புகையிலை அற்ற தேசத்தை உருவாக்குவோம் !

Published By: Priyatharshan

31 May, 2019 | 03:17 PM
image

- வீ.பிரியதர்சன்

இன்று உலக புகையிலை எதிர்ப்புதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. புகைப்பழக்கத்தையும் புகையிலை உபயோகத்தையும் கட்டுப்படுத்தி புகையில்லா தேசத்தை உருவாக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

உலகளவில் ஆண்டுதோறும் 1.5 இலட்சம் குழந்தைகள் வீட்டிலுள்ள பெரியவர்கள் புகைப்பிடிப்பதால் இறந்துபோகின்றனர். கருவில் இருக்கும் குழந்தையையும் புகைப்பழக்கம் விட்டுவைப்பதில்லை. புகைப்பிடிக்கும் தாய் அல்லது தந்தையின் மூலம் சிசுவின் நுரையீரல் வளர்ச்சி பாதிக்கப்படுகின்றது. இதனால் அக்குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் நுரையீரல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றன.

உலக புகையிலை எதிர்ப்புதினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31 ஆம் திகதி முன்னெடுக்கப்படுகின்றது. உலக சுகாதார நிறுவனம் 1987 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதியை உலக புகையிலை எதிர்ப்பு நாளாக பிரகடனப்படுத்தி அனுசரித்து வருகின்றது.

முதன்முதலில் புகையிலை எதிர்ப்பு தினம் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி, 1988 ஆம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனத்தின் 40 ஆவது ஆண்டு விழாவின் போது கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர், ஆண்டுதோறும் மே மாதம் 31ஆம் திகதி புகையிலை எதிர்ப்பு தினமாகக் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

குறித்த தினத்தில் நிகழ்ச்சிகளும், வலியுறுத்தல்களும், மக்களை புகையிலைப் பயன்பாட்டைக் குறைக்கவோ, அல்லது முற்றிலுமாக விட்டுவிடவோ, ஊக்குவிக்கும் வகையில் அமைகிறது.

இவ்வருடம்  “புகையிலை மற்றும் மார்பு நோய்” என்ற தொனிப்பொருளின் கீழ் புகையிலை எதிர்ப்புதினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.  புகைப்பிடிப்பவர்களில் அரைவாசிப்பேர் மார்பு நோய்களால் உயிரிழக்கின்றனர். உலகில் இடம்பெறும் மரணங்களை தவிர்ப்பதற்கான பிரதான காரணமாக புகையிலை பாவனை தவிர்ப்பை கருத முடியும்.

வருடாந்தம் உலக சனத்தொகையில் எட்டு மில்லியன் மக்கள் புகையிலை பாவனையால் உயிரிழக்கின்றனர். இவர்களில் ஒரு மில்லியன் மக்கள் புகைப்பிடிப்பதால் உயிரிழக்கின்றனர். இப்போதிலிருந்தே நாம் இது தொடர்பில் விழிப்பாக செயற்படாவிட்டால் 21 ஆம் நூற்றாண்டில் புகையிலை பாவனையால் பில்லியன் கணக்கான உயிர்களை இழக்க நேரிடும் என புகையிலை மற்றும் மதுபானம் சார் தேசிய அதிகார சபை தெரிவித்துள்ளது. 

இலங்கையிலும் புகையிலை பாவனை காரணமாக வருடாந்தம் சுமார் 20 ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். புகையிலை உடலின் அனைத்து பாகங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக புகையிலை மற்றும் மதுபானம் சார் தேசிய அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட விளக்கமளிப்பு நிகழ்ச்சித் திட்டம் காரணமாக புகைப்பிடித்தல் 14.5 சதவீதம் வரை குறைந்திருப்பதாக அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் பாலித்த அபயகோன் தெரிவித்துள்ளார். இந்த அளவை பத்து சதவீதமாக குறைப்பது அதிகார சபையின் இலக்காகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வருடம் உலக சுகாதார நிறுவனம் ஒரு ஆய்வுப்பட்டியலொன்றை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் அதிகம் புகைப்பழக்கம் கொண்ட நாடுகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. புகைப்பழக்கத்தால் வருடத்திற்கு 7 மில்லியன் பேர் பலியாகிறார்கள். கிட்டத்தட்ட 24 மில்லியன் பேர் 13 வயது முதல் 15 வயதுக்குட்பட்டோர் புகையிலையை பயன்படுத்துகிறார்கள். அதில் 17 மில்லியன் பேர் ஆண்களும், 7 மில்லியன் பேர் பெண்கள் ஆவார்கள்.

