மாகாண சபை தேர்தலின்றேல் பதவி விலகுவது உறுதி: அதிரடி முடிவை அறிவித்த மஹிந்த தேசப்பிரிய

Published By: J.G.Stephan

30 Jun, 2019 | 12:07 PM
image

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமையானது அரசியலமைப்பு மீறலாகும். தொடர்ந்தும் தேர்தலை காலதாமதப்படுத்துவதானது, அதிகாரபரவலாக்கத்தையும் கேள்விக்குட்படுத்துவதோடு, மாகாண சபை முறைமையினை அரசியலமைப்பிலிருந்து நீக்குவதற்கான கோரிக்கையையும் மேலெழச்செய்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலே முதலில் நடத்தப்பட வேண்டும். அவ்வாறு நடத்தப்படாத பட்சத்தில் அதற்கான பொறுப்பினை ஏற்று ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியிலிருந்து விலகுவதென உறுதியான தீர்மானத்தினை எடுத்துள்ளேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியில் தெரிவித்தார். 

அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு:

கேள்வி:- மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எவ்வாறான பிரச்சினைகள் உள்ளன?

பதில்:- தேர்தல்கள் ஆணைக்குழு என்ற வகையில் எமக்கு எவ்விதமான பிரச்சினைகளும்  இல்லை. எமது பக்கத்திலிருந்து அதற்காக எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க வேண்டிய அவசியமும் இல்லை. சட்டவாக்கத்துறை அதற்குரிய பொறுப்பினைக் கொண்டிருக்கின்றது. அதாவது, பாராளுமன்றம் மாகாண சபைகளை நடத்துவதற்குரிய சட்டவாக்கத்தினை உடனடியாக நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறு நிறைவு செய்கின்ற தருணத்தில் எம்மால் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியும். மீண்டும் கூறுகின்றேன். ஆணைக்குழுவான எமது தரப்பில்  முன்னெடுப்பதற்கு எவ்விதமான செயற்பாடுகளும் இல்லை. தேர்தலை நடத்துவதற்கு எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை.

கேள்வி:- மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தும் நீங்கள் சட்டவாக்கத்துறையுடன் பேச்சுக்களை முன்னெடுத்தீர்களா? அதன் பிரதிபலிப்புக்கள் என்னவாக உள்ளன?

பதில்:- நாம் சட்டவாக்கத்துறையுடன் பல தடவைகளில் சந்திப்புக்களை நடத்தி பேச்சுக்களை முன்னெடுத்துள்ளோம். 2017ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டமானது செயற்பாட்டில் இல்லாதிருக்கின்றது. இந்தச் சட்டத்தினை மீளாய்வுக்குழுவிடத்தில் சமர்ப்பிக்கப்படாதிருப்பதன் காரணமாகவே அச்சட்டம் செயற்பாடற்ற நிலையில் உள்ளது. இதனால் திருத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல் சட்டத்தின் கீழாக மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியாதுள்ளது.

கேள்வி:- அவ்வாறாயின் சட்டவாக்கத்துறை அதற்கான மாற்றுவழியை எடுப்பதற்கு சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றனவா?

பதில்:- சட்டவாக்கத்துறையான பாராளுமன்றத்தில் 1988ஆம் ஆண்டு இரண்டாம் இலக்க மாகாண சபைகளுக்கான தேர்தல் சட்டத்தின் பிரகாரம் (பழைய முறைமையில்) மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த முடியும். அதற்காக 2017ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டம் 2020ஆம் ஆண்டுக்கு பின்னரான திகதியிடுவதோடு, அத்திகதியிலிருந்தே செல்லுபடியாகும் என்பதை குறித்துரைத்து சட்டமூலமொன்றை சபையில் சமர்ப்பித்து அதனை நிறைவேற்றிக்கொள்ள முடியும். இதுவொரு சிறிய செயற்பாடாகும்.

