அரசியல்வாதிகள் எம்மை மனித உணர்வோடு பார்ப்பதில்லை : முல்லைத்தீவில் தென்னிலங்கை மீனவர்களுக்கு அனுமதி - மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Published By: Priyatharshan

03 Jul, 2019 | 07:39 AM
image

கூட்டமைப்பைச் சேந்த அரசியல்வாதிகளும் ஏனைய அரசியல்வாதிகளும் எங்களை மனித உணர்வோடு பார்ப்பதில்லை. தென்னிலங்கை மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது  என இரணைப்பாலை கடற்தொழில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இரணைப்பாலை, மாத்தளன் போன்ற பிரதேசங்களில் நவீன முறையிலான மீன்பிடித்தொழிலுக்கு நீரியல் வள திணைக்களம் அனுமதி மறுத்துள்ளதால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து மனித உரிமை ஆணைக்குழுவின் வவுனியா அலுவலகத்தில் முறைப்பாடொன்றினை பதிவு அவர் செய்திருந்தனர்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் யுத்தத்தில் பாதிக்கப்பட்டு சொத்துக்கள் உடமைகள் அனைத்தும் இழந்து மீண்டும் எமது ஊருக்குச் சென்று மீள்குடியேற்றப்பட்டு மீன்பிடித் தொழில் செய்து வந்தோம்.

யுத்தத்துக்கு முன் நாங்கள் பழமையான முறையில் தான் கடல் தொழிலைச் செய்து வந்தோம். நவீன முறையிலான தொழில் எங்கள் பிரதேசத்துக்கு வரவில்லை. நாங்கள் 15 குதிரைவலு சக்தியுடைய இயந்திரத்தையே இயக்குவதற்கு முடியாத நிலையில் இருந்தோம்.

அதன் பிற்பாடு நாங்கள் பழைமையான தொழில் முறையினைப் பயன்படுத்தி தொழிலைச் செய்தால் எமது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாதநிலை காணப்பட்டது. 

இந்த சந்தர்ப்பத்தில் தென்னிலங்கை மற்றும் மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய கடற் பகுதிகளில் நவீனமயப்படுத்தப்பட்ட தொழில் முறையில் நிறைவான இலாபத்தைப் பெற்றுக்கொண்டிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் 2016 ஆண்டு நாங்கள் நீரியல் வளத்திணைக்களத்திடம் சென்று நாங்களும் எமது மாவட்டத்தில் நவீன மயப்படுத்தப்பட்ட முறையில் தொழிலை மேற்கொள்ளவேண்டுமென்று கோரியிருந்தோம். இந் நிலையில் தொழிலைச் செய்வதாக இருந்தால் அதற்குத் தேவையான இயந்திரங்கள், வலைகள் என்பனவற்றைக் கொள்வளவு செய்த பின் மீண்டும் வருகைதந்து கதைக்குமாறு கூறியிருந்தார்கள். இந் நிலையில் இயந்திரங்களையும் வலைகளையும் கொள்வனவு செய்வதற்கு போதுமான பணம் அந்தக் காலத்தில் எங்களிடம் இருக்கவில்லை.

அதற்குப்பின்  2017ஆம் ஆண்டு எங்களிடமிருந்த நகைகளையும், காணிகளையும், சொத்துக்களையும் விற்றும் வங்கிகளில் கடன் வாங்கியுமே குறித்த கடற்றொழில் இயந்திரங்களையும், வலைகளையும் , உபகரணங்களையும் கொள்வனவு செய்தோம். 

கிட்டத்தட்ட ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் 20 தொடக்கம் 25 இலட்சம் ரூபா வரையில் செலவாகியிருக்கின்றது. இந் நிலையில் எங்களுக்கு நவீன முறையிலான மீன்பிடிக்கு அனுமதி தந்தார்கள். எமக்கும் சந்தோசமாக இருந்தது. இந் நிலையில் நாங்கள் தொழில் செய்யும்போது நவீன முறையில் அனுபவம் இல்லாத காரணத்தினால் பெரிதாக இலாபம் கிட்டவில்லை. 

இருப்பினும் அந்த வருடம் எங்களுக்கு குறித்த நவீன முறைத் தொழில் பயிற்சியாகவே இருந்தது நாங்கள் அந்தத் தொழிலைப் பழகிக்கொண்டோம் 

அதுக்குப் பின் 2018 ஆண்டு 4 ஆம் மாதம் குறித்த தொழிலை செய்வதற்கு அனுமதியை நீரியல் வளத்திணைக்களத்திடம் மீண்டும் பெற்றுக்கொண்டோம்.  எனினும் மூன்று மாதங்கள் குறித்த தொழிலை செய்யமுடியாது இருந்தபோதிலும் அதன் பின் நாங்கள் குறித்த நவீன முறைத் தொழிலில் ஈடுபட்டு இலாபத்தைப் பெற்றுக் கொண்டிருந்தோம்.

இந் நிலையில் தான் முல்லைத்தீவுப் பகுதியில் ஒருசில சங்கங்களும் சம்மேளனங்களும் இரண்டாகப் பிரிந்து தலைவர் ஒருபக்கம் செயலாளர் ஒருபக்கமாகவும் செயற்பட்டுவந்தனர். 

இவர்களுடன் சேர்ந்து முன்னாள் மாகாணசபை உறுப்பினரான து.ரவிகரனும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் சுருக்குவலைத் தொழிலை நிறுத்தவேண்டும், கடல் அட்டை சங்கு பிடிப்பவர்களை நிறுத்தவேண்டும் வெளிச்சம் பாவித்து மீன்பிடிக்கும் தொழிலையும் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் கடற்தொழில் அமைச்சரும் நீரியல் வளத்துறை பணிப்பாளர் நாயகமும் முல்லைத்தீவு உதவிப்பணிப்பாளரும் இணைந்து எமக்கு கூட்டம் ஒன்று நடத்தியிருந்தனர். 

