விளை­யாட்டு மைதானத்தில் தக­னக்­கி­ரி­யை­களை நடத்­த­லாமா?

Published By: Digital Desk 4

26 Jun, 2019 | 03:03 PM
image

ஹட்டன் நகரின் மத்­தியில் அமைந்­துள்ள டன்பார் விளை­யாட்டு மைதா­னத்­திற்கு அப்­பெயர் வரக்­கா­ரணம் அது டன்பார் தோட்­டத்தின் ஒரு பகு­தி­யாக இருந்­த­மை­யாகும். 

1957 களுக்குப் பின்னர் டன்பார் தோட்­டத்தின் ஒரு பகுதி பண்­டா­ர­நா­யக்க டவுண் என்ற பெயரில் குடி­யி­ருப்­பாக மாறி­யது. அச்­சந்­தர்ப்­பத்­தி­லேயே இவ்­வி­டத்தில் மைதானம் அமை­யப்­பெற்­றது. நக­ர­ச­பையின் தலை­வ­ராக விளங்­கிய அந்­தனி பாயோவின் காலத்தில் ஓ. டொன் வில்­பிரட் மைதானம் என இது பெயர் பெற்­றது. ஓ.டொன் வில்­பிரட் என்­பவர் நீண்ட கால­மாக ஹட்டன் – டிக்­கோயா நக­ர­சபைத் தலை­வ­ராக விளங்­கி­யவர்.

ஹட்டன்- – டிக்­கோயா நக­ர­சபை எல்­லைக்­குட்­பட்ட பகு­தி­களில் வாழ்ந்து வரும் மக்­களின் தொகை சரா­ச­ரி­யாக 28 ஆயி­ர­மாகும். இத்­தொ­கையில் 65 வீத­மானோர் தமி­ழர்­க­ளாவர். 30 வீத­மானோர் சிங்­க­ள­வர்கள். மிகு­தி­யானோர் முஸ்­லிம்கள். இப்­பி­ர­தே­சத்தில் அமைந்­துள்ள சகல பாட­சா­லை­களும் தமது விளை­யாட்­டுப்­போட்டி இறுதி நிகழ்வை இம்­மை­தா­னத்­தி­லேயே நடத்தி வரு­கின்­றன. 

மட்­டு­மன்றி, இப்­பி­ர­தே­சத்தில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள சுமார் 40 விளை­யாட்டுக் கழ­கங்­களின் உதை­பந்­தாட்ட மற்றும் கிரிக்கெட் போட்­டித்­தொ­டர்கள் இங்­கேயே இடம்­பெ­று­கின்­றன. குறித்த கழ­கங்­களை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் உறுப்­பி­னர்கள் மட்­டு­மல்­லாது இப்­பி­ர­தேச மக்கள், மாண­வர்கள் அதி­கா­லைவேளையில் இம்­மை­தா­னத்­தி­லேயே உடற்­ப­யிற்­சி­களை மேற்கொண்டு வரு­கின்­றனர்.

இவை நீண்ட கால­மாக இடம்­பெற்று வரும் நிகழ்­வு­க­ளாகும்.

எனினும் அண்­மைக்­கா­ல­மாக இவ் விளை­யாட்டு மைதா­னத்தில் பிர­மு­கர்­களின் தக­னக்­கி­ரி­யைகள் இடம்­பெற்று வரு­வது இப்­ப­குதி மக்­க­ளி­டையே வெறுப்­பையும் வேத­னை­யையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. முக்­கி­ய­மாக அர­சியல் பிர­மு­கர்கள் கட்சி ரீதி­யான போட்டா போட்­டியில் இவ்­வாறு மாறி மாறி செயற்­ப­டு­வது குறித்து கட்சி தொழிற்­சங்க பேதங்­க­ளுக்­கப்பால் ஹட்டன் வாழ் மக்கள் தமது கடு­மை­யான அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் விளை­யாட்டு மைதானம் ஒன்றில் இறுதிக்கிரி­யைகள் அல்­லது தக­னக்­கி­ரி­யைகள் இடம்­பெ­று­வது சரியா? இதற்கு அட்டன் டிக்­கோயா நக­ர­சபை அனு­மதி வழங்­கு­கி­றதா? எதிர்­கா­லத்தில் இவ்­வாறு இடம்­பெ­று­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­ப­டுமா போன்ற வினாக்­களை 2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறியும் சட்­டத்தின் பிர­காரம் நாம் கேள்­வி­களை எழுப்­பி­யி­ருந்தோம். அதற்கு நக­ர­ச­பையால் வழங்­கப்­பட்ட பதில்­களின் அடிப்­ப­டையில் இக் ­கட்­டுரை எழு­தப்­பட்­டுள்­ளது.