அவ்வாறு இல்லாது விட்டால், பிரதமர் மறுசீரமைப்புக் குழுவின் அறிக்கையைப் பெற்று அதனை ஜனாதிபதியிடத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்னர் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி, பழைய எல்லை மீள் நிர்ணய அறிக்கையின் பிரகாரம் 2017ஆம் ஆண்டு 17ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல் திருத்தச்சட்டத்தின் கீழாக தேர்தலை நடத்துவதற்கான ஒப்புதலைப் பெற முடியும். ஆகவே இந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான அனைத்து பொறுப்புக்களும் பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் பக்கத்தில் தான் உள்ளன.

கேள்வி:- தற்போதைய சூழமைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலொன்று நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக தெரியவில்லையே?

பதில்:- தற்போதைய சூழலில் எட்டு மாகாண சபைகளுக்கான ஆயுட்காலம் நிறைவுக்கு வந்து விட்டது. இவற்றுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய அனைத்து விடயங்களையும் முன்னெடுப்பதற்கான பொறுப்பு ஜனாதிபதி, பிரதமர் ஆகிய தரப்பிடமே காணப்படுகின்றது. அதனைவிடவும், மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்குரிய வலியுறுத்தலை செய்வதற்கான பிரதான பொறுப்பு எதிர்க்கட்சிகளுக்கு உள்ளது. ஆனால், எதிர்க்கட்சிகள் அரசாங்கத்திடத்தில் அவ்வாறான வலியுறுத்தல்களை செய்வதாக இல்லை.

குறிப்பாக, பாராளுமன்ற அமர்வுகளின்போது எதிர்க்கட்சிகள் எப்போது மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என்று உறுதியான பதிலைப் பெறும் வகையில் கேள்வியொன்றை எழுப்புவதாக இல்லை.  இத்தகைய நிலைமைகளை வைத்துப்பார்க்கின்றபோது, ஆளும், எதிர்த் தரப்புக்கள் என யாருக்குமே மாகாண சபைகளுக்கான தேர்தல் பற்றி அக்கறை இல்லாத போக்கையே காண முடிகின்றது.

ஆரம்பத்தில், மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தலொன்றை நடத்துவதற்கு முனைப்புச் செய்யப்பட்டது. தற்போது அந்த முனைப்பு கைவிடப்பட்டு ஜனாதிபதித் தேர்தலொன்றை நடத்துவதற்குரிய உந்துதல் செய்யப்படுகின்றது. எவ்வாறான முனைப்புக்களையும் உந்துதல்களையும் மேற்கொண்டாலும் சம்பிரதாயம் மற்றும் அரசியலமைப்பின் பிரகாரம் மாகாண சபைகளுக்கான தேர்தலையே நடத்த வேண்டும்.

அதிகாரப்பரவலாக்கத்தினை மையப்படுத்தியே மாகாண சபை முறைமைகள் உருவாக்கப்பட்டன. ஆனால், தற்போதைய நிலைமையை வைத்து பார்க்கின்றபோது அதிகாரப்பரவலாக்கம் கேள்விக்குறியாகின்றதல்லவா? கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு இரண்டு வருடங்களாகின்றதோடு, வடக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு ஒருவருடமாகின்றது. இவ்வாறான நிலையில் தேர்தலை நடத்துவதற்கு விரும்பவில்லையென்றால், மாகாண சபை முறைமையை அரசியலமைப்பிலிருந்து நீக்கி விடுங்கள் என்ற கோரிக்கையை தான் முன்வைக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைமையே எழுகின்றது. அவ்வாறு நீக்குகின்ற போது தேர்தலுக்கான அரச செலவீனமும் குறைந்து விடுமல்லவா?

எவ்வாறாயினும் நாம் அரசியலமைப்பினை மீறாது மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்றே கோருகின்றோம். மேலும் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் 1988ஆம் ஆண்டு 2ஆம் இலக்க சட்டத்திலா அல்லது 2017ஆம் ஆண்டு 17ஆம் இலக்க திருத்தச்சட்டத்திலா பிரச்சினை காணப்படுகின்றது என்பதே எமக்குள்ள பிரச்சினையாகும். பாராளுமன்றம் சாதகமான செயற்பாடுகளை முன்னெடுக்காத பட்சத்தில் இவ்விரண்டு சட்டங்கள் குறித்துரைத்து உயர் நீதிமன்றத்திடம் வியாக்கியாத்தினைக் கோருவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

கேள்வி:- அப்படியென்றால் ஜனாதிபதியுடன் தவிசாளர் என்ற முறையில் நீங்கள் இதுபற்றி கலந்துரையாடினீர்களா?

