இரண்டு வாரங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்து இலங்கை நோக்கி புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில்  மீண்டும் சிங்கப்பூரின் சங்கி  விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டமைக்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 

யூ.எல். 309 என்ற இலங்கை விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் கடந்த 14 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்து சிறிது நேரத்தில் பயணப் பொதி அறையில் தீப்பிடித்ததன் காரணமாக மீண்டும் அந்த விமானம் சங்கி  விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் பின்னர் 03 மணித்தியாலங்கள் தாமதித்து அந்த விமானம் மீண்டும் இலங்கை  நோக்கி  புறப்பட்டது. 

அந்த விமானத்தின் பயணப் பொதி அறையில் இருந்து புட்டன் என்ற வாயு வெளியேறியதால் தீப்பிடித்ததாகவும்   இதனால் எரிகாயமடைந்த 22 வயதுடைய பணியாளர் ஒருவர் நேற்று    சிங்கப்பூர் பெலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் கூறியுள்ளார். 

அந்த வாக்குமூலத்தின் படி, சிங்கப்பூரில் இடம்பெற்ற சமையல் போட்டி ஒன்றி பங்குபற்றச் சென்றிருந்த  5 இலங்கையர்கள் கொண்டு சென்ற சமையல் உபகரண பொதியில் இந்த வாயு இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

விமானப் போக்குவரத்து சட்டத்தின்படி இவ்வாறான பொருட்கள் விமானத்தில் கொண்டு செல்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதுடன், இதனுடன் சம்பந்தப்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர். 

பின்னர் குறித்த சமையல் உபகரணங்கள் அனைத்தும் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து விமானம் மீண்டும் இலங்கை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது.