சிறைமீண்ட ஞானசார தேரர் தமது நோக்கத்தை கூறுகிறார் ?

Published By: Priyatharshan

26 May, 2019 | 10:11 AM
image

இஸ்லாமிய அடிப்படைவாதம் இலங்கையைப் பீடித்துள்ள இரத்தப் புற்றுநோயாகும். இதிலிருந்து நாட்டைப் பாதுகாப்பது எளிதான விடயமல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். ஆகவே தயவுசெய்து நாட்டில் காணப்படுகின்ற இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தல் குறித்து அரசியல்வாதிகள் கருத்துக் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். பொதுபலசேனா இந்த அச்சுறுத்தலில் இருந்து நாட்டை மீட்டெடுக்க முழு மூச்சுடன் செயற்படுமென கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

தமிழ்நாடு தௌஹீத் ஜமா அத் அமைப்பிடமிருந்து இலங்கை தௌஹீத் அமைப்புகளுக்கு பெரும்பாலும் கட்டளைகள் கிடைக்கப்பபெற்றுள்ளது. கோவை ஐயூப் போன்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இலங்கையில் மிக மோசமாக பிரசாரங்களை மேற்கொண்டிருந்தனர். எனவே இந்த வாரத்திற்குள் அப்துல் ராஷிக் என்ற நபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் பொதுபலசேனா அவரைக் கண்டுபிடிக்கும் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டார்.

அத்துடன் 30 ஆயிரம் தமிழர்களை இஸ்லாமிய மதத்திற்கு அடிப்படைவாதிகள் மதம் மாற்றியுள்ளனர். சுமார் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்ற 80 ஆயிரம்  சிங்களப் பெண்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றியுள்ளனர். கடந்த 5 வருடகாலத்திற்குள் 7 ஆயிரத்திற்கும் அதிகமான சிங்கள யுவதிகள் இஸ்லாமிய மதத்திற்கு மாறியுள்ளனர். குருணாகலை நகர எல்லைக்குள் மாத்திரம் சுமார் 1000 பௌத்த பெண்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவையனைத்திற்கும் எழுத்துமூல ஆதாரங்கள் எம்மிடமுள்ளது. இந்நிலையை மாற்றுவதற்காக நாங்கள் செயற்படுவோம். இது எமது நாடு. எமது நாட்டுக் கலாசாரத்தைச் சீரழிக்க ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையெனவும் தெரிவித்தார்.

சிறைமீண்ட பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்யேக செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அந்த செவ்வியின் முழுவிபரம் வருமாறு :

கேள்வி : சிறை வாழ்க்கை எவ்வாறு இருந்தது ?

பதில் : பல்கலைக்கழம் ஒன்றில் பட்டப்படிப்பினை முடித்தது போன்று காணப்பட்டது. பல விடயங்களை கற்றுக்கொண்டேன். ஆன்மீகத்திற்கு சிறந்த காலமாகவும் அமைந்தது. அது மாத்திரமல்ல , நாட்டில் அத்ததனை துறைகளும் எந்தளவு சீரழிந்துள்ளது என்பதை அறியவும் சிறை வாழ்க்கை சிறந்த வாய்ப்பாக அமைந்தது. குறுகிய கால சிறைவாழ்க்கை முடிவில் திருப்தியாக பரீட்சை ஒன்றை எதிர்கொண்டது போன்று உணர்ந்தேன். 100 புத்தகங்களை வாசித்து பெற்றுக்கொள்ள முடியாத அறிவினை பெற்றுக்கொண்டேன். 

கேள்வி : உங்களது விடுதலை அரசியல் என கூறுகின்றனர். அது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில் : அரசியல் , கலாசாரம் மற்றும் சமூக ரீதியாக எதனை எமது நாட்டில் செய்தாலும் அதனை தவறாக அர்த்தப்படுத்துவது வழமையாகியுள்ளது. மக்களுடன் பேச இயலாது . வேறு இனத்தவர்களுடன் நட்பை பேன முடியாது. அவ்வாறு நட்புறவுடன் செயற்படும் போது அதனை விமர்சிப்பது எம்மவர்களின் இழிவான குணத்தினை வெளிப்படுத்துகின்றது.

ஆனால் எனக்கு என் மீது நம்பிக்கையிருந்து. எனது இலக்கு சரியானது என்பதாலேயே அந்த நம்பிக்கையும் உற்சாகமும் கிடைத்தது. தியாகங்கள் செய்யாது ஒரு தேசிய இனத்தின் நலன்களுக்காக செயற்பட முடியாது. துரதிஷ்டவசமாக நாம் சந்தித்த அரசியல்வாதிகள் மற்றும் மத தலைவர்கள் என பலரும் வாய்ச்சொல் வீரர்களாகவே காணப்பட்டனர். இவ்வாறானவர்களிடமிருந்து போதனைகள் மாத்திரமே கிடைக்கின்றன. தேசிய

நலன்களுக்காக தியாங்கள் செய்ய முன்வருவதில்லை. எனவே எவரின் வழிக்காட்டலும் எனக்கு தேவையில்லை. புத்தரே எனது தலைவர். அவர் வழியிலேயே நான் செல்கின்றேன். இவ்வுலகில் இழிவுபடுத்தப்படாத எவரும் இருந்து விட முடியாது என்பதே புத்தரின் போதனையாகும். எனவே எமக்கெதிராக பல்வேறு இழிவுச்சொற்களைப் பயன்படுத்தலாம். ரணில், மஹிந்த, கோத்தா அல்லது நோர்வே என்றுகூட எம்மை அவர்களுடன் தொடர்புபடுத்தி பிரசாரங்களை மேற்கொள்வார்கள். அவை எமக்கு எவ்விதத்திலும் பிரச்சினையில்லை.

