வேலியும் பயிரும்

Published By: Digital Desk 3

13 Jul, 2019 | 04:35 PM
image

நாட்டில் விரைவில் முக்கிய தேர்தல்கள் இடம்பெற உள்ளன. இத்தேர்தல்களில் வெற்றி பெறும் நோக்கில் அரசியல் கட்சிகள் காய் நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றன. பெரும்பான்மைக் கட்சிகள் சிறுபான்மை மக்களின் வாக்குகளை எவ்வாறு பெற்றுக் கொள்வது என்பது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றன. ஆராய்வு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே சிறுபான்மை கட்சிகளின் வரிசையில் மலையக கட்சிகளும் அடுத்து வரும் தேர்தல்களில் எந்தக் கட்சிக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் தமக்குள்ளே கலந்தாலோசித்து வருவதனையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இவற்றுக்கும் மத்தியில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முப்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளதோடு இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முன்வருகின்ற தரப்பிற்கே தேர்தலில் ஆதரவளிக்கப் போவதாகவும் வலியுறுத்தி இருக்கின்றது. ஏனைய மலையகக் கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தி இருக்கின்றன. இதேவேளை இனவாத சக்திகளின் மேலெழும்புகையானது மலையக மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் உரிமைகளைப் பெற்றுக் கொள்ளவும் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் எந்தளவுக்கு வாய்ப்பளிக்கும் என்றும் சிலர் கேள்வியெழுப்பியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. 

தனித்துவம்

மலையக மக்கள் இந்த நாட்டில் தனித்துவம் மிக்கவர்களாக விளங்குகின்றார்கள். இம்மக்களின் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்கள் முக்கியத்துவம்மிக்கவை யாகவும், உலகப் புகழ் பெற்றவையாகவும் காணப்படுகின்றன. இம்மக்களின் சிறப்பினையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து இம்மக்களை தனித்தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோஷங்கள் நாளுக்கு நாள் வலுப்பெற்று வருகின்றன. நல்லாட்சி அரசாங்கம் கடந்த காலத்தில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் கவனம் செலுத்தி இருந்தது. பொது மக்கள் கருத்தறியும் குழுவின் ஊடாக நாட்டு மக்களின் கருத்துக்கள் பலவும் புதிய அரசியலமைப்பு தொடர்பில் பெற்றுக் கொள்ளப்பட்டன. இதன் போது மக்கள் முன்வைத்த கோரிக்கைகளில் மலையக மக்களை தனித்தேசிய இனமாக அரசியலமைப்பின் ஊடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை பலரிடத்திலும் வலுப்பெற்று காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. 

மலையக மக்கள் நீண்ட வரலாறையும் தனித்துவத்ததையும் கொண்டு விளங்கு கின்றபோதும் இம்மக்களின் தேவைகளும் பிரச்சினைகளும் அதிகமுள்ளன என்பது யாவரும் அறிந்த விடயம். மலையக மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க மலையக அரசியல்வாதிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்ற போதும் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கும், தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ஆட்சியாளர்களுக்கு அரசியல்வாதிகள் போதிய அழுத்தத்தை வழங்கவில்லை. சுயநலன்களுக்காகவும் அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும் சில அரசியல்வாதிகள் பாடுபடுகின்றார்களே தவிர சமூகம் குறித்த சிந்தனை இவர்களுக்கு கிஞ்சித்தும் கிடையாது என்ற குற்றச்சாட்டுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. ஆட்சியில் உள்ள அரசாங்கத்துடன் இணைந்திருப்பதால் மலையக மக்களுக்கு பல்வேறு நன்மைகளையும் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற ரீதியில் சில மலையகக் கட்சிகளின் செயற்பாடு கடந்த காலத்தில் அமைந்திருந்தது. எனினும் ஆட்சியில் உள்ள அரசாங்கத்துக்கு ஆதரவளித்ததன் மூலம் மலையக மக்களுக்கு உரிய நன்மைகள் பெற்றுக் கொடுக்கப்பட்டதா என்ற கேள்வியும் இல்லாமல் இல்லை. 

