(எம்.எம்.மின்ஹாஜ்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சாதாரண பாராளுமன்ற உறுப்பினராவார். எனவே அவரை கொலை செய்ய வேண்டிய எந்தவொரு தேவைப்பாடும் புலம்பெயர் அமைப்பினருக்கு கிடையாது. அவ்வாறு கொலை செய்யப்படுவதாயின் ஜனவரி 8 ஆம் திகதி  அல்லது ஆகஸ்ட் 17 ஆம் திகதிகளுக்கு முன்பே கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்தார்.

உலகின் பலம் வாய்ந்த தீவிரவாத இயக்கங்களான ஐ.எஸ், அல் கைதா போன்றவைகள் கூட முன்னாள் ஜனாதிபதியையோ அல்லது சாதாரண பாராளுமன்ற உறுப்பினரையோ தீர்த்து கட்டுவதற்கு காலத்தை வீணடிக்காது. தன்னுடைய பாதுகாப்பிற்கு இவ்வாறு அஞ்சுவதானது விடுதலை புலிகளுடனான யுத்தத்தை முழுமையாக முடிக்கவில்லை என்றே அர்த்தமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பலதரப்பட்ட வழக்கு விசாரணைகளின் முடிவு விரைவில் கிடைக்க பெறும் போது பாராளுமன்றத்தில் கூச்சல் போடுபவர்கள் சிறைச்சாலைக்கு செல்லும் காலம் தொலைவில் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிட்ட கோட்டேயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.