புறக்கணிக்கப்படும் பாதிக்கப்பட்டோர்

Published By: Digital Desk 3

13 Jul, 2019 | 04:01 PM
image

காணாமல்போன எமது அன்புக்குரிய வர்கள் எங்கே அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா? அவர்கள் எப்போது திரும்பி வருவார்கள்? எங்களுக்கு ஏன் இந்த வேதனை எமது காணிகள் எப்போது விடுவிக்கப்படும்?  எங்களுக்கு எப்போது நீதி கிடைக்கும்? சர்வதேசத்தின் பங்கேற்புடன்தான் எங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் -_ இப்படி  பாதிக்கப்பட்ட மக்கள் புலம்பிக்கொண்டிருப்பதைக் கேட்கிறோம்;  காண்கின்றோம். அடிக்கடி இடம்பெறும் ஊர்வலங்கள், போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளில் பங்கேற்கும் பாதிக்கப்பட்ட மக்கள் எழுப்பும் வினாக்களாக இவை உள்ளன. கடந்த 10 வருடங்களாகவே பாதிக்கப்பட்ட இந்த மக்கள் இவ்வாறு  தமது மனக்குமுறல்களை  வெளியிட்டு வருகின்ற போதிலும் அவர்களுக்கு இன்னும் ஏமாற்றமே கிடைக்கின்றது.   பாதிக்கப்பட்ட மக்கள்  புறக்கணிக்கப்பட்ட மக்களாகவே அல்லது மறக்கப்பட்டவர்களாகவே   தொடர்ந்து நீடிக்கின்றனர். 

தென்னிலங்கை அரசியலில் பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.  பாரிய அரசியல் திருப்புமுனைகள் பதிவாகின்றன.  தென்னிலங்கை அரசியல் களம்  அதிர்வடையும் வகையில் அரசியல் நகர்வுகளும் அறிவிப்புக்களும் அமைந்துள்ளன. ஆனால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு  இதுவரை  நீதி கிடைக்கவில்லை.  10 வருடங்களாக பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் நீதி கிடைக்காதவர்களாகவும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவுமே இருந்து வருகின்றனர். யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. இந்த 10 வருடங்களில் பாதிக்கப்பட்ட மக்கள்  ஏமாற்றங்களுக்கும் புறக்கணிப்புக்களுக்கும்  கண்ணீருக்கும் வேதனைக்கும்  வடுக்களுக்கும்  மட்டுமே முகங்கொடுத்து வருகின்றனர். 

அவர்களின் துயரங்களுக்கு  நீதி கிடைக்காத நிலைமையே  நீடிக்கின்றது. விடை கிடைக்காத கேள்விகளுடன் பாதிக்கப்பட்ட மக்கள்  வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே  இருக்கின்றது.  அதன்படி பார்க்கும்போது  பாதிக்கப்பட்ட  மக்களின் எதிர்பார்ப்புக்களும்  வெறுமனே எதிர்பார்ப்புக்களாக மட்டுமே உள்ளன. 

ஆனால் தென்னிலங்கையில்  அடிக்கடி அரசியல் நெருக்கடிகளுக்கு  பஞ்சமில்லாத நிலை உள்ளது. அரசியல் பூகம்பங்கள் ஆங்காங்கே  வெடித்துக்கொண்டிருக்கின்றன. அரசியல் கட்சிகள் நெருக்கடிகளை சந்திக்கின்றன. ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர்கள் குறித்து விவாதிக்க ஆரம்பித்துவிட்டன.  வேட்பாளர்களைத்  தெரிவு செய்வதிலும் பாரிய முரண்பாடுகள் நெருக்கடிகள்  தோன்றுகின்றன.  அடுத்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது  தொடர்பில்  ஏனைய கட்சிகள்  கழுகுப் போல் பார்த்துக்கொண்டிருக்கின்றன.   எனினும்  அனைத்து கட்சிகளுக்குள்ளும் ஜனாதிபதி வேட்பாளர்  தொடர்பில்  முரண்பாடுகளும் நெருக்கடிகளும் நீடிக்கின்றன. 

இவ்வாறான தென்னிலங்கை நெருக்கடிகளுக்கு மத்தியில்  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மறக்கப்பட்டுள்ளனர். நீதிக்காக காத்திருக்கும் இந்த மக்கள் மறக்கப்பட்டுள்ளனர் என்பதே  யதார்த்தம். அந்த மக்களின் கண்ணீருக்குப்  பதில்  கிடைக்காத சூழல் நீடிக்கின்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததும்  பாதிக்கப்பட்ட மக்கள்  தமக்கான நீதியை நிலைநாட்டுமாறு கோரிக்கை விடுத்தனர்;  போராட்டங்களை நடத்தினர்;  கதறி அழுதனர்; மன்றாடினர். ஆனால் இன்றுவரை அந்த மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை. 10 வருட காலமாகவே அவர்களுக்கான நீதி மறுக்கப்பட்டு வருகின்றது. 