மலையக மக்கள் பலிக்கடாக்களாகவும், பகடைக் காய்களாகவும் பல சந்தர்ப்பங் களில் மலையக கட்சிகளினால் பயன் படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் பிழைப்பு நடத்தும் கலாசாரம் மலையகத்தில் அதிகமாகவே இடம்பெற்றிருக்கிறது. இன்னும் இடம்பெற்றும் வருகின்றது. தொழி லாளர்களின் உரிமைகள் பறிபோவதற்கும் தேவைகள் பூர்த்தி செய்யப்படாது இழுத்தடிக்கப்படுவதற்கும் இந்த பிழையான கலாசாரம் உந்துசக்தியாக இருக்கின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. வேலியே பல சந்தர்ப்பங்களில் பயிரை மேய்ந்திருக்கின்றன. தமது எழுச்சிக்கு தோள் கொடுப்பார்கள் என்று நம்பிக்கை வைத்து வாக்களித்து பலரை மலையக மக்கள் அரசியலுக்கு அனுப்பி வைத்த மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக எத்தனை அரசியல்வாதிகள் நடந்து கொண்டார்கள்?  

வாக்குறுதிகள்

தேர்தல் காலங்களிலும், வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளிலும் மலையக மக்களின் அபிவிருத்தி கருதி கவர்ச்சியான வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும் வாக்குறுதி அளித்தவர்கள் இந்த வாக்குறுதிகளை உரியவாறு நிறை வேற்றினார்களா என்று நோக்குமிடத்து நிலைமைகள் திருப்தி தருவதாக இல்லை என்பதையும் கூறியாக வேண்டும்.

2005 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட மஹிந்த சிந்தனை தேர்தல் விஞ்ஞாபனமானது சிறுபான்மையினரின் நலன்களுக்கு வலு சேர்ப்பதாக உறுதியளித்திருந்தது. ஒற்றையாட்சிக்குள் கௌரவமான சமாதானம், பிரிவினை இல்லாத நாடு பெரும்பான்மை இணக்கப்பாடு, சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு பாதுகாப்பு, தேசிய பிரச்சினைக்கு தீர்வு தர்மம் கொழிக்கும் நாடு, புதிய அரசியலமைப்பு என்றெல்லாம் பல விடயங்கள் இதில் வலியுறுத்தப்பட்டிருந்தன. எனினும் மஹிந்த சிந்தனை உரியவாறு வாக்குறுதிகளை நிறைவேற்றியதா என்றால் இல்லை என்ற பதிலே மேலோங்கி காணப்படும். இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனமான மஹிந்த சிந்தனை 2010 ஆம் ஆண்டிலும் பல்வேறு விடயங்களை வலியுறுத்தி இருந்தது. வறிய குடும்பங்களுக்கு ரூபா ஆயிரம் சமுர்த்தி கொடுப்பனவு, சமுர்த்தி வருமானம் பெறுவோருக்கு மின்கட்டணத்தில் 30 வீத கழிவு, விவசாயிகளுக்கு இலவச விதை நெல், உரம் போன்றவை   இதில் இடம்பெற்றிருந்தன. பெருந்தோட்ட மக்களின் வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் மஹிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கொழும்பு நகரத்தின் சேரி வாசிகளது வீட்டுப் பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு நான்காயிரம் வீடமைப்பு கூறுகளுடன் கூடிய 20 மாடி வீட்டு வீடமைப்பு திட்டங்களை கொழும்பு மற்றும் அண்மிய நகரங்களிலும் கடற்தொழில் கிராமங்கள் மற்றும் நகரங்களை இலக்காகக் கொண்டு மேலும் முப்பதாயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படும்.

பெருந்தோட்ட மக்களை வீட்டுரிமை உள்ள சமூகமாக மாற்றுதல் பிரதான இலக்காகும். இதற்கிணங்க 2015 ஆம் ஆண்டாகின்ற போது ஒவ்வொரு பெருந்தோட்ட ஊழியரது குடும்பமும் தற்போது வசிக்கின்ற லயன் வீடுகளுக்கு பதிலாக அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய வீடொன்றிற்கு உரிமையுள்ள குடும்பமாக மாற்றுவேன் என்று மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்திருந்தார். எனினும் இது ஏட்டளவில் முற்றுப் பெற்றதே தவிர செயற்பாடுகள் குறைவாகவே இருந்தன. ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் முன்மொழிந்த வரவு – செலவு திட்டத்திலும் தொழிலாளர் நலன்சார் முன்மொழிவுகள் இடம்பெற்றிருந்தன. இதனடிப்படையில் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் பின்வருமாறு முன்மொழிவுகள் இடம்பெற்றிருந்தன. பெருந்தோட்டதுறையில் உள்ள தரம் குறைந்த வீடுகளை மாற்றீடு செய்வதற்காக ஐம்பதாயிரம் அலகுகளைக் கொண்ட வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிப்பதற்கு முன்மொழிகின்றேன். இந்த வீடுகளின் நிர்மாணம் துப்புரவு ஏற்பாடு மற்றும் ஏனைய வசதிகளுடன் தேவையான பொறியியல் மேற்பார்வையுடன் மேற்கொள்ளப்படும்.

