கிணறு வெட்ட கிளம்பும் பூதங்கள்

Published By: J.G.Stephan

16 Jun, 2019 | 03:57 PM
image

‘கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை’ என்ற பழமொழியை நாம் சிறுவயது முதலே பயன்படுத்தி வருகின்றோம். உண்மையில், கிணறு தோண்டும் வேளையில்  பஞ்சபூதங்கள் வெளியில் வருவதே இப் பழமொழியின் உள்ளர்த்தம் என்று கூறப்பட்டாலும், நாம் ஏதாவது ஒரு காரியத்தை மேற்கொள்ளும் போது எதிர்பாராத விதமாக உள்ளிருந்து வேறொரு பூதாகரமான விடயம் வெளியில் வருவதை உவமானப்படுத்தவே இச் சொற்றொடரை பயன்படுத்தி வருகின்றோம். 

அந்த வகையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள முஸ்லிம்களுக்கு எதிரான நெருக்கடி, பயங்கரவாதப் பிரச்சினை, அதன்பின்னரான தெரிவுக்குழு விசாரணை போன்ற நடவடிக்கைகளின் போதும் என்னவோ செய்யப்போய், என்னவோ வெளிப்பட்டுக் கொண்டிருப்பதை உன்னிப்பாக நோக்குவோரால் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. 

முதலாவது விடயம், முஸ்லிம் சமூகத்திற்குள் வாழ்ந்த சில கேடுகெட்ட சக்திகள் செய்த பயங்கரவாத செயலைப் பின்னணியாகக் கொண்டு இன்று அந்த சமூகத்தின் மீது பல கோணங்களிலும் கட்டமைக்கப்பட்ட நெருக்குவாரங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. பௌதீக ரீதியிலான இன வன்முறைகளுக்கு மேலதிகமாக, சட்டம் மற்றும் அரச நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தல் என்ற கிணற்றை தோண்டுவதற்காக மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படுகின்ற நடவடிக்கைகள் முஸ்லிம்களை அச்சமூட்டுவனவாக மாறியிருக்கின்றன. 

புர்கா தடைக்குப் பின்னரான ஆடை பற்றிய சுற்றுநிரூபங்கள், நாட்டில் அரபு மொழியை தடை செய்ய வேண்டும் என்ற கோஷங்கள், அரபு மத்ரஸாக்கள் மற்றும் முஸ்லிம்களின் இன்னோரன்ன விடயங்கள் குறித்த வெளித்தரப்பின் கருத்துக்கள், இவர்களது மனதுக்குள் இப்பேர்ப்பட்ட பூதங்கள் எல்லாம் ஒழிந்து கொண்டு இருந்திருக்கின்றனவா என்று முஸ்லிம்கள் ஆச்சரியப்படும் நிலைமைகளை ஏற்படுத்தியிருக்கின்றன.

இரண்டாவதாக,  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய விசாரணைகளில் ஒரு அங்கமாக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு விசாரணைகளில் புதுப்புது பூதங்கள் வெளிக்கிளம்பிக் கொண்டிருக்கின்றன. அதில் முக்கியமாக உயர் பொலிஸ், புலனாய்வு அதிகாரிகள் வெளியிடுகின்ற கருத்துக்கள் இந்த நாட்டின் ஆட்சியாளர்களில் முக்கியமானவர்கள் குறித்த ஒருவித நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியிருக்கின்றது. இதற்கு பின்னால் பலம்மிக்க ஒரு மறைகரம் இருந்திருக்கின்றதா என்ற வலுவான சந்தேகத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. 

மூன்றாவதாக, தெரிவுக்குழு விசாரணைக்காக முஸ்லிம் அரசியல்வாதிகளும் அழைக்கப்பட்டுள்ளனர். இது முஸ்லிம்களின் ஒருமித்த நிலைப்பாட்டை தெரிவுக்குழுவுக்குச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக அமைவதுடன் முஸ்லிம் அரசியல்வாதிகள் தங்களை சுத்தமானவர்களாக நிரூபிப்பதற்கான தருணமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒருவர் மற்றையவரை போட்டுக் கொடுத்துவிட்டாவது தப்பிவிட முனைவார்களா என்ற அச்சம் முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கின்றது. 

நான்காவதாக, குருணாகலில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் வைத்தியரான மொஹமட் ஷாபி மீதான விசாரணைகள், யாரும் எதிர்பார்த்திராத பூதங்களை வெளித்தள்ளிக் கொண்டிருக்கின்றன. ஷாபியையும் அதனூடாக முஸ்லிம்களையும் குற்றவாளி கூண்டில் நிறுத்த நினைத்த சக்திகள் முன்னே புதுவிதமான சிக்கல்கள், விடைகாண வேண்டிய வினாக்கள் எழுந்து நிற்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. 

