பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 2500 ரூபா கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கு இம்­மாதம் 24ஆம் திகதி வரை அர­சாங்­கத்­துக்கும், கம்­ப­னி­க­ளுக்கும் காலக்­கெடு விதிக்­கின்றோம். சரி­யான தீர்வு கிடைக்­கா­விட்டால் மே மாதம் 25 ஆம் திகதி நாடு தழு­விய, மலை­யகம் தழு­விய வேலை நிறுத்தப் போராட்­டத்தை தமிழ் முற்­போக்கு கூட்­டணி நடத்தத் தயா­ராக இருக்­கின்­றது என தமிழ் முற்­போக்கு கூட்­டணி தலை­வரும், அமைச்­ச­ரு­மான மனோ கணேசன் தெரிவித்தார்.

நேற்று தல­வாக்­கொல்­லையில் இடம்­பெற்ற தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் மேதின கூட்டத்தில் கலந்துகொண்டு உரை­யாற்றுகையிலேயே அமைச்சர் மனோ கணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொழி­லாளர் தேசிய சங்கம், மலை­யக மக்கள் முன்­னணி, ஜன­நா­யக மக்கள் முன்­னணி ஆகி­யன இணைந்த தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் மேதின கூட்டம் நேற்று தல­வாக்­கொல்லை நகர சபை மைதா­னத்தில் இடம்­பெற்­றது. ஜன­நா­யக மக்கள் முன்­னணி தலைவர் அமைச்சர் மனோ கணேசன், தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலைவர் அமைச்சர் பி. திகாம்­பரம், மலை­யக மக்கள் முன்­னணி தலை­வரும் இரா­ஜாங்க அமைச்­ச­ரு­மான வீ. இரா­தா­கி­ருஸ்ணன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஏ. அர­விந்தகுமார், எம். தில­கராஜ், மத்­திய மாகாண சபை உறுப்­பி­னர்கள் சோ. ஸ்ரீதரன், ஆர். இரா­ஜாராம், எம். உத­ய­குமார், சிங். பொன்­னையா, சரஸ்­வதி சிவ­குரு, மேல் மாகாண சபை உறுப்­பி­னர்கள் கே.டி. குரு­சாமி, சண். குக­வ­ரதன், தமிழ் முற்­போக்கு கூட்­டணி பொதுச் செய­லாளர் ஏ. லோறன்ஸ், தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் பொதுச் செய­லாளர் எஸ். பிலிப். ட்ரஸ்ட் நிறு­வனத் தலைவர் வீ. புத்­தி­ர­சி­கா­மணி உட்­பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்­டனர்.

தல­வாக்­கொல்லை பஸ்­த­ரிப்பு நிலை­யத்­துக்கு அரு­கி­லி­ருந்து ஆயிரக் கணக்­கான மக்கள் புடை­சூழ பேரணியாக புறப்­பட்டு மைதா­னத்தை வந்­த­டைந்­தது.

கூட்­டத்தில் அமைச்சர் மனோ கணேசன் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

நாட்டில் அர­சியல் மாற்­றத்தை ஏற்­ப­டுத்தி ஜனா­தி­ப­தியை தெரிவு செய்­யவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் தேசிய அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்­தவும் தமிழ் முற்­போக்கு கூட்­டணி பாரிய பங்­க­ளிப்பை செய்து வந்­துள்­ளது. அதன் அடிப்­ப­டையில் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியைச் சேர்ந்த தலை­வ­ரா­கிய நானும், பிரதித் தலை­வர்­க­ளான பி. திகாம்­பரம், வீ. இரா­தா­கி­ருஸ்ணன் ஆகி­யோரும் அமைச்­சர்­க­ளாக பதவி வகித்து வரு­கின்றோம்.

