(ஆர்.யசி)

புதிய பொருளாதாரம், புதிய சமூகத்திற்கான மக்களை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. 

ஜே.வி.பி யின் அரசியல் உறுப்பினர்கள் தொழிற்சங்க அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் மற்றும் சர்வதேச தொழிற்சங்க அமைப்புகளின் பிரதானிகள் என சகலரும் ஜே.வி.பி யின் மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மக்கள் விடுதலை முன்னணி நடத்திய  மேதினக் கூட்டம் இம்முறை தெகிவளை எஸ்.ஜே.எஸ் ஜெயசிங்க மைதானத்தில் ஆரம்பமாகியது. 

இன்று நண்பகல் 12மணிக்கு தெகிவளையில் ஆரம்பித்த இந்த மேதின ஊர்வலம் கொழும்பு ஹெவோலோக் நகர் பீ.ஆர்.சி மைதானத்தில் நிறைவடைந்தது. 

மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்க அமைப்புகளின் தலைமையில் நடைபெற்ற இந்த மேதினக் கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக, கட்சியின் உறுப்பினர்களான விஜித ஹேரத், ரில்வின் சில்வா, லால் காந்த, சுனில் ஹன்துன்நெத்தி, பிமல் ரத்நாயக, சுனில் வடகள மற்றும் தொழிற்சங்க அமைப்புகளின் உறுப்பினர்கள், இடதுசாரி நாடுகளின் இலங்கை பிரதிநிதிகள், சர்வதேச நாடுகளின் உயரிஸ்தானிகர்கள் கலந்துகொள்கின்றனர். 

அதேபோல் இம்முறை மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டத்தில் உலக தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் ஜோர்ச் கலந்துகொண்டிருந்தார்

இந்த மேதினக் கூட்டத்தின் போது அனைத்து நிறுவன ஊழியர்கள் சங்கம், சுரண்டலுக்கு எதிரான உழைக்கும் மக்கள் சங்கம், சோஷலிச தொழில் சங்கம், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம், இலங்கை மின்சார தொழித் சங்கம், அகில இலங்கை சுவசேவை சங்கம், அகில இலங்கை தொழில் சங்கம், அகில இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இலங்கை துறைமுக சேவைகள் ஊழியர் சங்கம், அகில இலங்கை புகையிரத சேவைகள் சங்கம், நியமனம் பெற்ற பட்டதாரிகள் சங்கம், அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம், சோசலிச விவசாயிகள் சங்கம், அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனம், சோஷலிச பிக்குகள் சம்மேளனம், சோஷலிச இளைஞர் சங்கம் உள்ளிட்ட நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள தொழித்சங்கங்கள் மக்கள் விடுதலை முன்னணியின் மேதின ஊர்வலத்தில் கலந்துகொண்டன. 

இதன்போது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்துகொடு, உரிமைகளை வென்றிட ஒன்றினைந்து போராடு, தொழில் உரிமைகளை பாதுகாப்பது சகலரதும் கடமையாகும், ஒப்பந்த ஊழியர் முறைமையை உடனடியாக ரத்துசெய், தனியார் ஊழியர்களின் ஊதியத்தை வழங்கு, எட்டு மணிநேர வேலையை உறுதிசெய், விவசாயிகளின் மானியத்தை உறுதிசெய், கல்வியை தனியார் பயப்படுதலை உடனடியாக தடைசெய், மக்களை பொருளாதார பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு வேண்டும், தொழிலாளர் தினத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தொழிலாளரின் உரிமைகளும், அவர்களின் சுதந்திரத்தையும்  பெற்றுகொடுக்க வேண்டும், தொழிலாளரின் உரிமைகளை ஒன்றிணைந்து வெற்றிகொள், மக்களின் உரிமைக்காக, தொழிலாளர் நலனுக்காக குரல்கொடு என பதாதைகளையும் ஏந்திய வண்ணமும், கோசங்களை எழுப்பியவண்ணமும் ஊர்வலமாக சென்றனர்.