நீதி கிடைக்குமென்ற எதிர்பார்ப்புடனேயே நாட்டுக்கான எனது தியாகங்களைச் செய்தேன். ஆனால் இந்தளவு நிறைவேறுமென நான் எதிர்பார்க்கவில்லை. ஜனாதிபதி என்னைப் பார்ப்பதற்காக சிறைச்சாலைக்கு வந்தார். வரலாற்றில் பௌத்த பிக்கு ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய கடமையே எனக்கு உள்ளது. எனவே ஜனாதிபதி என்னை சந்தித்தது மற்றும் அதன் பின்னரான விடுதலைக்கான பெருமை அவருக்கு வழங்கப்பட வேண்டும். அதேபோன்று ஏதோவோர் சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற தவறினைத் திருத்திக் கொள்வதற்காகவே இந்த விடுதலையும் அமைந்துள்ளது. புத்தருக்கு நேர்ந்துவிட்ட நாடு அது.

எனவேதான் எனது தியாகத்திற்கு நீதி கிடைத்துள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தலான நிலைமை குறித்து ஜனாதிபதியுடன் பரந்துபட்ட பேச்சுக்களை முன்னெடுக்க முடிந்தது. உண்மை நிலைமையினை அவர் உணர்ந்து கொண்டாரென நான் நினைக்கின்றேன். இதன் வெளிப்பாடாகவே எனது விடுதலைக்கான சந்தர்ப்பம் கூட ஏற்பட்டிருக்கலாம்.

கேள்வி : உங்களது விடுதலை குறித்து ஜனாதிபதியுடன் யாரேனும் மத்தியஸ்தம் வகித்து செயற்பட்டார்களா? 

பதில் : நான் சிறையிலிருந்த காலப்பகுதியில் கட்சி பேதங்களின்றிப் பலரும் என்னைச் சந்தித்தார்கள். ஒரு தடவை பேராயர் கார்டினல் கூட என்னை வந்து சந்தித்துச் சென்றார். அதேபோன்று அனைத்து பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் எனது விடுதலை குறித்து கோரிக்கைகளை விடுத்திருந்தனர். பௌத்தர்கள் மாத்திரமல்ல. வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் வாழும் தமிழர்கள் கூட எனது விடுதலை தொடர்பில் பேசினார்கள். இந்து சம்மேளனம் கோரிக்கை விடுத்திருந்து.

அதேபோன்று முஸ்லிம் சமூகத்தினரும் எனது விடுதலை குறித்து பலமுறை பேசியிருந்தனர். ஆகவே எவ்வித பேதமுமின்றி எனது விடுதலைக்காகப் பலரும் கோரிக்கை விடுத்தனர். இதுவே ஒருகட்டத்தில் ஏகோபித்த கருத்தாகவும் மாறியது. எனக்கு விதிக்கப்பட்ட தண்டனை ஏற்புடையதல்ல என்பதை வெளிப்படுத்தும் வகையிலேயே நாட்டின் அனைத்து இன மக்கள் மத்தியிலும் பேசப்பட்ட விடயமாகியது. இதுவும் எனது விடுதலைக்கு வழிவகுத்தது.

கேள்வி : இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கொடூரத்தன்மையை முன்கூட்டியே நீங்கள் எவ்வாறு கணித்தீர்கள்?

பதில் : நாங்கள் வெறுமனே செயற்பட்ட குழுவொன்றல்ல. இருபது வருடகாலமாக இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் செயற்பாடுகள் குறித்து கண்காணித்தோம். எனது விகாரையை சற்றுப்பாருங்கள். மூன்று ஏக்கர் நிலப்பரப்பில் இந்த விகாரை அமைந்துள்ளது. ஆனால் இதில் வழிபாட்டிற்கென்று எந்தவொரு பகுதியும் விசேடமாக அமையப்பெறவில்லை. அதேபோன்று தொடர்மாடிக்கட்டடங்களை அமைக்க வேண்டிய தேவையும் எனக்கு ஏற்படவில்லை. இருபது வருடகாலமாக எமது நாட்டைப் பாதுகாக்கக்கூடிய பிரஜைகளையே நான் உருவாக்கியிருக்கின்றேன்.

சிறந்த பிரஜைகளை உருவாக்குவதே எமது கடமையே தவிர பெரிய தொடர்மாடிக்கட்டடங்களை நிர்மாணிப்பதல்ல. நூறு அறைகள் இருந்தாலும் ஒரு அறையில் தான் நித்திரை செய்யலாம். நாட்டுக்காக எமது தியாகங்களை செய்யவேண்டுமென நான் மனசாட்சிக்கு நேர்மையாகவே தீர்மானித்தேன். இதனால் என்னை நானே அழித்துக்கொண்டேன். என்னைப் போன்று இழிவுச் சொற்களால் எந்தவொரு தேரரும் சாடப்பட்டிருக்க மாட்டார். என்மீது எத்தனையோ குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இவைகளைத் தாண்டி நான் ஒரு சுதந்திரமான பௌத்த பிக்குவாகவே எப்போதுமிருந்தேன். எனக்கென்று ஒன்றுமில்லை.

