தெற்காசியாவில் இஸ்லாமிய அரசின் " மாகாணங்கள்" ; இலங்கையில் " விலாயத் அஸ் செய்லானி " 

Published By: Priyatharshan

21 May, 2019 | 04:03 PM
image

பி.கே.பாலச்சந்திரன் 

இஸ்லாமிய அரசு இயக்கத்துடன் இணைந்த தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாதீ மில்லாது இப்ராஹிமீ மற்றும் விலாயத் அஸ் செய்லானி என்ற மூன்று அமைப்புக்களை தடைசெய்வதாக அண்மையில் இலங்கை அரசாங்கம் அறிவித்தது. முதல் இரு அமைப்புக்களும் ஈஸ்டர்  ஞாயிறு தினத்தன்று தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களை அடுத்து உடனடியாக பகிரங்கமாக அடையாளம் காணப்பட்டவையாகும். ஆனால், விலாயத் அஸ் செய்லானி என்ற அமைப்பு மிக அண்மையில் பெயர் குறிப்பிடப்பட்ட ஒரு அமைப்பாகும். குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின்போதே அது பற்றி தெரியவந்தது. விலாயத் அஸ் செய்லானி பற்றியும் இலங்கையில் அதன் நடவடிக்கைகள் பற்றியும் விபரங்களை இன்னமும் அரசாங்கம் வெளியிடவில்லை.

விலாயத் அஸ் செய்லானியை அமைப்பது குறித்து இஸ்லாமிய அரசின் உயர்மட்டத்தில் ஆராயப்பட்டபோதிலும், அந்த இயக்கத்தின் இராச்சியத்தினால் உத்தியோகபூர்வமாக அது குறித்து பிரகடனப்படுத்தப்படவில்லை என்று " தீவிரவாதமயத்தின் மூன்று தூண்கள் " ) என்ற நூலின் இணை ஆசிரியரான கலாநிதி ரொஹான் குணரத்ன கூறுகிறார்." இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடரும்பட்சத்தில் விலாயத் அஸ் செய்லானி உருவாக்கப்படுவதை பிரகடனம் செய்வதே   இஸ்லாமிய அரசின் திட்டமாக இருக்கக்கூடும். இலங்கைக்கென்று தனியான விலாயத் ஒன்று உருவாக்கப்படுவதற்கு  காரணமொன்றை கூறவேண்டும் என்பது இதன் நோக்கமாக இருக்கலாம்" என்று கலாநிதி குணரத்ன குறிப்பிட்டார்.

விலாயத் என்ற சொல் மாகாணத்தைக் குறிக்கிறது.2014 ஆம் ஆண்டிலிருந்து இஸ்லாமிய அரசு உலகின் பல பாகங்களில் விலாயத்களை அல்லது மாகாணங்களை அமைத்திருக்கிறது. இந்த விலாயத்கள் பாரம்பரிய அர்த்தத்திலான மாகாணங்கள் அல்ல, இஸ்லாமிய அரசின் நடவடிக்கைகளுக்கான களங்களே.தெற்காசியாவில் உள்ள இஸ்லாமிய அரசின் விலாயத்களில் விலாயத் கோராசான் ( ஆப்கானிஸ்தானையும் பாகிஸ்தானையும் உள்ளடக்கியது) விலாயத் அல் ஹிந்த் ( காஷ்மீரை மையமாகக்கொண்டு இந்தியாவை தழுவியது) ஆகியவை முக்கியமானவை. இப்போது விலாயத் அஸ் செய்லானியும் சேர்ந்துகொண்டுள்ளது. (  அராபிய மொழியில் இலங்கை செய்லான் என்று அழைக்கப்படுகிறது).

கொழும்பு சங்கிரிலா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவரான முஹம்மத் சஹ்ரான் இலங்கையில் இஸ்லாமிய அரசின் விலாயத்தை அமைப்பதற்கு விரும்பியதாக கலாநிதி குணரத்ன கூறினார். இஸ்லாமிய அரசின் இராச்சியத்தின் உயர்மட்டத்தில் விலாயத்  அஸ் செய்லானியை அமைப்பது குறித்து கலந்தாலோசிக்கப்பட்தை பற்றி இலங்கை அரசாங்கம் அறிந்திருக்கிறது போலும்.அதனால், அந்த விலாயத் அமைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் அதை அரசாங்கம் தடைசெய்திருக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராக பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த காடையர்கள் கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் சஹ்ரானின் கனவு நனவாவதற்கான வழியைத் திறந்துவிட்டிருக்கும்.