நக­ர­ச­பையின் பதில்கள்

1)இம்­மை­தானம் அட்டன் –டிக்­கோயா நக­ர­ச­பைக்கு சொந்­த­மான­தாகும்.

2)இறுதிச் சடங்­கு­களை இம்­மை­தா­னத்தில் மேற்­கொள்­வ­தற்கு தீர்­மா­னங்­களை எடுக்கும் அதி­காரம் நகர சபைக்கு உள்­ளது.

3) முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காமினி ஆரி­ய­தி­லக்­கவின் தக­னக்­கி­ரியை இம்­மை­தா­னத்தில் முதன் முத­லாக மேற்­கொள்­ளப்­பட்­டது.

4)இதுவரை 5 தக­னக்­கி­ரி­யைகள் இம்­மை­தா­னத்தில் இடம்­பெற்­றுள்­ளன.

5) இம்­மை­தா­னத்தில் சாதா­ரண மக்கள் தக­னக்­கி­ரி­யை­களை மேற்­கொள்ள தடைகள் காணப்­ப­டு­கின்­றன.

6) எதிர்­கா­லத்தில் இம்­மை­தா­னத்தில் தக­னக்­கி­ரி­யைகள் மேற்­கொள்­வ­தற்கு நக­ர­சபை அனு­மதி வழங்­காது.

தக­னக்­கி­ரியை வர­லாறு

முதன்முத­லாக முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காமினி ஆரி­ய­தி­லக்­கவின் பூத­வுடல் இம்­மை­தா­னத்தில் தகனம் செய்­யப்­பட்­டது.

அதற்­க­டுத்து பௌத்த பிக்கு ஒருவர், அம­ரர்­க­ளான மாகாண சபை முன்னாள் உறுப்­பினர் ராஜு, அட்டன் பிர­பல வர்த்­தகர் டி.கே.வீர­துங்க, மாகாண சபை முன்னாள் உறுப்­பி­னர்­க­ளான ஏ.அருள்­சாமி மற்றும் சிங் பொன்­னையா ஆகிய 6 பேரின் பூத­வு­டல்கள் இங்கு தகனம் செய்­யப்­பட்­டன.

இவ்­வாறு ஒரு இறுதிக் கிரியை இம்­மை­தா­னத்தில் இடம்­பெற்றால் சுமார் ஒரு வார காலத்­திற்கு மைதானம் மூடப்­பட்­டி­ருக்கும். எவரும் உள் நுழைய முடி­யாது. இறு­தி­யாக இடம்­பெற்ற கிரி­யை­களின் போது உள்ளூர் மட்­டத்­தி­லான உதைப்­பந்­தாட்ட போட்­டித்­தொடர் இடம்­பெற்­றுக்­கொண்­டி­ருந்­தது. அப்­போட்­டித்­தொ­டரும் இடை நிறுத்­தப்­பட்­ட­தை­ய­டுத்து குறித்த கழ­கங்­க­ளைச்­சேர்ந்­த­வர்கள் இச்­சம்­ப­வத்­துக்கு எதி­ராக கவ­ன­யீர்ப்பு ஆர்ப்­பாட்டம் ஒன்றை நடத்­து­வ­தற்கு முயற்சி செய்த போதிலும் நாட்டின் சூழ்­நி­லைகள் கார­ண­மாக அது கைவி­டப்­பட்­டது. 

