சீனாவின் நவீன பட்டுப்பாதைக்கு மாற்றீடொன்றை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து கொண்டுவர முடியுமா?

Published By: Priyatharshan

29 May, 2019 | 03:08 PM
image

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்வதற்கான உடன்படிக்கையொன்றில் இலங்கையும் ஜப்பானும் இந்தியாவும் கடந்த செவ்வாய்கிழமை கைச்சாத்திட்டிருக்கின்றன. 

இலங்கையின் மிகப்பெரிய துறைமுகமான கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டம் குறித்து இந்தியாவும் இலங்கையும் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தை நடத்திவந்தபோதிலும், இந்தியாவை ஈடுபடுத்துவதில் அரசாங்கத்திற்குள் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில்  விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நிலவிய முரண்பாடுகள் காரணமாக பெரும் முன்னேற்றம் ஏற்படவில்லை. அந்த பின்னணியில் நோக்குகையில், இப்போது கைச்சாத்திடப்பட்டிருக்கும் ஒத்துழைப்பு உடன்படிக்கை முக்கியத்துவத்தும் வாய்ந்ததாக இருக்கிறது. அதுவும் கூட இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் காணப்பட்ட முட்டுக்கட்டை ஜப்பானையும் ஈடுபடுத்துவதற்கு தீர்மானித்த பின்னரே நீங்கியது போலத்தெரிகிறது.

கொழும்பு துறைமுக அபிவிருத்தியில் புதுடில்லிக்கு இருந்துவந்த ஆர்வம் நன்கு தெரிந்ததே. கேந்திர முக்கியத்துவமுடைய கிழக்கு கொள்கலன் முனையத்தின் ஊடான கப்பல் மூலமான சரக்குப் போக்குவரத்தின் 70 சதவீதத்துக்கும் கூடுதலானவை இந்தியாவுடன் தொடர்புபட்டவையாகும். ஆனால், இந்த முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தில் இந்தியாவை சம்பந்தப்படுத்துவது அரசாங்கத்திற்குள் பெரும் சரச்சைக்குரியதாக இருந்தது.

 " தேசிய சொத்துக்களை " அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்களில் வெளிநாடுகளை ஈடுபடுத்துவதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய முயற்சிகள் எப்போதுமே அரசியல் ரீதியில் உணர்ச்சிபூர்வமான ஒரு விவகாரமாக இருப்பதால், ஜனாதிபதி சிறிசேன இந்தியாவைச் சம்பந்தப்படுத்தும் எந்தவொரு முயற்சியையும் எதிர்த்துவந்தார். இது தொடர்பில் கடந்த வருடம் அமைச்சரவைக் கூட்டமொன்றில் ஜனாதிபதியும் பிரதமர் விக்கிரமசிங்கவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இத்திட்டத்தில் இந்தியாவுக்கு முக்கிய பாத்திரத்தை வழங்குவதில் பிரதமர் மிகுந்த ஆர்வம் காட்டினார்.

மிகவும் அண்மைக்காலத்தில் ஜப்பானையும் திட்டத்தில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்ட பிறகே இந்தியாவை சம்பந்தப்படுத்துவது தொடர்பில் காணப்பட்ட இழுபறிநிலை முடிவுக்கு வரக்கூடியதாக இருந்தது. இந்த மாற்றம் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதில் இந்தியா ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இலங்கையும்  இந்தியாவும் ஜப்பானும் கூட்டாக கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு காணப்பட்ட இணக்கம் குறித்து கடந்தவாரம் செய்திகள் வெளியாகியிருந்தன. டோக்கியோ பங்குப்பரிவர்த்தை சந்தையின் ' நிக்கீ ' சுட்டெண் அறிக்கையே முதன்முதலில் இதை பகிரங்கப்படுத்தியது. இலங்கையில் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் எல்லாம் ' நிக்கீ ' யையே மேற்கோள் காட்டியிருந்தன. ஜப்பான்  இலங்கையின் நீண்டகால அபிவிருத்திப் பங்காளியாகும்.இலங்கைக்கு மிகவும் கூடுதல் கடனுதவியைச் செய்கின்ற நாடுகளில் ஒன்றாக ஜப்பான் பல தசாப்தங்களாக விளங்கியது. இப்போது கைச்சாத்திடப்பட்டிருக்கும் உடன்படிக்கையின் நிபந்தனைகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து விரைவில் நடைபெறவிருக்கும் கூட்டு செயற்பாட்டுக் குழுவின் கூட்டத்தில் ஆராயப்படும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் கூறின.

இந்தியாவில்  நரேந்திர மோடி மீண்டும் மகத்தான மக்கள் ஆதரவுடன் பிரதமராகப் பதவியேற்கும் நிலையில் இலங்கையுடனும் ஜப்பானுடனும் சேர்ந்து கொழும்பு துறைமுக அபிவிருத்தி திட்டத்துக்கான உடன்படிக்கையில் இந்தியா  கைச்சாத்திட்டிருக்கிறது. இன்று புதுடில்லியில் நடைபெறும் மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி சிறிசேன சென்றிருக்கிறார். இந்தியாவை துறைமுக அபிவிருத்தி திட்டத்தில் இணைத்துக்கொள்வதற்கு இதுகாலவரை எதிர்ப்புக்காட்டிவந்த ஜனாதிபதி சிறிசேன தனது எதிர்ப்பைக் கைவிடத் தீர்மானித்திருக்கவேண்டும் அல்லது பதவியேற்பு வைபவத்திற்கு அவர் செல்லும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முத்தரப்பு உடன்படிக்கையை செய்துகொள்வதற்கு பிரதமர் தரப்பு தீர்மானித்து அவர் எதிர்ப்புக்காட்டமுடியாத நிலையொன்றை உருவாக்கியிருக்கவேண்டும் என்று அரசியல் அவதானிகள் கூறுகிறார்கள்.

