ரஷ்யா நோக்கிய துருக்கியின் சாய்வு

Published By: Priyatharshan

21 Jul, 2019 | 12:41 PM
image

- ஸ்ரான்லி ஜொனி

 2015 நவம்பரில் சிரிய எல்லையின் மேலாக ரஷ்யாவின் ஜெட் போர்விமானம் ஒன்றை துருக்கியின் எவ் -- 16 விமானம் சுட்டுவீழ்த்தியை அடுத்து மாஸ்கோவுக்கும் அங்காராவுக்கும் இடையில் பதற்றம் உருவானது.ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பதிலடி கொடுப்பார் என்றே ஊகங்கள் கிளம்பின. ஆனால், அவர் துருக்கிக்கு எதிராக எந்த இராணுவ நடவடிக்கையையும் எடுக்கவில்லை.பதிலாக,  சிரிய அரசாங்கத்துக்கு எதிரான கிளர்ச்சியாளர்களையும் ஜிஹாதிகளையும் தோற்கடித்து சிரியாவின் எஞ்சியிருக்கும் அரச நிறுவனங்களை பலப்படுத்தும் தனது  மூலோபாய இலக்கிலேயே கவனத்தை தொடர்ந்து குவித்திருந்தார்.

புட்டினின் மூலோபாயம் துருக்கியைத் தாக்குவதல்ல, வென்றெடுப்பதேயாகும்.அத்திலாந்திக் கூட்டணியில் குறிப்பாக, அமெரிக்க -- துருக்கி உறவுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய வெடிப்புகளை தனக்கு அனுகூலமான முறையில் பயன்படுத்திக்கொண்டார். படிப்படியாக வளர்ந்துகொண்டிருந்த பிராந்திய சமநிலைகளும்  அவரின் பந்தயத்துக்கு அனுகூலமானவையாகவே அமைந்தன. ரஷ்ய குண்டுவீச்சுவிமானம் துருக்கியர்களினால் சுட்டுவீழ்த்தப்பட்டு மூன்றரை வருடங்களுக்குப் பிறகு ஜூலை 12 ஆம் திகதி  ரஷ்யாவின் மிகவும் நவீனரகமான ( விமான எதிர்ப்பு ) எஸ் -- 400 ஏவுகணைகளின் முதலாவது தொகுதியை ( அமெரிக்காவிடமிருந்தும் வடஅத்திலாந்திக் ஒப்பந்த நாடுகளின் அமைப்பிடமிருந்தும் [ நேட்டோ ] வந்த அச்சுறுத்தல்களுக்கும்  எச்சரிக்கைகளுக்கும் மத்தியிலும் ) அங்காரா வாங்கியது.

 இது சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னரான காலகட்டத்தில் முக்கியமான ஒரு தருணமாகும். துருக்கி நேட்டோ அமைப்பின் ஒரு உறுப்பு நாடாகும். அத்துடன் அதன் இன்சிர்லிக் பகுதியில் அமெரிக்க விமானப்படைத் தளம் ஒன்றும் இருக்கிறது.தெற்கு ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மேற்காசியா ஆகியவை குறுக்கிடுகின்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடத்தில் துருக்கி இருக்கிறது. அதனால் புவிசார் அரசியல்  ஆட்டத்தில் முக்கியமான அந்தஸ்தை அந்த நாடு இயல்பாகவே பெறுகிறது.

பனிப்போர் ( Cold War) காலகட்டத்தில்  சோவியத் யூனியனுக்கு எதிராக அத்திலாந்திக் நாடுகளுக்கு முக்கியமான ஒரு இடைத்தடுப்பு  ( Buffer) நாடாக துருக்கி விளங்கியது. சோவியத் வீழ்ச்சிக்கு பின்னரும் கூட அமெரிக்கா அங்காராவுடன்நெருக்கமான  கூட்டணியைப் பேணியது.ஆனால் இப்போது நேட்டோ உறுப்பு நாடொன்றின் வான்பரப்பை ரஷ்யாவின் உயர் தொழில்நுட்ப ஏவுகணைகள் பாதுகாக்காப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இத்தகைய பின்புலத்தில் பனிப்போரின் ஒரு நினைவுச்சின்னமாக விளங்கும் நேட்டோ ரஷ்யாவைத் தடுப்பதென்பது ஒரு முரண்நகையாகும்.

எஸ் -400 ஏவுகணைகளை துருக்கி பெறுவது தொடர்பாக அமெரிக்கா நுணுக்கமான பல பிரச்சினைகளைக் கிளப்பியது. அமெரிக்கா அதன் மிக நவீனமான -ராடாருக்கு அகப்படாத எவ் - 35 குண்டுவீச்சு விமானங்களில் இருந்து எஸ் -- 400 ஏவுகணை கட்டமைப்புகள் தகவல்களைச் சேகரித்துவிடும் என்று அஞ்சுகிறது.இந்த விமானங்களை பெறுவதற்கு துருக்கி வாஷிங்டனிடம் கோரிக்கை முன்வைத்திருந்தது. 

