மீள்பார்வை செய்யவேண்டிய நிலையில் சிறுபான்மையினர்

Published By: Digital Desk 3

08 Jun, 2019 | 03:12 PM
image

சிறு­பான்மைச் சமூ­கத்­தவர் தம்மை மீள்­பார்வை செய்­ய­வேண்­டிய ஒரு நிர்ப்­பந்­தத்­துக்கு ஆளாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.  ஒன்­று­பட வேண்­டிய காலத்தின் கட்­டா­யத்­துக்கு ஆளாக்­கப்­பட்­டுள்­ளார்கள். அண்­மைக்­கால சம்­ப­வங்­களும் முஸ்லிம் அமைச்­சர்­களின் ராஜி­னாமா தொடர்­பான செய்­தி­களும் இதனைத்தான் வெளிக்­காட்டி நிற்­கின்­றன.

இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் எப்­பொ­ழு­துமே பதி­யப்­ப­டாத அதிர்ச்சிதரும் புரட்­சி­யாக இது காணப்­ப­டு­கி­றது. முஸ்லிம் சமூ­கத்­த­வர்­க­ளுக்கும் அவர்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் தலை­மை­க­ளுக்கும் கொடுக்­கப்­பட்ட நெருக்­க­டிகள், நிர்ப்­பந்­தங்கள் கார­ண­மாக இன்­றைய அர­சாங்­கத்தில் அங்கம் வகித்த அமைச்­சர்கள் அனை­வரும் ஒன்­றாகத் தமது பத­வி­களை ராஜி­னாமா செய்­துள்­ளனர்.

நெருக்­க­டிகள், ஊர்­வ­லங்கள், உண்­ணா­வி­ர­தங்கள் நம்­பிக்­கை­யில்லாத் தீர்­மா­னங்கள், கடும்­போக்கு விமர்­ச­னங்கள், கைதுகள், தேடுதல் வேட்­டைகள் என ஏரா­ள­மான பக்க தாக்­கு­தல்­களால் ஓர் இனம் முடக்­கப்­பட்டுக் ­கி­டந்­தது.

சுதந்­தி­ரத்­துக்குப் பின்­னுள்ள எல்லாக் காலப்­ப­கு­தி­யிலும் இல்­லாத நெட்­டூ­ரங்கள் பல முனை­களால் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டி­ருந்தன. 2013 ஆம் ஆண்டு காலப்­ப­குதி யிலி­ருந்து தொகுத்துப் பார்ப்பின் இச்­ச­மூ­கத்­துக்கு எதி­ராக, பள்­ளி­வாசல் எரிப்­புகள், உடைப்­புகள், ஹலால், பர்தா எதிர்ப்­புகள், கடை உடைப்­புகள், கிறிஸ் மனி­தர்கள் என ஏகப்­பட்ட யுக்­தி­களால் ஒடுக்­கப்பட்டு வந்துள்ளனர். 

எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் முஸ்லிம் மக்­களோ அர­சியல் தலை­மை­களோ தேசிய அர­சாங்­கங்­களை விரோ­தித்து நடந்­த­தில்லை அவர்­களைப் போஷித்தே நடந்­துள்­ளனர்.

இலங்கை அர­சியல் வர­லாற்றில் 1930 ஆம் ஆண்டு தனிச்­சிங்­கள அர­சாங்­க­மொன்று ஆட்சி நடத்­தி­ய­தன்பின் சுமார் 89 வரு­டங்­க­ளுக்குப் பிறகு இவ்­வாறு ஒரு நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாகப் பதி­வுகள் தெரி­விக்­கின்­றன. அமைச்­சர்கள், ராஜாங்க அமைச்­சர்கள், பிரதி அமைச்சர் என்ற வகையில் நால்வர், ராஜாங்க அமைச்­சர்கள் நான்கு பேர், பிர­தி­ய­மைச்சர் ஒருவர் என்போரே ராஜி­னாமா (03.06.2019) செய்­துள்­ளனர். அதுவும் இஸ்­லா­மிய மக்­களின் நோன்புக் கட­மைகள் நிறை­வு­கொண்ட காலகட்டத்தில் இந்த அர­சியல் அதிர்வு ஏற்­பட்­டுள்­ளது.

அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன், மேல்­மா­காண ஆளுநர் அஸாத் சாலி, கிழக்கு மாகாண ஆளு­ந­ர் ஹிஸ்­புல்லாஹ் ஆகியோர் மீது கடும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து ஐக்­கிய தேசியக் கட்­சியின் தேசியப் பட்­டியல் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான அத்­து­ர­லியே ரத்ன தேரர், பொது­ப­ல­சேனா அமைப்பின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் ஆகியோர் உண்­ணா­வி­ரதம் இருந்தும் காலக்­கெடு விதித்தும் மேற்­கொண்ட போராட்­டங்கள் நாட்டில் கடு­மை­யான பதற்ற நிலையை உரு­வாக்­கிய நிலையில் பத­வி­களைத் துறப்­ப­தென முடிவு செய்த முஸ்லிம் தலை­வர்கள் கடந்த திங்­கட்­கி­ழமை (03.06.2019) தங்கள் பத­வி­களைத்  துறந்­தனர்.

வேற்­றுக்­கொள்­கைகள், மாற்றுச் சிந்­த­னைகள், வேறு­பட்ட ஆளு­மைகள், அர­சியல் பாதைகள் கொண்­ட­வர்­க­ளாக இருந்த போதிலும் தமது சமூகம், சமயம் என்றவாறு ஒருவித போருக்­காக இவர்கள் பத­வி­களைத் துறந்­துள்­ளனர்.

இரு ஆளு­நர்­க­ளையும் அமைச்சர் ஒரு­வ­ரையும் பதவி நீக்­கு­மாறு கோரியே தமது போராட்­டங்­களை பிக்­குமார் ஆரம்­பித்­தி­ருந்­தார்கள். பிக்­கு­மாரின் இப்­போ­ராட்­டத்­துக்கு பேரி­ன­வாத சமூ­கத்தைச் சேர்ந்த கணி­ச­மான மக்கள் ஆத­ரவு காட்­டி­யி­ருந்­தார்கள். நாட்டின் பல பகு­தி­யிலும் கவ­ன­யீர்ப்புப் போராட்­டங்கள் நடாத்­தப்­பட்­டி­ருந்­தது. கண்டி மாந­கரில் கடை­ய­டைப்­புகள் நடை­பெற்­றது. எல்­லா­வற்­றுக்கும் மேலாக ரத்ன தேரரின் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தை மகா சங்கம் ஆசிர்­வ­தித்­தி­ருந்­தது. இந்தப் போராட்­டத்­துக்கு ஈடு­கொ­டுப்­பது தமது மக்­க­ளையும் அவர் சார்ந்த நலன்­க­ளையும் பாதிக்­கு­மென்ற தூர­நோக்கு சிந்­த­னை­யுடன் மேல்­மா­காண ஆளுநர் அஸாத் சாலியும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்­புல்­லாஹ்வும் தமது பத­வி­களைத் துறக்க அதோடு ஒட்­டி­ய­வ­கையில் அமைச்­சர்கள் பத­வி­களைத் துறந்­துள்­ளனர்.

இவர்­களின் பதவிதுறப்பு, புதிய அர­சி­யல்­போக்கின் மாற்­றுப்­பா­தையைத் திறந்து விட்­டுள்­ளது என்று கூறு­ம­ள­வுக்கு அதிர்வை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. எதிரும் புதி­ரு­மாக இருந்­த­வர்கள் மாற்றுத் துரு­வங்­க­ளாகக் காணப்­பட்­ட­வர்கள், சுட்ட மண்ணும் சுடாத மண்­ணு­மாகக் காணப்­பட்­ட­வர்கள் என்ற வகையில் முஸ்லிம் காங்­கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி, ஐக்­கிய தேசியக் கட்­சி­யென்ற மாற்­றுப்­பா­ச­றை­யி­லி­ருந்­த­வர்கள் எல்­லோரும் ஒரு குடையின் கீழ் ஒன்­று­கூடி இந்த முடிவை எடுத்­துள்­ளனர்.