அரசியல்வாதிகளின் சகபாடியாக இருக்கவேண்டிய தேவை எனக்கில்லை. எனவேதான் நாட்டுக்கான அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தன்னம்பிக்கையுடன் பின்வாங்காமல் முன்நின்று செயற்பட்டேன். புத்தபெருமானின் சீடனாகவே நான் எப்போதும் இருக்க விரும்புகின்றேன். 2012 ஆம் ஆண்டு தேசிய அரசியல் கட்சிகளுடன் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டோம். ஜாதிக ஹெலஉறுமய மற்றும் தேசிய பிக்கு முன்னணி ஆகியவற்றை ஸ்தாபிக்கும் போது நாம் பங்களிப்புச் செய்தோம். ஜாதிக ஹெலஉறுமயவில் இருந்து ஒன்பது பேரைப் பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம். இதுகுறித்து வேறொரு நாளில் பேசவேண்டும். இவர்கள் நாட்டை வழிநடத்திய விதம் குறித்து நிச்சயமாக வேறொரு தினத்தில் பேசப்பட வேண்டும். அரசியல் அதிகாரங்களை மையப்படுத்திய தலைவர்களின் நிலைமையை உணர்ந்தே ஒரு இலக்கை நோக்கி நாம் பயணிக்கத் தீர்மானித்தோம்.

எனவே முதன்முதலாக இந்தத் தாக்குதல்களை நடத்தியது தமிழர்களோ, முஸ்லிம்களோ அல்ல. சிங்க தோலைப் போர்த்திய எம்மவர்களே முதலில் எம்மைத் தாக்கினர். இதனைக் கண்டு நாங்கள் அஞ்சியதில்லை. 2012 மே மாதம் பொதுபலசேனா அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது. நாட்டில் சிங்கள பௌத்தர்களுக்குப் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அதற்குள் சிக்குண்டு சிங்களவர்கள் அழிந்துபோகின்றனர். 

இதிலிருந்து மீள தலைமைத்துவத்தை வழங்க வேண்டும் என்ற பாரிய இலக்குடனேயே நாம் பொதுபலசேனா அமைப்பை உருவாக்கினோம். பௌத்த இனவழிப்பு, மதமாற்றம், கலாசார அழிவுகள் என பல்வேறு வகையில் பௌத்த மக்களுக்கெதிராக அடிப்படைவாத சக்திகள் தீவிரமாக செயற்பட்டமையைக் கவனத்திற்கொண்டு எமது நடவடிக்கைகள் தீர்மானிக்கப்பட்டன. எனவே பொதுபலசேனா என்ற அமைப்பு யாருடையதும் துணைக்குழுவல்ல. புத்தரின் சேனையாகவே பொதுபலசேனா காணப்படுகின்றது.

பொதுபலசேனாவை உருவாக்கியதன் பின்னர் மஹரகமவில் இடம்பெற்ற கூட்டத்தின் போது நாட்டில் கத்தோலிக்கர்களுக்கும், இந்துக்களுக்கும் சேனா அமைத்துக்கொள்ளுமாறு கூறினோம். பூகோள பயங்கரவாத அச்சுறுத்தல் எமது நாட்டிற்குள் ஊடுருவப் போகின்றது. எனவேதான் நாங்கள் கத்தோலிக்கர்களுக்கும், இந்துக்களுக்கும் அவ்வாறு கூறினோம். மூன்று தசாப்தகால கொடுமையான வேதனைகளை அனுபவித்தவர்களாகவே நாம் காணப்படுகின்றோம். ஆனால் போர் முடிவடைந்ததன் பின்னர் மக்கள் தேசிய கடமையை மறந்துவிட்டனர். வேறு உலகத்திலேயே வாழ்ந்தார்கள். கையில் தேசிய அடையாள அட்டை கூட இருக்கவில்லை. தேசிய பாதுகாப்பை முழுமையாகப் புறம்தள்ளியிருந்தனர்.

இதன் விளைவாக பல்வேறு சக்திகள் நாட்டிற்குள் உருவாகின. பொதுபலசேனா அமைப்பை உருவாக்கியதன் பின்னர் எமது நாட்டின் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு வேறுபாடு இருக்கவில்லை. இவ்வாறான பல முஸ்லிம்கள் விகாரைகளுக்குக் காணிகளை வழங்கினர். தானசாலைகளை அமைக்கும் போது அரிசி வழங்குவார்கள்.

இன்றும் விகாரைகளுக்கு கொடைகளை வழங்கும் முஸ்லிம்கள் உள்ளனர். எவ்விதமான பேதங்களும் காணப்படவில்லை. மத ரீதியான அடிப்படைவாதிகளை இனங்கண்டு அவர்களை பலவீனப்படுத்துவதும் பொதுபலசேனாவின் முக்கிய குறிக்கோளாகக் காணப்பட்டது. இதன்போது நாம் முதலில் கண்ட அடிப்படைவாத சக்திகளாக கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்தவர்களை அடையாளங்கண்டோம்.

இன்று முதலைக்கண்ணீர் வடிக்கும் கத்தோலிக்க சபைகள் அன்று அவ்வாறான அடிப்படை சக்திகளுக்கு எதிராக நாங்கள் சட்டத்தில் கொண்டுவருமாறு வலியுறுத்திய போது வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்தினர்.

அன்று அவர்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தால் சஹ்ரான் போன்றவர்கள் இன்று தற்கொலைக் குண்டுதாரிகளாக மாறியிருக்க மாட்டார்கள். அழிவு ஏற்பட்டதன் பின்னர் மக்களின் கண்ணீருடன் விளையாடுவது தலைமைத்துவமல்ல. அழிவு ஏற்படுவதற்கு முன்னரே அதனைத் தடுப்பது சிறந்த தலைமைத்துவமாகவே நாம் கருதுகின்றோம்.

