வன்முறைகளை நிராகரியுங்கள்

Published By: Digital Desk 3

18 May, 2019 | 12:29 PM
image

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர்  கடந்த திங்கட்கிழமை நாட்டின் நிலைமை  சிக்கலுக்குரியதாக மாறியது.  உயிர்த்த ஞாயிறு  தின தாக்குதல் இடம்பெற்ற  சுமார் 20 தினங்களின் பின்னர்  நாட்டின் அமைதிநிலை  சீர்குலையும்  சூழல்  ஏற்பட்டது. முப்படையினரும் பொலிஸாரும்   பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஓய்வின்றி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றபோதிலும்   கடந்த ஞாயிறு, திங்கட்கிழமை  ஆகிய தினங்களில் வடமேல் மாகாணத்தில் பல முஸ்லிம் பிரதேசங்களில்  இடம்பெற்ற வன்முறைத்தாக்குதல்களில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.  

குளியாப்பிட்டி, ஹெட்டிப்பொல, மற்றும்  கொட்டாமுல்லைப் பிரதேங்களில்   இடம்பெற்ற  வன்முறை சம்பவங்களில்   வீடுகளும்    வர்த்தக நிலையங்களும்  சேதமாக்கப்பட்டுள்ளன. அத்துடன்  உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன. 

மிகவும்  கவலைக்குரிய வகையில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவங்கள்  நாட்டின்  அமைதியையும் சீர்குலைத்து நாட்டை  ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டுசெல்லும் வகையில் அமைந்திருக்கின்றன.  மக்கள்  அச்சத்தின் மத்தியில் தொடர்ந்தும்  வாழவேண்டிய சூழல் உருவாகியது.  பாதுகாப்புத் தரப்பினர்  பாதுகாப்பை பலப்படுத்த  உச்சபட்ச நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.  எனினும் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருந்தன. 

வடமேல்மாகாணம் முழுவதும்   திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. அதேபோன்று திங்கட்கிழமை மற்றும்  செவ்வாய்க்கிழமை இரவு நாடு முழுவதிலும்   ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. வடமேல் மாகாணத்தில்   ஏற்பட்ட வன்முறை நிலைமைகள் நாடு முழுவதும் பரவாமல் இருக்கவே   இவ்வாறு  திங்கட்கிழமை இரவு ம் செவ்வாய்க்கிழமை இரவும் நாடுமுழுவதும்   ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.  வடமேல் மாகாணத்தில் பல பிரதேசங்களில்  திங்கட்கிழமை இரவு பொதுமக்கள் அச்சத்தின் மத்தியிலேயே இருந்திருக்கின்றனர்.  எந்தப் பக்கத்தினால்   வன்முறை சம்பவங்கள் வெடிக்கும் என்ற அரச்சத்திலேயே   மக்கள் இரவை கழித்திருக்கின்றனர். அதிகமானோர் வீடுகளை விட்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு சென்று இரவைக் கழித்திருக்கின்றனர். 

 பாதுகாப்பு 

அதேபோன்று   வன்முறைகள் இடம்பெறும் என்று  அச்சம் நிலவுகின்ற பிரதேசங்களில் முப்படையினரும் பொலிஸாரும் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.   எனினும் ஆங்காங்கே திங்கட்கிழமை இரவு  வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியிருந்தன.  இந்த நிலையில்  நாட்டின் தற்போது இந்த நிலைமையை  முழுமையாக கட்டுப்படுத்தி மக்கள் மத்தியில் காணப்படும்  அச்சத்தைப் போக்கி ஒரு அமைதியான நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைத்துத் தரப்பினரும்   செயற்படவேண்டிய நேரம் வந்திருக்கின்றது.   குறிப்பாக  அரசியல் தலைமைத்துவங்கள், சர்வமத தலைமைத்துவங்கள் சிவில் சமூகத் தலைவர்கள், துறைசார் நிபுணர்கள், இளைஞர்கள், தொழில்படையினர்  ஆக மொத்தத்தில் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இந்த விடயத்தில் மிகவும் பொறுப்புடனும் வன்முறைகள் ஏற்படாதவாறும் செயற்படவேண்டிய  தீர்க்கமான    ஒரு சூழ்நிலை நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது.  நாட்டு மக்கள் அமைதியுடனும் பொறுமையுடனும் இருக்கவேண்டும் என்றும் வன்முறைகளை கையில் எடுக்கக்கூடாது என்றும் நாட்டின் அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி  இருக்கின்றனர். 

