தவளைக்கு திருமணம் செய்து கர்நாடகாவில் வினோத வழிபாடு..!

Published By: Daya

18 Jul, 2019 | 03:22 PM
image

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், மழைவேண்டி தவளைகளுக்கு திருமணம் செய்துவைத்து வினோத வழிபாடு நடத்தப்பட்டது. 

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள குடகு, சிக்கமகளூரு மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உத்தர கன்னடாவிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அத்துடன், குடகு மாவட்டம் பாகமண்டலாவில் பெய்து வரும் கனமழையால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், குடகு மாவட்டம் முழுவதும் நல்ல மழை பெய்தாலும், இந்த மாவட்டத்திற்கு உட்பட்ட மல்லேனஹள்ளி கிராமத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் அங்கு விவசாய பணிகளும் நடைபெறவில்லை. இதையடுத்து கவலையடைந்த அப்பகுதி மக்கள், தவளைக்கு திருமணம் செய்து வழிபாடு நடத்த முடிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று, அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் கிராம மக்கள் ஒன்று கூடினர். அங்கு, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் தவளை தனித்தனி கூண்டில் அலங்கரித்து எடுத்து வரப்பட்டது. பின்னர், மந்திரம் முழங்க பெண் தவளை கழுத்தில் தாலி கட்டப்பட்டது.

இதன்போது, அங்கு கூடியிருந்த மக்கள் தவளைகளுக்கு அட்சதை தூவி வாழ்த்தினர். தொடர்ந்து, அங்குள்ள கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. பின்னர், திருமணத்தில் கலந்து கொண்ட கிராம மக்களுக்கு அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கையில், “மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குடகு, சிக்கமகளூரு மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உத்தர கன்னடாவிலும் பலத்த மழை பெய்து வருகிறது. ஆனாலும், எங்கள் கிராமத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை.

இதனால், எங்கள் கிராமத்தில் விவசாய பணிகளை தொடங்க முடியவில்லை. தவளைகளுக்கு திருமணம் செய்துவைத்தால் மழை பெய்யும் என்பது எங்கள் பகுதி மக்களின் பல்லாண்டுகால நம்பிக்கை அதன்படி நடந்தும் உள்ளது. எனவே, தவளைகளுக்கு திருமணம் செய்து வைத்தோம்” என்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right