அமைதியை கெடுக்கும் அடிப்படைவாதம்

Published By: Vishnu

16 Jul, 2019 | 11:13 AM
image

அடிப்­ப­டை­வாதம் அமை­தியைக் கெடுக்கும். நல்­லெண்­ணத்தை இல்­லாமல் செய்யும் நல்­லி­ணக்­கத்­துக்கு விரோ­த­மாகச் செயற்­படும். மொத்­தத்தில் நாட்டில் அழி­வையே ஏற்­ப­டுத்தும்.

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் இதனை நிதர்­ச­ன­மாகக் காட்­டி­யி­ருக்­கின்­றன. ஏனெனில் அந்தத் தொடர் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­க­ளுக்கு அடிப்­ப­டை­வா­தமே அடிப்­ப­டை­யாக இருந்­தது. இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தி­களே இந்தத் தாக்­கு­தல்­களைத் திட்­ட­மிட்ட வகையில் நடத்­தி­யி­ருந்­தனர் என்­பது விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. அந்தத் தாக்­கு­தல்­களில் படு­கொலை செய்­யப்­பட்ட 250க்கும் மேற்­பட்­ட­வர்­களின் மர­ணத்­திற்கு இஸ்­லா­மிய மதம் சார்ந்த அடிப்­ப­டை­வா­தமே உயிர்­நாடி.   

அப்­பா­வி­களைக் கொன்­றொ­ழிக்­கின்ற பயங்­க­ர­வா­தத்தின் மூலம் தனது ஆதிக்­கத்தை நிலை நிறுத்த முடியும் என்­பது இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தின் அசைக்க முடி­யாத நம்­பிக்கை. இந்த நம்­பிக்­கையின் மீது கட்­டி­யெ­ழுப்­பப்­பட்ட அமைப்­புக்­க­ளா­கவே ஐ.எஸ்­.ஐ.எஸ்., அல்­கைடா போன்ற இஸ்­லா­மிய உலக பயங்­க­ர­வாத அமைப்­புக்கள் திகழ்­கின்­றன. அடிப்­ப­டை­வா­தத்தின் செயல் வழி பயங்­க­ர­வாதம் என்­பதை இந்த அமைப்­புக்கள் தமது கொடூ­ர­மான தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களின் மூலம் - கொலை வெறித் தாக்­கு­தல்­களின் மூலம் நிலை­நாட்டி இருக்­கின்­றன. 

இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தமே இன்­றைய அனைத்­து­லக பயங்­க­ர­வா­த­மாக பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இந்த பயங்­க­ர­வா­தத்தை ஒழிப்­ப­தற்­காக அமெ­ரிக்கா உள்­ளிட்ட உலக வல்­ல­ரசு நாடு­களின் வழி­ந­டத்­தலில் அனைத்­து­லக நாடு­களும் தீவிர நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருக்­கின்­றன. 

முப்­பது வருட கால யுத்­தத்தில் சிக்கியி­ருந்த இலங்­கையை, யுத்­தத்தின் பத்­தா­வது வரு­டத்தில் இந்த உலக பயங்­க­ர­வாதம் பதம் பார்த்­தி­ருக்­கின்­றது. இதை எவ­ருமே எதிர்­பார்த்­தி­ருக்­க­வில்லை. 

பயங்­க­ர­வா­தமும் பாது­காப்பும்

ஆயுத ரீதி­யாக விடு­த­லைப்­பு­லி­களைத் தோற்­க­டித்த அரச படைகள், விடு­த­லைப்­பு­லிகள் மீண்டும் உயிர்த்­தெ­ழுந்து விடு­வார்கள் என்ற எதிர்­பார்ப்­பி­லேயே மூழ்கி இருக்­கின்­றன. அதன் மூலம் அர­சாங்கம் குறிப்­பி­டு­கின்ற பயங்­க­ர­வாதம் தலை நிமிர்த்­தி­விடும் என்ற தேசிய ரீதி­யி­லான அச்­சத்தில் நாட்டின் வடக்கு கிழக்குப் பிர­தே­சங்­களில் பெரும் எண்­ணிக்­கை­யி­லான படை­களை நிரந்­த­ர­மாக நிலை­நி­றுத்தி பாது­காப்பைப் பலப்­ப­டுத்தி இருக்­கின்­றது. 