தலைவர்களின் கோரிக்கை 

இராணுவத்தளபதி மகேஷ் சேனநாயக்கவும்   திங்கட்கிழமை   இரவு நாட்டு மக்களிடம் ஒரு கோரிக்கையை விடுத்தார்.  அவசரகால சட்ட நிலைமையின் கீழ்  அனைவரும் அமைதியாக இருக்கவேண்டும் என்றும் வன்முறைகளில் ஈடுபடவோ  வன்முறைகளை தூண்டும் வகையிலோ யாரும் செயற்படக்கூடாது எனவும்  இராணுவத் தளபதி  நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்ததுடன் சட்டத்தை மீறுகின்றவர்களுக்கு எதிராக  உச்சபட்ச  அதிகாரம் பிரயோகிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். 

அதேபோன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டு மக்களுக்கு விடுத்த அறிவிப்பில்  ஒரு சில குழுவினர்   மக்கள் மத்தியில் இவ்வாறு குழப்பத்தையும் அமைதியின்மையையும்  ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் மக்கள்  பொறுமையுடனும் புத்திசாலித்தனமாகவும் நடந்துகொள்ள வேண்டும் என்றும்   கோரிக்கை விடுத்திருந்தார். முப்படையினருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் பாதுகாப்பை பலப்படுத்தியிருப்பதாகவும் பிரதமர் அறிவித்திருந்தார்.  இது இவ்வாறிருக்க எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவும்   மீண்டும் ஒரு  கறுப்பு ஜூலை கலவரத்திற்கு இந்த நாட்டில் எவரும் இடமளித்துவிடக்கூடாது என்று கோரிக்கை விடுத்திருந்தார்.  அத்துடன்  மக்கள்  அமைதியாக   இருக்கவேண்டும் என்று  கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கோரிக்கை விடுத்திருக்­கி­றார். 

திடீர் பேரிடி 

முப்பது வருட யுத்தத்தை 2009ஆம் ஆண்டு முடித்து  கடந்த பத்துவருடங்களாக   அமைதிக்காற்றை சுவாசித்து வந்த மக்களுக்கு தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை கவலைக்குரியதும்  துரதிஷ்டவசமானதுமாகும். திடீரென ஏற்பட்ட இந்த  நிலைமை காரணமாக    நாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்.   ஏற்கனவே முப்பது   வருட யுத்தம் காரணமாக அபிவிருத்தியிலும்  ஏனைய   முன்னேற்றத்துறைகளிலும்  பாரிய பின்னடைவை சந்தித்துள்ள எமது நாடு மீண்டும் அந்த அபாயத்தை  எதிர்கொண்டிருக்கின்றது.  முப்பது வருடகாலமாக நாம் பல விடயங்களில் பின்னடைவை சந்தித்துள்ளோம்.  எனினும்  கடந்த பத்து வருடங்களாக நிலைமை சற்று மாற்றமடைந்துள்ளது.  பொருளாதார  ரீதியிலும் அபிவிருத்தி ரீதியிலும்    இலங்கை  முன்னேற்றத்தை நோக்கி நகர்ந்தது. எனினும்  கடந்த பத்துவருடகாலத்தில்  இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதிலும் புரிந்துணர்வை வலுப்படுத்துவதிலும்  நல்லிணக்கத்தை மேலோங்க செய்வதிலும் இலங்கை  நாடு என்ற ரீதியில் எந்தளவு தூரம்  சாதகமாக பயணிக்கின்றது என்பது கேள்விக்குறியாக  காணப்படுகின்றது. 