குறிப்பாக கடந்த நல்லாட்சி அரசாங்கம் உருவாகியபோது பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி விடயத்தில் உள்ளக பொறிமுறை முன்னெடுக்கப்பட்டு  நீதி நிலைநாட்டப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.  ஆனால் அதற்கான  ஒருசில ஆரம்பகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டபோதிலும்  இறுதிவரை  அவை முழுமையடையவில்லை.   இந்த நிலையில்  அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும்  சில மாதங்களே எஞ்சியுள்ளன.  எனவே  தற்போது அனைத்து  கட்சிகளும்   அடுத்த ஜனாதிபதி  தேர்தலுக்கு தயாராகிவிட்டன. இக்காலப்பகுதியில் இதற்கான  முயற்சிகள்  அர்ப்பணிப்புடன் முன்னெடுக்கப்படும் என்று  எதிர்பார்ப்பது கடினமே. 

மூன்று அணுகுமுறைகள் 

பாதிக்கப்பட்ட இந்த மக்களுக்கான நீதி என்ற விடயத்தை நாங்கள் மூன்று கோணங்களில் பார்க்கவேண்டியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்ட மக்களின் நீதி? அடுத்ததாக பதவியில் இருக்கின்ற அரசாங்கம் அதற்கு எவ்வாறு  பதிலளிக்கின்றது? இறுதியாக  ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் அணுகுமுறை  ஆகிய மூன்று கோணங்களில் இந்த விடயத்தை நாங்கள் பார்க்கவேண்டியுள்ளது. காரணம் இவற்றின் அடிப்படையில் தான் கடந்த 10 வருடங்களாக இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்ற விடயம்  ஆராயப்பட்டது. இதுவரை  எந்த நிவாரணமோ அல்லது அவை தொடர்பான நீதியோ கிடைக்காவிடினும்  இந்த வழிமுறைகளே  பின்பற்றப்பட்டன. 

     பாதிக்கப்பட்ட மக்களின் நிலை 

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவ டைந்ததுமே பாதிக்கப்பட்டமக்கள் தமக்கான நீதியைக் கோர ஆரம்பித்தனர். வடக்கு கிழக்கு பகுதிகளில்   ஆங்காங்கே   அடிக்கடி  போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும்  நடத்தப்பட்டுவருகின்றன.    தமக்கான நீதி  சர்வதேச தரப்பின் பங்கேற்புடன் நிலைநாட்டப்படவேண்டும் என்பதனை  மக்கள் தெளிவாகக் கூறிவருகின்றனர். விசாரணை பொறிமுறைகளில் சர்வதேச சமூகத்தின் பிரசன்னம் அவசியம் என்பதை மக்கள்  தொடர்ச்சியாக கூறிவருகின்றனர். 

அதேபோன்று வடக்கு–கிழக்கு பகுதிகளில் காணாமல் போனோரின் உறவுகள்   தொடர் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். காணாமல் போன  தமது உறவுகளை  மீட்டுத்தருமாறும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறும் கோரியே  மக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். அதேபோன்று யுத்த காலத்தில்  தம்மிடம் இருந்து அபகரிக்கப்பட்ட காணிகளையும்   மீள வழங்குமாறு  பாதிக்கப்பட்ட மக்கள்  கோரிக்கை விடுத்து, போராடி வருகின்றனர்.   தொடர் போராட்டங்களையும் பாதிக்கப்பட்ட மக்கள் முன்னெடுக்கின்றனர். அந்த மக்களைப் பொறுத்தவரை  தமக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர். தினமும்  வடுக்களை சுமந்த வண்ணமே இந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.  கண்ணீருடன் வாழ்க்கையைக் கடத்தும்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து  ஏமாற்றமே எஞ்சி நிற்கின்றது. எனினும் பாதிக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரை  அவர்கள் தமது நீதிக்கான போராட்டத்தை விடுவதாக இல்லை. எவ்வளவுதான் புறக்கணிக்கப்பட்டாலும் நீதியைக் கோரிய போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. மக்கள் இந்த விடயத்தில் விரக்தி நிலைக்கு சென்றாலும் அவர்கள் தமக்கான நீதி தொடர்பில் கவனமாகவே இருக்கின்றனர். 

காணாமல் போனோர் விவகாரம்,  அரசியல் கைதிகள் விடயம், மீளளிக்கப்படாத காணிகள்,  வாழ்வாதாரத்தை  இழந்துள்ள மக்களுக்கான நிவாரணங்கள், வடக்கு– கிழக்கு அபிவிருத்தி, கணவனை இழந்த குடும்ப தலைவிகளின் பொருளாதார பிரச்சினைகள் என   பல்வேறு வழிகளிலும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். எனவே இவர்களின் நிலை   குறித்து போதியளவு கவனம் செலுத்தவில்லை என்பதே  பாதிக்கப்பட்ட மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. 

