முஸ்லிம் ஆளுநர்கள், அமைச்சர்களின் பதவிவிலகல்கள் ; பிக்குமாரும் சட்டமும்

Published By: Priyatharshan

07 Jun, 2019 | 04:52 PM
image

- கலாநிதி அமீர் அலி

இரு முஸ்லிம் ஆளுநர்களும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் கூண்டோடு பதவிவிலகியமை இலங்கை ஜனநாயகத்தினதும் முஸ்லிம் அரசியலினதும் வரலாற்றில் முன்னொருபோதுமில்லாத வகையிலான ஒரு அரசியல் நடவடிக்கையாகும்.சில செய்திகள் கூறுவதைப்போன்று, அவர்கள் இன்னமும் தங்களது  சிறப்புரிமைகளையும் தனிச்சலுகைகளையும் கைவிடவில்லையானால், பதவிவிலகல்  நேர்மையான ஒரு நடவடிக்கை என்பதை நிரூபிப்பதற்காக அவற்றை உடனடியாக துறந்துவிடவேண்டும்.இரு முஸ்லிம் மாகாண ஆளுநர்களும் ஒரு அமைச்சரும் பதவிநீக்கப்பவேண்டுமென்ற கோரிக்கையை முனவைத்து ஒரு பிக்கு தொடங்கிய  சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டமும் இன்னொரு பிக்கு முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுத்த குரோதப் பிரசாரமும் நாடளாவிய ரீதியில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கலவரங்களைத் தூண்டிவிடக்கூடிய சாத்தியத்தை  தடுப்பதற்கே இந்த பதவிவிலகல்கள் என்பது மாத்திரமே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே காரணமாகும். இப்போது இன்னொரு குழு உயர்மட்ட பிக்குமார் பதவிப்பொறுப்புக்களை  மீண்டும் ஏற்றுக்கொண்டு நாட்டுக்கு சேவைசெய்யுமாறு முஸ்லிம் அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். பிக்குமாருக்கும் அமைச்சர்களுக்கும் இடையில் நாட்டின் சட்டம் விடுமுறையில் சென்றுவிட்டது போலத் தோன்றுகிறது. 

தங்களது சமூகத்தின் பாதுகாப்பிலும் பத்திரத்திலும் நல்வாழ்விலும் முஸ்லிம் அமைச்சர்களுக்கும் ஆளுநர்களுக்கும் கருத்தூன்றிய அக்கறை இருந்திருந்தால், முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் அளுத்கமவிலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் திகணவிலும் இடம்பெற்ற கலவரங்களையடுத்து உடனடியாகப் பதவிவிலகியிருக்கவேண்டும். இப்போது பதவி விலகியிருக்கும் அமைச்சர்களில் ஒருவர் முன்னைய அரசாங்கத்தில் நீதியமைச்சராக பதவிவகித்தவர். அப்போது அவரும் சகாக்களும் ஏன் பதவிவிலகவில்லை என்பதும் இப்போது ஏன் பதவி விலகினார்கள் என்பதும் நம்பகமான விடைகளை வேண்டிநிற்கும் கேள்விகளாகும்.முன்னைய அரசாங்கத்தில் எந்தவொரு முஸ்லிம் அமைச்சருக்கும் ஆளுநருக்கும் எதிராக சட்டவிரோத அல்லது ஊழல்தனமான நடத்தை எதிலும் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படவில்லை. இப்போது அவர்களில் மூவர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்கள்.  இந்த வேறுபாடு அதிகாரப்பதவிகளில் உள்ள சகல முஸ்லிம்களும் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்குகின்ற மூவரையும் பாதுகாக்க முயற்சிக்கின்றார்கள் என்று குறிப்பிட்ட சில வட்டாரங்களினால் தெரிவிக்கப்படுகின்ற கருத்தை சாரமுடையதாக்குகிறது.

எது எவ்வாறிருந்தாலும், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட மெய்ம்மைகள் அல்ல. அந்த குற்றச்சாட்டுகள் நம்பகத்தன்மையான திண்ணிய சான்றுகளினால் ஆதாரப்படுத்தப்படவேண்டும் ; சட்டநடவடிக்கை எடுக்கப்படக்கூடியதாக  அவை நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படவேண்டும் ; குற்றச்சாட்டப்பட்டவர்கள் நீதிவிசாரணைக்கு முகங்கொடுக்கவேண்டும். மாறாக, யார்  குற்றவாளி, யார் குற்றமற்றவர் என்று பிக்குமார் தீர்மானிக்கப்போகின்றார்கள் என்றால், எதற்காக சட்டங்கள் ? எதற்காக நீதிமன்றங்கள் ? எதற்காக நீதிபதிகள் ?

