தே.மு.தி.க. மக்கள் நலக்கூட்டணியின் முதல் அமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் டுவிட்டர் இணையத்தளம் மூலம் டுவிட்டர் பாவனையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு வேடிக்கையாகவும் சிறப்பாகவும் பதிலளித்துள்ளார். இதில் பாவனையாளர் ஒருவர் 'உங்களின் வில்லன் யார்? என கேட்ட கேள்விக்கு 'எனது ஹீரோ வைகோ, வில்லன் கலைஞர். வில்லி ஜெயலலிதா" என விஜயகாந்த் பதிலளித்துள்ளார்.

தேர்தலுக்கு தேர்தல் நவீன அறிவியல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி புதுமைகளை பயன்படுத்து வது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் தற்போது நடக்கும் தேர்தல் சமூக வலைத்தளங்களுடன் பின்னிப் பிணைந்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் தற்போதைய தமிழக வாக்காளர்களில் சுமார் 50 சதவீதம் பேர் இளைய சமுதாயமாக இருப்பதே.

தற்போதைய வாக்காளர்களில் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 78 லட்சத்து 65 ஆயிரத்து 245. இது மொத்த வாக்காளர்களான 5.86 கோடியில் கணிசமான பகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

18 முதல் 40 வயதுக்குட்பட்ட வாக்காளர்களில் 99 சதவீதம் பேர் சமூக வலைத்தளங்களை தினமும் பயன்படுத்துகிறார்கள். தமிழக தேர்தல் முடிவை நிர்ணயிக்கப் போகும் சூத்திரத் தாரிகளாக இவர்கள் கருதப்படுகிறார்கள்.

இதனால்தான் எல்லா கட்சிகளும் இவர்களின் வாக்குகளை கைப்பற்ற சமூக வலைத்தளம் மூலமான பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். 

தி.மு.க. தலைவர் கருணாநிதி பேஸ்புக், டுவிட்டர் மூலமான பிரசாரத்தில் முன்னிலையில் இருப்பதாக சமீபத்தில் நடந்த ஒரு ஆய்வில் தெரிய வந்தது.

பா.ம.க., பா.ஜ.க.வினரும் சமூக வலைத்தளத்தை நேர்த்தியாக பயன்படுத்துகிறார்கள். தே.மு.தி.க.–மக்கள் நலக்கூட்டணி அதில் சற்று பின்தங்கி இருந்தது. அந்த குறையை நிவர்த்தி செய்யும் வகையில் தே.மு.தி.க.–மக்கள் நலக்கூட்டணியின் முதல்– அமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் நேற்று டுவிட்டர் இணையத்தளத்தில் வாக்காளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

பகல் 10.30 மணிக்கு தொடங்கி 11.30 மணி வரை வாக்காளர்கள் கேட்ட வித விதமான கேள்விகளுக்கு விஜயகாந்த் சூடாகவும், சுவையாகவும் பதில் அளித்தார்.

விஜயகாந்த்தை கேலி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் சில வாக்காளர்கள் கேள்விகளைத் தொடுத்தனர். கேப்டன் அதற்கும் அசரவில்லை. பதில்களை சிறப்பாக முன்வைத்தார்.

டுவிட்டர் மூலம் நடந்த அந்த விஜயகாந்த் பதில் வருமாறு:–

கே:– தே.மு.தி.க.வை நீங்கள் தொடங்கிய போது தமிழ்நாட்டு மக்கள் உங்கள் மீது நம்பிக்கை கொண்டிருந்தனர். இப்போது நகைச்சுiயாளர் போல ஆகி விட்டீர்கள். இந்த நிலை உங்களுக்கு தெரியுமா?

ப:– நிழல் வேறு. நிஜம் வேறு. தமிழ்நாட்டு மக்களுக்கு எல்லாம் தெரியும். அவர்கள் நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கே:– தே.மு.தி.க.வின் தேர்தல் அறிக்கையை தயாரித்தது யார்?

ப:– நானும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் தே.மு.தி.க.வின் தேர்தல் அறிக்கையை தயார் செய்தோம். சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உள்ள எனது நண்பர்களும் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கு உதவியாக இருந்தனர்.

கே:– உங்கள் பேச்சும், குரலும் தான் உங்களுக்கு மிகப்பெரும் பலமாக இருந்தது. இப்போது நீங்கள் பேசுவது புரிவதில்லை. உங்கள் குரலுக்கு என்ன ஆனது?

ப:– உங்கள் பேச்சும் தான் சரியாக இல்லை. சிறிய பிரச்சினை காரணமாகத்தான் குரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அதை தவறாக சித்தரித்து என்னைப் பற்றி அப்படி பேச வைத்து விட்டன.

கே:– உங்கள் கூட்டணியின் பலம் என்ன?

ப:– நீங்கள் கேட்ட கேள்வியிலேயே பதில் இருக்கிறது.

கே:– தேர்தல் முடிவுகள் வந்து தொங்கு சட்டசபை அமைய நேரிட்டால் நீங்கள் யாருக்கு ஆதரவு கொடுப்பீர்கள்?

ப:– நீங்கள் என்னிடம் இந்த கேள்வியை மாற்றி தவறாக கேட்டு விட்டீர்கள்.

கே:– நீங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலை ஒழிக்க தனித்துறையை ஏற்படுத்துவீர்களா?

ப:– லோக் ஆயுக்தா, ஊழல் ஒழிப்புத் துறைக்கு உரிய அதிகாரம் அளித்து பயன்படுத்தப்படும். ரமணா பட பாணியில் அந்த அமைப்புகளின் செயல்பாடுகள் நிச்சயமாக இருக்கும்.