இக்கூட்டத்தில் அரசியல்வாதிகள் பலரும் வருகைதந்து குறித்த சுருக்குவலைத் தொழிலைத் தற்காலிகமாக நிறுத்தி குழுவொன்று அமைத்து பரிசீலனை செய்து மீண்டும் தொழிலுக்கான அனுமதியைத் தருவதாக கூறியிருந்தனர்.

இவர்களுடைய கருந்து நாங்கள் குறித்த தொழிலைச் சட்டவிரோதமாகச் செய்வதாகவும் குளோரினைக் கரைத்து கடலில் ஊற்றுவதாகவும் சலவைத்தூளை கரைத்து கடலில் ஊற்றுவதாகவும் குற்றம் துமத்தினர். எங்களைப் பொறுத்தவரையில் கடலில் அப்படியான செயற்பாடுகள் ஒன்றும் செய்யமுடியாது. அது அவர்களின் அறிவில்லாத தன்மையென்றுதான் நினைக்கின்றோம்.

இவர்களால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிசோதனையின் பின் மீண்டும் எமக்கு அனுமதிதந்தனர். பின் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் மற்றும் பா.உ சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு அமைய குறித்த அனுமதியை 6 நாட்களுக்குள் நிறுத்திவிட்டனர். அன்று நிறுத்தப்பட்ட அனுமதி இதுவரை எமக்கு கிடைக்கவில்லை.

ஆனால் தென்னிலங்கையில் இருந்துவரும் படகுகளுக்கு பணிப்பாளர் நாயகம் ஒரு கடிதத்தை வழங்கினால் முல்லைத்தீவு உதவிப்பணிப்பாளர் ஏன் என்று ஒரு கேள்வியுமின்றி அனுமதியைக் கொடுக்கின்றார்.

அட்டை சங்கு வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல், சின்னக்கண் வலை பயன்படுத்தி மீன்பிடித்தல் போன்றவற்றுக்கு அனுமதி வழங்கப்படுகின்றது. ஆனால் எமக்கு அனுமதி தருவதில்லை. 

இது தொடர்பில் உதவிப் பணிப்பாளரிடம் கேட்டால் பணிப்பாளர் நாயகம் கூறினால் மாத்திரமே அனுமதி வழங்கமுடியும் என்றுகூறுகின்றார். நீங்கள் இந்த மாவட்டத்துக்கு பொறுப்பான அதிகாரி அவர் சொல்வதை மட்டும் நீங்கள் செய்வதாக இருந்தால் நீங்கள் இருக்கவேண்டிய தேவை இல்லை என்று நாமும் கூறினோம். ஆனால் இன்றுவரை அதற்கான பதில் வரவில்லை.

நாங்கள் தொழில் செய்வதற்காக வைத்த அடைவுகள், வங்கிக் கடன்கள் போன்றவற்றால் நாங்கள் கடனில் மூழ்கிவிட்டோம். எமக்கு இன்னும் மூன்று மாதம்தான் தொழில் வாய்ப்பு இருக்கின்றது. உண்மையிலேயே எமக்கு குறித்த தொழிலுக்கான அனுமதி மறுக்கப்பட்டால் நாங்கள் தற்கொலை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. எமது இந்த முடிவுகளுக்கு நீரியல்வளத் திணைக்களமும் கடற்தொழில் அமைச்சுமே காரணமாக அமையும்.

திருகோணமலை, கொக்கிளாய், முகத்துவாரம் போன்ற பகுதிகளுக்கு குறித்த தொழிலுக்கான அனுமதி வழங்கப்படுகின்றது. இந் நிலையில் எமக்கு மட்டும் ஏன் குறித்த அனுமதி மறுக்கப்படுகின்றது. 

இலங்கையைச் சுற்றிய கடற்பரப்பில் அனுமதி வழங்கப்படும் நிலையில் ஏன் முல்லைத்தீவுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் மீனவர்கள் எங்கள் கடலில் மீன் பிடிக்கின்றனர். எங்களை மாற்றுத் தொழிலை பழைய முறையில் செய்யச் சொல்கின்றார்கள். அப்படி தொழில் செய்வதற்கு கடற்பரப்பு எங்கள் வசம் இல்லை. தென்பகுதி தொழிலாளர்கள் 2 கிலோமீற்றர் கடற்பரப்புக்குள் 500 க்கும் மேற்பட்ட படகுகளை கொண்டு வலைபோட்டு 40 குதிரை வலுவுடைய இயங்திரங்களைப் பயன்படுத்தி மீன்பிடிக்கின்றனர். இதற்கு யாரும் இடையூறாக இல்லை. இந் நிலையில் எங்களையும் குறித்த கடற்பரப்புக்குள்ளேயே தொழிலைச் செய்யச்சொன்னால் எப்படிச் செய்வது.

மீள்குடியேற்றப்பட்ட காலத்தில் இருந்து இன்றுவரை முல்லைதீவில் கிராமப்புறமாக உள்ள மீனவர்களான நாம் ஒதுக்கப்பட்டு வருகின்றோம். கூட்டமைப்பைச் சேந்த அரசியல்வாதிகளும்  மற்றைய அரசியல்வாதிகளும் எங்களை மனித உணர்வோடு பார்ப்பதில்லை என்றுதான் சொல்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04