பதில்:- ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை செய்ததோடு, நாம் எழுத்துமூலமாகவும் முன்மொழிவுகளைச் செய்திருக்கின்றோம்.

கேள்வி:- அவற்றுக்கு ஜனாதிபதி பிரதிபலிப்புக்களைச் செய்துள்ளாரா?

பதில்:- தற்போதுவரையில் எவ்விதமான பதில்களும் கிடைக்கவில்லை.

கேள்வி:- நீங்கள் தற்போது உயர் நீதிமன்றத்தினை நாடியிருக்கின்ற நிலையில், மாகாண சபைத் தேர்தலை நடத்தவதற்குரிய சாதகமான நிலைமைகள் ஏற்படும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கின்றீர்களா?

பதில்:- எமது தரப்பில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டதாக மாகாண சபைகளுக்கான தேர்தலை முன்னெடுப்பதற்கான அழுத்தத்தினை பிரயோகிக்கவே முனைகின்றோம். மக்களின் இறையாhண்மையை நிறைவேற்றும் சட்டவாக்கத்துறை, நிறைவேற்று அதிகாரத்துறை, நீதித்துறை ஆகிய கட்டமைப்புக்களை விடவும் நாட்டின் பிரஜை என்ற வகையில் அரசியலமைப்பின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்.

பௌத்தர்கள் திரிபிடகத்திலும், இந்துக்கள் வேதத்திலும், முஸ்லிம்கள் குர் ஆனிலும், கிறிஸ்தவர்கள் பைபிளிலும் நம்பிக்கை கொண்டிருப்பது போன்று தான் நாமும் அரசியலமைப்பில் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம். அவ்வாறான நிலையில் அரசியலமைப்பு மீறப்படும் வகையிலான நிலைமைகள் ஏற்படுகின்றபோது எமக்கு கவலையே ஏற்படுகின்றது.

கேள்வி:- சுயாதீன ஆணைக்குழுவொன்றின் தவிசாளர் என்ற வகையில் நீங்கள் எவ்வாறான சவால்களுக்கு முகங்கொடுக்கின்றீர்களா?

பதில்:- எனக்கு எந்தவொரு சவால்களும் இல்லை. ஆனால் எனக்குள்ள பிரச்சினை, தேர்தலை நடத்த முடியாத தவிசாளர் என்று அனைவரும் கடுமையாக விமர்சிக்கின்றார்கள் என்பதாகும். தேர்தல் நடைபெறாமைக்கு நானே பொறுப்புக்கூற வேண்டும் என்றும் கூறுகின்றார்கள். அதன்பிரகாரம் தேர்தல் நடைபெறாதவிடத்து நான் அப்பதவியில் நீடிப்பதில் பயனில்லை என்ற மனநிலை உருவெடுத்துள்ளது.

கேள்வி:- அப்படியாயின் மாகாண சபைகள் நடத்தப்படாத பட்சத்தில் தவிசாளர் பதவியை துறப்பதற்கு உறுதியாக தீர்மானித்துள்ளீர்களா?

பதில்:- ஆம் அதில் மாற்றமில்லை

கேள்வி:- முழுமையாக ஆணைக்குழுவின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கிவிடுவீர்களா?

பதில்:- அவ்வாறு இல்லை. தவிசாளர் பதவியிலிருந்து விலகி, ஆணைக்குழுவின் உறுப்பினராக தொடர்ந்தும் செயற்படவே எதிர்பார்த்துள்ளேன். அதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன என்று கருதுகின்றேன்.

கேள்வி:- நாட்டில் ஜனநாயக கட்டமைப்பினை வலுவாக்குவதற்காவே 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டன. அவ்வாறு உருவாக்கப்பட்ட ஆணைக்குழுக்களுள் மிக முக்கியமானதொன்றான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் பதவியிலிருந்து நீங்கள் விலகுவதானது ஜனநாயகத்தின் மீதான கேள்வியேற்படுத்துவதாகவும், எதிர்மறையான முன்னுதாரணத்தினையும் ஏற்படுத்தி விடுமல்லவா?