    ஜெனிவா சர்வதேச அணுகுமுறை 

இதேவேளை  பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமை இவ்வாறு இருக்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும்  சர்வதேச சமூகமும்  பாதிக்கப்பட்ட மக்களுக்கான  நீதி  கிடைக்கவேண்டுமென தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. யுத்தம் முடிந்து சில தினங்களில்  அப்போது ஐ.நாவின் செயலாளராக இருந்த பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம்  மேற்கொண்டார். அப்போது அவரும் இலங்கை அரசாங்கத்துடன்  இணைந்து கூட்டறிக்கை ஒன்றை விடுத்தார். அதில் பல முக்கிய விடயங்கள் காணப்பட்டன. பின்னர்  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையே  2009 ஆம் ஆண்டு முதலில் ஒரு பிரேரணையை கொண்டு வந்தது. அதில் இலங்கை  உள்ளக அடிப்படையில் யுத்தத்துக்குப் பின்னரான  நிலை மைகளை ஆராய்வது என்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளக ரீதியில் ஆராயப்படும் என்றும் அதில் உறுதியளிக்கப் பட்டது.  அந்த  பிரேரணைக்கு 47 நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைப் பேரவையில், 29 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அந்தப் பிரேரணை நிறைவேற்றப்பட்டது. எனினும் அந்தப் பிரேரணையில் உள்ள விடயங்கள்  நிறைவேற்றப் படவில்லை என்ற காரணத்தை முன்வைத்து 2012 மற்றும் 2013  ஆம் ஆண்டுகளில்  சர்வதேச நாடுகள் இலங்கை குறித்து இரு  பிரேரணைகளை  கொண்டுவந்தன. அவற்றிலும் உள்ளக பொறிமுறை ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற விடயம் உள்ள டக்கப்பட்டிருந்தது. எனினும்  அவ்வாறு  எதுவுமே நடைபெறவில்லை.

மாறாக அந்த பிரேரணைகள் அப்போதைய அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டன. இதன் காரணமாக 2014ஆம் ஆண்டு சர்வதேச  நாடுகள்  சற்று வித்தியாசமான பிரேரணையைக் கொண்டுவந்தன.  அதாவது இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும்  மீறல்கள் குறித்து  ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் விசாரணை நடத்தவேண்டும்  என அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கையின் எதிர்ப்புக்கு மத்தியில் அந்த பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது. 

அதன்படி  ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் விசாரணை நடத்தி  அறிக்கையை கடந்த 2015ஆம் ஆண்டு வெளியிட்டது. அதில் பல முக்கிய விடயங்கள் உள்ளடக்கப்பட்டன. அதாவது  சர்வதேச உள்நாட்டு மற்றும் நீதிபதிகள் உள்ளடங்கிய கலப்பு நீதிமன்றத்தை  நிறுவி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இந்தக் கட்டத்தில் இலங்கையில் எதிர்பாராத வகையில்  ஆட்சி  மாற்றமும் நடைபெற்றது.  ஆனால் புதிய அரசாங்கமும் கலப்பு நீதிமன்றம் என்ற விடயத்தை விரும்பவில்லை. 

அந்த ஆட்சி மாற்றத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிவாரணம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.   எனினும் அந்த  எதிர்பார்ப்பும் நிறைவேறவில்லை.  குறிப்பாக நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததும்   ஜெனிவா  மனித உரிமைப் பேரவையில் ஒரு பிரேரணை நிறைவேற்றப்பட்டது.   அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொண்டுவந்த  இந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியமை முக்கிய விடயமாக பார்க்கப்பட்டது. அதில் பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. அதாவது 

வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்புடன்   பொறுப்புக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டு உண்மைகள் வெளிகொண்டுவரப்பட வேண்டும் என்றும்  உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவும் இழப்பீடு வழங்கும்  அலுவலகமும்  அமைக்கப்படவேண்டும் என்றும்  கோரப்பட்டிருந்தது. 

எப்படியிருப்பினும்  கடந்த 2015 ஆம்  ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட பிரேரணை  இரண்டு முறை  நீடிப்புக்கு உள்ளாக்கப்பட்டது.  2017  மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இவ்வாறு இந்தப் பிரேரணை நீடிப்புக்கு உள்ளாகியது.  அத்துடன் ஐக்கிய நாடுகள் சபை  மனித உரிமைப் பேரவையும்  சர்வதேச சமூகமும் தொடர்ந்து இவ்வாறு இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.  ஒவ்வொரு முறையும்  ஜெனிவாக் கூட்டத்  தொடர்கள் ஆரம்பமாகும்போது மனித உரிமை ஆணையாளர்கள் பொறுப்புக்கூறல் தொடர்பில் தமது அதிருப்தியை            வெளியிடுவார்கள். எனினும் எவ்வாறான அழுத்தம் பிரயோகிக்கப்பட்டாலும்கூட   பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அந்த நிலையிலேயே உள்ளனர். 