 மீண்டும் வன்முறை வேண்டாம் 

மீண்டும் ஒரு யுத்தத்தை எதிர்கொள்ளவோ,  வன்முறைகளை எதிர்கொள்ளவோ இலங்கை மக்களுக்கு சக்தி இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். தெற்கில் இடம்பெற்ற  மோதல் நிலைமைகள்   பின்னர் வடக்கு – கிழக்கில் ஏற்பட்ட யுத்த நிலைமை என்பவற்றினால் பாதிப்படைந்த இலங்கையானது தற்போது இந்த புதிய அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பாரிய பாதக நிலையை எதிர்கொண்டுள்ளது.  எப்படியிருப்பினும் இனங்களுக்கிடையிலோ, சமூகங்களுக்கிடையிலோ  மதங்களுக்கிடையிலோ வன்முறைகள் தலைதூக்குவதற்கு யாரும் இடமளிக்கக்கூடாது. குறிப்பாக அரசியல் தலைமைத்துவங்களும்  மதத்தலைவர்களும்   சிவில் சமூகத் தலைவர்களும் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக செயற்படவேண்டும்.  வன்முறைகள் ஊடாக  எந்தவொரு    விடயத்தையும் சாதிக்க முடியாது.  பழிக்கு பழிவாங்குவதன் ஊடாக   ஒருநாடு என்ற  ரீதியில் இழப்புக்களை சந்திப்போமே தவிர முன்னேற்றத்தை அடைய முடியாது என்பதை சர்வ மதத் தலைவர்கள் அனைவருக்கும் புரியவைக்கவேண்டும்.  குறிப்பாக  இந்த நாட்டின் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள்  எதிர்கால   பயணம் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும்.  வன்முறைகளை  கையில் எடுப்பதன் மூலம் நாட்டின் எதிர்காலமே பாதிக்கப்படுகின்றது  என்பதை உணர்ந்துகொள்ள முன்வரவேண்டும்.  

இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம் என்பன நாட்டையும் மக்களையும் அழிவுப்பாதைக்கு இட்டு செல்லும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். மக்கள்  மத்தியில்  அச்சம் ஏற்படுவதற்கு   ஒருபோதும் இடமளிக்கக்கூடாது. எவ்வாறான கோபமூட்டும் நடவடிக்கைகள் இடம்பெற்றாலும் மக்கள் பொறுமையுடனும் அமைதியுடனும் புத்திசாலித்தனத்துடனும்   செயற்படவேண்டும். 

எதிர்காலம் குறித்த சிந்தனை  

கோபப்பட்டு ஆத்திரப்பட்டு வன்முறைகளை கையில் எடுப்பது   அவர்களது பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்பதை மனதில் கொள்ளவேண்டும். எந்தவொரு  அரசியல் சக்திகளின் நிகழ்ச்சி நிரலில் சிக்கி  யாரும்  தமது  வாழ்க்கையை  பாலாக்கிக்கொள்ளக்கூடாது. 

21ஆம் திகதி  நாட்டில்  குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்று நாடு என்ற ரீதியில் பாரிய இழப்புக்களை சந்தித்தோம். எனினும் அந்த சந்தர்ப்பத்தில் மக்கள் மத்தியில் எந்தவிதமான வன்முறைகளும் ஏற்படாதவகையில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மக்களை வழிநடத்தியிருந்தார். எனினும்  தற்போது   சில பிரதேசங்களில்   பதிவாகியிருக்கின்ற வன்முறை சம்பவங்கள்   மக்கள் மத்தியில்   அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளதுடன்   கவலைக்குரிய நிலையை தோற்றுவித்துள்ளது. 

எனவே இதுபோன்ற நிலைமைகளுக்கும் எந்தவொரு சூழலிலும் எந்தவொரு தரப்பும் இடமளிக்கக்கூடாது. இந்தநாட்டில்  மூவின மக்களும் மிகவும் ஒற்றுமையுடனும் சமாதானமாகவும் வாழ்வதற்கு தம்மை அர்ப்பணித்துக்கொள்ளவேண்டும். அதனூடாகவே  நாம் முன்னேற்றத்தையும் அபிவிருத்தியையும் நோக்கி பயணிக்க முடியும்.  இந்த இடத்தில் அனைத்துத் தரப்பினரும் புரிந்துணர்வுடனும் புத்திசாலித்தனமாகவும் நடந்துகொள்வதே அவசியமாகின்றது. ஒருசிலரின்  நிகழ்ச்சி நிரலுக்குள் எந்தவொரு தரப்பினரும்  சிக்கிவிடக்கூடாது.  இது எமது நாடு, இந்த நாட்டில் நாம் அனைவரும்  பொறுமையுடனும் அமைதியாகவும் வாழ்வதன் ஊடாக எமது எதிர்கால சந்தியினருக்கு ஒரு வளமான நாட்டை பாதுகாத்துக்கொடுக்கவேண்டும் என்ற விடயம் அனைவர் மத்தியிலும் இருக்கவேண்டும். 