நாட்டில் 455 அடிப்படைவாத அமைப்புக்கள் காணப்படுகின்றன. இது எமது தாய்நாடு. சிங்கள மக்களின் நாடாகவே காணப்படுகின்றது. கலாசாரம், மரபுரிமைகள், மொழி, மதம் என அனைத்தையும் நாங்களே உருவாக்கினோம். எமக்கெனத் தனித்துவமான பௌத்த சம்பிரதாயங்கள் காணப்படுகின்றன.

அவ்வாறிருந்தம் எனைய மதங்களுக்கும் சுதந்திரமாகச் செயற்பட எவ்விதமான தடையும் காணப்படவில்லை. பௌத்தர்களைப் போன்று நல்லிணக்கமாக வாழக்கூடிய உலகில் வேறெந்த மதமும் இல்லை. இவ்வாறிருக்க பௌத்த இனத்திற்கு அச்சுறுத்தலாகும் வகையில் சில சக்திகள் செயற்படுவதால் தான் அந்த அடிப்படைவாத சக்திகளை அழிக்க வேண்டுமென்று நாங்க் கூறினோம். இவ்வாறானதொரு சூழ்நிலையில் தான் வஹாப்வாதத்தைப் போன்று சலாபிஸ அடிப்படைவாதங்கள் குறித்துப் பாரம்பரிய முஸ்லிம் மக்கள் எமக்குத் தகவல் வழங்கினர்.

இந்த இஸ்லாமிய சலாபிஸ மற்றும் வஹாபிஸ அடிப்படைவாதத்தினால் நாட்டில் வாழும் முஸ்லிம்கள் படுமோசமாகப் பாதிக்கப்படுகின்றனர் என்பதை அதே சமூகத்தைச் சார்ந்தவர்களே எமக்குக் கூறினர்.

அவர்கள் கூறியதற்காக நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக பல வருடங்களாக இந்த விடயத்தைக் கூர்மையாக அவதானித்தோம். பல்வேறு தகவல்களைச் சேகரித்தோம். உலகில் பௌத்த நாடுகளில் இடம்பெற்ற அழிவுகளின் பின்னணி குறித்து அவதானித்தோம். பௌத்த நாடுகள் மிக எளிதாக இஸ்லாமிய அடிப்படைவாத ஆக்கிரமிப்பிற்குள் உள்வாங்கப்பட்டுள்ளதை நாம் கண்டறிந்தோம்.

எமது இந்தப் பிராந்தியத்தை எடுத்துக்கொண்டால் மாலைதீவு என்பது ஒரு பௌத்த நாடாகும். ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் பௌத்த நாடுகளாகும். மலேசியா ஒரு பௌத்த நாடு என்பதற்கான ஆதாரம் சிங்கப்பூர் நூதனசாலையில் இன்றும் காணப்படுகின்றது. பிராந்தியத்தில் பெரும்பாலான பௌத்த நாடுகள் மிக வேகமாக இஸ்லாமிய அடிப்படைவாத ஆக்கிரமிப்பிற்குள் உள்வாங்கப்பட்டன. அவ்வாறான ஆக்கிரமிப்புக்களிலிருந்து இலங்கையைப் பாதுகாக்க 800 போர்கள் இடம்பெற்றுள்ளன. நாட்டில் இஸ்லாமிய அடிப்படைவாதம் வலுவாக மேலோங்கி வருகையில் அதற்கு எதிராகப் பாரம்பரிய முஸ்லிம்கள் குரல் கொடுக்கும் போது அவர்கள் தாக்கப்படுவதாகவும், கொலை செய்யப்படுவதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் எம்மிடம் முறையிட்டனர்.

எனவேதான் இந்த விடயத்தை ஆழமாகக் கவனத்திற்கொண்டு இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக நாங்கள் குரல்கொடுக்க ஆரம்பித்தோம். இதன்போது முதலாவது விடயமாக ஹலால் விவகாரத்தைக் கையில் எடுத்தோம்.

அரசியல்வாதிகள் இந்த விடயத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார்கள். 70 ஆண்டு காலமாக நாட்டின் எந்தவொரு பிரச்சினையையும் அரசியல்வாதிகள் தீர்க்கவில்லை. இன்று இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் சிங்கத்தோல் போர்த்தியவர்கள் அன்று நாங்கள் பேசும் போது எம்மை இனவாதியாகவே பிரசாரம் செய்தனர். 2013ஆம் ஆண்டு நடுப்பகுதியில் கிழக்கு மாகாணம் குறித்து நான் முக்கிய விடயமொன்றைக் குறிப்பிட்டேன். அதாவது சஹ்ரான் என்ற நபர் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை மிகத் தீவிரமாகப் போஷித்து வருகின்றார். அவர் ஆயுதங்களை ஏந்தி ஏனைய இனத்தவர்களுக்கு எதிராகச் செயற்படுமாறு இஸலாமிய இளைஞர்களைத் தூண்டுகின்றார் என்ற விடயத்தை வெளிப்படுத்தினேன்.