மிக முக்­கி­ய­மான நடப்பு என்­ன­வெனில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலை­மையை ஏற்­றுக்­கொண்டு ஐக்­கிய தேசி­யக்­கட்­சியைச் சேர்ந்த கபீர் ஹாசீமும் பதவி துறந்­துள்ளார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் தவி­சா­ள­ராக, பொதுச் செய­லா­ள­ராக மற்றும் நெடுஞ்­சா­லைகள் வீதி அபி­வி­ருத்தி அமைச்­ச­ராக இருந்த கபீர் ஹாசீம், சிங்­கள மக்­களின் வாக்கு ஆத­ர­வுடன் வந்த ஒருவர் என்­பது குறிப்­பிட்டுக் கூறக்­கூ­டிய விட­யம். இந்தச்­சம்­ப­வங்கள் எதை வலி­யு­றுத்தி நிற்­கி­ற­தென்றால் பௌத்த பேரி­ன­வா­தத்­துக்கு எதி­ராக ஒன்றிணைந்து செயற்­ப­ட­வேண்­டிய வர­லாற்­றுக்­க­டமை அல்­லது நிர்ப்­பந்தம் இவர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது என்­பதை சுட்டி நிற்­கி­றது. இது­வொரு வர­லாற்று திருப்­ப­மென்றே கூற­வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு சம்­ப­வ­மா­னது மிகக் ­கொ­டு­மையும் மானி­டத்தால் ஏற்­றுக்­கொள்ள முடி­யாத பாவச்­சுமையும் கொண்­டது என்­பதை எல்­லோரும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர். இச்­சம்­ப­வத்தின் பின்­ன­ணி­ என்ன, இதன் மூல­நோக்­க­ம் என்ன என்­பதெல்லாம்பற்றி பல்­வேறு கருத்­து­களும் கார­ணங்­களும் கண்­டு­பி­டிக்­கப்­ப­டு­வ­தாக இருந்­தாலும் இதனால் ஒரு சமூகம் நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் பாதிக்­கப்­பட்டுக் கொண்­டி­ருக்­கி­றதே என்­ப­தற்கு உதா­ர­ணங்கள் தேவை­யில்லை.

30 வரு­ட­கால யுத்தம் தமிழ் மக்­களை அத­ல­பா­தா­ளத்­துக்குக் கொண்டு சென்­றது பற்றி இரை மீட்­டிப்­பார்ப்பின் அதன் வடுக்­க­ளையும் வன்­மங்­க­ளையும் மறந்து விட முடி­யாது. வட கிழக்கில் வாழும் அத்­தனை தமி­ழர்­களும் பயங்­க­ர­வா­திகள், புலி­களின் நாடி நரம்­புகள் என பட்டை குத்­தப்­பட்­டார்கள்.

கிராமம்கிரா­ம­மாக கலைக்­கப்­பட்­டார்கள். வீடுவாசல்கள் நிர்­மூலமாக்­கப்­பட்­டன. வட­ம­ராட்சி சிகிச்சை, கிழக்கு விடு­விப்பு என்று சங்­காரம் செய்­யப்­பட்­டார்கள். பூசா­மு­கா­மென்றும் வெலிக்­கடை சிறைச்­சா­லை­யென்றும் மஹசீன் தடுப்­பென்றும் ஆயிரம் ஆயிரம் இளை­ஞர்கள் அடைக்கப்பட்டு சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டார்கள். வன்­னிப்­போரில் ஏதும் அறி­யாத அப்­பாவி மக்கள் அநாதைகளாக்­கப்­பட்­டார்கள்.