இலங்கை அரசாங்கங்கள் 

அடுத்ததாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி  அரசாங்கத்தின் பக்கம்  இருந்து பார்க்கப்படவேண்டியுள்ளது. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் உள்ளக அடிப்படையில்  பொறுப்புக்கூறல் முன்னெடுக்கப்பட்டு  உண்மைகள் கண்டறியப்பட்டு நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்று  தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. பின்னர் 2010 ஆம் ஆண்டு கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் குறித்த  ஆணைக்குழு நிறுவப்பட்டது. அந்த ஆணைக்குழு முன் பாதிக்கப்பட்ட மக்கள் கதறியழுது மன்றாடி தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரினர். அதன் அறிக்கை வெளிவந்தபோதும்  முழுமையாக எதுவும் நடக்கவில்லை. அதன் பின்னர் 2013 ஆம் ஆண்டு  காணாமல் போனோர் குறித்து ஆராயும் நோக்கில் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. அதிலும் தீர்வு கிடைக்கவில்லை. 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் வந்த பின்னர் பாரிய நம்பிக்கை ஏற்பட்டது.   

எனினும்  குறிப்பிடத்தக்களவு காணிகள் விடுவிக்கப்பட்டபோதிலும் இன்னும் விடுவிக்கப்படவேண்டிய  காணிகள் உள்ளன என்றே பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோன்று 2016 ஆம் ஆண்டு காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டது. அது தற்போது   இயங்கிவருகின்றது. அத்துடன்  இழப்பீட்டு அலுவலகம் நிறுவப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும்  ஆணைக்குழுவும் நிறுவப்படவுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. எனினும் இதுவரை பாதிக்கப்பட்ட மக்களின் நிலை  அப்படியே தான்  உள்ளது. 

அரசாங்கத்தைப் பொறுத்தவரை  இது மிகவும் உணர்வுபூர்வமான விடயமாகவே உள்ளது. அதாவது இந்த பொறுப்புக்கூறல் விடயத்தை முன்னெடுக்கும்போது   தென்னிலங்கையில் அது பாரிய   நெருக்கடியை தோற்றுவிக்கும்.  ஆட்சியின்  இருப்புக்கே கேள்விக்குறி ஏற்படலாம். எனவே அரசாங்கத்தைப் பொறுத்தவரை,  மிகவும் அவதானமாக செயற்படவேண்டிய   தேவை உள்ளது. ஆனால் அதற்காக  யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படும் மக்களை அவ்வாறே விட்டுவிட முடியாது. அவர்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். 

பாதிக்கப்பட்ட மக்கள் 10 வருடங்களாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இனியும் அந்த மக்களை  காக்க வைக்கக்கூடாது.  தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானது என்று கூறப்படுவதுண்டு. அதற்கு   இடமளித்து விடக்கூடாது. காணாமல்போன  தமது உறவுக்கு என்ன நடந்தது என்பதனை அறியும் உரிமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளது. இது சர்வதேசத்தில்  உறுதிப்படுத்தப்பட்ட விடயம். எனவே நீதிக்காக  ஏங்கிக்கொண்டிருக்கும் மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த முன்வர வேண்டும்.  சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பது  யாருடையதும் நோக்கம் அல்ல.   மாறாக  உண்மை நிலை கண்டுபிடிக்கப்படவேண்டும். என்ன நடந்தது என்பது அறியப்படவேண்டும். இதனை அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் அவ்வாறே இருந்துவிடக்கூடாது என்பதே அனைவரதும் வேண்டுகோளும் எதிர்பார்ப்புமாகும். சம்பந்தப்பட்டவர்கள்  இதனைப் புரிந்துகொள்வார்களா? 

ரொபட் அன்டனி  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22
news-image

திரிசங்கு நிலையில் தமிழ் அரசு கட்சி

2024-04-15 18:46:22
news-image

சுதந்திரக் கட்சிக்குள் வீசும் புயல்

2024-04-15 18:41:46
news-image

ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் பிரதிநிதிகள் முரண்பாடுகள்

2024-04-15 18:37:16
news-image

மலையக மக்களை இன அழிப்பு செய்த ...

2024-04-15 18:33:43
news-image

எதற்காக நந்திக்கடலில் பயிற்சி முகாம்?

2024-04-15 18:27:21