ஷிப்லி பாரூக் மற்றும் அப்துல் ரகுமான் ஆகியோர் சஹ்ரானை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கு முற்பட்டனர். நல்லாட்சிக்கான தேசிய முன்னணி என்ற அமைப்பை உருவாக்கி அதனூடாகவே இவர்கள் செயற்பட்டனர். சஹ்ரானைக் கைது செய்யுமாறு கடந்த 2013 ஆம் ஆண்டில் நான் கோரினேன். அதற்கான எழுத்துமூல ஆவணங்கள் என்னிடம் உள்ளன. 2007 ஆம் ஆண்டில் அலவி மௌலானா இதேவிடயத்தைக் கோரியிருந்தார். அஸாத் சாலியின் சகோதரரான ரியாஸ் சாலி தெவட்டகா பள்ளிவாசலில் பொறுப்பாளர்களில் ஒருவராக உள்ளார். இவர்கள் கிழக்கில் மேலோங்கிவரும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான நிலைப்பாட்டில் செயற்பட்டனர். குருணாகலை - பரகாதெனிய, நிட்டம்புவ - திஹாரிய, சிலாபம் - மாதம்பே மற்றும் காத்தான்குடியில் இஸ்லாமிய அடிப்படைவாதம் மிகத் தீவிரமான வளர்கின்றன. இவை தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று அவர்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தனர். பொதுபலசேனா செயற்படுவதற்கு முன்னரே ரியாஸ் சாலி மற்றும் அலவி மௌலானா ஆகியோர் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராகச் செயற்பட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று உயிரிழந்தவர்களுக்கு நீதி வழங்காது இதனை தற்போது அரசியலாக்கிச் செயற்படுகின்றனர். பிரச்சினையைத் தீர்க்காது வாக்குகளை மையப்படுத்திச் செயற்படுகின்றனர்.

இவ்வாறான பேரழிவு இடம்பெற்றும் கட்சி பேதங்களை மறந்து தேசிய நலன்கருதி ஓரணியாகத் திரள இன்றும் முடியாமல் போயுள்ளது. இவர்கள் பிளவுபட்டு நாட்டு மக்களை ஒன்றுசேருமாறு கூறுகின்றனர். நாட்டு மக்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த இவர்களால் முடியாமற்போயுள்ளது.

விடுதலைப் புலிகளுடன் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை ஒப்பிட முடியாது. விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுதாரிகளுக்கு ஒரு இலக்கு காணப்பட்டது. அது அரசியல் ரீதியான ஒன்றாகும். அவர்களுடைய நோக்கமும் அரசியல்மயப்பட்டது. ஆனால் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் இலக்கு அவ்வாறானதல்ல.

காபீர்கள் மற்றும் அந்நிய மதத்தவர்களைக் கொலை செய்வதே எமது இலக்கென ஐ.எஸ் தலைவர் அபூ பக்கர் அல்-பக்தாதி கூறுகிறார். உலகம் இருக்கும் வரையில் இந்த இலக்கிலிருந்து நாம் விலகப்போவதில்லை என்கிறார். நாளை ஐ.எஸ் அல்லது வேறொரு அமைப்பும் இதே இலக்குடன் வரலாம். தலிபான், அல் கொய்டா, அல்-ஷபாப் மற்றும் ஜமாத் இஸ்லாம் இவ்வாறு 52 இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்கள் உலகில் காணப்படுகின்றன. இவையனைத்துமே தற்கொலைக் குண்டுதாரிகளாகவே காணப்படுகின்றன.

இலங்கையில் நாளை மற்றுமொன்று வெளிவரலாம். எனவேதான் இதற்கு எதிராக பொதுபலசேனா 2013 ஆம் ஆண்டிலிருந்து மிகத் தீவிரமாகச் செயற்படத் தொடங்கியது. கொச்சிக்கடை தேவாலயத்தில் கொல்லப்படுபவர்கள் யாரென சஹ்ரான் கருத்திற்கொள்ளவில்லை. வெடிகுண்டிற்கு இதுவொன்றும் தெரியாது. இந்த அச்சுறுத்தல்கள் குறித்து நாங்கள் செயற்படும் போது மக்கள் கூட எம்மை இனவாதியாக விமர்சித்தார்கள். ஆனால் விமர்சனங்களுக்கு பொதுபலசேனா அடிபணியவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது இலங்கையை ஆக்கிரமித்துள்ள இரத்தப் புற்றுநோயாகும். எனவே இதுகுறித்து மிகத் தீவிரமாகச் செயற்பட வேண்டிய காலமாகவே தற்போதைய காலகட்டத்தை நான் காண்கின்றேன். மீண்டும் என்னைச் சிறையிலிட்டாலும் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்தைக் கைவிட இயலாது.

இந்த அச்சுறுத்தலை எம்மால் எதிர்கொள்ள முடியும். மக்களை அவதானத்துடன் இருக்கச் செய்து தேசிய அளவில் ஒற்றுமையாகச் செயற்பட்டால் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை நாட்டிலிருந்து துடைத்துவிடலாம். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் தொடர்பில் முழுமையான தகவல்கள் என்வசமுள்ளது. மியன்மாரில் என்ன நடந்தது? தெற்கு தாய்லாந்தில் எவ்வாறு பௌத்தர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டப்பட்டது? பங்களாதேஷில் பௌத்தர்கள் மலைப்பாங்கான பகுதியில் இருப்பது ஏன்? ரோஹிங்கியா முஸ்லிம்கள் வெளியுலகிற்குக் காட்டும் போலியான முகத்தை கண்டிருக்கிறேன். எனவே இலங்கையில் அவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதிருக்க நிபந்தனையற்ற வகையில் பொதுபலசேனா செயற்படும்.

