இளநீரில் மயக்க மருந்து கலந்து பருகக்கொடுத்து ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட இரு சந்தேக நபர்களை பேராதனைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கம்பளை வெலிகல்ல பிரதேசத்தில் சிறிய லொறியொன்றை மறித்து அதில் இருவர் ஏறியுள்ளனர்.

அவர்கள் குறிப்பிட்ட லொறியின் சாரதியிடம் பேராதனைப் பொலிஸ் பிரிவிலுள்ள முருதலாவையில் தாம் இறங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

பிரயாணத்தின் இடை நடுவில் வைத்து சாரதிக்கு இளநீர் அருந்தக் கொடுத்துள்ளனர்.

அதனைக் குடித்த பின் லொறிச்சாரதி மயக்க முற்றுள்ள போது சாரதியிடம் இருந்த 60 ஆயிரம் ரூபா பெறுமதியுள்ள தங்கச் சங்கிலி மற்றும் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்க மோதிரம் என்பவற்றையும் பணப்பையில் இருந்த 3200 ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு தலைமறைவாகியுள்ளனர்.

மயக்கம் தெளிந்த போது சாரதி தான் ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந்து பேராதனை பொலிஸில் முறைப்பாடு ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் செயற்பட்ட பேராதனை பொலிசார் கட்டுகாஸ்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த இருவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.