பதில்:- அவ்வாறு நோக்க வேண்டியதில்லை.

கேள்வி:- அப்படியென்றால் உங்களின் பதவி விலகலை எந்த அடிப்படையில் எடுத்துக்கொள்வது?

பதில்:- தேர்தல் இடம்பெறாதிருக்கின்றமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் பொறுப்புக்கூற வேண்டும் என்று நாட்டின் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் என்னை விமர்சிக்கின்றார்கள் அல்லவா? அப்படியிருக்கையில், எனது காலத்தில் தேர்தலை நடத்துவதற்கு முடியாது போயுள்ளது என்பதை பொறுப்பேற்று பதவியிலிருந்து விலகி நிற்கின்றேன் என்றே கருதவேண்டும். மாறாக யாரையும், பகைத்துக்கொண்டு அவர்களுக்கு எதிராக எனது பதவி விலகலை பார்க்க முடியாது. அதேபோன்று எனது பதவி விலகல் ஜனநாயகத்தின் மீது கேள்விக்குறியையும் ஏற்படுத்தாது.

கேள்வி:- மாகாண சபை தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தொடர்ச்சியாக கலந்துரையாடி வருகின்ற நிலையில் அவர்களின் நிலைப்பாடு என்னவாகவுள்ளது?

பதில்:- பல்லக்கில் தான் பயணம் என்று கூறினாலும் கால்நடையான பயணமே இடம்பெறுகின்றது.  

கேள்வி:- ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைப்பாடு என்ன?

பதில்:- ஜனாதிபதித் தேர்தலை உரிய காலத்தில் நடத்துவது என்பதில் எவ்விதமான மாற்றுக்கருத்துக்களுக்கும் இடமில்லை. இந்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் நவம்பர் 15 இலிருந்து டிசம்பர் 7ஆம் திகதிக்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும்.

கேள்வி:- மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறு ஆணைக்குழு அழுத்தமளிக்கின்ற நிலையில் ஜனாதிபதித் தேர்தல் பிற்போடப்படுவதற்கு வாய்ப்புக்கள் உள்ளனவா?

பதில்:- இல்லை. ஜனாதிபதித் தேர்தலை பிற்போட முடியாது.

கேள்வி:- உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னரான நாட்டின் ஸ்திரமற்ற நிலைமைகளை மையமாகக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலை பிற்போட வேண்டும் என்ற கருத்துக்களும் மேலோங்கியிருக்கின்றதல்லவா?

பதில்:- அவ்வாறு பிற்போட முடியாது. அவ்வாறு பிற்போடுவதற்கு யாராவது முயல்வாரர்களாயின் அவர்கள் அசுரர்களை விடவும் மோசமானவர்களாவர்.

கேள்வி:- வெளிநாட்டு பிரஜாவுரிமையை கொண்டிருக்கும் நபர் ஒருவர் அதனை நீக்கி எவ்வளவு காலத்தின் பின்னர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முடியும்?

பதில்;:- வெளிநாட்டு பிரஜாவுரிமையைக் கொண்டிருக்கும் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முடியாது.

கேள்வி:- வெளிநாட்டு பிராஜாவுரிமையை நீக்கிய பின்னர் வேட்பாளராக களமிறங்குவதற்கு எவ்வளவு காலம் அவசியம் என்று தான் வினவியிருந்தேன்?

பதில்:- அதற்கு என்னால் பதிலளிக்க முடியாது.

கேள்வி:- ஆகஸ்ட் 11ஆம் திகதி எதிர்க்கட்சித்தலைர் மஹிந்த ராஜபக்ஷ பிறிதொரு கட்சியின் தலைமையை ஏற்கவுள்ளதாகவும், ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும் அவருடன் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில், இவ்வாறு பிறிதொரு கட்சியில் உறுப்புரிமை பெறுகின்றபோது, அவர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை இல்லாது போய்விடுமல்லவா?