இன்னும் நூறு சஹ்ரான்கள் வருவார்கள். அவர்களை நாம் அடையாளம் காணவேண்டும். பாரம்பரிய முஸ்லிம்களையும், அடிப்படைவாத முஸ்லிம்களையும் வேறுபடுத்தி இனங்காணவேண்டும். தயவுசெய்து அரசியல்வாதிகள் இந்த விடயத்தைப் பேசக்கூடாது. பொதுபலசேனா இஸ்லாமிய அடிப்படைவாத்ததிற்கு எதிரான விடயங்களைக் கருத்திற்கொண்டு செயற்படும். மத்ரஸாக்கள் தேவையா இல்லையா என்பதை நாம் கூறுகின்றோம். 2013 அக்டோபர் 9ஆம் திகதி பதுளையில் இடம்பெற்ற பொதுபலசேனா மாநாட்டின் போது கிழக்கில் ஸ்தாபிக்கப்படும் ஹிஸ்புல்லா மண்டபம் குறித்துத் தகவல் வெளியிட்டேன்.

சவுதிஅரேபியாவிலிருந்து ஷரியா ஆலோசகர் அடிக்கல் நாட்டுவதற்கு இலங்கைக்கு வருகை தந்தார். மலிக் அப்துல்லா பல்கலைக்கழகமே கிழக்கில் ஸ்தாபிக்கப்படுவதாக 2013 ஆம் ஆண்டில் நான் வெளிப்படுத்தினேன். அன்றே குரல் கொடுத்திருந்தால் இந்த ஷரியா பல்கலைக்கழகம் என்ற ஒன்று வந்திருக்காது. சஹ்ரானின் குண்டு வெடித்தவுடன் தான் அரசியல்வாதிகள் இந்தப் பல்கலைக்கழகத்தைக் கண்டுகொண்டு, குரல்கொடுக்கின்றனர்.

ஹிஜாப், நிகாப், புர்கா குறித்து முஸ்லிம் சமூகத்தினரிடம் கருத்துக்களை வினவவோமென கடந்த வாரத்தில் சில அரசியல்வாதிகள் கூறியதை நான் அவதானித்தேன். ஏன் அவர்களிடம் கேட்க வேண்டும்? இது எமது நாடு. புர்கா தடை, மத்ரஸா தடை, ஷரியா தடை என நாம் தீர்மானிக்க வேண்டும். இதனைத் தைரியமாகக் கூறுவதற்கு யாருக்கும் முதுகெலும்பு இல்லை. இது சிங்கள பௌத்த நாடு. எனவே இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்குக் காரணமாகும் இவ்வாறான விடயங்களை உடனடியாகத் தடை செய்ய வேண்டும். அதனை நாம் தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு தீர்மானிக்கும் இடத்திற்கு நாடு வரும்பட்சத்தில் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும்.

ஹலால் திட்டத்தை இலங்கையில் கொண்டுவரும் போது ஜம்இய்யத்துல் உலமாக்கள் பௌத்தர்களிடம் கேட்டார்களா?

ஷரியா வங்கிகளைக் கொண்டுவந்தார்கள். அதற்கு சிங்களப் பெரும்பான்மை மக்களிடம் அனுமதி பெற்றார்களர்? அல்லது கத்தோலிக்கர்களிடமோ, இந்துக்களிடமோ கேட்டார்களா? இல்லை, யாரிடமும் கேட்கவில்லை. மிகவும் சூட்சுமமான முறையில் இவ்வாறான அடிப்படைவாத விடயங்களை விதைக்கும் போது யாரும் அதனை எதிர்க்கவில்லை. பொதுபலசேனா அதனை எதிர்த்த போது எம்மை சிங்கள சக்திகள் அடக்கியது.

திருடனைப் பிடித்துக் கொடுப்பவனை சிறையிலடைக்கும் நாடாகவே எனத தாய்நாடு காணப்படுகின்றது. அதேபோன்று இலங்கை நீதித்துறைக் கட்டமைப்பிற்குள் காதி நீதிமன்றங்கள் காணப்படுகின்றன. இத்றகு யார் அனுமதி வழங்கியது? ஷரியா சட்டம் எமது அரசியலமைப்பிற்குள் உள்வாங்கப்படவில்லை. நாம் சவுதிக்குச் சென்றால் நாம் அந்த நாட்டுச் சட்டத்தின் பிரகாரம் செயற்பட வேண்டும். ஏன் இலங்கையில் மட்டும் இவ்வாறானதொரு நிலைமை? நாட்டின் அபிமானத்தை அரசியலுக்கான எமது தலைவர்கள் அழித்துவிட்டனர். எனவே இதனைத் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்கு பொதுபலசேனா தலைமை தாங்கும். இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுபவர்களை நாட்டுமக்கள் முன்நிறுத்தி வெளிச்சத்திற்குக் கொண்டுவருவோம். இதற்கு நாங்கள் அஞ்சப்போவதுமில்லை.

கேள்வி : அரசியல் எதிர்பார்ப்புடனேயே நீங்கள் விடுதலை பெற்றதாகக் கூறப்படுகின்றது. இதுபற்றி?

பதில் : இதற்குப் பதிலளித்து நான் காலத்தை வீணடிக்க விரும்பவில்லை. பொதுபலசேனாவின் இலக்கு இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இலங்கையிலிருந்து முற்றாக இல்லாதொழிப்பதேயாகும். இந்த இலக்கை முன்னெடுக்க அனைத்துப் பிரஜைகளும் சீரூடை அணியாத பொலிஸாராக செயற்பட வேண்டும். முஸ்லிம்களைத் தாக்குவதற்காக அல்ல. தாம் வாழும் சூழலில் என்ன நடக்கின்றுது என்பதை மக்கள் அவதானிக்க வேண்டும்.

கேள்வி : நாட்டிற்குள் தற்போது தலைத்தூக்கியுள்ள இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பின்னணி குறித்துப் பல தகவல்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளீர்கள். அந்தப் பின்னணியில் வெளிநாடுகள் உள்ளனவா?