இது இவ்வாறிருக்க,  இந்தியாவும் ஜப்பானும் சேர்ந்து இலங்கையில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு முன்னெடுக்கவிருக்கும் திட்டத்தை சீனாவின் நவீன பட்டுப்பாதை என்று வர்ணிக்கப்படுகின்ற மண்டலமும் பாதையும் செயற்திட்டத்துக்கு (  Belt and Road Initiative ) எதிரிடையாக இப்பிராந்தியத்தில்  எதிர்காலத்தில் செயற்திட்டமொன்றை வகுப்பதற்கான சாத்தியப்பாட்டுக்கு வழிவகுக்கக்கூடிய ஒரு முன்னோடி நடவடிக்கையாக தெற்காசிய அவதானிகள் சிலர் கருதுகிறார்கள். மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் முக்கியமான ஒரு மையமாக இலங்கை விளங்குகிறது. இலங்கையில் பிரமாண்டமான கொழும்பு துறைமுகநகரம் உட்பட பெருவாரியான உட்கட்டமைப்பு அபிவிருத்தி திட்டங்களில் சீனா முதலீடு செய்திருக்கிறது.இலங்கையின் வேறுபல திட்டங்களுக்கு சீனா பெருமளவு கடன்களையும் வழங்கியிருக்கிறது.

ஆனால், இலங்கை அரசாங்கம் அண்மைக்காலத்தில் மேற்கொண்ட பல நடவடிக்கைகள் சீனாவின்  'பிடியை' தளர்த்துவதற்கு அது விரும்புகிறது என்பதை உணர்த்துகின்றன. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் கட்டுப்பாட்டை சீன நிறுவனமொன்றுக்கு இலங்கை ஒப்படைத்த பிறகு மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தின் முதலீடுகளின் விளைவாக ஏற்படக்கூடிய இடர்பாடுகள் எல்லாவற்றுக்குமான உதாரணமாக இலங்கை மாறிவிட்டது என்று அந்த அவதானிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

சீன  இராணுவத்தினால் அம்பாந்தோட்டை துறைமுகம் இராணுவ நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படப்போவதில்லை என்று என்னதான் இலங்கை உரக்கக்கூறினாலும் அதை யாரும் கருத்தூன்றிக் கவனிக்கத்தயாரில்லை. அதேவேளை, சீன நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அந்த துறைமுகத்தை இலங்கை கடந்தமாதம் அமெரிக்காவுடனான கூட்டு கடற்படை பயிற்சிக்கு பயன்படுத்தியது. இதன் மூலம் இலங்கை பெய்ஜிங்கிற்கும் ஏனைய உலக நாடுகளுக்கும் ஒரு செய்தியைச் சொல்ல முனைந்திருக்கிறது. அம்பாந்தோட்டையில் சீனாவினால் நிர்மாணிக்கப்பட்ட மத்தள ராஜபக்ச சர்வதேச விமானநிலையத்தை நிருவகிக்க இந்திய விமானநிலையங்கள் அதிகாரசபையை இலங்கை அழைத்திருக்கிறது. உலகில் மிகவும் வெறுமையான விமானநிலையம் என்று வர்ணிக்ப்படுகின்ற இந்த விமான நிலையம் சீனாவின் செயற்திட்டங்கள் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு உருப்படியான பயன்களைத் தருவதில்லை என்பதை நிரூபிக்கும் பல சான்றுகளில் ஒன்று என்று இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை சில தினங்களுக்கு முன்னர் ஆசிரிய தலையங்கத்தில் சுட்டிக்காட்டியிருந்தது.

மண்டலமும் பாதையும் செயற்திட்டத்தில் பல பிரச்சினைகள் இருக்கின்றன, ஆனால், மாற்றீடான வேறு திட்டங்களும் கிடையாது. மாற்றீடான  திட்டங்களை எதிர்பார்த்து நிற்கின்ற நாடுகள் இருக்கின்றன என்பதற்கு இலங்கை ஒரு உதாரணம். சீனாவினால் கடுமையான நிபந்தனைகளுடன் வழங்கப்படுகின்ற கடன்களுக்கு மாற்றீடுகளைத் தேடுவதில் பங்களாதேஷும் ஆர்வம் காட்டுகிறது.

இந்தியாவும் ஜப்பானும் சேர்ந்து மண்டலமும் பாதையும் செயற்திட்டத்துக்கு மாற்றீடு ஒன்றைத் தோற்றுவிக்கமுடியும். அதனால், ஆசிய -- ஆபிரிக்க பொருளாதார வளர்ச்சி வழித்தடம் (Asia - Africa Growth Corridor ) என்ற யோசனை நம்பிக்கை தருவதாக இருக்கிறது. கொழும்பு துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு இந்தியாவும் ஜப்பானும் சேர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் முதல் முன்னெடுக்கவிருக்கும் திட்டம் இரு நாடுகளும் பிராந்தியத்தில் அபிவிருத்தி குன்றிய நாடுகளுக்கு பயன்தரக்கூடியதாக தங்கள் வளங்களை  ஒருங்குதிரட்டக்கூடிய செயற்திட்டங்களுக்கு ஒரு கச்சிதமான உதாரணமாக அமையமுடியும் என்றும் இந்துஸ்தான் ரைம்ஸ் சுட்டிக்காட்டியிருக்கிறது.

( செய்தி ஆய்வு )

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04