நகர வீடமைப்பு தொகுதிகள் மற்றும் தோட்டத்துறை வீடமைப்புக்காக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிப்பதற்காக 750 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் நீண்டகால சர்வதேச முறியினை அரசாங்க உத்தரவாதமொன்றின் மூலம் விநியோகிப்பதற்கும் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்களுக்கு தேவையான மறுதரப்பு நிதி ஏற்பாடாக அரசாங்கத்திற்கு மேலும் 750 ஐக்கிய அமெரிக்க டொலரையும் விநியோகிப்பதற்கு முன்மொழிகின்றேன் என்று 2014 ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்டிருந்தது. இதேவேளை 2014 ஆம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்தவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில், மலையக தோட்டப் பகுதியில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 07 பேர்ச்சஸ் காணியும் வீடும் அமைத்துக் கொடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பெருந்தோட்டத்துறையில் உள்ள வீட்டுத் தேவைகள் உக்கிரமடைந்துள்ள நிலையில் காணப்படுவதோடு, இன்னும் சிலர் செயலிழந்த லயன்களில் அடிப்படை வசதிகளற்ற நிலையிலும் கூட வாழ்ந்து வருகின்றனர். ஆகவே அரசாங்கம் பெருந்தோட்டத்துறைக்கு 25 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்க உள்ளது என்று நல்லாட்சி அரசாங்கத்தின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் முன்மொழிவு இடம்பெற்றிருந்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் 2018 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டமும் மலையக மக்களுக்கான வீடமைப்பு குறித்து வலியுறுத்தி இருந்தது. எனினும் இவையெல்லாம் ஏட்டுச் சுரைக்காயாகிவிட்டன. 

கடந்த பாராளுமன்ற தேர்தல் காலத்தில் பெருந்தோட்ட மக்கள் பொருளாதார அபிவிருத்தி குறித்து ஐக்கிய தேசிய கட்சி அதிகமாக மேடைகளில் பேசி இருந்தது. ஆயிரம் ரூபா சம்பளத்தினை தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப் போவதாக ஐ.தே.க. முக்கியஸ்தர்கள் தேர்தல் பிரசார மேடைகளில் முழக்கமிட்டனர். எனினும் ஐ.தே.க. தேர்தல் வெற்றியின் பின்னர் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு மற்றும் பொருளாதார அபிவிருத்தி விடயத்தில் உரிய கரிசனையை வெளிப்படுத்தவில்லை என்று பலரும் விசனம் தெரிவிக்கின்றனர். பெருந்தோட்ட தேயிலை தொழிற்துறை இன்று பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது. தோட்டங்களில் தொழிலாளர்களின் இருப்பு கேள்விக்குறியாகி இருக்கின்றது. எனினும் தோட்டங்களின் அபிவிருத்தி தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்துவதாக இல்லை என்று பரவலான குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. சிறுதோட்ட உரிமையாளர்களுக்கு அரசாங்கம் சலுகைகள் பலவற்றையும் வழங்கும் நிலையில் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனேயே பெருந்தோட்ட விடயத்தில் செயற்படுகின்றது. தொழிலாளர் விடயங்களை கம்பனியினரே பார்த்துக் கொள்ளட்டும் என்ற அரசாங்கத்தின் அலட்சியப் போக்கு அரசாங்கத்தின் மீதான மலையக மக்களின் நம்பிக்கையை வலுவிழக்க செய்திருக்கின்றது. 

ஆட்சியிலுள்ள அரசாங்கமானது வாக்குறுதிகளை வழங்குவதும் பின்னர் வாக்குறுதிகளை மறந்து செயற்படுவதும் புதிய விடயமல்ல. எனினும் மலையக மக்கள் தொடர்பில் இது அதிகமாகவே இடம்பெற்றுள்ளது. இது மலையக மக்களின் வாழ்வியலில் பாரிய தாக்கத்தினை உண்டுபண்ணி இருக்கின்றது. 