பயங்­க­ர­வா­தத்தைப் பூண்­டோடு ஒழிக்க உத­வு­வோ­மென உலக நாடுகள் எல்லாம் கச்சை கட்­டிக்­கொண்டு இலங்கை அர­சுக்கு உதவ வந்­தார்கள். வல்­ல­ர­சு­களும் வலிமை கொண்ட தேசங்­களும் சுய­நிர்­ணய உரி­மைக்­காகப் போரா­டிய மக்­களைக் கொன்று குவிக்க துணை நின்­றார்கள். இவை­யெல்லாம் நடந்து முடிந்த கதை­யென்­பதை விட தமி­ழினம் இருக்கும் மட்டும் மறந்து விட­மு­டி­யாத அகோர அத்­தி­யா­யங்கள்.

இன்று நாட்டில் ஏற்­பட்­டி­ருக்கும் அசா­தா­ரண சூழ்­நிலை புகட்டும் பாட­மென்ன பௌத்த மேலா­திக்கம் சிங்­களப் பேரி­ன­வாதம் அர­சியல் மிலேச்­சத்­தனம் நிறைந்த ஒரு அடக்­கப்­பட்ட சர்­வா­தி­கார நாடாக இலங்கை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது என்­ப­தையே நாட்டில் இவ்­வாரம் நடந்­தே­றிய சம்­ப­வங்­களும் சூழ்­நி­லை­களும் எடுத்­தி­யம்­பு­கின்­றன.

குறித்த அரசியல்வாதிகளின் பத­விகள் பறிக்­கப்­ப­ட­வேண்டும், அல்­லது அவர்கள் தாமாகப் பதவி வில­க­வேண்­டு­மென்ற கடும்­போக்குக் கோரிக்­கை­களை முன்­வைத்து உண்­ணா­வி­ர­தமும், காலக்­கெ­டுவும் விதிக்­கப்­பட்­டி­ருந்­தது. உண்ணா நோன்பு இருந்­தவர் ஒரு பௌத்த குரு­வா­னவர். அவர் உணவு தவிர்ப்புப் போருக்கு தேர்ந்­தெ­டுத்­தி­ருந்­த­விடம் பௌத்த மதத்­தி­னரின் தலை­மைப்­ பீ­ட­மாகக் கரு­தப்­படும் கண்டி ராஜ­தா­னியின் தலதா மாளிகை.

இவ்­வா­ற­ன­தொரு சம்­பவம் சுமார் 60 வரு­டங்­க­ளுக்கு முன் நடை­பெற்­றுள்­ளது என்­பதை ஞாப­கப்­ப­டுத்த வேண்­டி­யது அவ­சி­ய­மா­கி­றது. சிங்­களம் மட்டும் அரச மொழி எனும் சட்ட மூலத்­தினை பிர­தமர் பண்­டா­ர­நா­யக்கா 15.06.1956 இல் நிறை­வேற்­றிய வேளை தமிழ் மக்கள் மத்­தியில் எழுந்த எதிர்ப்பைச் சமா­ளிக்க தந்தை செல்வா – பண்டா உடன்­ப­டிக்கை கைச்­சாத்­தி­டப்­பட்­டது. (27.07.1957) அச்­சட்ட மூலத்தை அமுல்­ப­டுத்த எதிர்ப்பு தெரி­வித்து கொழும்­பி­லி­ருந்து பௌத்த மக்­களின் தலை­மைப்­பீ­ட­மான கண்டி தலதா மாளி­கைக்கு (04.10.57) எதிர்ப்பு ஊர்­வலம் ஒன்­றினை மறைந்த ஜே.ஆர்.ஜெய­வர்த்­தனா மேற்­கொண்டார். இந்த ஊர்­வ­லத்தில் நூற்­றுக்­க­ணக்­கான பௌத்த பிக்­குக்கள் கலந்து கொண்­டார்கள். இந்த கடும் எதிர்ப்பு கார­ண­மாக உடன்­ப­டிக்கை கிழித்­தெ­றி­யப்­பட்­டது.