பதில் : இது ஓர் பரந்துபட்ட விடயமாகும். தனித்தலைப்பின் கீழ் இதனை மாத்திரம் கருத்திற்கொள்ள வேண்டும். ஒரு குழந்தை பிறப்பதற்கு முன்னர் ஒன்பது மாதங்களேனும் தாயின் கருவறையில் இருக்கும். அதேபோன்று தான் சஹ்ரான் போன்றவர்களும் தானாக உருவாகவில்லை. அரசியல், சர்வதேசத் தொடர்புகள் தேவைப்படுகின்றன. நாலாதிசையிலும் உள்ள கடல் இலங்கைக்கு இயற்கையின் பாதுகாப்பாக அமைந்துள்ளது. இருப்பது ஒரேயொரு விமானநிலையம். இவ்வாறிருந்தும் எமது தாய்நாட்டைப் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை என்றால் அது எமது இயலாமையாகும். எமது அரசியல் தலைவர்கள் இந்த விடயத்தில் தோல்வியைச் சந்தித்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளின் எல்லைகள் வெறும் வேலிகளாகவே காணப்படுகின்றன. அவ்வாறிருந்தும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை மிகத் தைரியமாக எதிர்கொள்கின்றனர். அந்த முன்னுதாரணங்களை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

எனவே குழப்பமடையத் தேவையில்லை. நான் ஆவேசப்பட்டு வார்த்தைகளை வெளியில் விடவும் விரும்பவில்லை. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் எந்தவொரு விடயத்தையும் நான் கூறவிரும்பவில்லை. இதன் பின்னணியில் சீ.ஐ.ஏ உள்ளதா? அல்லது சவுதி உள்ளதா என்பதை வேறொரு நாளில் பேசுவோம். அதேபோன்று எவ்வாறு நிதிப்பரிமாற்றம் இடம்பெற்றது? ஆயுதங்கள் எவ்வாறு கொண்டுவரப்பட்டன?

அவர்களது கோட்பாடுகள் என்ன? அது எவ்வாறு உருவாக்கப்படுகின்றது? இவையனைத்தையும் ஆதாரபூர்வமாக எம்மால் வெளிப்படுத்த முடியும். எனவே எதிரிக்கு வாய்ப்புக் கொடுக்க நாம் விரும்பவில்லை. இப்ராஹிம், சஹ்ரான் இவர்களனைவரும் பிறப்பில் நல்லவர்கள். ஆனால் இவர்களைத் தற்கொலைக் குண்டுதாரிகளாக உருவாக்கும் இடம் எதுவென்பதை வெளிப்படுத்துவோம். அந்த இடத்தை இலக்குவைத்துத் தான் தாக்குதல்கள் அமைய வேண்டும். இல்லையென்றால் பலநூறு சஹ்ரான்களை நாம் சந்திக்க நேரிடும். சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்கள் இறைவனின் பெயரைக்கூறி தற்கொலைக் குண்டுதாரிகளாக செல்கிறார்கள் என்றால் அதனை சாதாரண விடயமாக நாம் கருதமுடியாது.

இதனால் அதே சமூகத்திலுள்ள ஏனையவர்களுக்கு அவர்களுக்கு வழங்கும் செய்தி என்ன? சொகுசு வாழ்க்கை வாழ்ந்த அவர்களே இறைவனுக்காகத் தற்கொலை செய்து கொள்கின்றார்கள். நாமும் செய்து கொண்டால் என்ன என்று நினைத்து பலநூறுபேர் முன்வந்துவிட்டால் நிலைமை என்னவாகும்? அரசியல்வாதிகளின் முட்டாள்தனமான செயற்பாடுகளினால் இவ்வாறானதொரு நிலைமையே ஏற்படும். எனவே அரசியல்வாதிகளுக்கும், ஏனைய தரப்பினர்களுக்கும் அநாவசிய பிரசாரங்களைக் கைவிடுமாறு கோருகின்றோம். பொதுபலசேனா இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும். ஏதேனும் அறிய வேண்டுமென்றால் எம்மிடம் கேட்டு அறிந்துகொள்ளுங்கள். அரசியலுக்காக ஒருவரையொருவர் தூற்றிக்கொள்வதை விட யாசகம் செய்வதே மேலென்று கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கேள்வி : உயிர்த்த ஞாயிறு தினத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து இந்தியா இரு தடவைகளுக்கு மேல் எச்சரித்திருந்தது. ஆனால் எமது அரசாங்கம் இதனைக் கருத்திற்கொள்ளாதது ஏன்?

பதில் : இது நேற்று இன்று வந்த பிரச்சினையல்ல. இதன் ஆரம்ப வேர்களை நோக்கிச் சென்று பார்த்தால் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை சென்றிருக்கும். முதலாவது தௌஹீத் ஜமா அத் முகாம் 1983 ஆம் ஆண்டில் தான் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு தௌஹீத் ஜமா அத் என்ற அமைப்பு காணப்படுகின்றது. அதன் தலைவர்களில் ஒருவராக கோவை ஐயூப் என்ற ஒருவர் இருந்தார். ஷேக் ஆப்தீன் என்ற நபரும் அவ்வமைப்புடன் செயற்பட்டிருந்தார். இவர்கள் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

இவர்கள் அப்துல் ராஷிக் என்ற நபருடன் தொடர்புபட்டு, புத்தருக்கு எதிரான பிரசாரங்களைச் செய்தனர். மனித மாமிசத்தை புத்தர் உண்டார் என்று மிக இழிவாகப் பிரசாரங்களை மேற்கொண்டனர். அதிஷ்டவசமாக புத்தரை இழிவாகப் பேசினால்,பேசுபவனின் கழுத்தை வெட்டு என்ற அடிப்படைவாத சிந்தனை பௌத்த மதத்தில் இல்லை. எனவேதான் நாங்கள் வாய்மூலமாக எச்சரித்தோம்.

