வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரிகம்பள பிரதேசத்தில் நேற்று  அதிகாலை முதல் சுமார் ஐந்து மணி நேரம் வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது இரண்டு வாள்கள், தடிகள் பலவற்றுடன் மூவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஏதேனும் குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்டுள்ளனரா என்பது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.இந்த திடீர் சோதனை நடவடிக்கையின் போது வீதிகளில் நின்றிருந்த பலர் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுமார் முன்னூறு வீடுகளும் இந்நடவடிக்கையின் போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் வீடுகளிலிருந்தும் தடிகள் பலவற்றை மீட்டதாகவும் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

வென்னப்புவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் வசந்த குமாரவின் உத்தரவின் பேரில் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமன் தசநாயக்காவின் வழிகாட்டலில் சுமார் 90 பொலிஸார் இந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.