மைதா­னத்தை சுற்றி வர அதி­க­மான குடி­யி­ருப்­புகள் அமைந்­துள்­ளன. இவ்­வாறு மைதா­னத்தில் தக­னக்­கி­ரி­யைகள் இடம்­பெறும் போது குடி­யி­ருப்­பு­களில் உள்­ள­வர்­களின் அன்­றாட இயல்பு வாழ்க்­கையும் பாதிக்­கப்­ப­டு­கின்­றது.

புன­ர­மைக்­கப்­பட்ட மைதானம்

டன்பார் மைதானம் 2008 ஆம் ஆண்டு மீள் புன­ர­மைப்பு செய்­யப்­பட்­டது. அப்­போ­தைய இளைஞர் வலு­வூட்டல் அமைச்­ச­ராக இருந்த ஆறு­முகன் தொண்­டமான் அமைச்சின் மூலம் சுமார் ஒரு கோடி ரூபாவை இம்­மை­தான புன­ர­மைப்­புக்கு ஒதுக்­கினார். மைதா­னத்தின் புன­ர­மைப்பு பணிகள் இழு­ப­றி­யா­கிக்­கொண்­டி­ருந்த வேளை அப்­போ­தைய நக­ர­ச­பைத்­த­லை­வ­ராக பொறுப்­பேற்ற டாக்டர் அழ­க­முத்து நந்­த­குமார் பழைய ஒப்­பந்­தக்­கா­ரரை இடை­நி­றுத்தி புதி­தாக பணி­களை ஆரம்­பித்தார். இதற்­கெ­தி­ராக வழக்கும் தொட­ரப்­பட்டு இறு­தியில் நக­ர­ச­பையே வழக்கில் வென்­றமை குறிப்­பி­டத்­தக்­கது. 

புதிய புற்­ற­ரைகள் அமைக்­கப்­பட்­டன. பார்­வை­யா­ளர்கள் அமரும் புதிய கட்­டிடம் மற்றும் விளை­யாட்­டுக்­க­ழ­கங்­க­ளுக்­கான தனி கட்­டி­டங்­களும் மைதா­னத்தை சுற்றி வேலி­களும் அமைக்­கப்­பட்­டன. இம்­மை­தான திறப்பு விழாவின் போது உரை­யாற்­றி­யி­ருந்த ஆறு­முகன் இம்­மை­தானம் இப்­பி­ர­தேச மக்­களின் ,மாண­வர்­களின் விளை­யாட்டு நிகழ்­வு­க­ளுக்­காக மட்­டுமே பயன்­ப­டுத்­தப்­படல் வேண்டும். இங்கு ஹெலி­கொ­கப்டர் இறங்­கு­வ­தற்­குக்­கூட அனு­ம­தி­யில்லை என்று உறு­தி­யாகக் கூறி­யி­ருந்தார். ஆனால் அதன் படி இங்கு எது­வுமே நடக்­க­வில்லை என்­பது கண்­கூடு.

தக­னக்­கி­ரி­யைகள் மைதா­னத்தில் இடம்­பெ­று­வ­தற்கு என்ன காரணம்?

ஹட்டன் டிக்­கோயா நக­ர­ச­பைக்கு உரித்­தான பொது மயானம் குடா ஒயா பகு­தியில் அமைந்­துள்­ளது. இங்கு சட­லங்­களை புதைக்க மட்­டுமே முடியும். தக­னக்­கி­ரி­யைகள் செய்­வ­தற்­கான மின் மயான வச­திகள் இங்­கில்லை. டிக்­கோ­யா­வி­லி­ருந்தும் நல்­ல­டக்கம் செய்ய குடா ஓயா பகு­திக்கே வர­வேண்­டி­யுள்­ளது. 