தோட்­டங்­களில் லயன்­களை ஒழித்து தலா ஏழு பேர்ச் காணியில் தனி வீடு­களை அமைத்து புதிய கிரா­மங்­களை உரு­வாக்கும் திட்டம் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது. இவை தவிர, மலை­ய­கத்தில் கல்வி அபி­வி­ருத்தி, பாதை அபி­வி­ருத்தி, குடிநீர்த் திட்­டங்­களும் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

மலை­யக மக்­க­ளுக்கு எத்­த­னையோ அடிப்­படை பிரச்­சி­னைகள் இருந்­தாலும் சம்­பளப் பிரச்­சி­னையே முக்­கி­ய­மாக இருக்­கின்­றது. நாம் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற கார­ணத்தால், வரவு செலவுத் திட்­டத்தில் தனியார் துறை ஊழி­யர்­க­ளுக்கு அறி­விக்­கப்­பட்ட 2500 ரூபா சம்­பள உயர்வை தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்­கையை முன்­வைத்தோம். அந்தக் கோரிக்கை ஏற்றுக் கொள்­ளப்­பட்டு அமைச்­ச­ர­வையின் அங்­கீ­கா­ரமும் பெறப்­பட்­டி­ருந்­தது. தொழில் அமைச்சர் இந்த சம்­பள உயர்வை வழங்க வேண்டும் என்று உறு­தி­யாக இருந்தார். எனினும், இன்று வரை சம்பள உயர்வு கிடைக்­க­வில்லை. கம்­ப­னி­களும் சம்­பள உயர்­வுக்­கான பேச்­சு­வார்த்­தையை இழுத்­த­டித்து வரு­கின்­றன. எனவே, தமிழ் முற்­போக்கு கூட்­டணி பொறுமை இழந்த நிலையில் இருக்­கின்­றது. இந்த நாட்டில் முது­கெ­லும்­பாக இருந்து உழைத்து வரும் தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள உயர்வில் காட்­டப்­பட்டு வரும் அச­மந்தப் போக்கை நாம் வன்­மை­யாகக் கண்­டிக்­கின்றோம்.

தோட்டத் தொழி­லா­ளர்­களின் 2500 ரூபா சம்­பள உயர்வை உட­ன­டி­யாக வழங்க வேண்டும். அத்­தோடு, ஜன­வரி மாதம் முதல் கிடைக்க வேண்­டிய நிலு­வை­யையும் சேர்த்து வழங்க வேண்டும். அவ்­வாறு வழங்கத் தவ­றினால், நாடு தழு­விய ரீதி­யிலும், மலை­யகம் தழு­விய ரீதி­யிலும் ஒரு நாள் அடை­யாள வேலை நிறுத்­தத்தை நடத்­து­வதற்கு தமிழ் முற்­போக்கு கூட்­டணி தீர்­மானம் எடுத்­துள்­ளது.

ஜனா­தி­ப­திக்கும், அர­சாங்­கத்­துக்கும், கம்­ப­னி­க­ளுக்கும் இம் மாதம் 24 ஆந் திகதி வரை கால அவ­காசம் தரு­கின்றோம். அதற்­கி­டையில் சம்­பளப் பிரச்­சி­னைக்கு சரி­யான தீர்வு கிடைக்­காத பட்­சத்தில் இம் மாதம் 25 ஆம் திகதி புதன்­கி­ழமை மாபெரும் ஒரு நாள் அடை­யாள வேலை நிறுத்தப் போராட்­டத்தை நிச்­சயம் நடத்­துவோம். தமிழ் முற்­போக்கு கூட்­டணி தலை­வர்கள் மக்­க­ளுக்­காக வீதியில் இறங்கிப் போராடவும் தயாராக இருக்கின்றோம்.

இந்த மேதினத்தில் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு கிடைக்காமல் அவர்கள் கஷ்டங்களை அனுபவித்து வருகின்ற நேரத்தில் எமக்கு மாலை, பொன்னாடை அணிவிப்பதையும், பட்டாசு கொளுத்துவதையும் தவிர்த்துக் கொள்ளுமாறு மக்களை வேண்டிடிக் கொண்டோம். அதற்கு மக்களும் செவி சாய்த்துள்ளார்கள். இந்த ஒற்றுமையும், கட்டுப்பாடும் தொடர்ந்து பேணப்பட வேண்டும் என்றார்.