பாரம்பரியத்தை பாதுகாக்காவிட்டால் தமிழர்கள் அநாதைகளாகும் நிலைமையே ஏற்படும் ; சிவசக்தி ஆனந்தன்

Published By: Digital Desk 4

28 May, 2019 | 04:07 PM
image

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு சின்னங்களை கையகப்படுத்துவதை பெரும்பான்மையின பேரினவாதம் இலக்காகக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாகவே கன்னியாவிலும் தமிழர் ஒருவருக்கு சொந்தமான பூர்வீக பகுதியை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

 இதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளருமான  சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ் மன்னன் இராவணனால், கன்னியா வெந்நீர் ஊற்று அமைக்கப்பட்டது என்ற  வரலாற்றுப் பதிவுகளின்படி அப்பகுதி தமிழர்களின் பாரம்பரியத்துடன் இரண்டறக்கலந்த மிக முக்கியமான பிரதேசமாக கொள்ளப்பட்டு வருகின்றது.

வராலாற்று சிறப்பு மிக்க இப்பகுதியை திட்டமிட்டு சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடையாளமாக மாற்றுவதற்கான முயற்சிகள் அரசாங்கத்தின் ஆசியுடன்  முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது இது ஒருபோதும் நாட்டின் நல்லிணக்கத்திற்கும் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் வழிவகுக்காது என்பதை ஆட்சியாளர்களளும் அதிகாரிகளும் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனையோரும் உணர்ந்து கொள்வது அவசியம். 

எந்தெவொரு மதத்திற்கும் எந்தவொரு மதவாதிக்கும் ஏனைய மதங்களின் மீது அதிகாரம் செலுத்துவதற்கும் அந்த மத சின்னங்களை அழிப்பதற்கும் அதிகாராம் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன். குறிப்பாக, இந்த வெந்நீர் ஊற்றுக்கு அருகில் உள்ள வில்கம் விகாரையைச் சேர்ந்த தேரர்களால் இப்பகுதியை கைப்பற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்வருகின்றன. 

இவைகளை தடுத்து நிறுத்துவதற்கு அவ்வப்போது முயற்சிகள் மேற்கொள்பட்டு வருகின்றபோதிலும்;, அதற்கு நிரந்தர தீர்வுகள் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை என்பது கண்டனத்திற்குரியதாகும். இதுவரையில் ஆட்சியில் இருந்தவர்களும் இன்று ஆட்சியில் இருப்பவர்களும் தமிழ் மக்களின் மீது சிங்கள பேரினவாதம் தனது அதிகாரத்தை நிலைநிறுத்த முற்பட்டதே இந்த நாடு கடந்த முப்பது ஆண்டுகளாக மிகப்பெரிய அவலங்களுக்கும் சீர்கேடுகளுக்கும் காரணம் என்பதை ஏற்று கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அதை உளமார உணர்ந்தவர்களாக ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள் தென்படவி;ல்லை. இந்நிலை மாற்றபடவேண்டும்.

இந்நிலையில் தற்போது, குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயம் உடைக்கப்பட்டு அப்பகுதியை கையகப்படுத்தப்படும் செயற்பாடொன்று முழு மூச்சில் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. வில்கம் விகாரையைச் சேர்ந்த தேரர்களும் தொல்பொருள் திணைக்களமும்  காணியின் உரிமையாளரும் பிள்ளையார் ஆலய அறங்காவலருமான திருமதி.க.கோகிலறமணியிடம் இருந்து அக்காணியை பறிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளனர்..

22பேர்ச் அளவுடைய இக்காணியை கோகிலறமணியின் பேரனுக்கு பிரித்தானிய அரசாங்கம் வழங்கியுள்ளது. ஆரம்பத்தில் இக்காணியை கொள்வனவு செய்வதற்கான பேச்சுக்களே தேரர்கள் முன்னெடுத்திருந்தனர். எனினும்  உரிமையாளரான கோகிலறமணி அதற்கு சம்மதித்திருக்கவில்லை.

இந்நிலையில், அக் காணியைக் கையகப்படுத்துவதற்கு முனையும் தேரர்களின் செயற்பாட்டிற்கு  இசைவாக, அரசாங்கமும் வர்த்தமானி அறிவித்தலை விடுத்திருக்கின்றது. இதன்மூலம் வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்தமயமாக்கலை அரசாங்கம் ஊக்குவிப்பதற்கு துணைபோகின்றது என்பது உறுதியாகின்றது.

வடக்கில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் சிங்கள, பௌத்த மயமாக்கலை கட்டுப்படுத்துவதற்கு எவ்விதமான முறையான செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை. அதேநேரம் அதனை தடுப்பதற்கு முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கும் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என அடையாளம் காட்டி வரும் கூட்டமைப்பில் உள்ள தற்போதைய பிரதிநிதிகளும் தயாராக இல்லை.

ஆரம்பத்தில் தமிழர்களுக்கு தீர்வினைத்தரும் புதிய அரசியலமைப்பு வருகின்றது ஆகவே அரசாங்கத்தினை எதிர்க்க கூடாது என்ற நிலைப்பாட்டில் கூட்டமைப்பு இருந்து வந்தது. தற்போது அரசாங்கம் தமிழ் மக்கள் சார்ந்து எதனையும் செய்வதாக இல்லை என்று நன்கறிந்த பின்னரும் அதே நிலைமையில் இருக்க வேண்டியதன் அவசியம் என்ன?

தற்போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கோட்டையான திருகோணமலை மாவட்டத்தில் முக்கிய பகுதிகள் எல்லாம் சிங்கள பௌத்தமயமாக்கல் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்று கொண்டிருக்கின்றன. அதில் சைவர்களின் வரலாற்று சிறப்புமிக்க கன்னியா பகுதியும் பறிபோகும் அபாயத்தில் இருக்கின்றது.இதேபான்று முல்லைத்தீவு நீராவியடிப்பிள்ளையார் நீதி மன்ற தீர்ப்பையும் மீறி புத்த சிலையும் கண்காணிப்பு கமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமும் சிங்கள பொளத்த ஆக்கிரமிப்புக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது. 

இனப்பிரச்சினைக்கு தீர்வு, இன நல்லிணக்கம் இவற்றை தற்போதைய ஆட்சியாளர்களிடத்திலிருந்தும் எதிர்பார்க்க முடியாதுள்ளது என்பது வெளிபடையாகிவிட்ட நிலையில், ஆகக்குறைந்தது தமிழர்களின் இப்பினையாவது பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. 

அந்த வகையில் தனியாருக்குச் சொந்தமான கன்னியா பாரம்பரியப்பகுதியை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக விரைந்து செயற்பட வேண்டியுள்ளது. இல்லா விட்டால் தமிழர்களின் வரலாறு செறிந்த திருமலை மாவட்டம்  பறிபோய் தமிழர்கள் அநாதைகளாகும் நிலைமையே ஏற்படும் ஆபத்துள்ளது. 

இனியும் அமைதியாக இருப்பதன் ஊடாக அரசை பாதுகாக்கும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதைச் சாதிக்க விளைகின்றார்கள் என்ற கேள்வியே இங்கு எழுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10