சிங்­களம் மட்டும் சட்­டத்தைக் கொண்டு வந்­த­வேளை தந்தை செல்வா தலை­மையில் காலி முகத்­தி­டலில் சத்­தி­யாக்­கி­ரகப் போராட்டம் நடத்­திய வேளை பிக்கு பெர­மு­னையைச் சேர்ந்த நூற்­றுக்­க­ணக்­கான பிக்­குமார் சிங்­களம் மட்டும் சட்­டத்­துடன் இணைக்­கப்­பட்­டி­ருந்த தமிழ்­மொழி சரத்து நீக்­கப்­பட வேண்­டு­மெனக் கோரி பாரா­ளு­மன்றில் ஊர்­வலம் ஒன்­றினை நடத்­தினர். இது வெடித்து கல­வ­ர­மா­கி­யது. இது போன்ற சம்­ப­வங்கள் ஏலவே இலங்­கையில் இடம்­பெற்­றி­ருப்­பதை இது ­வி­டயத்தில் ஞாபகம் கொள்­ள­வேண்டும்.

உயிர்த்த ஞாயிறு சம்­பவம், அதனைத் தொடர்ந்து நாட்டில் இடம்­பெற்ற தாறு­மா­றான போக்­குகள் சிறு­பான்மைச் சமூ­கத்­துக்கு பயம், பீதி அவலம் என்­ப­வற்றை உரு­வாக்­கி­யுள்­ளது என்­பது நாட­றிந்த விட­ய­மாகும். குறிப்­பாக முஸ்லிம் மக்கள் மத்­தியில் உரு­வா­கி­யுள்ள அவ­லத்­தன்­மைக்கு பல­வகை சம்­ப­வங்கள் கார­ணங்­க­ளாகக் கொள்­ளப்­ப­டலாம்.

பொது­ப­ல­சே­னாவின் பொதுச்­செ­ய­லாளர் கல­கொட அத்தே ஞான­சா­ர­தேரர் ஞாயிறு தினத்­தன்று (02.06.2019) உண்ணாவிரதப் போராட்ட இடத்­துக்குச் சென்று விஷேட அறிக்­கை­யொன்றை விட்­டி­ருந்தார். குறித்த முஸ்லிம் அர­சியல்வாதிகள் பதவிநீக்கம் செய்­யப்­ப­ட­வேண்டும் என்­பதே அந்த அ­றிக்­கை­யாகும். இந்த காலக்­கெடு, பிரச்­சி­னை­களை உச்சக் கட்­டத்­துக்கு கொண்­டு­ வந்­தது. கண்­டி­யி­லுள்ள அனைத்து வர்த்­தக நிலை­யங்­க­ளையும் மூடு­மாறு கண்டி வர்த்­தக சங்­கத்தின் அறி­விப்பு நாடு முழு­வ­து­மான ஆர்ப்­பாட்­டங்கள், இதில் பெரும்­பான்மைப் பிக்­குகள் பங்கு கொண்­டமை முஸ்லிம் சமூ­கத்­துக்கும் அவர்தம் தலை­மை­க­ளுக்கும் எக்­கா­லத்தும் ஏற்­ப­டாத பயத்­தையும் பீதி­யையும் உண்­டாக்­கி­யது. பத­விகள், அர­சியல் என்­ப­தை­விட சமூ­கத்தின் பாது­காப்பை நோக்கி அவர்­களைச் சிந்­திக்க வைத்­தது.

கோடிக்­க­ணக்­கான முத­லீ­டுகள் கொண்டு தலை­ந­க­ரிலும் ஏனைய பிர­சித்தி பெற்ற நக­ரங்­க­ளிலும் நடத்­தி­வந்த வர்த்­தக நிலை­யங்கள், உற்­பத்­திச்­சா­லைகள், ஏற்­று­மதி இறக்­கு­மதி மையங்கள் ஆகி­ய­வற்­றுக்கு ஆபத்து வந்­து­வி­டு­மென்ற அபா­யத்தை  உண­ர­வேண்­டிய தேவை ஏற்­பட்­டது.