பதில்:- பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது மாகாண, உள்ளுராட்சி உறுப்பினர்களோ கட்சி மாறுகின்றபோது அவர்களின் உறுப்புரிமை இல்லாது போகும் என்றுதான் சட்ட ஏற்பாடுகளில் காணப்படுகின்றது. இருப்பினும், இவ்வாறானவர்கள் கட்சி மாறுகின்றபோது  நீதிமன்றத்தின் ஊடாக இடைக்கால உத்தரவைப் பெற்றுவிடுவார்கள். பின்னர், பாராளுமன்ற அல்லது மாகாண, உள்ளுராட்சி சபைகளின் காலம் நிறைவடையும் வரையில் மனுக்கள் மீதான விசாரணை நீடித்துக்கொண்டே இருக்கும்.

கேள்வி:- இத்தகைய நிலைமைகளை கையாள்வதற்கான அதிகாரங்கள் ஆணைக்குழுவிற்கு காணப்படுகின்றனவா?

பதில்:- சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டாலும் அவற்றுக்கான பல அதிகாரங்கள் ஏற்பாடாகவில்லை. தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு நீதிமன்ற அதிகாரம் கிடையாது. ஆகவே, அதனால் எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்க முடியாது.

கேள்வி:- 19ஆவது திருத்தச்சட்டம் உருவாக்கப்படும் போது இந்த விடயத்தினை கவனத்தில் கொள்ளவில்லையென்று கருதுகின்றீர்களா?

பதில்:- மனிதன் உருவான காலம் முதல் நீதிச்சட்டங்கள் படிப்படியாக உருவாக்கப்பட்டு வருகின்றன. ஆகவே 19ஆவது திருத்தச்சட்டத்தில் அனைத்தையும் செய்திருக்க வேண்டும் என்று நாம் கனவு காணமுடியாது. நீண்டகால செயற்பாட்டில் இந்த விடயங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

கேள்வி:- உள்ளுராட்சி தேர்தலில் ஏற்படுத்தப்பட்ட தேர்தல்முறைமை மாற்றமானது தனியொரு கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளதோடு அதிகமான இடங்களில் கூட்டாட்சி முறைமை நிலவுவதால் ஆட்சிக்குறைபாடுகளை தோற்றுவித்துள்ளதாக விமர்சிக்கப்படுகின்றதே?

பதில்:- உலகத்திலே தொகுதி அடிப்படையிலான தேர்தல்முறையே சிறந்தாக கொள்ளப்படுகின்றது. மேலும் கூட்டாட்சி தான் மக்களுக்கான சிறந்த ஆட்சியையும் வழங்க முடியும்.

கேள்வி:- கூட்டாட்சி சிறந்தது என்று நீங்கள் கூறினாலும் மத்திய அரசாங்கத்தில் கூட்டாட்சிமுறைமை வெற்றியளித்திருக்காததோடு, நாட்டில் ஸ்திரமற்ற தன்மையையும் உருவாக்கி விட்டதல்லவா?

பதில்:- எமது நாட்டில் அரசியல் கலாசார ரீதியான பின்னடைவுகளாலேயே கூட்டாட்சியில் பிரச்சினைகள் ஏற்பட்டன. உண்மையான ஜனநாயகம் என்பது, சிறுபான்மை, பெரும்பான்மை என அனைவரினதும் விருப்புக்களை உள்வாங்கிய கூட்டு ஆட்சியை முன்னெடுத்தலாகும்.

கேள்வி:- தற்போதைய சூழலில் நடைமுறையில் உள்ள தேர்தல்முறைமையில் மாற்றத்தினை ஏற்படுத்த முடியுமா?

பதில்:- மாகாண சபைகளுக்கான தேர்தல் முறைமையில் ஏற்படுத்த முடியும். ஆனால், பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் முறைமையை மாற்றுவதென்றால் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமாகின்றது. ஆகவே, அதனை மாற்றுவதற்கு உடனடிச் சாத்தியமில்லை.


நேர்காணல்:- ஆர்.ராம்

படப்பிடிப்பு:- எஸ்.எம்.சுரேந்திரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13