விசேட உதவிகள்

பின்னடைவுகளை கொண்டுள்ள ஒரு சமூகத்தின் மேலெழும்புகைக்கு அரசாங்கம் தோள் கொடுக்க வேண்டும். பல்வேறு சலுகைகளையும் பெற்றுக் கொடுக்க வேண்டும். மலையக சமூகம் பிரசாவுரிமை மற்றும் வாக்குரிமை என்பவற்றை இழந்து நீண்ட காலம் போராடிய நிலையில் இச்சமூகம் பலதுறைகளிலும் பின்னடைவைச் சந்திக்க நேர்ந்தது. இதன் தழும்புகள் இன்றும் கூட மறைந்தபாடில்லை. இந்நிலையில் இந்தச் சமூக அபிவிருத்தி கருதி அரசாங்கம் காத்திரமான ஒரு பங்களிப்பை வழங்க வேண்டி இருக்கின்றது. அரசாங்கம் இதிலிருந்தும் விலகிச் செல்லக் கூடாது என்றபோதும் விலகிச் செல்வதையே எம்மால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. பெரும்பான்மை கட்சிகள் மலையக மக்களின் வாக்குகளை கவர்ந்து கொள்வதில் குறியாக இருந்து வருகின்றன. ஆட்சி பீடமேறும் அரசாங்கத்தினை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மையினர் பல சந்தர்ப்பங்களில் இருந்துள்ளனர். இதனால் இவர்களின் வாக்கு பெருபான்மை கட்சிகளுக்கு அவசியமாக உள்ளது. தேர்தல் வெற்றியின் பின்னர் “நீ யாரோ நான் யாரோ” என்கிற நிலைதான் காணப்படுகின்றது. 

தேர்தல் விஞ்ஞாபனங்களிலும் பிரசார மேடைகளிலும் வரவு – செலவு திட்டத்திலும் காணப்படும் மலையக மக்கள் தொடர்பான கவர்ச்சியான வாக்குறுதிகள் இம்மக்களின் நலன்களுக்கு வலு சேர்க்கப் போவதில்லை. ஆக்கபூர்வமான செயற்பாடுகளே சாதக விளைவுகள் பலவற்றையும் ஏற்படுத்துவதாக அமையும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

கோரிக்கைகள்

எதிர்வரும் காலங்களில் மூன்று முக்கிய தேர்தல்கள் இடம்பெற உள்ளமை தெரிந்த விடயமாகும். இதன் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல் என்பன குறித்து இப்போது அதிகமாகவே பேசப்பட்டு வருகின்றது. இந்தத் தேர்தல்களில் வெறுமனே ஒரு வேட்பாளரையோ அல்லது கட்சியையோ ஆதரிப்பதால் பலன் எதுவும் ஏற்படப் போவதில்லை. சில கோரிக்கைகளை அல்லது நிபந்தனைகளை முன்வைத்து  அவற்றை உரிய கட்சி ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அக்கட்சிக்கு ஆதரவு வழங்குவதில் தப்பில்லை. எனினும்  கடந்த காலத்தில் கட்சிகள் பலவும் முன்வைத்த கோரிக்கைகளை பெரும்பான்மை கட்சிகள் ஏற்றுக் கொண்டதும் பின்னர் புஸ்வாணமானதும் நடந்தேறிய நிகழ்வுகள். இது ஒரு படிப்பினையே. எவ்வாறெனினும் சிறுபான்மை கட்சிகள் பெரும்பான்மை கட்சிகளுக்கு கண்மூடித்தனமாக ஆதரவு வழங்காது சிந்தித்துச் செயற்பட வேண்டிய ஒரு தேவை காணப்படுகின்றது.