ஆனால் இந்தத் தேசிய பாது­காப்பின் நிழ­லி­லேயே இஸ்­லா­மிய பயங்­க­ர­வாதம் கருக்­கொண்டு, தொடர் தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களை ஒரே நாளில் பல இடங்­களில் நடத்தும் அள­வுக்கு வளர்ச்சி அடைந்­தி­ருந்­தது என்­பதை அரசும் அறிந்­தி­ருக்­க­வில்லை. அரச படை­களும் உய்த்து உணர்ந்­தி­ருக்­க­வில்லை. இந்த நிலை­யில்தான் நாடே பேர­திர்ச்­சியில் செய­லற்று திகைப்பில் உறையும் வகையில் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்­கு­தல்­களை இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­திகள் நடத்­தி­யி­ருந்­தார்கள். 

இந்தத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்டு மூன்று மாதங்­க­ளா­கின்­றன. ஆயினும் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வா­தத்தை முற்று முழு­தாக முறி­ய­டிக்­காத நிலை­யி­லேயே நாட்டின் தேசிய பாது­காப்பு நிலைமை இன்னும் காணப்­ப­டு­கின்­றது. 

அடிப்­ப­டை­வா­தமே, யுத்­தத்தின் பின்­ன­ரான பயங்­க­ர­வாத நிலை­மைக்குக் காரணம் என்­பதைக் கண்­ட­றிந்­துள்ள போதிலும், அந்த அடிப்­ப­டை­வா­தத்தை இல்­லாமல் செய்­வ­தற்­கான தந்­தி­ரோ­பாய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. அதற்­கான மூலோ­பாயச் செயற்­பா­டுகள் குறித்தும் கவனம் செலுத்­தப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை. 

பயங்­க­ர­வா­தி­களைத் தேடிக் கண்டு பிடிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்­களும், தொடர்­பு­டை­ய­தாக சந்­தே­கிக்­கப்­ப­டு­ப­வர்­களும் பெரும் எண்ணிக்கையில் கைது செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். விசா­ரணை நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

ஆனால் இந்தப் பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தில் தோய்ந்­துள்ள சிறு எண்­ணிக்­கை­யி­லா­ன­வர்­களைக் கடந்து ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கத்­தை­யுமே பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்­க­ளாக, அடிப்­ப­டை­வா­தத்­திற்கு ஆத­ர­வ­ளிப்­ப­வர்­க­ளாக உற்று நோக்­கு­கின்ற பாத­க­மான பார்வை கொண்ட நிலை­மையே காணப்­ப­டு­கின்­றது. இந்தப் பார்­வையின் ஊடாக இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்­திற்கு எதி­ராக பௌத்த அடிப்­ப­டை­வாதம் மேலோங்கி வளர்­கின்ற மோச­மான சூழல் உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. 

அடிப்­ப­டை­வாதம்

அடிப்­ப­டை­வாதம் என்­பது கருத்­தியல் சார்ந்த ஒரு மோச­மான நிலைப்­பாடு. அது சுய அடை­யாளம் சார்ந்த நெருக்­கீட்டின் வெளிப்­பாடு. 

தீவி­ர­வாத சிந்­த­னை­யையும், தீவி­ர­வாத நிலைப்­பாட்­டையும் அது பய­ன­டையச் செய்­கின்­றது. தீவி­ர­வா­தத்தின் அடுத்த வளர்ச்­சிப்­ப­டி­யா­கக்­கூட அடிப்­ப­டை­வா­தத்தை நோக்க முடியும். தீவி­ர­வாதம் மென்­போக்கை சார்ந்து வன்­மு­றையை நோக்கி வள­ரக்­கூடும். ஆனால் அடிப்­ப­டை­வாதம் வன்­மு­றை­யையும் பயங்­க­ர­வா­தத்­தை­யுமே வழித்­த­ட­மாகக் கொண்டு செயற்­பட வல்­லது. அதையே உயிர்­நா­டி­யாகக் கொண்­டது.