எஸ் -- 400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்குவது தொடர்பான  பேரத்தை துருக்கி முன்னெடுத்ததற்கு எதிர்வினையாக அமெரிக்கா துருக்கிய விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும்  செயற்திட்டத்தை ஏற்கெனவே இடைநிறுத்தியிருக்கிறது. அங்காராவுக்கு எதிராக வாஷிங்டன் தடைகளையும் விதிக்கக்கூடும்.ஆனால், இந்த பிரச்சினைகளுக்கு அப்பால், நேட்டோவின் பலம்பொருந்திய உறுப்பு நாடொன்று அந்த அமைப்புக்கு சவால் விடுத்தை ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்வதன் மூலமாக உணர்த்தப்படுகின்ற அரசியல் செய்தி  எஸ் -- 400 பேரத்தை சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னரான காலகட்டத்தின் மிகவும் சர்ச்சைக்குரிய ஆயுத விற்பனை உடன்படிக்கையாக்கியிருக்கிறது.

துருக்கியின் தோல்வியடைந்த  பந்தயம்

 துருக்கியின் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சியைக் காண்பிக்காத ஒரு நேரத்தில் அதுவும் தடைவிதிப்புகளை எதிர்நோக்கவேண்டிய சாத்தியப்பாட்டுக்கு மத்தியிலும் கூட அந்த நாடு அமெரிக்காவை ஏன் எதிர்த்து நிற்கிறது? வெளியுறவுக் கொள்கையின் திசையை மாற்றுவதற்கு ஜனாதிபதி றிசெப் தஜிப்  எர்டோகானை பல காரணிகள் உந்தித்தள்ளின. 

அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையில்  2003 ஆம் ஆண்டளவிலேயே விரிசல்கள் ஏற்படத்தொடங்கிவிட்டன. ஈராக் மீதான ஆக்கிரமிப்புக்கான தொடங்கு தளமாக இருப்பதற்கு அங்காரா மறுத்துவிட்டது. சிரிய நெருக்கடியின்போது  அசாத் ஆட்சியைத் தூக்கியெறிய கிளர்ச்சியாளர்களின் சார்பில் சிரியாவில் அமெரிக்கா தலையிடவேண்டும் என்று துருக்கி விரும்பியது.ஆனால், ஒபாமா நிருவாகம் அதற்கு மறுத்துவிட்டது. அந்த நேரத்தில் துருக்கி மேற்காசியாவிலும் வட ஆபிரிக்காவிலும் அதன் செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான கருவியாக அரபுவசந்தத்தின் மீது பந்தயம் கட்டியது. பிராந்தியத்தில் இருந்த சர்வாதிகாரிகளின் ஆட்சிகளை இஸ்லாமிய அரசியல் கட்சிகள் பதிலீடு செய்யும் என்பதே அதன் எதிர்பார்ப்பாக இருந்தது.( அதாவது துருக்கியின் ஆளும் நீதி -- அபிவிருத்தி கட்சியுடன் தத்துவார்த்த ரீதியில் இணைந்ததான  முஸ்லிம் சகோதரத்துவ  கட்சி போன்றவை மேற்காசியாவின் பல நாடுகளில் ஆட்சிக்கு வரும் என்று அங்காரா எதிர்பார்த்தது).ஆனால், அந்தப் பந்தயம் எதிர்பாராத விளைவையே ஏற்படுத்தியது.

சிரிய நெருக்கடியின் ஆரம்ப வருடங்களில், எளிதில் ஊடுருவக்கூடியதான சிரிய -- துருக்கி எல்லை கிளர்ச்சியாளர்களுக்கும் ஜிஹாதிகளுக்கும் முக்கியமான கடப்பு இடைவழியாக இருந்தது.எல்லையை தடைசெய்ய துருக்கி ஆரம்பித்த நேரத்தில் இஸ்லாமிய அரசு (Islamic state  ) சிரியாவில் ஆதிக்கம் மிகுந்த ஒரு சக்தியாக தன்னை நிலைநிறுத்திவிட்டது. இஸ்லாமிய அரசு ஆரம்பத்தில் சிரிய அரசாங்கப் படைகளையு கிளர்ச்சிக் குழுக்களையும் தாக்கியது.ஆனால், போர்க்களத்தில்  நெருக்கடியைச் சந்திக்கத் தொடங்கியதும் இஸ்லாமிய அரசு துருக்கிக்கு எதிராகத் திரும்பியது. 2016 ஆம் ஆண்டில் துருக்கியில் அந்த இயக்கம் பெருவாரியான பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியது. 

