ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டம்  காலி சமனல  மைதானத்தில் இன்று நடைபெற்றது.  

'தாய் நாட்டுக்கான தொழில் ஸ்தலம்' என்ற தொனிப் பொருளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான மேதினப் பொதுக்கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று  ஞாயிற்றுக்கிழமை காலி சமனல மைதானத்தில் இடம் பெற்றது. 

பொதுக்கூட்டம் ஆரம்பமாவதற்கு முன் காலி தெவட்ட முச்சந்தியிலிருந்து மேதின ஊர்வலம் ஆரம்பமானது. 

இந்த ஊர்வலத்தில் பொலன்நறுவை மாவட்டத்தைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் நீல நிற டீ-சேட் அணிந்து பொலன்நறுவை மற்றும் மைத்திரி என்று எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திவந்தனர். 

இதன் பின் 22 மாவட்டங்களைச் சேர்ந்த சுதந்திரக் கட்சி ஆதரவாளர் ஊர்வலமாக வந்தனர். வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பெரும் எண்ணிக்கையிலான  தமிழ் மக்களும் இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் 

ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இ.தொ.கா, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி, அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், சரத் மனமேந்திர தலைமையிலான நவ சிஹல உறுமய, தொழிலாளர் கட்சி தலைவரான ஏ.எஸ்.பி லியனகே, பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் உட்பட 17  கட்சிகள், பல்வேறு தொழிற்சங்கங்கள் காலி மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டன.

பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமான ஊர்வலம் 3 மணி கடந்தும்  மைதானத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது. அனைத்து மதங்களை சேர்ந்த மத குருமார்களும் இந்த மேதினக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். 

சமனல மைதானம் உட்பட காலி நகர் முழுவதும் காட்சிப்படுத்தப்பட்ட பதாதைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர்களான எஸ்.டப்ள்யு. ஆர்.டி. பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க , சந்திரிக்கா குமாரதுங்க  மற்றும் மஹிந்த ராஜபக்ஷ  ஆகியோரின்   புகைப்படங்கள் காணப்பட்டன . 

டிஜிட்டல் முறையில் அமைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திறந்த அரங்கில் பாரிய கை உருவமொன்று வைக்கப்பட்டிருந்தது.