கே:– உங்களுக்கு பிடித்த வில்லன் யார்?

ப:– எனக்கு ஹீரோ வைகோ. வில்லன் கலைஞர். வில்லி ஜெயலலிதா.

கே:– உங்களை மிகவும் கவர்ந்த அரசியல்வாதி யார்?

ப:– எம்.ஜி.ஆர்.

கே:– முதல்வரானதும் நீங்கள் எதில் முதல் கையெழுத்து போடுவீர்கள்?

ப:– முதல்–அமைச்சராக பதவி ஏற்பதற்கான ஆவணத்தில்தான் முதல் கையைழுத்து போடுவேன்.

கே:– கேப்டன் டி.வி.யில் இப்போது ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி எது தெரியுமா?

ப:– நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது இல்லை.

கே:– ஒவ்வொரு கட்சியும் மாற்றத்தை ஏற்படுத்தப் போவதாக சொல்கின்றன? நீங்கள் எத்தகைய மாற்றத்தை உருவாக்கப் போகிறீர்கள்?

ப:– உண்மையான மாற்றத்தை நான்தான் ஏற்படுத்தப்போகிறேன்.

கே:– நீங்கள் அடிக்கடி கோபப்படுகிறீர்கள். பொது இடங்களில் கூட உங்கள் கட்சி தொண்டர்களை அடித்து விடுகிறீர்கள்? ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?

ப:– தவறு எங்கு நடந்தாலும் அதை தட்டிக் கேட்கும் குணம் எனக்கு உண்டு. தவறு நடக்கும் போது உடனுக்குடன் தண்டிப்பது எனக்கு சிறு வயதில் இருந்தே பழக்கமாகி விட்டது.

அது நிஜ வாழ்க்கையானாலும் சரி, சினிமாவாக இருந்தாலும் சரி தவறு செய்தால் அடித்து விடுவ துண்டு. மற்றபடி இது தொடர்பான விமர்சனங்கள் பற்றி நான் கவலைப்படு வதில்லை.

கே:– நீங்கள் பவர் ஸ்டார் மாதிரி நடந்து கொள்வது ஏன்?

ப:– இப்போதும் நான் பவரான ஸ்டாராகத்தான் இருக்கிறேன். ஆனால் பவர் ஸ்டாராக இல்லை. அது போல நான் சாதி, மதமும் பார்ப்பது இல்லை.

கே:– நீங்கள் ஆட்சிக்கு வந்தால் சகாயத்தை தலைமை செயலாளர் ஆக்கப்போவதாக சொல்கிறார்களே உண்மையா?

ப:– எனது தலைமையிலான நிர்வாகத்தில் நல்ல, திறமையான அனைத்து அதிகாரிகளுக்கும் உரிய இடம் உண்டு.

கே:– முதல்–அமைச்சர் ஆனால் உங்களது வரி கொள்கை என்ன? சாரயக் கடைகளை மூடி விட்டால் வருவாய் இழப்பு ஏற்படுமே? அதற்கு என்ன மாற்று ஏற்பாடு செய்யப் போகிறீர்கள்?

ப:– பொறுத்து இருந்து பாருங்கள். நான் என்ன செய்யப் போகிறேன் என்று உங்களுக்கு கொஞ்சம், கொஞ்சமாக தெரிய வரும்.

நான் ஆட்சிக்கு வந்ததும் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொடுப்பேன். அது போல விவசாயம், கல்வித் துறையை மேம்படுத்தவும் என்னிடம் பிரத்யேகமான சில திட்டங்கள் உள்ளது.

கே:– தேர்தலில் நீங்கள் ரஜினி மற்றும் விஜய்யிடம் ஆதரவு கேட்பீர்களா?

ப:– பதில் சொல்ல விரும்பவில்லை.

கே:– மக்கள் நலக் கூட்டணியில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதி மொழி கொடுத்து இருக்கிறார்களே.... அதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

ப:– நாங்கள் பொதுவான லட்சியத்துக்கான இலக்கை அடையபாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

கே:– தேர்தலில் அ.தி.மு.க. அல்லது தி.மு.க.தான் ஆட்சியைப் பிடிக்கும் என்று சொல்கிறார்கள்? தே.மு.தி.க.வுக்கு எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

ப:– நான் என்ன ஜோசியனா....? தேர்தல் முடிவு வரும் போது அது உங்களுக்கு தெரியும். அ.தி.மு.க. வரும், தி.மு.க. வரும் என்று சொல்வதெல்லாம் உங்கள் தனிப்பட்ட ஆசையாகும்.

கே:– வட மாவட்டங்களில் பா.ம.க.வை வீழ்த்த என்ன வியூகம் வைத்து இருக்கிறீர்கள்?

ப:– அவர்களது தேர்தல் திட்டம் மற்றும் நடவடிக்கைகளிலேயே அவர்களது தோல்வி உள்ளது.

கே:– கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் பத்திரிகையாளர்களை புறக்கணிக்கிறீர்கள். இது உங்களைப் பாதிக்காதா?

ப:– மக்கள் முடிவு செய்து விட்டால் எதையும் என்னால் செய்ய முடியும்.

கே:– சினிமாவில் மீண்டும் நடிப்பீர்களா? மீண்டும் உங்களை திரையில் பார்க்க முடியுமா?

ப:– ஆமாம் பார்க்கலாம். ‘‘தமிழன் என்று சொல்லடா’’ என்ற படத்தில் நடிக்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

மேலும் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமையும் (8ஆம் திகதி) விஜயகாந்த் இது போன்று டுவிட்டரில் பதிலளிக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.