 துருக்கியப் படைகளை எதிர்த்து பல தசாப்தங்களாக சண்டையிட்டுவரும் குர்திஷ்தான் தொழிலாளர் கட்சியுடன் நெருக்கமான தத்துவார்த்த மற்றும் இராணுவ உறவுகளைக் கொண்டிருக்கும் சிரிய குர்திஷ் கிளர்ச்சியாளர்கள்  பலமடையத்தொடங்கியமை துருக்கியின் சிரியப் பந்தயம் தோல்வி கண்டதன் இன்னொரு விளைவாகும். போர்க்களத்தில் இஸ்லாமிய அரசை எதிர்த்து குர்திஷ்கள் சண்டையிட்டபோது அமெரிக்கா அவர்களை நேரடியாக ஆதரிக்கத்தொடங்கியது. ஆக, சிரியாவில் சகல பக்கத்திலும் துருக்கி தோல்வி கண்டது. அசாத் ஆட்சியைக் கவிழ்க்க அது தவறியது.ரஷ்யர்களும் ஈரானியர்களும் அசாத்தைக் காப்பாற்ற வந்தார்கள். ஜிஹாதிகள் துருக்கிக்கு எதிராகத் திரும்பினார்கள். இறுதியாக, எல்லைக்கு அப்பால்  போரில் பெற்ற அனுபவம் காரணமாக சண்டையிடும் ஆற்றலை அதிகரித்துக்கொண்ட குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பலமடைந்த குர்திஷ்தானைக் காணவேண்டிய நிலை துருக்கிக்கு. இந்த குர்திஷ் கிளர்ச்சியாளர்களை அங்காரா முக்கியமான  எதிரிகளாகப் பார்க்கிறது.

இந்த புதிய யதார்த்தநிலையை துருக்கி ஏற்றுக்கொண்டது.அசாத் ஆட்சி கவிழ்க்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை அது கைவிட்டது. தனது எல்லைக்கும் சிரிய குர்திஷ்தானுக்கும் இடையில் இடைத்தடுப்பு ஒன்றை உருவாக்குவதில் அதன் கவனம் திரும்பியது. இதற்கு ரஷ்யாவினதும் சிரியாவினதும் உதவி தேவைப்பட்டது. குர்திஷ்கள் இதற்கு  மேலும் பலமடைவதைக் காண சிரிய அரசாங்கமும் விரும்பவில்லை.ஆனால், இஸ்லாமிய அரசுக்கு எதிரான போரில் குர்திஷ்கள் அமெரிக்காவின் பங்காளிகள்.சிரிய குர்திஷ்தானில் 2000 க்கும் அதிகமான அமெரிக்கத் துருப்புகள் இன்னமும் நிலைகொண்டிருக்கின்றன. இங்கு தான் துருக்கியின் நலன்கள் அமெரிக்காவின் நலன்களுடன் நேரடியாக மோதுகின்றன.

வேறு பிரச்சினைகளும் இருக்கின்றன.2016 ஆம் ஆண்டில் எர்டோகானைக் கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட சதிமுயற்சிக்கு காரணம்  அமெரிக்காவை தளமாகக்கொண்டியங்கும் துருக்கிய மதகுரு பெஃதுல்லா குலென் என்று குற்றஞ்சாட்டும் அங்காரா அவரை துருக்கிக்கு நாடு கடத்தப்படவேண்டும் என்று விரும்புகிறது. ( குலெனுடன் தொடர்புகளைக்கொண்ட  முன்னாள் சி.ஐ.ஏ.அதிகாரியொருவருக்கு எதிராக துருக்கி பிடியாணையையும் பிறப்பித்திருக்கிறது) துருக்கியின் கோரிக்கைகளுக்கு இணங்க அமெரிக்கா மறுத்துவிட்டது. அதேவேளை அமெரிக்காவிடமிருந்து பேட்ரியட் ஏவுகணைகளை வாங்குவதற்கும் துருக்கி விரும்பியது.ஆனால், அங்காராவும்கு அந்த ஏவுகணைகளை விற்பனை செய்வதில் வாஷிங்டன் ஆரம்பத்தில் அக்கறை காட்டவில்லை. இந்த பிரச்சினைகள் எல்லாம் சேர்ந்து துருக்கியை ரஷ்யா நோக்கி திரும்ப வைத்தன. ரஷ்யாவும் விருப்பத்தை வெளிக்காட்டியது.