பாதிப்புகள் 

தற்போது இந்த குழப்பகரமான நிலைமையினால் நாட்டில் அபிவிருத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.    வெளிநாட்டு நேரடி முதலீடுகள் சுற்றுலாத்துறை  என்பனவும் பாதிக்கப்பட்டுள்ளன. நாட்டில்  கல்வித்துறையும் பாரிய  பாதகநிலையை சந்தித்துள்ளது.  பாடசாலைகளுக்கு   மாணவர்கள் சமுகமளிக்காத நிலைமை  காணப்படுகின்றது. தொழில் துறை பாதிக்கப்பட்டிருக்கின்றது.   அத்தோடு மக்களின்    அன்றாட இயல்புவாழ்க்கை நடவடிக்கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிலைமை நீடித்தால்  அது நாட்டுக்கு பாரிய பாதகநிலையை ஏற்படுத்திவிடும் என்பதை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து செயற்படவேண்டும். இந்த இடத்தில் பொறுமையாகவும் நிதானமாகவும்   புத்திசாலித்தனமாகவும் செயற்படுவதே  மிக முக்கியமாக  அமைகின்றது. 

 ஜெகான் பெேரரா  

இந்த நிலைமை தொடர்பில் தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர்   டாக்டர்  ஜெகான் பெரேரா கேசரியுடன் கருத்து பகிர்கையில்; தற்போதைய நிலைமையில் நாட்டு மக்கள் மத்தியில்  அமைதியையும் பாதுகாப்பையும்  நிலைநிறுத்தவேண்டிய பொறுப்பு பாதுகாப்புத் தரப்பினரிடமே காணப்படுகின்றது. வன்முறைகளை தடுத்துநிறுத்த வேண்டும். வன்முறைகள் ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாதுகாப்பு தரப்பினர்  எடுக்கவேண்டும். அதுமட்டுமன்றி முதலாவது கடமையாக   மக்கள்  தாம்  பாதுகாப்புடன் இருக்கின்றோம் என்ற உணர்வை அனைவர் மத்தியிலும்  ஏற்படுத்தவேண்டும்.  சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அங்கு மேலும் வன்முறைகள் இடம்பெறாதவாறு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். பொதுமக்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். 

அப்பாவி மக்களே பாதிப்பு 

அப்பாவி மக்களே இந்த வன்முறை சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பாவி மக்கள் இந்த வன்முறை சம்பவங்களை  வெறுக்கின்றனர்.  ஒரு சில குழுவினர்  திட்டமிட்டு முன்னெடுக்கும் வன்முறை சம்பவங்களால்  மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இந்த  நிலைமையை கட்டுப்படுத்தி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும். இது பாதுகாப்பு தரப்பினரால் உடனடியாக செய்யப்படவேண்டிய விடயமாகும். மறுபுறம் எதிர்காலத்தில் இவ்வாறான  நிலைமைகள் ஏற்படாதவாறு சரியான தலைமைத்துவத்தை அரசியல்வாதிகளும் சமூகத் தலைவர்களும் மதத்தலைவர்களும் வழங்கவேண்டும். ஏன் இவ்வாறான  நிலைமைகள் ஏற்படுகின்றன என்பதை ஆராய்ந்து அவற்றை கட்டுப்படுத்துவதற்கு  நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும் என்று குறிப்பிட்டார். 