பல்­க­லைக்­க­ழ­கங்கள், பள்­ளிக்­கூ­டங்கள் செல்லும் தமது சமூ­கத்­துக்கு அன்­னி­ய­மான நிலை­யொன்று உரு­வாக்­கப்­பட்டு தாம் புறக்­க­ணிக்­கப்­பட்டு விடு­வோமா என தற்­காப்புச் சிந்­த­னைக்கு ஆளாக்­கப்­பட்­டார்கள்.

அது­மட்­டு­மின்றி சமூக வலைத்­த­ளங்­களில் சில பேரி­ன­வாத அர­சியல்வாதி­களும் பௌத்த அடிப்­ப­டை­வாத சிந்­தனை கொண்­ட­வர்­களும் வெளி­யிட்ட இன­வாத கருத்­துக்கள் மார்க்க அடை­யா­ளங்­க­ளுடன் வெளியில் செல்லும் பெண்கள் முகங்­கொ­டுக்க வேண்­டிய சவால்கள் இம்­சைகள் தொடர்­பிலும் அச்­சத்தில் மூழ்­கிப்­போன நிலை­யி­லேயே, முஸ்லிம் அர­சியல் தலை­மைகள் ஒன்­றி­ணைந்து ஓர் உயர்ந்த முடிவை எடுத்­துள்­ளனர். இது ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கமும் பெருமை கொள்­கின்ற விட­ய­மாகும்.

இதி­லி­ருந்து சிறு­பான்மைச் சமூ­க­மா­கிய முஸ்லிம் சமூ­கமும், வட கிழக்கு மற்றும் மலை­யக தமி­ழர்­களும் கற்­றுக்­கொள்ள வேண்­டிய பாடமும் பட்­ட­றிவும் ஏராளம் என்­பதைப் புரிந்­து­கொள்­ள­வேண்டும். புரிதல் இடம் பெறு­வ­தற்­கான காலத்­தையும் சந்­தர்ப்­பத்­தையும் சூழ்­நிலை எமக்கு வகுத்துத் தந்­துள்­ளது.

முஸ்லிம் சமூ­கத்தைப் பொறுத்­த­வரை அர­சி­யல்­ம­ய­மான எல்லாக் காலப்­ப­கு­தி­யிலும் பெரும்­பான்மைச் சமூ­கத்­துடன் உடன்­பட்டுப் போன­வர்­க­ளாக இருந்து வந்­துள்­ளார்கள் என்­பதை சுதந்­தி­ரத்­துக்குப் பின்­னுள்ள பாரா­ளு­மன்­றங்­களில் அங்கம் வகித்த சேர் ராசீsக் பரீத், எம்.ஷம்ஸ் காசிம், மாக்கன் மாக்கார், டாக்டர் எம்.சி.எம். கலீல், தொடக்கம் இன்­றைய முஸ்லிம் தலை­மைகள் வரை, உதா­ர­ணமாகக் கொள்ளமு­டியும்.

நாட்­டி­லுள்ள தேசியக் கட்­சி­க­ளுடன் இணைந்தும் சேர்ந்தும், தனித்தும் அவர்கள் உடன்­பாட்டு அர­சியல் கொண்­ட­வர்­க­ளாக இருந்து வந்­துள்­ளார்கள். ஆனால் தமி­ழர்­களின் அர­சி­யல்­போக்கு அவ்­வாறு இருந்­த­தில்லை. 1957 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை உடன்­பாட்டுத் தன்­மை­யற்ற அர­சியல் போக்கே கடைப்­பி­டிக்கப்பட்டு  வந்­துள்­ளது. உடன்­பாடு கண்ட சமூ­கத்­தி­னரும் சரி எதிரே உடன்­பாடு காண­ மு­டி­யாத தமிழ் சமூ­கத்­தி­னரும் சரி பெற்ற அடை­வுகள் அல்­லது, பெறு­மா­னங்கள் இலங்கை அர­சி­யலில் பூஜ்­ஜி­யமே, பேரி­ன­வாதம், பௌத்த மேலா­திக்கம் என்ற வன்மவா­தங்­களை உடைத்­தெறிய முடி­யாமல் வெறும் சிறு­பான்மைச் சமூகம் என்ற வட்­டத்­துக்­குள்ளேயே மீண்டும் மீண்டும் கொண்­டு­வ­ரப்­பட்­ட­வர்­க­ளாக இரு சமூ­கத்­த­வர்­களும் காணப்­ப­டு­கின்றார்கள்.

