காவத்தை பெருந்தோட்ட நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நாவலப்பிட்டி பார்கேபல் தோட்டத்தில் 70ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இன்று காலை பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

அத்தோட்டத்தின் 20ம் இலக்க தேயிலை மலையில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண் ஒருவரை நேற்று காலை பாம்பு ஒன்று தீண்டியுள்ளது.

இதனையடுத்து, நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்கென அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் இன்று காலை மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தோட்ட நிர்வாகத்தால் கவனிப்பாரற்ற நிலையில் சுத்தம் செய்யப்படாத தேயிலை நிலங்களில் விஷ ஜந்துகள் அதிகரித்து வருவதனால் தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் அச்சம் நிலவுவதாகவும், உடனடியாக தோட்ட நிர்வாகம் தேயிலை நிலங்களை சுத்தப்படுத்தி தருமாறும் கோரியே இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக அத்தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனா்.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பார்கேபல் தோட்டம் 3 பிரிவுகளை கொண்டதாகும். இங்கு 250ற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்கள் தொழில் செய்து வருகின்றனர். இத்தோட்டத்தின் அனைத்து தேயிலை காணிகளும் காடாக்கப்பட்ட நிலையில் காவத்தை பெருந்தோட்ட கம்பனி நிர்வாகம் செய்து வருகின்றது.

ஏற்கனவே இவ்வாறாக பன்றிகள், சிறுத்தைகள், பாம்புகள் போன்ற விஷ ஜந்துகளால் தொடர்ந்தும் அச்சம் நிலவி வந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் இத்தோட்டத்தின் 20ம் இலக்க தேயிலை மலையில் பூமிதாஸ் சரோஜாதேவி (38) என்ற 2 பிள்ளைகளின் தாய் பாம்பு தீண்டுதளுக்கு இழக்காகியுள்ளார்.

இதனால் ஏனைய தொழிலாளர்கள் தொடர்ந்தும் இத்தோட்டத்தில் பணிபுரிவதற்கான அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் தோட்ட நிர்வாகம் முதலில் தேயிலை காணிகளை சுத்தம் செய்து தரும் பட்சத்தில் மீண்டும் வழமையான தொழிலுக்கு செல்வதாக பணிபகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ள பார்கேபல் தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

(க.கிஷாந்தன்)