அமைதியை நிலைநாட்டவேண்டும் 

அந்தவகையில்  நாட்டில்  அமைதியையும்  சமாதானத்தையும் மக்கள் மத்தியிலான பாதுகாப்பான உணர்வையும்  ஏற்படுத்துவது  பாதுகாப்புத் தரப்பினரது கடமையாகும். பொலிஸாரும் முப்படையினரும்   இதற்காக  பாரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.   பெரும்பாலான இடங்களில் வன்முறைகள்  பரவவிடாது தடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் நாட்டில் சில பிரதேசங்களில் இடம்பெற்றுள்ள இந்த வன்முறை சம்பவங்கள் நாடு என்ற ரீதியில் பாரிய பின்னடைவுக்கு தள்ளியுள்ளது. இந்த வன்முறை சம்பவங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும். இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதகதியில் முன்னெடுப்பது அவசியமாகும். குளியாப்பிட்டி, கொட்டாரமுல்லை பிரதேசங்களில் பல வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்கள்  சேதமாக்கப்பட்டுள்ளன.  எனவே இவற்றை மதிப்பீடு செய்து அரசாங்கம்  இழப்பீடுகளை பெற்றுக்கொடுக்கவேண்டும். வீடுகளை இழந்தவர்களுக்கு  அவற்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு   வேலைத்திட்டங்கள் அவசியமாகும். அதேபோன்று  மக்கள் மத்தியில் அச்ச உணர்வைப் போக்கி அவர்கள் இயல்பு வாழ்க்கை  நடைமுறையை முன்னெடுப்பதற்கான சூழல் உருவாக்கிக்கொடுக்கப்படவேண்டும். 

வீதி ஓரங்களில் வர்த்தக நடவடிக்கைகளில்    ஈடுபட்டிருந்த சிலரும்  இந்த வன்முறை செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.  அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப நடவடிக்கைள்  எடுக்கப்படவேண்டும்.  இனியொரு  யுத்தத்தையோ, அல்லது  இனக்கலவரத்தையோ எதிர்கொள்ளக்கூடிய சக்தி எம்மிடமில்லை என்பதை அனைத்துத் தரப்பினரும் புரிந்துகொள்ளவேண்டும். நாம் கடந்த காலங்களில்   வன்முறைகளினால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகளை அதிகமாகவே கண்டிருக்கின்றோம். அவற்றில் பாடம்  கற்றிருக்கின்றோம். அந்த அனுபவங்களைக் கொண்டு  மீண்டுமொரு  அசௌகரியமான நிலைமை நாட்டில் ஏற்படாதவகையில் அனைத்துத் தரப்பினரும் செயற்படவேண்டும். அதற்கு   அரசியல் தலைமைகளும்   சர்வமதத் தலைவர்களும்   சிவில் சமூகத்தினரும்  தமது  பங்களிப்பையும்   தலைமைத்துவத்தையும் வழங்குவதற்கு  முன்வரவேண்டும். 

ரொபட் அன்டனி

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய மாகாணத்தின் முதலாவது சப்ததள 108...

2024-03-19 10:37:23
news-image

மலையக கட்சிகள் யாருக்கு, எதற்கு ஆதரவளிக்க...

2024-03-19 10:34:04
news-image

சுவீடனின் நேட்டோ உறுப்புரிமை: இந்தோ -...

2024-03-19 09:09:10
news-image

கனடாவிலும் இலங்கையிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்திய 6...

2024-03-18 14:07:20
news-image

வலுவடையும் இலங்கையின் ரூபாய் : பொதுமக்கள்,...

2024-03-18 13:49:53
news-image

இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதியாக பிரபோவோ  

2024-03-18 13:37:22
news-image

மாகாண சபை முறைமை சுயாட்சிக்கான படிக்கல்

2024-03-18 13:31:57
news-image

அமெரிக்க தேர்தல் களம் : ட்ரெம்புக்கு...

2024-03-18 13:23:47
news-image

தேர்தல்கள் மட்டுமே தீர்வுகளை கொண்டுவருமா?

2024-03-18 13:08:50
news-image

வளமான வாழ்வுத் தேடலில் உயிரை இழக்கும்...

2024-03-18 13:05:14
news-image

சர்வதேச சவால்கள் ‘ஏழு’

2024-03-18 12:53:09
news-image

கோட்டா தனக்குத் தானே வெட்டிய குழி

2024-03-18 12:41:45