இப்படி முஸ்லிம்களை பூதங்கள் போன்ற பல நடவடிக்கைகள் அச்சமான சூழ்நிலைக்கு ஆளாக்கிக் கொண்டிருக்க, இவ்வரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது தமது முதன்மை தேர்தல் பிரசாரமாக முன்வைத்த ரக்பி வீரர் வசீம் தாஜூதீன், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலைகள் தொடர்பாக, ஏற்கனவே போத்தலில் அடைக்கப்பட்ட பூதங்களை மீண்டும் வெளியில் எடுத்து, விசாரிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

மறுபுறத்தில், முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக ஒன்றுபட்டு தமது பதவிகளை இராஜினாமா செய்தமை இச் சமூகத்தின் ஒற்றுமையை வெளிக்காட்டியது. ஆனால், முஸ்லிம்கள் இந்த அரசாங்கத்தில் பதவியில் இருந்து அர்த்தமில்லை என்ற கோதாவில் ஒருகுழுவினர் பதவி துறக்க, மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த முஸம்மில் நியமிக்கப்பட்டார். அவரும் எந்த சலனமும் இன்றி அப்பதவியை ஏற்றுக் கொண்டார். முஸ்லிம்களின் கையைப் பிடித்தே அரசாங்கம் முஸ்லிம்களுக்கு ஒரு குட்டுப் போட்டுள்ளது எனலாம்.

ஆகவே, இந்தப் பின்னணியில் நோக்கினால், இலங்கையில் நமது சகோதர மக்களை உயிர்ப்பலி எடுத்த இஸ்லாமிய பெயர்தாங்கி பயங்கரவாதத்தின் அடிவேர்களை அறுப்பதுடன் சிங்கள கடும்போக்கு மற்றும் இனவாத சக்திகளையும் அதாவது இவ்விரு பூதங்களுக்கும் மருந்து கட்டி, ஒரு குடுவையில் அடைக்க வேண்டியதொரு இக்கட்டான காலகட்டத்தில் வேறு சின்னச்சின்னப் பராக்குகளில் இலங்கை சமூகம் முழுக்  கவனத்தையும் செலுத்தியிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. தேர்தலை மையமாக கொண்ட அரசியல் நகர்வுகள் இவ்வாறான ஒவ்வொரு விடயங்களிலும் கணிசமான செல்வாக்கை செலுத்திக் கொண்டிருக்கின்றன.

தூதுவர் பதவி

இந்த நாட்டில் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக அதுபற்றி உளவுத் தகவல் கிடைக்கப் பெற்றமை, தாக்குதலில் 250 பேர் பலியான பின்னரே வெளியில் கசிந்தது. இது கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. அந்தவகையில், பாதுகாப்புத் தரப்பு பக்கத்திலும் நிறைய தவறுகள், கவனமின்மைகள் இடம்பெற்றிருக்கின்றன என்பதும், புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்தும், அது குறிப்பிட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் இன்று பேசுபொருளாகியுள்ளது.  

எனவே, பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கின்ற சமகாலத்தில், முஸ்லிம்களை மட்டுமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாமல் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளிடமும் விசாரணை செய்ய வேண்டிய தார்மிகக் கடமை அரசுக்கு இருக்கின்றது. இதற்குப் பின்னால் யார், எந்த சக்தி இருந்திருக்கின்றது என்பதை கண்டறிந்து மக்களுக்கு சொல்வதுடன் எதிர்காலத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் இது அவசியமானது. அரசாங்கம் மற்றும் ஆட்சியாளர்கள் என்ன நினைத்தாலும் இறைமையுள்ள அரசு அதற்கு கடப்பட்டுள்ளது. பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டமையை அதில் ஒரு அங்கமாக குறிப்பிடலாம். 

இந்தப் பாராளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் பாதுகாப்பு உயரதிகாரிகள், புலனாய்வாளர்கள், அரசியல்வாதிகள், பொறுப்புவாய்ந்த பதவிகளில் இருப்போர், முன்னாள் ஆளுநர்கள் எனப் பலர் விசாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இங்கு வழங்கப்படும் வாக்குமூலங்களின் உண்மைத்தன்மை பற்றி நமக்குத் தெரியாது. ஆனாலும் பாதுகாப்பு மற்றும் அரசியல் அரங்கில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை மறுப்பதற்கில்லை. 