தக­னக்­கி­ரி­யைகள் செய்ய வேண்­டு­மானால் கொட்­ட­கலை கொமர்ஷல் மின்­ம­யா­னத்­திற்குச் செல்ல வேண்டும். அது கொட்­ட­கலை பிர­தேச சபைக்கு உரித்­தா­னது. குறித்த பிர­தேச சபைக்கு வெளியே உள்­ள­வர்­க­ளுக்கு கூடுதல் தொகையே அற­வி­டப்­ப­டு­கின்­றது.

ஆகவே ஹட்டன் டிக்­கோயா நக­ர­ச­பை­யா­னது அதன் எல்­லைக்­குட்­பட்ட ஒரு பகு­தியில் அல்­லது குடா ஓயா பொது மயா­னத்தின் ஓரி­டத்­தி­லா­வது மின்­ம­யான கட்­ட­மைப்­பு­களை உரு­வாக்­கு­வ­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். ஏனெனில் கொட்­ட­கலை பிர­தேச சபைக்கு உரித்­தான ரொசிட்டா மைதா­னத்தில் இவ்­வாறு தக­னக்­கி­ரி­யைகள் இடம்­பெ­று­வ­தில்லை.

இடம்­பெ­றாது என்று உறு­தி­யாக கூற­மு­டி­யாது

தகவல் அறியும் சட்­ட­மூ­லத்தின் படி எதிர்­கா­லத்தில் இவ்­வாறு தக­னக்­கி­ரி­யைகள் இடம்­பெ­று­வ­தற்கு நக­ர­சபை அனு­மதி வழங்­குமா என்று கேட்­கப்­பட்ட கேள்­விக்கு இல்லை என்றே பதில் தரப்­பட்­டுள்­ளது. எனினும் அது தொடர்­பான பிரே­ரணை ஒன்று சபையால் கொண்டு வரப்­பட்டு ஏக­ம­ன­தாக அனைத்து உறுப்­பி­னர்­க­ளாலும் அதற்கு அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­ட­தாகத் தெரி­ய­வில்லை.

மட்­டு­மன்றி இறு­திச்­ச­டங்­குகள் பற்­றிய தீர்­மா­னங்­களை எடுப்­ப­தற்கு நகர சபைக்கு அதி­கா­ரங்கள் உள்­ள­தா­கவும் பதிலில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஆகவே தற்­போ­தைய சபையால் தீர்­மா­னங்கள் எதுவும் கொண்டு வரப்பட்டாலும் புதிதாக ஆட்சியமைக்கும் சபை தகனக்கிரியைகளை நடத்தலாம் என்ற தீர்மானத்தை கொண்டு வருவதற்கு அதிகாரங்கள் உள்ளன. 

இதில் அரசியல் தலையீடுகள் இல்லாமலில்லை. அந்த கட்சி பிரமுகருக்கு இடமளித்தால் எமக்கும் ஏன் முடியாது என்ற தர்க்க ரீதியான பிரச்சினைகள் இதனால் ஏற்பட்டுள்ளன. இதை ஒரு சமூக ரீதியான பிரச்சினையாகவே பார்க்கப்படல் வேண்டும்.

அரசியல் தொழிற்சங்க பேதங்களுக்கப்பால் நகர வர்த்தகர்கள் ,பொது மக்கள் , மத ஸ்தாபனங்கள்,பொலிஸார் , சிவில் சமூகத்தினரிடம் கலந்துரையாடல்களை மேற்கொண்டு அனைத்துத்தரப்பினரிடமும் கருத்துக்களைப்பெற்றே அதன் பிறகு இதற்கு ஒரு தீர்மானம் எடுக்கப்படல் வேண்டும் என்ற கருத்தே தற்போது ஓங்கி ஒலிக்கின்றது. ஆனாலும் நகரின் மத்தியில் அமைந்திருக்கும் விளையாட்டு மைதானத்தை மயானமாக மாற்றக்கூடாது என்றே நிலைப்பாட்டிலேயே அட்டன் நகரவாழ் மக்கள் பெரும்பாலோனோர் இருக்கின்றனர்.

சிவலிங்கம் சிவகுமாரன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48