" அதனால், இனக்கலவரங்கள் மூளாதிருப்பதையும் பௌத்தர்களும் கிறிஸ்தவர்களும் மூஸ்லிம்களும் இணக்கபூர்வமான முறையில் பாதுகாப்பாக அருகருகாக வசிப்பதையும் உறுதிசெய்யவேண்டியது இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை, முக்கியமானதாகும். காடையர்களின் வெறியாட்டத்தை அடக்கியொடுக்குவதற்கு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.தேவையானால் கண்ட இடத்திலேயே சுடுவதற்கான உத்தரவையும் அரசாங்கம் பிறப்பிக்கவேண்டும் " எனறு கலாநிதி குணரத்ன வலியுறுத்தினார்.

சிங்கப்பூரில் உள்ள சர்வதேச ஆய்வுகளுக்கான  எஸ்.இராஜரத்தினம் நிறுவனம் 2017 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாத்தில் பொன்ட் பல்கலைக்கழகத்தில் சமகால பயங்கரவாத எதிர்ப்பு - கிளர்ச்சி எதிர்ப்பு விவகாரங்களில் பாதுகாப்புத்துறை இராஜதந்திர ஆய்வாளராக இருக்கும் பட்ரிக் பிளானின் எழுதிய " பயங்கரவாத எதிர்ப்பு -- போக்குகளும் ஆய்வுகளும் "  என்ற நூலை வெளியிட்டது. அந்த நூலில் " இஸ்லாமிய அரசின் நிதி ; வளமூலங்கள், வழிமுறைகள் மற்றும் பயன்பாடு " என்ற தலைப்பிலான கட்டுரையில் பிளானின் , " இஸ்லாமிய அரசு ஒரு பலகோடி டொலர்கள் இயக்கம். அதன் நடவடிக்கைகளுக்காக உலகின் பல பாகங்களில் இருந்தும் ஆட்திரட்டலை செய்வதற்கும் பயிற்சியளிப்பதற்கும் பெருந்தொகைப் பணத்தை வீசமுடியும் " என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இலங்கை இஸ்லாமிய அரசின் ஒரு மையமாக அல்லது விலாயத்தாக மாறியிருக்கிறதென்றால், விலாயத்களைக் கொண்டிருக்கும் உலகின் ஏனைய பாகங்கள் இப்போது எதிர்நோக்குகின்ற ஆபத்துக்களை சந்திக்கவேண்டிய நிலைக்கு இலங்கையும் உள்ளாகும்.

இஸ்லாமிய அரசு இயக்கம் அதன் நிதித்தேவைகளுக்காக எந்தவொரு அரசின் மீதோ அல்லது தனிநபர்கள் மீதோ தங்கியிருக்கவில்லை. அது தன்னிறைவான ஒரு இயக்கமாகும் என்று பிளானின் கூறுகிறார் .  அபூபக்கர் அல் -- பக்தாதி இஸ்லாமிய அரசின் தலைவராக வருவதற்கு முன்னர், 2008 ஆம் ஆண்டில் அந்த இயக்கம் அதற்கு தேவையான நிதியை கடத்தல் மோசடிகளின் மூலமாகவே பெற்றுக்கொண்டிருந்தது என்று பட்ரிக் ஜோன்சன் என்ற ஆய்வாளரை மேற்கோள் காட்டி பிளானின் கூறுகிறார்.    இஸ்லாமிய அரசின் நிதி வல்லமையை நோக்கும்போது இலங்கையில் சஹ்ரானின் சிறிய குழுவினரிடம் 700 கோடி.ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களும் 14 கோடி ரூபா பணமும் இருந்தது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்குரிய விடயமல்ல.

பக்தாதிக்கு முன்னர் இஸ்லாமிய அரசின் ஸ்தாபகத்  தலைவராக இருந்த அபூ மூசாப் அல் -- சார்காவி எண்ணெய் கடத்தலின் மூலமாக வருடாந்தம் 7 கோடி டொலர்களுக்கும் 20 கோடி டொலர்களுக்கும் இடைப்பட்ட பணத்தைச் சம்பாதித்தார்.ஆட்களைக் கடத்தி பணயம் வைப்பதன் மூலம் இன்னொரு 3 கோடி 60 இலட்சம் டொலர்கள் கிடைத்தது. பெரும்பாலும் பலவேறு  சட்டவிரோத நடவடிக்கைகள் மூலமாக 2015 ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 120 கோடி டொலர்களை இஸ்லாமிய அரசு பெற்றுக்கொண்டதாக  அமெரிக்காவின்  கொள்கை ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான ராண்ட் கோர்பரேசனைச் சேர்ந்த கீத் கிரேன் என்பவர் செனட் கமிட்டியின் முன்னிலையில் கூறினார்.