முன்னதாக, கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டிருந்த பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகினார். பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தேவையில்லையென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு ஆலோசனை வழங்கியதாக அவர் அங்கு குறிப்பிட்டார். தொடர்ந்து சாட்சியமளித்த அவர், இடமாற்றம் தொடர்பான விவகாரமொன்றுக்காக, ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதியன்று, தான் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதிலும், அது தவிர்ந்த பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளத் தேவையில்லையென ஒவ்வொரு தவணைக் கூட்டத்தின் போதும் தனக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

அப்போது பாதுகாப்பு அமைச் சின் செயலாளராக இருந்தவரால் இவ்வறிவுறுத்தல் வழங்கப்பட்ட தாகவும், ஜனாதிபதியின் அறிவுறுத்த லுக்கமையவே, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தி ருந்ததாக பூஜித ஜயசுந்தர கூறினார். 

தெரிவுக்குழு முன்னிலையில் அவர் இவ்வாறு கூறியமை பல்வேறு மட்டங்களிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஒரு நாட்டின் பொலிஸ் மா அதிபரே பாதுகாப்பு சபை கூட்டங்களுக்கு அழைக்கப்படாதது ஏன்? அதுதான் விதிமுறையா? என பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுவதை தவிர்க்க முடியாதிருந்தது. அதுவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்பேற்றால் ஜனாதிபதி தனக்கு வெளிநாட்டு தூதுவர் பதவி தருவதாக பூஜித ஜயசுந்தர கூறியிருக்கின்றமை பல சந்தேகங்களை எழுப்பியிருக்கின்றது. 

இதேபோன்று, கடமையிலிருக்கின்ற பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க இடமளிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரி கூறியிருந்த நிலையில் பதவி விலகி, பின்னர் சாட்சியமளித்த ஹேமசிறி பெர்னாண்டோவின் சாட்சியம் மட்டுமன்றி, பயங்கரவாத ஒழிப்புப் பிரிவின்  முன்னாள் தலைவர் நாலக்க டி சில்வா, புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மெண்டிஸ் போன்றோர் வழங்கியுள்ள சாட்சியங்களும் பல பூதங்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றன. 

இவ்விசாரணைகளில் வெளிவரும் தகவல்கள், அது கையாளப்படும் விதம் ஆகியவற்றை பார்க்கின்றபோது அரச உயர்மட்டத்தில் யாரோ பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டிருக்கின்றார்கள் என்ற விமர்சனம் பரவலாக முன்வைக்கப்படுகின்றது. எங்கோ ஏதோ நடந்திருக்கின்றது என்ற சந்தேகம் அடிமட்ட பொது மக்களுக்கும் ஏற்பட்டிருப்பதாகச் சொல்ல முடியும். 

முஸ்லிம் புள்ளிகள்

இதற்கிடையில், முன்னாள் மேல் மாகாண ஆளூநர் அஸாத் சாலியும் முன்னாள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வும் தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர். முன்னதாக, சாட்சியமளித்த அஸாத் சாலி பல முக்கிய விடயங்களைக் கூறி தன்மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தார். அத்துடன் நின்றுவிடாது, ஹிஸ்புல்லாஹ் – பயங்கரவாதி சஹ்ரான் தொடர்புபற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதில் ஒரு புதிய சர்ச்சையை தோற்றுவித்தது எனலாம். 2015 ஆண்டு தேர்தல் காலப்பகுதியில் இவ்விருவரும் ஒப்பந்த அடிப்படையிலான இணக்கப்பாடுகளுடன் செயற்பட்டனர். தேர்தல் காலத்தில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக்கூடாது என்பது போன்ற விடயங்களையே அவர்கள் ஒப்பந்தம் செய்துகொண்டதாக அறிந்தேன் என்று கூறியிருக்கின்றார். உண்மையில் சாலி கூற வந்த விடயத்திலுள்ள ‘ஒப்பந்தம்’ என்ற விடயமே ஊடகங்களால் பிரசித்தப்படுத்தப்பட்டதால், வழக்கம் போல முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளுக்காள் போட்டுக் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள் என்ற எண்ணம் பரவலாக ஏற்பட்டது. அத்துடன் வேறு குழப்பங்களும் தோற்றம்பெறத் தொடங்கின.  இருப்பினும், இதன்பின்னர் தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த ஹிஸ்புல்லாஹ் கிட்டத்தட்ட அஸாத் சாலி கூறிய விடயங்களை தெளிவுபடுத்தும் வகையில் கருத்துப் பதிவு செய்திருக்கின்றார். குறிப்பாக, 2015ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் முடிவடைந்த பின்னர், சஹ்ரான் தனது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்ததாகவும் அரசியல் ரீதியில், மேலும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைந்து, அப்போது அவரைச் சந்தித்ததாகவும் ஹிஸ்புல்லாஹ் கூறியுள்ளார். 