ஒரு சிகரெட்டில் 4000 வகையான வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றில் பாதிக்கு மேல் மோசமான வேதிப்பொருட்கள் ஆகும். புகைப் பிடிப்பதனால் புற்றுநோய் கூட ஏற்படும். புகைப் பிடிப்பதால் இளைப்பு, மயக்கம், இருமல் போன்ற நோய்கள் ஏற்படும். தொடர்ந்து புகைப்பதனால் உடல் நோய் எதிர்ப்புசக்தியை இழந்து மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகின்றது. இதனால் இறுதியில் மாரடைப்பும் கூட ஏற்படலாம்.

கார்பன் மோனாக்சைட் உடலில் செல்லுவதால் இதயமும் கடுமையாக பாதிக்கப்பட்டு நுரையீரலுக்கு மற்றும் கை கால்களுக்கு தேவையான ஒக்சிஜன் கிடைக்காது. இதனால் நுரையீரல், இதயச் செயலிழப்பு ஏற்படலாம் மேலும் உடலில் ஊனமும் ஏற்படலாம்.

ஒவ்வோர் ஆண்டும் புகையிலை பயன்படுத்துவதால் உலகில் 70 லட்சம் பேர் பலியாகின்றனர். இதனால்  2030 ஆம் ஆண்டாகும் போது இந்த மரண வீதம் 8 மில்லியனாக அதிகரிக்கவுள்ளது.

இதில் 15 வீதமானோர் புகை பிடிப்பவர்களுக்கு அருகில் இருப்பதாலேயே பலியாகிறார்கள். உலகில் இறக்கும் 10 பேரில் ஒருவர் புகை பிடிப்பதால் இறக்கிறார். புகையிலை தன் உயிரைக் கெடுக்கும் அடுத்தவன் உயிரையும் கெடுக்கும். முடிந்தவரை புகைப் பழக்கத்தை குறைத்து கொள்வது நல்லது. புகைப் பிடிப்பவரின் அருகில் இருந்து விலகி இருக்க வேண்டும். முக்கியமாக இளம் சமுதாயத்தை புகை பழக்கத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

 புகையிலை உற்பத்திப் பொருட்களை பாவிப்பதன் மூலம், மனிதனது ஆயுட்காலம் 10 ஆண்டுகளால் குறைவடைவதாக உலக சுகாதார ஒழுங்கமைப்பு தெரிவித்துள்ளது.

புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், விழிப்புணர்வு ஊர்வலங்களும் கருத்தரங்குகளும் நாட்டில் இடம்பெற்றுவருகின்றன. உலகின் 2 ஆவது உயிர்கொல்லி நோயென்று புகையிலை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, புகையிலை பழக்கத்தை தடுக்க வேண்டியது எம் ஒவ்வொருவரினதும் கட்டாயமாகிவிட்டது. 

புகையிலையைப் பயன்படுத்துபவர்கள், புகைப்பிடிப்பவர்கள் தமது வாழ்நாளில் 12 முதல் 20 வரையான ஆண்டுகளைஇழப்பதோடு உலகில் 100 கோடிப் பேர் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். அபிவிருத்தி அடைந்த நாடுகளில் 30 வீதமான மக்களும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் 50 வீதமான மக்களும் இதற்கு அடிமையாகின்றனர். இதன் அடிப்படையில் உலகில் ஆண்டுதோறும் 55 இலட்சம் மக்கள் புகைப்பழக்கத்திற்கு அடிமையாகி மாண்டுபோகின்றனர்.

இந்நிலையில், விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவ, மாணவிகளும் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி வருவது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. 

புகையிலையில் உள்ள நிக்கோட்டின் என்ற வேதிப்பொருள் புகையிலை பழக்கத்துக்கு அடிமையாக்கிவிடுகிறது. எனவே, புகையிலை பழக்கத்துக்கு அடிமையானவர்கள் அதிலிருந்து விலகுவதற்கான விழிப்புணர்வுடன், சூழ்நிலையை உருவாக்க வேண்டியது அவசியம்.

புகையிலை பிடிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை விட அவர்களை சுற்றி இருப்பவர்களுக்கு பாதிப்பு அதிகளவில் ஏற்படும் என்று மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். எனவே, பொது இடங்களில் புகை பிடிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

எனவே, புகையிலை ஒழிப்பு தினத்தில் மட்டும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அதிகாரிகள் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தீவிர நடவடிக்கைகளை கையாள வேண்டும். மேலும் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கு புகையிலையால் ஏற்படும் பாதிப்புகளை விவரித்து அடிக்கடி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். புகையிலை விற்பனையில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தி கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அத்துடன் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களை கைதுசெய்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஆகவே மக்களாகிய நாமனைவரும் ஒன்றிணைந்து புகைத்தலுக்கு எதிராக செயற்பட்டு புகைத்தலற்ற தேசத்தை கட்டியெழுப்ப ஒன்றிணைவோம் !

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04