குறிப்பாக மலையக கட்சிகளைப் பொறுத்தவரையில் மிகவும் விழிப்புடன் செயற்படுதல் வேண்டும். மலையக மக்களின் தேவைகளும் பிரச்சினைகளும் அதிகமுள்ள நிலையில் இவற்றைத் தீர்த்து வைக்க அர்ப்பணிப்புடன் செயற்படுதல் வேண்டும். பிரச்சினைகளையும் தேவைகளையும் ஆராய்ந்தறிந்து முறையான திட்டமிடல் மற்றும் காய்நகர்த்தலின் ஊடாக இவற்றை தீர்த்துக்கொள்ள முற்படுதல் வேண்டும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 30 அம்ச கோரிக் கைகளை முன்வைத்திருக்கின்றது. இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு முன்வரும் தரப்பிற்கு தேர்தலில் ஆதரவு வழங்க உள்ளதாக  இ.தொ.காவின் செய்திகள் வலியுறுத்துகின்றன. இ.தொ.கா. முன்வைத்துள்ள 30 அம்சங்களை கொண்ட கோரிக்கையில் பின்வரும் விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. முழுமையான பல்கலைக்கழகம் ஒன்றினை நுவரெலியா மாவட்டத்தில் அமைக்க வேண்டும். ஊவா மாகாணத்தில் கல்வியியற் கல்லூரி ஒன்றை அமைக்க வேண்டும். இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய கிளையை ஹட்டனில் நிறுவுதல், பெருந்தோட்ட மக்கள் அதிகளவில் வாழ்கின்ற 14 மாவட்டங்களில் உயர்தர விஞ்ஞான வர்த்தக பிரிவுகளை உள்ளடக்கிய பாடசாலைகளை தேவையான அளவு உருவாக்குதல், அரச தொழில் வாய்ப்பில் இந்திய வம்சா வளியினரின் பங்களிப்பை அதிகரித்தல், பெருந்தோட்டங்களில் இயங்காதுள்ள தொழிற்சாலைகளை இளைஞர், யுவதிகளின் தொழில் வாய்ப்புக்காக மாற்றியமைத்தல், சிறுதேயிலை தோட்ட உரிமையாளராக பெருந்தோட்ட சமூகத்தை மாற்றுதல், தோட்டப்புற வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்று அபிவிருத்தி செய்தல், கிளங்கன் ஆதார வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்துதல் என்பன 30 அம்ச கோரிக்கையில் உள்ளடங்கியுள்ளன.

மேலும் ஆரம்ப சுகாதார மையங்களை பெருந்தோட்டங்களில் உருவாக்குதல், பிரதேச செயலக அதிகரிப்பு, கிராம உத்தியோகத்தர் பிரிவு எல்லைகளை  மீளமைத்தல், நுவரெலியா மாவட்டத்தில்  புதிய நகர சபைகளையும் மாநகர சபைகளையும் உருவாக்குதல், பிரதேச சபைகளை அதிகரித்தல், புதிதாக உதவி தொழில் ஆணையாளர் காரியாலயங்களை அமைத்தல், தரிசு நிலப் பயன்பாடு, ஊவா மற்றும் மத்திய மாகாண தமிழ்க் கல்வி அமைச்சை வலுப்படுத்துதல் காணி உறுதிப்பத்திரங்களை வழங்குதல், பெருந்தோட்ட வீடமைப்பு வேலைத்  திட்டத்தை முழுமையான கிராம அடிப்படையில் உருவாக்குதல், தோட்டங்கள் தோறும் சனசமூக நிலையங்களை உருவாக்குதல், விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கு உதவுதல், டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையுடன் இணைந்ததாக தாதியர் பயிற்சிக் கல்லூரி ஒன்றை உருவாக்குதல், வறுமை ஒழிப்பு மற்றும் போஷனை அபிவிருத்தி குறித்த வேலைத் திட்டங்களை முன்னெடுத்தல், சுயதொழில் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை உருவாக்கி இளைஞர் யுவதிகளுக்கு உதவுதல் போன்ற இன்னும் பல விடயங்கள் 30 அம்ச கோரிக்கையில் உள்ளீர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது இதேவேளை, அரசியல் சமூக அமைப்புகளின் ஆக்கபூர்வமான இன்னும் பல கருத்துக் களையும் இ.தொ.கா. உள்வாங்கத் தயாராக உள்ளது.

இ.தொ.கா. வின் கோரிக்கைகள் முக்கியத்துவம் மிக்கவையாக விளங்கு கின்றன. இவற்றை உரியவாறு நிறைவேற்றிக் கொள்வதிலேயே இ.தொ.காவின் வெற்றி நல்கி இருக்கின்றது. இ.தொ.கா. தனது கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ள முனைப்புடன் செயற்பட வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. இ.தொ.கா. முழு மூச்சுடன் செயற்பட வேண்டும்.

தமிழ் முற்போக்கு கூட்டணி

இ.தொ.கா. 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும் தரப்பிற்கு தேர்தலில் ஆதரவு தரவுள்ள நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நிலை பற்றி தெரிந்து கொள்ள பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் உடன் தொடர்பு கொண்டு வினவினேன். இதன்போது கருத்து தெரிவித்த திலகராஜ்,தமிழ் முற்போக்கு கூட்டணி இது பற்றி கலந்தாலோசித்து வருவதாக தெரிவித்தார். மேலும்,

“த.மு.கூவின் கோரிக்கைகள என்பது எமது கடந்த கால தேர்தல் விஞ்ஞாபனத்தின் தொடர்ச்சியாக அமையும். கடந்த கால தேர்தல் விஞ்ஞாபனத்தில குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். இதனை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பிரதேச சபைகளின் உருவாக்கம், காணி விடயங்கள், பிரதேச செயலக அதிகரிப்பு, மலையக அபிவிருத்தி அதிகார சபை, உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்று பல சாதக விளைவுகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. புதிய தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட இன்னும் காலமிருக்கின்றது. மக்களின் பொருளாதார மேம்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் த.மு.கூ.வின் எதிர்கால தேர்தல் விஞ்ஞாபனம் அமையவுள்ளது. எங்கள் கோரிக்கையினை ஏற்றுக் கொள்ளும் எந்த கட்சியுடனும் நாம் பேசுவதற்கு தயாராக இருக்கின்றோம். சமூக அபிவிருத்தி குறித்த விடயங்களில் கடந்த கால தேர்தல் விஞ்ஞாபனத்தில த.மு. கூட்டணி கவனம் செலுத்தி இருந்தது” என்றும் திலகராஜ் குறிப்பிட்டார்.

இதேவேளை, மலையக மக்கள் முன்னணி யின் செயலார்நாயகம் ஏ. லோரன்ஸ் இனவாத சக்திகளுடன் கூட்டு சேரப் போவதில்லை என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி உரிய காலத்தில் ஆராய்ந்து முடிவுகளை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார். இது இவ்வாறிருக்க எஸ். சதாசிவத்தை பொதுச் செயலாளராகக் கொண்ட இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி, மஹிந்த ராஜபக்ஷவுடன் கை கோர்த்துள்ளமையும் நீங்கள் அறிந்த ஒரு விடயமே. இனவாத சக்திகள்  மேலெழுவது தற்போது அதிகரித்துள்ள நிலையில் மலையக கட்சிகளின் கோரிக்கைகள், பேரம் பேசும் நிலைமைகள் என்பன எந்தளவுக்கு வலுப்பெறும் என்று தெரியவில்லை. இருந்தபோதும் ஐக்கியத்துடன் கரம்கோர்த்து குரல் கொடுத்தால் சாதக விளைவுகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் என்பதையும் மறுப்பதற்கில்லை. மலையக கட்சிகள் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். 

துரைசாமி நடராஜா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய மாகாணத்தின் முதலாவது சப்ததள 108...

2024-03-19 10:37:23
news-image

மலையக கட்சிகள் யாருக்கு, எதற்கு ஆதரவளிக்க...

2024-03-19 10:34:04
news-image

சுவீடனின் நேட்டோ உறுப்புரிமை: இந்தோ -...

2024-03-19 09:09:10
news-image

கனடாவிலும் இலங்கையிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய 6...

2024-03-18 14:07:20
news-image

வலுவடையும் இலங்கையின் ரூபாய் : பொதுமக்கள்,...

2024-03-18 13:49:53
news-image

இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதியாக பிரபோவோ  

2024-03-18 13:37:22
news-image

மாகாண சபை முறைமை சுயாட்சிக்கான படிக்கல்

2024-03-18 13:31:57
news-image

அமெரிக்க தேர்தல் களம் : ட்ரெம்புக்கு...

2024-03-18 13:23:47
news-image

தேர்தல்கள் மட்டுமே தீர்வுகளை கொண்டுவருமா?

2024-03-18 13:08:50
news-image

வளமான வாழ்வுத் தேடலில் உயிரை இழக்கும்...

2024-03-18 13:05:14
news-image

சர்வதேச சவால்கள் ‘ஏழு’

2024-03-18 12:53:09
news-image

கோட்டா தனக்குத் தானே வெட்டிய குழி

2024-03-18 12:41:45