வெளிநாட்டுத் தலையீட்டுக்கான சாத்தியம் மற்றும் பொருளாதார சீர்குலைவு குறித்து மகாநாயக்க தேரர்கள் உண்மையிலேயே கவலைகொண்டிருக்கிறார்கள் என்றால்,  பொருளாதாரத்தைப் பற்றி எந்தவித அக்கறையும் இல்லாமல் வன்முறைக் குழப்பங்களை விளைவிப்பதில் வரிந்துகட்டிக்கொண்டு நிற்கும் சில பிக்குமாரின் செயற்பாடுகளை ஏன் அவர்கள் பகிரங்கமாகக் கண்டிக்கவில்லை.தேசத்தினதும் பௌத்தமதத்தினதும் நலன்களுக்காக மகாசங்கத்தில் இருந்து விரும்பத்தகாத பிரகிருதிகளை மகாநாயக்க தேரர்கள் களையெடுக்கவேண்டும். பௌத்த பிக்குமாரில் கீர்த்திமிக்கவர்கள் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு சொல்வதானால் வண. வெலிவிற்ற சரணங்கர தேரர், வண.வல்பொல ராகுல தேரர், மாதுளுவாவே சோபித தேரர் போன்றவர்களை நாம் மறத்தலாகாது. அவர்களைப் போன்ற பல பிக்குமார் இப்போதும் இருக்கிறார்கள். அவர்கள் வெளியில் வந்து அறிவற்றவர்களினதும் பழிபாவத்துக்கு அஞ்சாத பேர்வழிகளினதும்  ஆட்சியை நோக்கி நாடு செல்வதைத் தடுக்கவேண்டும்.

சட்டத்துக்கு மேலாக எவரும் இல்லை.ஜனாதிபதியும் கூட.பதவி விலகியவர்கள் பௌத்த குருமார் வேண்டுகோள் விடுக்கிறார்கள் என்பதற்காக  தங்கள் பொறுப்புக்ளை மீண்டும் இப்போது ஏற்பதானால், குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளில் தலையீடு செய்வதாக குற்றஞ்சாட்டப்படுகின்ற நிலையில் பதவிகளில் தொடருவதற்கு தாங்கள் விரும்பவில்லை என்ற அமைச்சர்களில் ஒருவரின் முந்திய வாதம் அதன் நம்பகத்தன்மையை இழந்துவிடுகிறது. அவர்கள் குற்றவியல் விசாரணை பிரிவினரால்  (சி.ஐ.டி.) விசாரணை நடத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்ததுடன் ஒரு மாதகால அவகாசமும் கொடுத்திருந்தார்கள். அது உண்மையிலேயே ஒரு பெறுமதியான யோசனையாகும்.

அவர்களில் எந்தவொருவருக்கும் அல்லது பலருக்கும்  எதிராக நம்பகத்தன்மையான சான்றுகளை சி.ஐ.டி.கண்டுபிடித்தால் அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவேண்டும் ; குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்படவேண்டும்.மிக அண்மையில் அதுவும் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பிரிவினர் கேலிக்கிடமானவர்களாக்கப்பட்டதை கண்டோம். உதாரணத்துக்கு கூறுவதானால் பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் விவகாரத்தை எடுத்துக்கொள்வோம்.நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றவாளியாகக் காணப்பட்டு அவர் சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தார். முன்னர் கிராமசேவகராக இருந்த ஒரு ஜனாதிபதிக்கு ஞானசார செய்த குற்றத்தின் பாரதூரத்தன்மை பற்றி எதுவும் தெரியாமல் போய்விட்டதே. 

நீதித்துறையிடமிருந்து எந்தவிதமான ஆலோசனையையும் கேட்காமல் ஜனாதிபதி அவருக்கு மன்னிப்பு அளித்து சிறையிலிருந்து விடுதலை செய்தார். விடுதலையான மூன்று நாட்களுக்குள்ளாக  அந்த பிக்கு தனது இனவெறி நச்சைக் கக்குவதற்காக வீதியில் இறங்கியதைக் கண்டோம்.தனது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் ஆட்சியைக் கவிழ்க்கப்போவதாக அவர் அச்சுறுத்தினார். அதேபோன்றே, இனவாத வன்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தியதுடன் ஊரடங்குச் சட்டத்தையும் பிறப்பித்தது. ஆனால், அந்த அவசரகாலநிலையும் ஊரடங்குச் சட்டமும்  ஆர்ப்பாட்டங்களையும் வன்முறையையும் தூண்டிவிடுகின்ற காவியுடைக்காரர்களைக் கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லை என்றே தோன்றுகிறது.ஊரடங்கு வேளையில் காடையர்கள் வீதிகளில் சுதந்திரமாகத் திரிந்து வர்த்தக நிலையங்களைச் சூறையாடியதையும் சொத்துக்களை நிர்மூலஞ்செய்ததயைும் எவ்வாறு விளங்கிக்கொள்வது ? அவர்களில் சிலர் கைதுசெய்யப்பட்டார்கள்.ஆனால், எந்த நீதிவிசாரணையுமின்றி அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள்.தற்சமயம் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைவரம்  எந்தளவுக்கு மோசமான நிலையில் இருக்கிறது என்பதை காண்பிப்பதற்கு இவற்றை விடவும் வேறு சம்பவங்கள் தேவையா?

பதவி விலகிய அமைச்சர்களும் பிரதியமைச்சர்களும் தங்களது அந்த நடவடிக்கையின் விளைவாக அனுகூலமான ஏதாவது நடக்கவேண்டும் என்று விரும்பினால், தங்களது சிறப்புரிமைகளையும் தனிச்சலுகைகளையும் தூக்கியெறிந்துவிட்டு, சட்டம் அதன் வேலையைச் செய்வதற்கு அனுமதித்து பாராளுமன்றத்தில் பின்வரிசையில் அமரவேண்டும்.நாட்டின் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு அவர்களால் செய்யக்கூடிய நீண்டகால பங்களிப்பாக அதுவே அமையட்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அக்குராணை கிராமமும் பொது மக்கள் எதிர்கொள்ளும்...

2024-03-29 17:17:02
news-image

பிரித்தானிய மக்களை கண்ணீர் சிந்தவைத்த இளவரசி...

2024-03-29 13:17:06
news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48