சில அர­சியல் நிகழ்­வு­களும் மாற்­றங்­களும் வர­லாற்றை மாற்றி எழுதுகின்­றன. இது உலக வர­லாற்றில் கற்­றுக்­கொண்ட பாடங்கள். அந்த நிய­திக்கு ஏற்ப வர­லாற்றை மாற்றி எழு­த­வேண்­டிய தேவை சிறு­பான்மைச் சமூ­க­மா­கிய முஸ்லிம், தமிழ்ச் சமூ­கத்தை நோக்கி உரு­வாக்­கப்­பட்­டிருக்கிறது. அந்த வகையில் முஸ்லிம் என்ற சமூகம் தமது எல்லைகளையும் வேலிகளையும் உடைத்தெறிந்து ஒரு குடையின்கீழ் ஒன்றுபட வேண்டிய அவசியமும் அவசரமும் எவ்வாறு ஏற்பட்டிருக்கிறதோ அதேபோன்றே தமிழ் முஸ்லிம் என்ற இன, முனைப்புகள் ஒன்றுபட வேண்டிய அவசியம் உணர்த்தப்பட்டிருக்கிறது. இதற்குரிய காரணங்கள், பலம் பொருந்திய ஒரு சக்தியாக, சிறுபான்மை இனம் தன்னை தயார்படுத்த வேண்டும் என்பதுடன் தீர்மானிக்கும் சக்தியாக மாறவேண்டுமென்பது இன்னொரு நியாயமாகவும், தேவையாகவும் இருக்கிறது.

இவற்றுடன் இன்னும் சேர்த்துப் பார்க்கப்பட வேண்டிய விடயங்களாக ஒவ்வொரு இனத்துக்குமான, தனித்துவமான, கலாசாரங்கள் நடையுடை, பாவனைகள் மதிக்கப்படவேண்டும் என்பதில் எல்லா உரிமையுள்ள சமூகங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் துரதிஷ்டவசமாக, இலங்கை யில் நீண்டகாலமாகவே, இது புறக்கணிக் கப்பட்டு வந்திருக்கிறது என்பதற்கு ஏராளமான சம்பவங்களும் உதாரணங்களும் உள்ளன. குறிப்பாக பௌத்த மேலாதிக்கத்தின் ஆதிக்கப் பிடியிலிருந்து விடுபட வேண்டுமாயின் தனியான இனங்கள் என்ற அடையாளத்துக்குள் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட வேண்டும். அந்தச் சூழ்நிலைக்கு இப்பொழுது ஒரு வித்திடப்பட்டுள்ளது. அதேபோன்றே விரிசலடைந்து அங்கொன்றும் இங்கொன்றுமாய் அப்பாதை இப்பாதையென சின்னாபின்னப்பட்டுப் போய்க்கிடக்கும் தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட வேண்டும் என்பதற்கு அப்பால் இலங்கையின் சிறுபான்மை இனமென பலமான அடையாளங் கொண்டிருக்கும் தமிழ் – முஸ்லிம் உறவுகளுக்கிடையில் ஒற்றுமையான ஓர் உடன்பாடு காணப்பட வேண்டியது அவசியமாகிறது.

திரு­மலை நவம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22