புட்டினைப் பொறுத்தவரை, துருக்கி ஒரு பெரிய வெற்றியாகும். அத்தகைய ஒரு வாய்ப்பு அவரது முன்னாள் சோவியத் தலைவர்களுக்குக் கூட கிடைக்கவில்லை. ரஷ்யா துருக்கியை தனது பக்கத்தி்ல்  வைத்துருக்குமானால், மத்தியதரைக் கடலில் இருந்து போஸ்போரஸ் நீரிணையூடாக கருங்கடல் வரை ( கருங்கடலில் ரஷ்யாவுக்கு கடற்படைத்தளம் இருக்கிறது ) தொடர்ச்சியான பிராந்தியத்தை பயன்படுத்தக்கூடிய அனுகூலமான நிலை ரஷ்யாவுக்கு கிட்டும். அத்துடன் நீண்டகால நோக்கில் மேற்காசியாவில் தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த ரஷ்யா விரும்பினால், துருக்கியின் வகிபாகம் அதில் முக்கியமானதாக அமையும்.

 துருக்கியை  தனது பக்கம் சாயச்செய்வதற்காக புட்டின் ஒருசில விட்டுக்கொடுப்புகளைச செய்தார்.சிரியப்பக்கமாக இருக்கும் பெரிய ஒரு குர்திஷ் நகரான அப்ஃரினை துருக்கி கடந்த வருடம்  ஆக்கிரமித்தபோது, டமாஸ்கஸிடமிருந்து ஆட்சேபங்கள் வந்தபோதிலும் கூட  ரஷ்யா அதற்கெதிராக எதையும் செய்யவில்லை. அத்துடன் கிளர்ச்சியாளர்களிடமிருந்து சிரியாவின் பெருமளவு பகுதிகளை விடுவித்த பிறகு சிரியாவில் கிளர்ச்சியாளர்களினதும் ஜிஹாதிகளினதும் கட்டுப்பாட்டில் இருக்கும் கடைசி பகுதியான இட்லிப்பில் ( இங்கு துருக்கிக்கு ஆதரவான கிளர்ச்சியாளர்களும் நிலைகொண்டிருக்கிறார்கள் ) அதே விடுவிப்பை ரஷ்யா செய்யவில்லை. பதிலாக, ரஷ்யா சிரிய அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருந்த அதேவேளை யுத்தநிறுத்தம் ஒன்றுக்காக ரஷ்யா துருக்கியுடனும் ஈரானுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தது.

ரஷ்யாவும் துருக்கியும் புதிய பிராந்திய நேச அணிகளாக மாறிவிட்டன என்று இது அர்த்தப்படாது.இரு நாடுகளுக்கும் இடையே கட்டமைப்புசார் பிரச்சினைகள் இன்னமும் இருக்கவே செய்கின்றன.சிரியாவில் இரு நாடுகளும் போட்டித்தரப்புகளை தொடர்ந்து ஆதரித்துக்கொண்டேயிருக்கின்றன. அங்கு நெருக்கடி இன்னமும் தீர்க்கப்படவில்லை.துருக்கியின் தேசிய பாதகாப்பு நிறுவனக்கட்டமைப்பு வரலாற்று ரீதியாக அமெரிக்காவுடன் இணைந்தே செய்பட்டு வந்திருக்கிறது.லிபியா தொடக்கம் இஸ்ரேல் வரை ஏனைய பல நாடுகளில் ரஷ்யாவினதும் துருக்கியினதும் நலன்கள் வேறுபடுகின்றன. 

ஆனால்,  துருக்கியின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் அமெரிக்கா இனிமேலும் இன்றியமையாத ஒரு பங்காளியாக இல்லை என்பதே துருக்கி வெளிப்படுத்தியிருக்கும்  தெள்ளத்தெளிவான செய்தியாகும்.ரஷ்யாவுடனான பாதுகாப்பு உடன்பாடு ஒன்று தொடர்பாக  நேட்டோவின் கோபத்தைச் சம்பாதித்துக்கொள்ளவும் தயாராயிருப்பதாகவும் அந்த அமைப்புக்கு அங்காரா செய்தி சொல்லியிருக்கிறது.துருக்கி சாய்கிறது. தடம் மாறுகின்ற துருக்கியைத் தொடர்ந்தும் தன்னுடன் வைத்திருப்பதற்காக அமெரிக்கா அதன் தற்போதைய அணுகுமுறைகளை மாற்றவேண்டிருக்கும்  அல்லது நீண்டகால நேசநாட்டுக்கு எதிராக பதிலடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். எந்த  வழியில் நோக்கினாலும் பெரிய புவிசார் அரசியல் சதுரங்கப்பலகையில்  அமெரிக்காவுக்கு புட்டின் வைத்திருக்கும் பெரிய ஒரு தடுப்பு இது.

 ( த இந்து)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21