ஈராக், சிரியா, லிபியா மற்றும் எகிப்தில் உள்ள எண்ணெய் நிலையங்களை தாக்கி அவற்றை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்து செயற்படுத்தி  எண்ணெய் வியாபாரத்தின் மூலமாக இஸ்லாமிய அரசு இயக்கத்தினர் பணம் சம்பாதித்ததாக 2015 ஆய்வொன்றின் மூலம் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.எண்ணெய் மற்றும் பெற்றோலிய உற்பத்திகள் விற்பனை மூலமாக 2015 ஆம் ஆண்டில் வருடாந்தம் 4 கோடி டொலர்களைப் பெற்ற இஸ்லாமிய அரசு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும் இயக்கியது.

இஸ்லாமிய அரசிடமிருந்து எவரும் எண்ணெயை வாங்கலாம். போட்டி விலைக்கு விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரம் நன்றாக நடந்தது.2015 ஆம் ஆண்டில் ஒரு பீப்பாய் எண்ணெயை 20 டொலர்களுக்கு அந்த இயக்கம் கொடுத்ததாக ஒரு கணிப்பீடு கூறுகிறது.எண்ணெல் விற்பனை மூலமாக தினமொன்றுக்கு 15 டொலர்களை அது சம்பாதித்தது.ஆனால், 2016 ஆம் ஆண்டில் எண்ணெய் நிலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை அடுத்து  எண்ணெய் மோசடி மூலமான வருவாய் 33 சதவீதத்தினால் குறைந்துபோனது. ஒரு சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் மத்திய கிழக்கில் இஸ்லாமிய அரசுக்கு எதிரான பல குழுக்களும் அந்த இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தேவையான பணத்தை அதே வழிமுறைகளிலேயே பெற்றுக்கொண்டன.

இஸ்லாமிய அரசு நடத்திய இன்னொரு மோசடி மனித கடத்தலாகும்.நை.ஜீரியா, சாஹில், லிபியா, எகிப்து, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இந்த மோசடியை அது செய்தது.2016 ஆம் ஆண்டில் லிபியா நடவடிக்கை எடுக்கமுன்னதாக மத்தியதரைக் கடல் கரையோரத்தில் 260 கிலோ மீட்டர்களில்  இஸ்லாமிய அரசு தன்னெண்ணத்தில் சுதந்திரமாக செயற்பட்டது.மத்தியதகை் கடலைக் கடந்து ஐரோப்பாவுக்கு 250,000 பேரை கடத்திய நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட முகவர்களிடம் பெருமளவு பணத்தை இஸ்லாமிய அரசு வெருட்டி .பெற்றுக்கொண்டது என்று கூறப்படுகிறது. அந்த இயக்கம் அகதிமுகாம்களைத் தாக்கி அகதிகளைத் தப்பியோட நிர்ப்பந்தித்து பிறகு கடல் கடந்து ஐரோப்பாவுக்குச் செல்ல அனுமதிப்பதற்கு அவர்களிடம் பணத்தைப் பெற்றதாகவும் கூறப்பட்டது.

வரி அறவீடு பணம் பண்ணுகின்ற இன்னொரு வழிமுறையாகும். வர்த்தக நிறுவனங்களிடமிருந்து வரியாகவும் மதரீதியான வரி என்று இன்னொரு முறையிலும் இஸ்லாமிய அரசு வருடாந்தம் 30 கோடி டொலர்களுக்கும் குறையாத நிதியைத் திரட்டிக்கொண்டதாக கூறப்பட்டது.வர்த்தக நிறுவனங்கள் மீதான மதரீதியான வரி 20 சதவீதத்துக்கும் அதிகமானதாக இருந்தது.விவசாயமும் வருமானத்துக்கான ஒரு வழிமுறையாக இருந்தது. ஏனென்றால், ஒரு கட்டத்தில் ஈராக்கின் விவசாய நிலத்தில் 40 சதவீதம் இஸ்லாமிய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. இணைய வழி குற்றச்செயல்கள் மூலமாகவும் அந்த இயக்கம் கோடிக்கணக்கான டொலர்களைச் சுருட்டிக்கொண்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04