அடிப்­ப­டை­வாதம் என்­பது பெரும்­பாலும் மதங்கள் சார்ந்த கொள்­கை­களின் மீது கட்டி எழுப்­பப்­ப­டு­வது. ஆனால், அது வாழ்­வி­யலின் எல்­லா­வி­த­மான போக்­கு­க­ளிலும் செல்­வாக்கு செலுத்த வல்­லது. இனக் குழு­மங்­களின் அல்­லது மதக் குழு­மங்­களின் வர­லாறு அவற்றின் வளர்ச்சிப் போக்­கு­களில் அது நம்­பிக்கை கொள்­வ­தில்லை. உலகப் போக்­கையும், அதன் இயங்கு வழி­யையும் துணிந்து நிரா­க­ரிக்க வல்­லது. 

அடிப்­ப­டை­வாதம் பற்­றியும் அடிப்­ப­டை­வா­திகள் குறித்தும், ஆய்­வு­களை மேற்­கொண்ட நிபு­ணர்கள் 'ஓர் அடிப்­ப­டை­வாதி எல்லா விட­யங்­க­ளையும் தான் நம்­பு­கின்ற அடிப்­ப­டைகள் மீது அல்­லது வழி­மு­றைகள் மீது ஒப்­பிட்டு நோக்கி சந்­தேகம் கொள்­வது அல்­லது ஏற்க மறுக்­கின்ற வழி­மு­றையைக் கொண்­ட­வ­னாகத் திகழ்வான்' என்று குறிப்­பி­டு­கின்­றார்கள். 

'தன்னில் திணிக்­கப்­ப­டு­கின்ற கொள்­கை­களின் மீது அதீத நம்­பிக்கை கொள்­வ­தனால், அடிப்­ப­டை­வா­திகள், சுய சிந்­த­னையில் அந்தக் கொள்­கை­களை ஆய்ந்து சிந்­தித்து உண்­மையை உணர்­வ­தில்லை. அத்­த­கைய கருத்­தியல் சுதந்­தி­ரத்தை அவர்கள் அனு­ப­விப்­ப­து­மில்லை. இதனால் சுய­சிந்­த­னை­யற்ற செயல் வழி தன்மை கொண்­ட­வர்­க­ளாக அடிப்­ப­டை­வா­திகள் திகழ்­கின்­றனர். தாங்கள் நம்­பு­வதே உலகம் என்றும், ஏனைய செயற்­பா­டு­களும் நம்­பிக்­கை­களும் பொய்­யா­னவை என்ற வலி­மை­யான உள­வியல் நிலை­மைக்கு அவர்கள் ஆளா­கி­வி­டு­கின்­றனர்' என்­பது அந்த நிபு­ணர்­களின் கருத்து.  

அடிப்­ப­டை­வாதம் என்­பது ஒரு தனி மனி­தனை, ஒரு குடும்­பத்தை, ஒரு குழுவை, ஒரு இனக்­கு­ழு­மத்தை அல்­லது ஒரு மதக் குழு­மத்தை ஆக்­கி­ர­மித்து ஆட்­கொள்ள வல்­லது. அடிப்­ப­டை­வா­தத்­திற்கு பாரம்­ப­ரியம், வர­லாற்றுப் பின்­னணி, கல்வி அறிவு, மரபு வழி­யி­லான மத நம்­பிக்­கைகள், சமூக அந்­தஸ்து, பொரு­ளா­தார அந்­தஸ்து என்­பன பொருட்­டாக அமை­வ­தில்லை. இவற்றைக் கடந்த நிலையில் அது செயற்­பட வல்­லது.

தத்­து­வமும் தன்­மை­களும்

அடிப்­ப­டை­வா­தத்தின் இந்த வலு­வான நிலைப்­பாட்டை உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளுடன் செல்­வந்­த­ரா­கிய மொகமட் இப்­ராஹிம் என்ற பிர­பல வாசனைத் திர­விய வர்த்­த­க­ரு­டைய இரண்டு புதல்­வர்­க­ளான இன்ஸாப் இப்­ராஹிம், இல்ஹாம் இப்­ராஹிம் ஆகிய சகோ­த­ரர்­களும் தொடர்பு கொண்­டி­ருந்­தார்கள் என்ற தகவல் உறுதி செய்­வ­தாக உள்­ளது. 