அப்போது சஹ்ரான் பயங்கரவாதியாக இருக்கவில்லை என்றும் தெரிவித்த ஹிஸ்புல்லாஹ், பிரதேசத்தின் வாக்கு களை பெற்றுக்கொள்வதற்காக, அவருடைய சில நிபந்தனைகளுக்கு தான் இணங்கியதாகவும் இருப்பினும் (நடைமுறைச் சாத்தியமற்ற) நிபந்தனைகளை தான் விரும்பாத காரணத்தால், 2000 ஆயிரம் வாக்குகளால் தன்னை சஹ்ரான் தோற்கடித்ததாகவும் விளக்கமளித்துள்ளார். சஹ்ரான், ஒருபோதும் தனக்கு உதவவில்லை என்றும் தானும், ஒருபோதும் அவருக்கு உதவவில்லை என்றும் ஹிஸ்புல்லாஹ் மறுத்துரைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஆடையும் அரபும்

இதேவேளை, முஸ்லிம் பெண்களின் ஆடைகள் மற்றும் அரபு எழுத்துக்கள் பற்றிய அச்சம் வலுவாக கட்டமைக்கப்பட்டுள்ளதுடன் இவற்றை கட்டுப்படுத்துவதற்கான அரச பொறிமுறைகளும் வகுக்கப்பட்டு வருகின்றன. இது முஸ்லிம்களின் எதிர்காலம் குறித்து அச்சமூட்டும் பூதங்களைப் போல தென்படுகின்றன. 

முன்னதாக முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் புர்கா, நிகாப் ஆகிய ஆடைகள் தடை செய்யப்பட்டன. நாட்டின் பாதுகாப்பிற்கு இது அவசியமானதே. அதுமட்டுமன்றி, முகத்தை மூடாத ஆடையை அணியும் அனுமதியையும் சட்டம் முஸ்லிம்களுக்கு வழங்கியிருந்தது.

 இந்நிலையில், பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபம் முஸ்லிம்கள் முகம்சுளிக்கும் விதத்தில் மட்டுமன்றி, ஒருவித அடிப்படை உரிமை மீறலாகவும் அமைந்துள்ளது. 

அரச அலுவலகங்களில் கடமை புரியும் பெண்கள் சாரி மற்றும் ஒசரி வகை ஆடைகளை அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், யாராவது தமது கலாசார ஆடையை அணிய விரும்பினால் மேற்குறிப்பிட்ட சாரி அல்லது ஒசரி வகை உடையும் அதற்கு மேலதிகமாக மேற்குறித்த கலாசார ஆடை ஒன்றையும் அணியலாம் என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.  முஸ்லிம் பெண்கள் அபாயாவுடன் தலையை மூடும் ஹிஜாப் அல்லது பர்தாவை அணிகின்றனர். இங்கு ‘அவ்வாறான ஒரு ஆடை’ என்று வாசகத்தின் மூலம் இதில் இரண்டில் ஒரு ஆடையை மாத்திரம் அணியவும், தாம் விரும்பாவிட்டாலும் சாரியை அணியவும் முஸ்லிம் பெண்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர். இதனை வாபஸ் பெறுவதாக பிரதமர் அலுவலகம் இரு தடவை அறிவித்திருப்பினும், இக்கட்டுரை எழுதப்படும் வரை திருத்தப்பட்ட சுற்றறிக்கை வெளியாகவில்லை. 

இது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் விசனத்தை தோற்றுவித்துள்ளதுடன், இச் சுற்றறிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்படியாக ஆடை, ஹலால் மற்றும் இன்னபிற விடயங்களை பூதாகரமாக்குவதானது தமக்கெதிராக இத்தனை காலமும் கயமைத்தனத்துடன் ஒளிந்திருந்த பூதங்கள் வெளிப்படுவதாகவே முஸ்லிம்கள் கருதுகின்றனர். 

இந்த  நாட்டில் மும்மொழிக் கொள்கையே இன்னும் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. கணிசமான அரச அதிகாரிகளுக்கு மற்றைய மொழி சரளமாக தெரியாது. நாட்டில் பாலி மொழி கல்வெட்டுக்கள் இன்னுமுள்ளதுடன் சீன மொழி போன்ற மொழிகளும் பரவலாக காணப்படுகின்றன. 

 இலங்கை அரபு நாடல்ல. முஸ்லிம்களுக்கு அரபு தாய்மொழி என்றும் சொல்ல முடியாது என்ற நிலையில் அளவுக்கதிகமாக அரபு மொழிப் பயன்பாடு அவசியமற்றது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், அரபு மொழி இன்று சித்தரிக்கப்படும் விதம் அது குறித்த அச்சத்தை ஏற்படுத்தி இவ்விவகாரத்தை பூதாகர நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். 

இத்தனை பூதங்களுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கின்றது. இவை எல்லாமே சமகாலத்தில் முஸ்லிம்களை அச்சுறுத்துகின்றன. 

ஏ.எல்.நிப்றாஸ் 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48