இந்திய இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனை கொண்ட நபர்கள் இலங்கையில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா அத் என்ற அமைப்பை உருவாக்கினார்கள். அதேபோன்று அகில இலங்கை தௌஹீத் ஜமா அத் என்ற அமைப்பையும் அவர்கள் நிறுவினார்கள். அப்துல் ராஷிக் என்ற நபர் இந்த தௌஹீத் ஜமா அத் என்ற அமைப்பின் ஊடாக பௌத்தர்களுக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை முன்னெடுத்தார். அவருக்கு எதிராக நாங்கள் முறைப்பாடு செய்தோம். எந்தவொரு மகாநாயக்க தேரரோ அல்லது பௌத்த மதம் குறித்து தற்போது பேசுபவர்களோ அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கவில்லை. வழக்கிற்குக் கூட யாரும் ஒழுங்கு செய்யவில்லை.

கனிஷ்டநிலை சட்டத்தரணி ஒருவரே அந்த வழக்கிற்காக ஆஜராகியிருந்தார். இவ்வாறு பௌத்தர்களுக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்த போது ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா அத் அமைப்பிற்கு தலைமைத்துவத்தை மாற்றுமாறு கட்டளை பிறப்பிக்கப்படுகின்றது. இதன் பின்னர் தௌஹீத் ஜமா அத் அமைப்பு ஒன்பதாகப் பிரிக்கப்பட்டது. ஒன்பது தலைமைத்துவத்தின் கீழ் தௌஹீத் ஜமா அத் அமைப்பினர் இலங்;கையில் மிகத் தீவிரமாக செயற்பட ஆரம்பித்தனர். இன்றுவரையில் எமது பாதுகாப்புத் தரப்பு ஏன் அப்துல் ராஷிக் என்ற நபரைக் கைது செய்யவில்லை? இஸ்லாமிய அடிப்படைவாத பிரசாரங்களின் முக்கிய சூத்திரதாரியாகவே ஒருவராகவே அவர் காணப்படுகின்றார். இதற்கான ஆதாரங்களை ஜனாதிபதியிடம் நான் கையளித்திருக்கின்றேன். இன்னும் ஒருவார காலத்திற்குள் அப்துல் ராஷிக்கை கைது செய்யாவிட்டால் பொதுபலசேனா அவரைக் கண்டுபிடிக்கும்.

பாதுகாப்புத் தரப்பை அப்துல் ராஷிக் தற்போது திசை திருப்பி வருகின்றார். சுறா மீன்கள் எல்லாம் தப்பித்துக் கொள்ள வெறும் நெத்திலி மீன்களைப் புலனாய்வுப் பிரிவினர் துரத்திவருகின்றனர். கொள்ளைக் கூ;டத்தின் தலைவரிடமே கொள்ளையர்கள் குறித்துத் தகவல்களைக் கேட்டறியும் நிலையில் பாதுகாப்புத் தரப்பு செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமா அத், சிலோன் தௌஹீத் ஜமா அத் என்ற அமைப்பை உருவாக்கியிருந்தது. இவர்கள் யாருமே தௌஹீத் என்ற சொற்பதத்தைக் கைவிட விரும்பவில்லை. இலக்கு ஒன்றுதான்: அவற்றை அடைய வெவ்வேறு வழிகளில் பயணிக்கின்றார்கள். சஹ்ரான் உருவாக்கியது தான் தேசிய தௌஹீத் ஜமா அத் அமைப்பு. இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் உச்சநிலையாக மற்றுமொரு நபர் யுனைட்டட் தௌஹீத் ஜமா அத் என்றதொரு அமைப்பை உருவாக்கினார். இவ்வாறு 50 இற்கும் மேற்பட்ட அமைப்புகள் காணப்படுகின்றன. எனவே நாம் எதிர்பார்க்கின்ற இடத்தில் இந்தப் பிரச்சினையில்லை.

(லியோ நிரோஷ தர்ஷன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய மாகாணத்தின் முதலாவது சப்ததள 108...

2024-03-19 10:37:23
news-image

மலையக கட்சிகள் யாருக்கு, எதற்கு ஆதரவளிக்க...

2024-03-19 10:34:04
news-image

சுவீடனின் நேட்டோ உறுப்புரிமை: இந்தோ -...

2024-03-19 09:09:10
news-image

கனடாவிலும் இலங்கையிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய 6...

2024-03-18 14:07:20
news-image

வலுவடையும் இலங்கையின் ரூபாய் : பொதுமக்கள்,...

2024-03-18 13:49:53
news-image

இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதியாக பிரபோவோ  

2024-03-18 13:37:22
news-image

மாகாண சபை முறைமை சுயாட்சிக்கான படிக்கல்

2024-03-18 13:31:57
news-image

அமெரிக்க தேர்தல் களம் : ட்ரெம்புக்கு...

2024-03-18 13:23:47
news-image

தேர்தல்கள் மட்டுமே தீர்வுகளை கொண்டுவருமா?

2024-03-18 13:08:50
news-image

வளமான வாழ்வுத் தேடலில் உயிரை இழக்கும்...

2024-03-18 13:05:14
news-image

சர்வதேச சவால்கள் ‘ஏழு’

2024-03-18 12:53:09
news-image

கோட்டா தனக்குத் தானே வெட்டிய குழி

2024-03-18 12:41:45