இவர்கள் இரு­வரும் செல்­வந்­தர்கள் என்­ப­துடன் கல்வி அறி­வு­டை­ய­வர்கள் என்­பதும் அடிப்­ப­டை­வாதம் பற்­றிய நிபு­ணர்­களின் கணிப்பை உறு­திப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலைத் தாக்­கு­தல்­களின் பின்­ன­ணியில் இருந்து செயற்­பட்­டி­ருந்த தேசிய தௌஹீத் ஜமாஅத் என்ற இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத அமைப்பின் முக்­கிய உறுப்­பி­னர்­க­ளான சில முஸ்லிம் குடும்­பங்­களைச் சேர்ந்த குழந்­தைகள் முதல் பெரி­யவர் வரை­யி­லா­ன­வர்­களும் தற்­கொலை தாக்­கு­த­லுக்­கான குண்­டு­களை வெடிக்கச் செய்து மாண்டு போனார்கள் என்ற உண்­மையும் அடிப்­ப­டை­வா­தத்தின் மோச­மான தன்­மையை வெளிப்­ப­டுத்­து­வ­தாக அமைந்­துள்­ளது. 

நம்­பிக்கை மீது கட்டி எழுப்­பப்­ப­டு­கின்ற அடிப்­ப­டை­வாதம் சமா­தானம், சக­வாழ்வு, சகிப்புத் தன்மை, விட்­டுக்­கொ­டுத்தல் என்­ப­வற்றை அடி­யோடு நிரா­க­ரித்துச் செயற்­ப­டு­கின்ற தன்­மையைக் கொண்­டது. அடிப்­ப­டை­வா­திகள் நல்­லெண்­ணத்­திற்கும், நல்­லி­ணக்­கத்­திற்கும் விரோ­த­மான போக்கைக் கொண்­டி­ருப்­பார்கள். தாங்கள் கொண்­டுள்ள நம்­பிக்­கையே சரி­யா­னது, சிறந்­தது என்ற வளைந்து கொடுக்­காத பிடி­வாதம் உடை­ய­வர்­க­ளாக, அவர்கள் இருப்­பார்கள். 

பல்­லினம் சார்ந்த ஜன­நா­யகப் போக்­கிற்கு அவர்கள் எதி­ரான கொள்­கையைக் கொண்­டி­ருப்­பார்கள். தாங்கள் கொண்­டுள்ள அடிப்­ப­டை­வா­தத்தை மற்­ற­வர்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும். தங்கள் வழி­யி­லேயே மற்­ற­வர்கள் அனை­வரும் நடக்க வேண்டும் என்ற அழுத்­த­மான பிடிப்பைக் கொண்­டி­ருப்­பார்கள். தங்­க­ளு­டைய நிலைப்­பாட்­டையும் கொள்­கை­க­ளையும் ஏற்க மறுப்­ப­வர்கள், எதிர்ப்­ப­வர்­களை அவர்கள் எதி­ரி­க­ளா­கவே நோக்­கு­வார்கள். அவர்கள் அழிக்­கப்­பட வேண்டும் என்ற ஆழ­மான கொள்கைப் பிடிப்பை அவர்கள் கொண்­டி­ருப்­பார்கள். 

இந்த நிலையில் உலகில் சமூ­கங்­க­ளி­டையே மோதல்­களை உரு­வாக்­குதல், நல்­லி­ணக்­கத்தைச் சீர்­கு­லைத்தல், சமா­தா­னத்தை நிரா­க­ரித்தல், சமூ­கங்­க­ளி­டையே தேவை­யற்ற பிள­வுகள், மோதல்கள், குழப்­பங்கள் என்­ப­வற்றை ஏற்­ப­டு­வத்­து­வ­திலும் அடிப்­ப­டை­வா­திகள் குறி­யாக இருப்­பார்கள். இரு­பதாம் நூற்­றாண்டில் தோற்றம் பெற்ற அடிப்­படை வாதம் இந்த வகை­யில்தான் உல­கத்தை ஆட்­டிப்­ப­டைத்துக் கொண்­டி­ருக்­கின்­றது. 

