள்ள அனைத்து மத மாநாட்டில்

தாய்லாந்து மற்றும் வியட்னாம் உட்பட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த மாநாட்டினை மத்திய பிரதேஷ் ஆளும் கட்சியான பாரதீய ஜனதா கட்சி ஏற்பாடு செய்துள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் வலய நாடுகளுடனான மதசார்ந்த ஒற்றுமை உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்படவுள்ளன

ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன பதவி ஏற்றதன் பின்னர் இந்தியாவிற்கு செல்லும் இரண்டாவது உத்தியோகப்பூர்வ விஜயம் இதுவாகும். இதன் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.

இச் சந்திப்பில் இலங்கை - இந்திய கூட்டு ஆணைக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தம் , இலங்கைக்கான இந்தியாவின் புதிய முதலீடுகள் உள்ளிட்ட விடயங்களில் கூடுதலான அவதானம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது

குறிப்பாக இது வரைக்காலமும் இந்தியாவின் தனியார் துறையின் முதலீடுகள் இலங்கையில் மிக குறைவாக காணப்படுகின்ற நிலையில் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக அதனை மேம்படுத்துவதற்கு இந்தியா உத்தேசித்துள்ளது.

மேலும் சீன அரசாங்கத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற துறைமுக நகர் திட்டம் தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் காணப்பட்ட நிலையில் ,பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சீன விஜயத்தின் பின்னரான சூழல் நிலைமையை சீர்செய்துள்ளது. குறிப்பாக துறைமுக நகர் திட்டம் தொடர்பில் சீனாவுடன் இலங்கை செய்துக் கொண்ட ஒப்பந்தத்தில் நில , ஆகாய மற்றும் கடல் உரிமைகள் தொடர்பான சிக்கல் நிலை தளர்ந்துள்ளதனால் இந்தியா தனியார் முதலீடுகளை துறைமுக நகரில் கூடியளவு அதிகரிக்க விரும்புகின்றமை குறிப்பிடத்தக்கது .