இத்­த­கைய வழி­மு­றை­யில்தான் உயிர்த்த ஞாயிறு தின தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களும், சர்­வ­தேச நாடு­களில் நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களும் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பது ஆய்­வா­ளர்­களின் முடிவு. அடிப்­ப­டை­வாத சிந்­த­னையின் செயற்­பா­டுகள்

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்­ன­ரான நிலையில் முஸ்லிம் சமூ­கத்­திற்கு எதி­ராக முன்­ன­ரிலும் பார்க்க வலு­வான எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­து­கின்ற சிங்­கள பௌத்த தேசி­ய­வாதம், தமிழ் மக்கள் மீதும் மோச­மான அணு­கு­மு­றை­களைக் கையாளத் தொடங்­கி­யி­ருக்­கின்­றது.  சிங்­க­ள­வர்­களே இந்த நாட்டின் பெரும்­பான்­மை­யான மக்கள். குடி­சனத் தொகை மதிப்­பீட்டுத் தக­வல்கள் 74.9 வீத­மா­ன­வர்கள் சிங்­க­ள­வர்கள். தமி­ழர்கள் 11.2 வீதம். முஸ்­லிம்கள் 9.2 வீதம். இந்­திய வம்­சா­வழித் தமி­ழர்கள் 4.2 வீதம். ஏனைய சமூ­கத்­த­வர்கள் 0.5 வீதம் என கூறு­கின்­றன.  எனவே நாட்டில் முக்­கால்­வாசிப் பேர் சிங்­க­ள­வர்­க­ளாக உள்­ளனர். இதனால் பெரும்­பான்மை என்ற மேலா­திக்க சிந்­த­னையும் மேலாண்மைப் போக்கும் அவர்­க­ளி­டத்தில் ஊறிப் போயுள்­ளது. இந்த நாடு சிங்­க­ள­வர்­க­ளுக்கு மட்­டுமே உரி­யது என்ற பேரி­ன­வாத நிலைப்­பாட்­டிற்கு இதுவும் கார­ண­மாகும்.  முஸ்­லிம்கள் வர்த்­த­கத்­து­றையில் சிறந்து விளங்­கு­கின்­றனர். அதே­வேளை, வரு­டந்­தோறும் அவர்­களின் குடி­சனத் தொகையும் அதி­க­ரித்துச் செல்­கின்­றது. அத்­துடன் உலக முஸ்லிம் நாடு­களின் செல்­வந்த நிலை­மையும், அவற்றின் ஆத­ரவும் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வாக இருப்­பது தங்­க­ளு­டைய சமூக, பொரு­ளா­தார, சமய வளர்ச்­சிக்குப் பாதிப்­பாக அமையும் என்ற அச்­சமும் சிங்­க­ள­வர்கள் மத்­தியில் காணப்­ப­டு­கின்­றது. 

அது மட்­டு­மல்­லாமல், வடக்­கிலும்; கிழக்­கிலும் செறிந்து வாழ்­கின்ற தமி­ழர்கள், குறிப்­பாக வட­ப­கு­தியில் அவர்­க­ளு­டைய இருப்பும், வடக்­கையும் கிழக்­கையும் தாயகப் பிர­தே­ச­மாகக் கொண்­டுள்ள தேசியத் தன்­மையும் தங்­க­ளுக்குப் பாத­க­மாக அமையும் என்ற அர­சியல் ரீதி­யான அச்­சமும் அவர்­க­ளிடம் ஊறிப் போயுள்­ளது. 

வட­மா­காணம் இந்­தி­யாவின் தென் மாநி­ல­மா­கிய தமிழ் நாட்­டுடன் நெருங்­கிய பூகோள அமைப்பைக் கொண்­டி­ருப்­ப­தனால், தமி­ழர்கள் தமிழ்­நாட்­டுடன் இணைந்து தங்­களை; சிறு­பான்­மை­யி­ன­ராக்கி தமது இருப்­புக்கே அர­சியல் ரீதி­யான ஆபத்தை ஏற்­ப­டுத்தி விடு­வார்கள் என்ற அச்­சமும் அவர்­க­ளிடம் நாடு சுதந்­தி­ர­ம­டைந்த நாள்­முதல் நில­வு­கின்­றது. 

இத்­த­கைய அர­சியல் ரீதி­யான அச்ச நிலை­மை­யில்தான் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராகக் குரல் கொடுக்­கின்ற சிங்­கள பௌத்த தீவி­ர­வா­திகள், தமிழ் மக்­க­ளு­டைய சமூக சமய நிலை­மை­க­ளிலும் பிளவை ஏற்­ப­டுத்­து­கின்ற அடிப்­ப­டை­வாத சிந்­த­னை­யு­ட­னான நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள். 

மோச­ம­டையும் நிலை­மைகள் 

பூகோள ரீதி­யாக வடக்கும், கிழக்கும் இணை­கின்ற அதே­வேளை, சிறு­பான்மை மக்கள் என்ற வகையில் தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் சமூக ரீதி­யாக ஒன்­றி­ணை­வது தங்­க­ளுக்கு பேரா­பத்­தாக முடியும் என்ற அர­சியல் தீர்­மா­னமும் சிங்­கள பேரின அர­சி­யல்­வா­தி­க­ளிடம் தொடர்­கின்­றது. 

இதனால், தமிழ் மக்­களும் முஸ்­லிம்­களும் இன ரீதி­யா­கவும் மத ரீதி­யா­கவும் சமூக ரீதி­யா­கவும் பிள­வு­பட்­டி­ருப்­பது தங்­க­ளுக்கு சாத­க­மாக அமையும் என்ற எண்­ணமும் அவர்­க­ளிடம் மேலோங்­கி­யி­ருக்­கின்­றது. இத்­த­கைய பிளவை அர­சியல் ரீதி­யாக உரு­வாக்­கு­வதில் பேரின அர­சி­யல்­வா­திகள் ஏற்­க­னவே வெற்றி கண்­டுள்­ளார்கள். 

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­களின் பின்­ன­ரான உலக பயங்­க­ர­வாத எதிர்ப்பு நிலையில் இஸ்­லா­மிய அடிப்­ப­டை­வா­தத்தை, சிங்­கள பௌத்த தேசியம் என்ற அடிப்­ப­டை­வா­தத்தின் ஊடாக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை தனித்தனியே எதிர்கொண்டு மோதுகின்ற ஒரு போக்கைக் கடைப்பிடித்து வருவதை உணர முடிகின்றது. 

சிங்கள பௌத்த தேசியம் என்று அவர்கள் பகிரங்கமாக உரிமை கோரினாலும்கூட உண்மையில் அது சிங்கள பௌத்த தேசிய அடிப்படைவாதமாகவே பரிணமித்துள்ளது. 

அடிப்படைவாதம் என்பது பொதுவாக மதத்தை அடிப்படையாகக் கொண்டு வன்முறை சார்ந்த பயங்கரவாதச் செயல் வழியைக் கொண்டிருந்த போதிலும், தமிழ் மக்களுக்கு எதிராக மென்வலுகொண்ட அடிப்படைவாத செயற்பாட்டிலேயே அவர்கள் தீவிர கவனம் செலுத்தியிருக்கின்றார்கள். 

மென்வலு கொண்ட அடிப்படைவாதச் செயற்பாட்டின் வெளிப்பாடாகவே நாவற்குழியில் நிறுவப்பட்டுள்ள பாரிய தாதுகோபுரத்தைக் கொண்ட பௌத்த விகாரையை நோக்க வேண்டி உள்ளது. சுமார் நாற்பத்தைந்து சிங்களக் குடும்பங்களைக் கொண்ட நாவற்குழியின் சிங்களக் குடியேற்றத்திற்கு இத்தகைய பெரிய பௌத்த விகாரை ஏன் அமைக்கப்படுகின்றது என்ற கேள்வி இயல்பாகவே எழுகின்றது. அதேவேளை, அங்கு குடியேற்றப்பட்டுள்ள சிங்களக் குடும்பங்கள் அனைத்துமே பௌத்த குடும்பங்கள்தானா என்பதிலும் சந்தேகம் உண்டு.  நாவற்குழி மாத்திரமல்ல. முல்லைத்தீவு மாவட்டத்தின் நீராவியடிப் பிள்ளையார் ஆலய ஆக்கிரமிப்பில் அங்கு புத்தர் சிலை நிறுவப்பட்டிருப்பது, திருகோணமலை கன்னியா வெந்நீருற்று பிள்ளையார் ஆலயப் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தைக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தின் நேரடி உத்தரவின் கீழ் பௌத்த விகாரை அமைக்கும் செயற்பாடு, வலிகாமம் வடக்கு தைலிட்டியில் இராணுவத்தினர் பௌத்த விகாரைக்கான கட்டிட நிர்மாண வேலைகளை மேற்கொண்டிருப்பதாக எழுந்துள்ள சந்தேகமான நிலைமை போன்றவை சிங்கள பௌத்த தேசிய அடிப்படைவாதத்தின் அப்பட்டமான வெளிப்பாடாகவே தோன்றுகின்றது.   

 (பி.மாணிக்­க­வா­சகம்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21